17 February 2015 4:02 pm
தமிழ்நாடு முழுவதும் 1227 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. போததென்று பெரும் பெரும் மருத்துவமனைகள் வேறு. எல்லா ஊர்களிலும் மருத்துவ நிலையங்கள் வேண்டும் என்கிற பொதுமக்கள் கோரிக்கை குறையவே இல்லை. இருக்கும் மருத்துவமனைகளிலும், நோய் கண்டறிவதற்கான அநேகக் கருவிகள் புதிது புதிதாக நிறுவப்பட்டு, தரம் உயர்த்தபட்டு வருகின்றன. இத்தனையிருந்தும் நாட்டில் நோய்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கல்வி நிலையங்கள் பெருகி வருகின்றன வென்றால், படிக்காதவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று பொருள். ஆனால் மருத்துவமனைகள் பெருகினால் நோயாளிகளின் எண்ணிக்கையும் நோய்களின் பெருக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்றே பொருள். உலக சுகாதார அமைப்பின்" புள்ளி விவரப்படி, உலக அளவில் 20 கோடிப்பேர் நீரிழிவு நோயாளிகள். இதில் இரண்டு கோடி பேர் இந்தியர்கள். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையும் கூடுமாம். இதய நோய் தாக்கும் தலைநகரமாக இந்தியா உருவாகி வருகிறதாம். 2020 ஆம் ஆண்டுகளில் இதய நோய் பாதிப்பினால் இறப்பு 40 விழுக்காட்டிற்கு அதிகரித்து விடுமாம். இதய நோய், புற்று நோய், மார்பகப் புற்றுநோய்களின் தாக்கம் இந்தியாவில் தான் அதிகமாம். உலக அளவில் நுரையீரல் பாதிப்பான இறப்புகளில் 47% பேர் இந்தியர்கள். அதே போல எலும்புறுக்கி நோய் இறப்புகளும் 10% இங்கே அதிகம்; பைத்திய நோயாளிகள் 100-இல் ஒருவர். சீரண உறுப்புகள் நோயால் மட்டுமே 5% உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன; உலக அளவில் "எய்ட்சு’ நோய் தாக்கம் 3 வது இடத்தில் நாம். மார்பகப் புற்றுநோய், பக்கவாதம், கர்ப்பகால இறப்பு, பேறுகால இறப்பு, மஞ்சள் காமாலை, மூச்சிழுப்பு நோய் போன்ற நோய்களாலும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அரசினரின் புள்ளி விவரம் என்பது பதிவுக்கு வந்தவை மட்டுமே. பதிவுக்கு வராத நிகழ்வுகள்தான் நாட்டில் அதிகம். வளர்ந்து வரும் இயற்கை மருத்துவ சங்கங்களின் பயிற்சி முகாம்களில் கண்டறியபட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி தருவனவாக இருக்கிறது. மக்கள் அனைவரும் ஏதாகிலும் ஒரு சிறு பாதிப்பாகிலும் அடையாமல் இல்லை. 2% மக்கள் மட்டுமே எந்த நோயும் அண்டாதவர்களாக இருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட பெருநோய்கள் அல்லாமல், மூட்டுவலி, எலும்பு தேய்மானம், சிறுநீரகச் செயலிழப்பு, கர்ப்பப்பை கோளாறு, கர்ப்பபை அகற்றப்பட்டவர்கள், ஆண்மை இன்மை, ஆண்மைக் குறைவு, தாய்ப்பால் இல்லாதவர்கள் சுகபிரசவம் ஆகாதவர்கள் என்று கணக்கிட்டால் 98% மக்கள் நோயாளிகள் தான் என்பது உண்மையிலும் உண்மையே. மக்கள் எதோ ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு, காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மருத்துவ முறைகளும், மருந்துகளும், அவ்வப்போது உடனடியாக சரிசெய்வது போலத் தோன்றினாலும், காலப் போக்கில் மருந்துக்களின் பக்க விளைவுகளால், புதிய புதிய நோய்கள் உண்டாக்கப்படுகிறது என்கிற ஐயம் ஏற்படுகிறது. சிறப்பு மருத்துவம் படித்த மருத்துவர்களில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுநீரகம் செயலிழந்த மருத்துவர்கள் டயாலிசிசில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே சக்கரை நோய், சிறுநீரகம் செயலிழப்பு ஏன்? எப்படி வருகிறது? என்று தெரியவில்லையா! அப்படியாயின் அவர்களால் எப்படி பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனை கூற முடியும்? ஆக, படித்த படிப்பில் கூட ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெரிகிறது. முதுமையில் ரத்த அழுத்தம் உயர்ந்திருக்கும் என்பது இயற்கையே! 80 வயது வயோதிகருக்கு ரத்த அழுத்தம் 140 இருப்பதை உயர் ரத்த அழுத்தம் என்று கருதி மாத்திரை விழுங்க வைத்து, நோயாளியாக ஆக்கி விடும் நிகழ்வுகளும் நாட்டில் ஆங்காங்கு நடக்கிறது. நல்லுடல்காரர்கள் கூட தங்களை நோயாளிகளாகக் கருதிக்கொள்ளும் "மன நோயாளி"களாக உலவி வருகிறார்கள். ஆங்கில மருத்துவத்தில் நம்பிக்கை இழந்த பிறகு தான் மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு தாவிச் செல்கிறார்கள். எப்படியாகிலும், நோயிலிருந்து விடுபட வேண்டும் என்கிற தவிப்பு. "இயற்கை மருத்துவ சங்கங்கள்", யோகா பயிற்சி நிலையங்கள் பெருகி வருவதற்குக் காரணங்கள் இதுதான். நோய் தானாக வருவதில்லை நாமாக இழுத்துக் கொள்வதுதான் என்பதைப் புரிந்து கொண்டு வருவார்கள். வாயைக்கட்டி நோயைக்கட்டு, பசி அறியா வயிறு பாழ், நொறுங்க சாப்பிட்டால் நூறு ஆயுசு, அள்ளி அமுக்கினால் அல்ப ஆயுசு, பசித்துப் புசி, உண்ணா நோன்பே உயரிய மருந்து என்கிற நுட்பங்களை எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு, விழிப்படைந்து வருகிறார்கள். மருந்தென வேண்டாவாம் என்று வள்ளுவரும் சொன்னார். இயற்கையினைப் புரிந்து, உடல் இயக்கத்தைப் புரிந்து, உடல் மொழியைப் புரிந்து, சாப்பிடுவதை முறையாக வைத்து கொண்டால், நோயும் நெருங்காது; மருந்தும் வேண்டாம். வாந்தி வருகிறது, வயிற்றால் போகிறது இவை உடலின் நிராகரிப்பு. வேண்டாததை வெளியில் தள்ளி உடலைக் காப்பாற்றுகிறது. கழிக்க வேண்டியதைக் கழிக்கிறது. கழிச்சல் என்று தானே பெயர். உடல் தனக்குத்தானே செய்து கொள்ளும் மருத்துவத்தை ஏன் நோய் என்று எண்ண வேண்டும். அமில நிலை வயிற்று கோளாறினால் அவதிப்படுபவர்கள், வாழைப்பழம் விழுங்கித் தொலைப்பவர்கள் இருக்கிறார்கள். "வயிற்று நோவு கொண்டவருக்கு வாழைப்பழம் ஆகாது" என்கிற பழமொழி கூறும் உண்மை தெரியவில்லை. இது போன்ற சின்னஞ்சிறு நுட்பங்களை மக்கள் புரிந்து கொண்டாலே, நம்மை பிடிக்கும் பல்வேறு சிறுசிறு நோய்கள் கிட்டவே நெருங்காது. இந்த வயிற்றுத் தொந்தரவு ஏற்பட்டாலும் ஒரிருவேளை உண்ணாமல் இருந்தால் போதும்! (லங்கணம் பரம ஔசதம்). அவ்வளவுதானே! இதற்கு பெரிய மருத்துவம் தேவையா? செலவு செய்ய வேண்டுமா! அங்கலாய்க்க வேண்டுமா! இந்நுட்பங்களை சொல்லித்தர இன்று ஆட்கள் இல்லை. மருத்துவ மையங்கள் இல்லை. இப்படிப்பட்ட நுட்பங்களை மக்கள் தெரிந்துகொண்டாலே, சிறுசிறு பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் . ஆக இன்று நமக்கு நல்ல ஆலோசனைகள் கூறும் மையங்கள்தான் வேண்டும் என்கிற புரிதலுக்குள் வருகிறோம். நமக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவத்திற்காக வேண்டாம். உடல்நல ஆலோசனை கூறும் மையம்தான் வேண்டும். நாடு முழுதும் இது போன்ற செயல்பாட்டில் தீவிரமாக இறங்கிச் செயல்படுத்தினால், ஓரிரு ஆண்டுகளிலேயே மிகப் பெரும் மாற்றத்தை எற்படுத்தி விடலாம். ஊருக்கு ஊர் நான்கைந்து சுய நிதிக் குழுக்கள் இருக்கின்றன. இவர்களின் செயல்பாட்டோடு "மருத்துவ ஆலோசனை பயிற்சிகள்", வட்டார மையங்களில் தொடர்ந்து நடத்தி வந்தால், மிக விரைவில் மக்கள் மனம் திடகாத்திரம் பெற்று விடாதா என்ன? ஆகவே அரம்ப சுகாதார மையங்கள் நாடு முழுவதும் இருப்பதை, சுகாதார ஆலோசனை மையங்களாகச் செயல்படுத்த சிந்தித்தாக வேண்டும். -மருத்துவர் காசிபிச்சை, அரியலூர்"