15 December 2013 5:43 am
மருத்துவம்! மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாக் காலக்கட்டங்களிலும் மிக மிகத் தேவையானது – மருத்துவம்! இன்றைய நிலையில் நோய் தீர்க்க நாம் அலோபதி மருத்துவத்தை நாடிச் செல்வதென்பது வாழ்க்கை நடைமுறையாகி விட்டது பலருக்கும்! இது அயல்நாட்டிலிருந்து ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில் நம் மீது திணிக்கப்பட்டது. மேலை நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம், அலோபதி மருத்துவமென வழங்கப்பெறும் மருத்துவ முறை பற்றி பலபட பேசப்படுகின்றது. ஆனால் அம்முறையால் பல பக்க விளைவுகள் விளைக்கின்றன என இன்றளவும் கூறப்படுகின்றது. மருந்தின் அட்டை மேலேயே அம்மருந்தால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படக்கூடுமென கண்ணுக்குத் தெரியாத எழுத்துகளில் அச்சிட்டு விற்கப்படுகின்றன. இம்மருத்துவ முறையை மேலை நாட்டு மருத்துவர்களே எதிர்க்கின்றனர். மனிதகுலம் எத்தனையோ பேரழிவுகளைச் சந்தித்திருக்கின்றது. அலோபதி மருத்துவ முறையிலிருந்தும் மனித குலம் மீண்டு வரும்" என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உடல் நலக் கட்டுரையாளர் ஜெர்ஹர் கௌச்சர். இப்பேரழிவு மனிதனால் உருவாக்கப்படுவது – இயற்கையால் அல்ல என்பார் மற்றொரு தத்துவ மேதை! பொருளீட்டும் நோக்கில் அமெரிக்காவின் பெரும் தன்வந்தர் ராக்பெல்லரால், பலரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் திணிக்கப்பட்ட மருத்துவமே அலோபதியாகும். நம்மைக் காக்க அனுப்பிய தூதர்கள் எனவும் அவர்களைக் கருதுகின்றோம். ஆனால் மருத்துவத் துறையினர் நோயாளிகளிடம் எவ்வளவு சொத்து உள்ளது; வருமானங்கள் என்ன என்பதில் கருத்தாயிருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இரசாயனப் பொருட்களைக் கொண்டு செயற்கையாக தயாரிக்கப்பட்ட இம்மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கத் தக்க ஆராய்ச்சிகள் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. குளிர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை நம் வெப்ப பிரதேச மக்களுக்குப் பொருந்தக் கூடியதுதானா? என்ற ஆராய்ச்சி ஏதும் செய்ததாகவும் தெரியவில்லை. நம் தட்பவெப்பத்தினால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த இதில் மருந்தில்லை. இந்நிலையில் நம் நாட்டின் சித்த மருத்துவம் 10, 000 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணின் மருத்துவம் நம் சித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது. நம் நாட்டு மக்களுக்கு நம் நாட்டில் விளையும் இயற்கை மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவை பணம் பண்ணும் நோக்கில் உருப்பெற்றவை அல்ல. உலக வாழ்க்கையைத் துறந்த சித்தர்கள், மக்கள் நலன் கருதி சித்த மருத்துவத்தை நமக்கு கொடையாக வழங்கியுள்ளனர். சித்த மருத்துவம் நோய்களை முழுமையாக குணப்படுத்தும். இதில் பக்க விளைவுகள் ஏதுமில்லை. உணவே மருந்து – மருந்தே உணவு என்பது நம் கோட்பாடு – பண்பாடு. பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள நம் சிறந்த மருத்துவ முறையை விடுத்து ஏன் மக்கள் சில நூற்றாண்டுகள் கூட ஆகாத வேற்று நாட்டு மருத்துவ முறைக்கு மாறினர்? சிந்தியுங்கள். அந்நியர் ஆட்சி! நமக்கு உள்ள அந்நிய மோகம்! படாடோபத்தைக் கண்டு மயங்கும் மக்களின் மனநிலை! வேற்று நாட்டு மருத்துவர் கோட்டு, டை, பூட்சு அணிந்து படாடோபமாக காட்சி அளித்தனர். நம் நாட்டு மருத்துவர் வேட்டியும், துண்டும் மட்டுமே அணிந்து இருந்தனர். நம் பாரம்பரிய உணவு முறைகளைக் கடைபிடித்தால் நோய் எளிதில் குணமாகும். மீள அந்நோய் வராதென்பர். அலோபதி மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து உண்டால் அம்மருந்தின் காரணமாக வேறு ஒரு புதிய நோயை உருவாக்கும் தன்மையுடையது. இம்மருத்துவத்தின் அறுவை சிகிச்சை முறை சிறந்து காணப்படுகின்றது. ஆனால் மருந்து, மாத்திரைகள் என்பன பல பக்க விளைவுகளை உண்டாக்கி விடுகின்றனவாம். உதாரணத்திற்கு "நீரிழிவு" நோயை முழுமையாகக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. அந்நோயால் பாதிக்கப்பட்டவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிக அவசியம். ஆனாலும் நோய் முழுமையாக குணமாகாது. இந்நோய்க்காக கொடுக்கப்படும் மருந்துகளின் பக்கவிளைவாக வேறு பல நோய்கள் வருகின்றனவென அலோபதி மருத்துவர்களே கூறுகின்றனர். சித்த மருத்துவத்தில் இது போன்ற பக்க விளைவுகள் எதுமில்லை. சிறு குறிஞ்சான், நாவல் கொட்டை, ஆவாரம் பூ, வில்வம் போன்ற மூலிகைகள் இந்நோய்க்கு நல்ல மருந்து எனப்படுகின்றது. நாம் கண்டதை உண்ணும் பழக்கத்திற்கும் அந்நிய மோகத்திற்கும் அடிமைப்பட்டதால் இன்னமும் கூட பக்க விளைவுகளால் பலரும் மடிகின்றனர் என அறிந்தும் மக்கள் சித்த மருத்துவத்திற்கு திரும்பவில்லை. அந்நியரை ஏன் வெளியேற்றினோம் என்ற அடிப்படைக் காரணத்தை இன்றைய மக்கள் இன்னும் உணரவில்லை. நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. போராடி அந்நியரை அகற்றினோம். ஆனால் தொடர் நடவடிக்கைகள் சரியாக எடுக்கவில்லை. அரசும், அரசியலாளரும் இடித்துக் கூறினால் மட்டுமே அரசு இயந்திரம் செயல்படும் என்கிற நிலை அடிமை ஆட்சிக் காலத்திற்குப் போதுமானது; இது சுதந்திர நாடு. மக்களின் நலன் கருதி மக்கள் பணியாளர்களான அரசு அதிகாரிகள் தாங்களாகவே மக்களுக்கு தம் துறை சார்ந்த பணிகளை மனமுவந்து செய்தல் வேண்டும் என்ற மனப்பான்மை வளர வேண்டும். சிலர் மட்டுமே அதுபோல தாமே மக்கள் நலன் கருதிப் பணியாற்றுகின்றனர் என்பது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. எல்லோருமே இதனைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் நம் நாட்டில் பழம்பெரும் மருத்துவமாம் சித்த மருத்துவத்தின் வளர்ச்சியில் இப்பொழுதாவது போதிய கவனம் செலுத்த வேண்டும். அல்லல் பல விளைவிக்கும் மருத்துவத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தலைசிறந்த நம் சித்த மருத்துவத்திற்கு வழங்குதல் நம் கடமை! சித்த மருத்துவத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்காவிட்டாலும் கூட சம உரிமை (level playing field) உருவாக்கிடுவது தேவையே. எனவே, நிறைய சித்த மருத்துவ மருத்துவர்களை உருவாக்கி உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் நம் சித்த மருத்துவ மகிமையை உணரச் செய்தல் வேண்டும். இப்பொழுது சுமார் ஆறு அல்லது ஏழு சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்குகின்றன. மிகக் குறைந்த மாணவர் சேர்க்கை இடங்களே உள்ளன. எனவே சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். மாவட்டந்தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பெறல் வேண்டும். இப்பல்கலைக் கழகம் திருமூலர் வாழ்ந்த திருவாவடுதுறையில் "திருமூலர் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம்" என்ற பெயரில் தொடங்க வேண்டும். சோழர் காலத்தில் இங்கே மருத்துவக் கல்லூரி இயங்கியதாக வரலாறு பகர்கின்றது. இதுவே தமிழர் தம் பண்பாட்டு வழிமுறைகளையும், மருந்தில்லா உடல் நலத்தையும் தரத்தக்கதாகும். – பெ.சிவசுப்பிரமணியன், சென்னை."