14 February 2014 9:23 am
மறவன்புலவு க. சச்சிதானந்தனின் நூல் பதிப்புப் பணிகளைப் பாராட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டு தெரிவித்தது. சென்னையில் நடைபெற்ற 37 ஆவது புத்தகக் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மேனாள் தலைவருமான இரா முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், நல்லி சில்க்ஸ் ஆடையக உரிமையாளர் குப்புசாமி (செட்டியார்) ஆகியோர் கூட்டாக இந்த விருதினை வழங்கினர். மறவன்புலவைச் சேர்ந்த முனைவர் க. சச்சிதானந்தன் காந்தளகம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். அவரின் தொடர்ச்சியான பதிப்பகப் பணிக்காகவே இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.