17 June 2014 9:46 am
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954) இந்நூற்றாண்டின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவர் கவிமணி"யாவர். நாகர்கோவிலுக்கருகில் உள்ள தேரூரில் தோன்றியவர். முறையாகத் தமிழ் பயின்று தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். இவர் தம் தித்திக்கும் தேன்சுவைக் கவிதைகள் "மலரும் மாலையும்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளன. உமர்கய்யாமின் பாடல்களைத் தமிழில் சுவைபடப் பாடியுள்ளார். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார். "காந்தளூர்ச் சாலை" என்ற நூல் பின்னவற்றுள் குறிப்பிடத்தக்கது.பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா!- அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினான், அடா!கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா!- அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா!- கவி துள்ளும் மறையைப்போலத் துள்ளுமே, அடா!கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!-பசுங் கன்றும்பால் உண்டிடாது கேட்குமே, அடா! – (மலரும் மாலையும்)ஞானப்பிரகாச சுவாமிகள் (1875 – 1947) தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அரும்பாடு பட்டவர்களுள் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகளும் ஒருவர். ஊர்க்காவல் துறையில் பணியாற்றிய இவர், தம் பணியைத் துறந்தாரேயன்றித் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றைத் துறக்கவில்லை. இலத்தீன், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும் பேசவும் வல்லவராயிருந்தார். "தமிழ் அமைப்புற்ற வரலாறு" போன்ற பல தமிழ் நூல்களின் ஆசிரியர் இவர். "சொற்பிறப்பு ஒப்பியல் அகரவரிசை" என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். "அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் என் அரிய தமிழ் மொழியின்கட் பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பன்னூற்றுத் தொகைப்பட்ட சொற்களில் பெரும் பங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம். இச்சிறப்பினைப் பண்டை இலக்கண நூலாசிரியர் சிறுபான்மையும், எக்காலத்து அகலறிவாளர் சில்லோர் பெரும்பான்மையும் எடுத்துக் காட்டலுற்றார். தமிழ்ச் சொற்பரப்பு முழுதினையும் ஒப்புநோக்கி அடைவுபடநிறீஇ, பிற பெரும் மொழிகளோடும் ஊடாடிய நுண்ணறிவு கொண்டு ஆராயுமிடத்து, முற்கூறிய பலப்பல சொற் கூட்டங்களானவற்றுள் குடும்பச் சாயல் போன்றதோர் ஒற்றுமை நயம் வெளிப்பட்டு, அக்கூட்டங்கள், தம்மிலும் தொகை சுருங்கிய வேறு கூட்டங்களின் உறுப்புகளாய் நிற்றல் தெளிவுறும்."மறைமலையடிகள் (1875 – 1950) "சோழ நாட்டிலே நாகப்பட்டினத்துக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக் கல்வியறிவொழுக்கங்களில் தலை சிறந்து, சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராய்த் திகழ்ந்து, துறவு நிலையுற்று, பல்லாவரத்தில் பொதுநிலைக் கழகத் தலைவராய் வீற்றிருந்த சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெருந்தவவுருவினர். இவர் "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்" "திருக்குறளாராய்ச்சி" முதலிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். "முகிழ்த்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ அதனருமையறியான். ஒருவனால் கிள்ளியெறியப்பட்டு அழிந்தாற் போலவும், மறைநிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுவதற்கு ஏற்றி வைத்த பேரொளி விளக்கு சடுதியில் வீசிய சூறைக் காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்ட நாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்னெஞ்சக் கள்வனொருவனால் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ்நாட்டுக்கு ஒரு கல்வி மலராய் ஓர் அறிவு விளக்காய் ஓர் அருங் குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 43 ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது, ஒரு பெருங் கொடுமை யன்றோ?"ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் (1882 – 1954) "ரசிகமணி" என்ற பட்டம் பெற்ற டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழ் இலக்கியத்தைச் சுவைத்துச் சுவைத்துப் படித்ததோடன்றித் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையமென்ற வகையில் பாநலத்தை விளக்கும் நாநலம் பெற்று விளங்கினார். பாட்டாவது சொல்லன்று; எழுத்தன்று; யாப்பன்று; அது அநுபவ நுகர்ச்சி. இது டி.கே.சி.யின் கருத்து. கம்பனின் கவிநயத்தில் மூழ்கித் திளைத்த இவர் கம்பராமாயணத்தைப் புதிய முறையில் பதிப்பித்துள்ளார். ஒரு கதை, புராதனமான கதைதான். கம்பர் ஒரு ஊருக்குப் போயிருந்தார். ஒரு பிரபுவுடன் தங்கியிருந்தார். சாயங்காலம் ஆனதும், யாரோ ஒரு புலவர் கோயிலில் கம்பராமாயணப் பிரசங்கம் செய்கிறார். நாமும் போய்க் கேட்டு வரலாமே என்றார் பிரபு. கம்பரும் சம்மதித்தார். இருவரும் பிரசங்கிக்கு முன் உட்கார்ந்து இருந்தார்கள். ……. பிரசங்கம் முடிந்தது. பிரசங்கியிடம் கம்பர் இன்னார் என்று பிரபு அறிமுகப்படுத்தினார். பிரசங்கிக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகி, அடடா! பாடல்கள் எல்லாம் எவ்வளவு அருமை! தங்களைக் கவிச்சக்கரவர்த்தி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்கிறது? என்று கம்பரைப் பார்த்து வியந்தவண்ணமாய்ச் சொன்னார். ஆனால் கம்பரோ, தாங்கள் வாசித்த ராமாயணத்தில் என்னுடைய பாடல்களும் ஒன்றிரண்டு சேர்ந்திருக்கிறது போலத் தெரிகிறது என்று அமைதியாய்ச் சொல்லி நிறுத்தினார். – (கம்பர் யார்?)"