16 August 2014 10:14 am
மூளை முடக்குவாதம்,மூளை வளர்ச்சியின்மை,ஒன்றிற்கு மேற்பட்ட செயல்பாடுக் குறைபாடுகள் அதாவது ‘AUTISM’ போன்ற நோய்களால் பாதிக்கப்பெற்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு கருநாடக அரசு,ஊதியத்துடன் கூடிய விடுமுறையை,பணிபுரியும் அலுவலகங்களில் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.இத்தகைய உத்தரவு அலுவலகம்,சிகிச்சையென இருவேறு இடங்களில் அல்லல்படும் தாய்மார்களுக்கு நற்செய்திதான்.இதனிடையே குடும்பத்தையும் வழிநடத்த வேண்டிய தலையாய கடமை உள்ளது.விடுமுறை அறிவிப்புத் திட்டத்தால் குழந்தைகளின் பிறப்பில் ஏற்பட்ட நோயையும்,மூளை வளர்ச்சியின்மையையும் குணப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே.குழந்தைகள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி,வாழ்வின் தொடர் ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற இயலுமா என்னும் கேள்விக்குப் பதில் எழுத சொல்ல இயலாது. இந்தத் தருணத்தில் குறிப்பாகப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை தன்முனைப்புக் குறைபாடு (ஆட்டிசம்) நோய் தாக்காமல் இருக்க எவ்வாறெல்லாம் செயல்படவேண்டும் என்பதை அறிந்திருத்தல் இன்றியமையாதது. ‘ஆட்டிசம்’ நோய் பாதிப்பு என்பது குழந்தைகள் தங்களின் இயல்பான நடவடிக்கை,வளர்ச்சி,அறிவியல் நோக்கு ஆகியவற்றைத் தொலைத்துவிட்டு,சமுதாயத்தின் சொந்தங்கள் மீது ஈடுபாடு இல்லாமல் தனிமையை விரும்பும் ஒரு நோயாகும்.பொதுநிலையாக ஒரு குழந்தை ‘ஆட்டிசம்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒன்பது மாதம் முதல் பதினெட்டு(18) மாதத்திற்குள்ளான நிலையில் கண்டறிய முடியும். பெற்றோர்கள் இந்த நோயைக் கண்டறிய வேண்டுமெனில், ஆட்டிசம்" நோயின் அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். குழந்தை தனிமையை விரும்புதல், பிறரைப் பார்த்து சிரிக்காமல் இருப்பது, மற்ற குழந்தைகளைப் போன்று விளையாடாமல் இருத்தல்-நண்பர்களைத் தவிர்ப்பது, பேச்சுக் குறைபாடு, ஒரே செய்கையை வித்தியாசமான முறையில் திரும்பத் திரும்பச் செய்துகொண்டே இருப்பது, அசையும் பொருள்கள் அல்லது வெளிச்சத்தை வெறித்துப் பார்ப்பது, கைவிரல்களை அசைத்துக் கொண்டே இருத்தல் முதலிய குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தாலும் சந்தேகம் ஏற்பட்டாலும் காலந்தாழ்த்தாது மனநல மருத்துவர் அல்லது "ஆக்குபேசனல் தெரபிஸ்ட்" என்னும் தொழில்வழி மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.மரபணுவில் ஏற்படும் மாற்றங்களே இந்நோய்க்கான முதன்மைக் காரணமென்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உரம்-பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு, மரபணு மாற்றப்பெற்ற கோழிக்கறி, முள்ளங்கி, தக்காளி, வாழை, பிற பழங்கள், காற்று, நீர், மண், ஒலிமாசுபாடு, இருபாலரும் மது அருந்துதல், புகைத்தல், போதைப் பொருள்களுக்கு ஆட்படுதல், தாமதமாகத் திருமணம் செய்து கொள்ளல், முதிர்ந்த வயதில் கருத்தரித்தல் என ‘ஆட்டிசம்‘ நோய்க்கான காரணங்களாகப் பலவும் கருதப்படுகின்றது. தனிக்குடித்தன வாழ்க்கையால், தாய் தந்தையர் இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளைக் காப்பகங்களிலும் பணியாளர்களிடமும் விட்டுவிடுதல், இதன் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், சோம்பேறித்தனம், குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, ஸ்மார்ட்ஃபோன் போன்றவை போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கும் விளையாட்டுகள் முன் முழுநேரமும் உட்கார வைத்தல் போன்றவையும் முதன்மைக் காரணங்களாக அறியப்பட்டுள்ளன.‘ஆட்டிசம்’ நோய் வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்: நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், வீட்டில் சமைத்த உணவாய் இருப்பது நல்லது.நாட்டுக்கோழிக்கறி, வீட்டில் உருவாக்கிய கேழ்வரகு, சோளம், உளுந்துப் பலகாரங்கள், தேங்காய்ப்பால், இஞ்சி, பூண்டு விழுது, பால், தயிர், காய்கறிகள் என அனைத்துப் பொருள்களும் புதியதாக, பதப்படுத்தாத உணவாக இருத்தல் இன்றியமையாதது.இவை அனைத்தும் மரபணுக்களைக் கட்டாயம் காப்பாற்றும். ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனம், மகிழ்உந்து, ஆட்டோ, பேருந்து, லாரி, ஆலைகளில் வெளியேறும் புகை, ஒலி ஆகியவற்றால் மாசு ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால், மரபணுக்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களைக் குறைக்கவும் தடுக்கவும் செய்யலாம். பெற்றோர்களில் ‘தாய்‘ என்பவள் குழந்தை கருத்தரித்த எட்டாவது மாதம் முதல் 2-5 வயதுவரை வீட்டில் இருந்து அவர்களுக்கு பாசம், பண்பு, உணவு, விளையாட்டு ஆகியவற்றை முறையாகக் கொடுத்து வளர்ப்பது கட்டாயமாகிறது. மேலும் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டு, கூட்டுக்குடும்பமாய் வாழ்வது குழந்தைக்குத் தேவையான சரியான தூண்டுதலை அளிக்க உதவும். தந்தையர் அனைவரும் பொருள்களின் மீது காட்டும் ஈர்ப்பைத் தவிர்த்து, குறைந்தளவு நாள் ஒன்றிற்கு முப்பது விநாடிகளாவது குழந்தைகளுடன் கொஞ்சிக் குலாவி அன்பைப் பொழியுங்கள்.இந்த ஈர்ப்புள்ள அன்பு அங்காடிகளில் வாங்கக்கூடிய பொருள்கள் இல்லை. தாத்தா, பாட்டிகளின் கடமை என்பது வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுவதே.அவர்கள் சொல்லும் நயமிக்க கதைகள் பாட்டுகளுக்கு விலைமதிப்பே இல்லை எனலாம். ஆடு, அணில், மாடு, குருவி, காகம், நிலா, நாம் எனத் தம்மோடு பிணைந்திருந்த இயற்கைப் பொருள்களைக் காட்டி-பாட்டி, அத்தை, தாய், சித்தி எனச் சூழ்ந்த உறவுகள் சோறு ஊட்டினார்கள். ஆனால், தற்போது இவர்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி நாடகங்கள், செய்திகள் பாராமல் நாள்கள் சுமையாய்த் தெரிகின்றது. ஐம்பது(50) ஆண்டுகள் வாழ்ந்த, மனிதர்களுடன் உறவாடி, இன்பமாய் வாழ்ந்த வாழ்க்கையை பத்து(10) ஆண்டுகளில் மறக்கச் செய்துவிட்டன தொலைக்காட்சிகளின் ஓய்வில்லா ஒளிபரப்புகள். ஒலி-ஒளி வழி நிகழ்ச்சிகளுக்கும் கணினிகளுக்கும் மூன்று மாதம் முதலே அதற்கும் முன்பாக உங்கள் மொட்டுகளை அடிமையாக்கினால், மனிதனின் பரிணாமங்களான அன்பு, பாசம், பேச்சு, விளையாட்டு, உலக முகவரி எப்படி இவர்களுக்கு இன்பமாய்க் காட்சியளிக்கும்? இன்றையக் குழந்தைகள் ‘ஆட்டிசம்‘ எனும் கோரப்பிடியிலிருந்து தப்பித்தவறித் தேறினாலும் அவர்களின் தலைமுறைகள் அந்நோயில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் என்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. ஒரு நொடிப்பொழுது நீங்களே உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.நீங்கள் பயணிக்கும் உலக வாழ்க்கையில், ஒவ்வொரு நிலையிலும் உன்னதமான உறவுகள் உடன் இருந்தால், உங்களுக்கு முதன்மையாய் இருந்தால், நீங்கள் நலவாழ்வு வட்டத்திற்குள் உள்ளீர்கள் என மகிழ்வடையலாம். இல்லை கணினியோ, அன்றைய புதுவரவான அலைப்பேசியோ வாழ்க்கை இன்பம் என்றால், உங்கள் தலைமுறையினரை எண்ணி, உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளும் நிலைமை உருவாகும். பழைய நாள்களைப்போல் ஞாயிறு ஒருநாள் மட்டும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியிலோ, கணினியிலோ, லேப்டாப்பிலோ, வீட்டுத் திரையரங்கிலோ அனைவரும் குடும்பமாக அமர்ந்து பார்ப்பதால், தெருவில் குழந்தைகள் அன்றாடம் நண்பர்களோடு விளையாடுவதால், ‘ஆட்டிசம்‘ நோயை வளரவிடாமல் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்வதற்கு அனைத்துக் குடும்பங்களும் உடனே செயல்படுதல் அவசியம்.உங்களின் பெயர்த்தி பெயரன்களின் நலவாழ்வும் உங்கள் கையில்தான் உள்ளது.விழித்துக் கொள்ளுங்கள். –கோ.சுமித்ரா இங்கர்சால், பெங்களூர்.•கட்டுரையாளர்: சீனியர் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (தொழில் வழி மருத்துவர்)"