15 May 2016 8:28 pm
மகாராட்டிராவிலிருந்து வெளிவரும் திங்கள் இதழான தமிழ் இலெமுரியா"விற்குத் தனிச் சிறப்பு உண்டு. கவிஞர் கா.மு.செரீப் குறித்து சித்திரை இதழில் இடம் பெற்றிருந்த கட்டுரை இனிக்கும் நினைவுகளைத் தூண்டிவிட்டது. அன்று சென்னை எழும்பூர், (எத்திராஜ் சாலையில்) ஹாஜா மேஜர் ரோட்டில் தபால் தந்தி ஊழியர்களின் சார்பில் இலக்கியச்சோலை என்னும் இலக்கிய அமைப்பு இயங்கி வந்தது. தொலைத் தொடர்பு திட்ட தென் மண்டல தலைமைப் பொது மேலாளர் ஏ.வி.எஸ்.மணி அதன் தலைவராகத் திகழ்ந்தார். நான் செயலாளராக பணியாற்றி வந்தேன். அப்போது கா.மு.செரீப் அவர்களை அழைத்து வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்நிகழ்வில் பிறப்பால் இசுலாமியராகிய கா.மு.செரீப், மூஞ்சூறு எலி சுறுசுறுப்பாகச் செயல்படும் குணபாட்டினால்தான், எல்லாக் கோயில்களிலும் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் பிள்ளையாருக்கு முன்பால் வாகனமாக வைத்துள்ளனர் என்கிற புதுமையான கருத்தை எடுத்துக் கூறியது பசுமையாக இன்றும் நினைவிருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு இணையாகப் பாடல்களை எழுதிய கா.மு.செரீப்பை ‘சுயமரியாதைச் சிங்கம்’ என்று குறிப்பிட்டிருப்பது சரியான முரண்பாடு. ‘தமிழரசுக்கவிஞர்’ கா.மு.செரீப் என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்ததாகும். அம்பேத்கர் இயற்பெயரா? இடைச்செருகலா? கட்டுரை உண்மை நிலையை விளக்கியுள்ளது.சங்கர இராமசாமி, அம்பத்தூர் – 600 053ஆழ்ந்த சிந்தனை ‘அம்பேத்கார் இயற்பெயரா? இடைச் செருகலா?’ எனும் அறமொழியன் கட்டுரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. பொதுவாக மேல்நிலைக்கு வந்தவர்களின் வாழ்வை, குறிப்பாக அவருடைய பிறப்பை, தங்களோடு இணைத்துக் கொள்வது, தங்கள் சாதியோடு இணைத்துக் கொள்வது என்பவற்றில் பிராமணியம் அல்லது சாதியம் மிகக் கவனமாகச் செயல்படுகிறது. அம்பேத்கர் விடயத்திலும் இம்மாதிரிப் புரட்டு நடந்திருக்குமோ என யோசிக்க அறமொழியன் காரணங்களைத் தருகிறார். திருமலைநாயக்கரின் படைத்தளபதி மதுரைவீரன் அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் என்பது வரலாறு. ஆனால் அவர் ஆற்றில் விடப்பட்ட ஒரு அரசனின் மகனாகப் பொய்யாகப் புனையப்பட்ட கதை பரவலாக சமுகத்தில் மிதந்து திரிகிறது. முத்துப்பட்டன் என்னும் ஒரு பார்ப்பன இளைஞன் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த பொம்மக்கா, திம்மக்கா இருவரையும் காதலித்துத் திருமணம் செய்து, சக்கிலியர் படையையைத் திரட்டினார். அந்த பொம்மக்காவும் திம்மக்காவும் பிராமணப் பெண்கள்தான், சக்கலியர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என கதை கட்டியது வைதீகம். இன்னும் எத்தனையோ சொல்லலாம். தனஞ்செய் கீர் செய்த புரட்டு 1962இல் அம்பேத்கர் நூலில் எழுதி அவ்வாறு பயன்படுத்தியதோடு தொடங்குகிறதா? அம்பேத்கர் பள்ளியில் படிக்கிற காலத்திலும் அவர் வெளிநாட்டிற்குப் போன காலத்திலும் அவர் பெயர் என்ன? என்பது போன்றவை துலக்கப்படுமானால் இந்த அம்பேத்கர் என்ற புனைவு எப்போது தொடங்கப்பட்டது என்பது தெளிவாகும். அறமொழியன் இந்தப் புதுப் புனைவின் காலத்தை மேலும் துலக்குவார் என எதிர்பார்க்கிறேன்.பொன்னீலன், கன்னியாகுமரி – 629 501நல்முத்து வணக்கம். "தமிழ் இலெமுரியா" தமிழ் நல்லுலகிற்கு கிடைத்த நல்முத்து. கடந்த பல ஆண்டுகளாக "தமிழ் இலெமுரியா" இதழை படிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது. இதழை தழுவும் போதெல்லாம் அளவிலா அன்பும், புத்துணர்வும் என்னை ஆட்கொள்கிறது. அறிவார்ந்த தலையங்கம், செறிவார்ந்த செய்திகள், சிந்தையை கிளறும் கட்டுரைகள், மனதை வருடும் கவிதைகள், சிந்தனைக்கு விருந்தாய் துணுக்குகள், ஆக்கப்பூர்வமான கதைகள் என்று தமிழ் இலெமுரியாவின் பேரழகை அடுக்கிக் கொண்டே போகலாம். படிக்கும் வழக்கம் வரலாற்று ஏடுகளில் கரைந்து வரும் சூழலில், தமிழ் நெஞ்சங்களை மீண்டும் படிக்க தூண்டும் அறிவார்ந்த இதழ் ‘‘தமிழ் இலெமுரியா’’. படிக்க படிக்க பகுத்தறிவு மணக்கும் இது போன்ற இதழை தந்தை பெரியார் பெரிதும் விரும்பியிருப்பார். அய்யாவின் வழிநடந்து தெளியாத மனங்களை தெளியவைக்கும், குழம்பிய நெஞ்சங்களை தட்டியெழுப்பும் அரும்பெரும் பணியை அறிவுச் சுடராம் "தமிழ் இலெமுரியா" செய்து வருவதை பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன். இவ்விதழ் மென்மேலும் வளர்ந்து தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் குடியேறி தமிழ்ச் சுனையாய் திகழ்வது மட்டுமல்ல, அறிவை பெருக்கும் ஆலமரமாய் வளர்ந்தோங்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். ‘‘தமிழ் இலெமுரியா’’ இதழை நடத்துவதற்காக தமிழ்சமூகம் சார்பில் கோடானகோடி நன்றியை உரித்தாக்குகிறேன்.பாவலர் கொ.வீ.நன்னன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர், செங்கம் – 606 701உண்மைச் சரித்திரம் சித்திரை இதழ் அம்பேத்கர் பெயர் குறித்த பல வரலாற்றுத் தகவல்களைத் தந்தது. நாட்டின் உண்மைச் சரித்திரம் எழுதப் படவேண்டியுள்ளது.‘நெகிழியின்’ கேடுகள் கட்டுரை சிந்திக்க வைத்தது. எவ்வளவுதான் தனியாளர்களும், அரசுகளும் குரல் கொடுத்தாலும் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வில்லை.- பம்பாய் புதியவன், காஞ்சிபுரம் – 631 501நற்சான்று உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக, உங்கள் திசை எங்கள் பாதை என்னும் நோக்கில் எட்டு ஆண்டுகள் கடந்த ‘தமிழ் இலெமுரியா’தற்போது ஒன்பதாம் ஆண்டு பயணத்தை பீடுநடை போட்டு தொடங்கியுள்ளது உண்மையேதான் என்பதற்கு அறமொழியனின் முதன்மை கட்டுரையான ‘அம்பேத்கர் இயற்பெயரா இடைச்செருகலா?’ கட்டுரையே நற்சான்று!-கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர் – 607 203.தளபதியாக செயல் படக்கூடியவர் யார்? அட்டைப் படத்திலேயே, இனமான புரட்சி செய்த அம்பேத்கரின் படத்தைப் போட்டு, சிந்தனைக்கு வழி வகுத்த சித்திரை இதழைப் படித்தேன். நாம் என்றைக்கு தனக்காக சிறை சென்றோரை மறந்து தனது உழைப்பைச் சுரண்டும் திரை நடிகர்களைத் தலைவர்களாக ஏற்கத் துணிந்தோமோ.. அன்றே, தமிழ்ச் சமுதாயம் வீழ்ச்சி பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழத்தொடங்கி விட்டது. தமிழாய்ந்த தமிழன்யார்? தமிழினத்தையே கருவறுக்க முயல்வோர் யார்? இந்த அடிப்படை வரலாற்றையே புரிந்துகொள்ளாத வரை தமிழினம் கரையேற வழியில்லை! இன உரிமை மொழிஉரிமை எவரிடமும் பிச்சைக்கேட்டு பெறுவதல்ல, போராடிப் பெறவேண்டிவை. இந்தப் போராட்டக்களத்தில் தளபதியாக செயல்படக் கூடியவர் யார்? எதிர்காலத் தமிழகத்தை, எழில் குலுங்கும் நாடாக மாற்றக் கூடியவர் யார்? என்பதை உணர்ந்து செயலாற்றுவதே, தமிழினத்தின் வெற்றிக்கு முதல் படி! தலையங்கம் இதனைத் தெளிவாக விளக்குகிறது. - க.தியாகராசன், குடந்தை – 612 501.அச்சாரம் தொண்டாக இருந்த அரசியல் களம்-தொழிலாக மாறி பொதுநல உணர்வு என்பதே தூரெடுக்க ஆளற்ற கேணிபோல் நாளுக்குநாள் தூர்ந்து கொண்டே வரும் அவலத்தையும் எடுத்துரைத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலில் இவர்களை புறந்தள்ளி கண்ணியமான வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்தில் நுழையச் செய்து, கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் ஏற்று வாக்களித்து வரலாறு படைக்க வேண்டி எழுதப்பட்ட தலையங்கம் தூய அட்சி மலரச் செய்வதற்கான அச்சாரம்.ப.லெ.பரமசிவம், மதுரை – 625 009.வெட்கப்படுகிறேன் சித்திரை இதழில் ‘பட்ட மரம்’ கவிதை படித்தேன். சென்னை வெயிலை விட கவிதை வெகுவாக வாட்டியது. ‘நகரங்களின் பசி’ சிறுகதை அருமை. மும்பையிலிருக்கும் இறை.ச.இராசேந்திரன் அப்படியே ஊர் வழக்குச் சொல்லாடல் மறக்காமல் இருக்கிறாரே! ரொம்ப வியப்பாக உள்ளது. என்னையெல்லாம் சென்னைக்காரின்னு தான் சொல்றாங்க. அவ்வளவு மாறிட்டேன். மிகவும் உணர்வுப்பூர்வமான கதை. ‘போலி விழாக்கள்’ கட்டுரையை இறையன்பு ஐ.ஏ.எஸ் அனுபவித்து எழுதியுள்ளார். நானும் பல விழாக்களில் பார்த்துள்ளேன். ஐநூறு ரூபாய் கொடுத்தால் அவசர அவசரமாய் நடுவர் ‘கவிஞர் பட்டம்’ வழங்கி விடுவார். ஆனால் அவருக்கோ தமிழே தெரியாது, தாய்மொழியும் தமிழ் அல்லவாம்! சென்னையில் இது அநேக இடங்களில் நடக்கின்றன. ‘அம்பேத்கர் இயற்பெயரா? இடைசெருகலா?’ படித்தேன் அதிர்ந்துபோனேன். இதை படிக்கும் வரை நானும் இப்படித்தான் எண்ணி இருந்தேன். தனஞ்செய் கீர் என்ன பாயாசம் வார்த்திருக்கிறார் பாருங்கள். போலிகளைக் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலையங்கத்தில் கூறப்பட்ட நல்ல எண்ணங்கள் கண்டிப்பாக நன்மை தரும் மாற்றமில்லை. சுயமரியாதை சிங்கம் கவிஞர் கா.மு.செரீப் அவர்களை பற்றி எழுதியிருந்ததெல்லாம் எனக்கு புதிய செய்தி. சிங்கமென தன்னலமில்லா பிறர் நலம் பேணி வாழ்ந்தவரை நாம் மறந்து வாழ்கிறோமே! வெட்கப்படுகிறேன். -ஞா.சிவகாமி, சென்னை – 600 017.சரியான பாடம் ’நல்ல எண்ணங்கள் நன்மை தரும்" தலையங்கம் அருமை. தொலைந்து விட்ட அச்சிந்தனைகளை, செயற்பாடுகளை எல்லாம் தொலைவிலிருந்தும் தொலை நோக்குத் தன்மையிலிருந்தும் வலியுறுத்தும் இதழின் பாங்கும் – இதழாசிரியரின் பரந்துபட்ட சிந்தனையும், கட்சி அரசியல், சமூக விழிப்புணர்வு, இன நலன், பகுத்தறிவு பேசும் தனிமனிதன் என எவரும் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டியதாக உள்ளது. சரிந்து போய்க் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு சரியான பாடமாக தலையங்கம் அமைந்திருக்கின்றன.பாவலர் இராவணதாசன், கொளத்தூர் – 600 099.நடுநிலையோடு.. "தமிழ் இலெமுரியா" ஆற்றிவரும் பணி போற்றுதற்குரியது. தலையங்கம் நாம் தொலைத்து வரும் தன்மானத்தைத் தட்டி எழுப்புவதாக உள்ளது. நடுநிலையோடு நாட்டின் நடப்புகளை நயமுற சுட்டும் படைப்புகளும் அறிவைச் செழுமைப் படுத்தும் ஆய்வுகளும் நம் பண்பாட்டின் அடிப்படைத் தளங்களை வெளிப் படுத்தி வரும் தங்கள் தமிழ்ப் பணியும் மென்மேலும் சிறப்படைய எம் பாரட்டும் வாழ்த்துகளும்.புலவர் ம. இளங்கீரன், சுந்தராபுரம் – 641 024.சரியான கருத்தே தலையங்க உரையில் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று குழப்பநிலை ஏற்பட்டத் தகவல்களை வாசித்தேன். நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணும் அறிவை விதைத்து இருந்தீர்கள். உயிரைக் குடிக்கும் சாதி உரையில் பொது இடத்தில் நடந்த சங்கர் படுகொலை பற்றிய சிந்தனை சரியான கருத்தே. கா.மு.செரீப் தகவல்கள் அருமை. உண்மையிலேயே கா.மு.செரீப் ஒரு சுயமரியாதை சிங்கம்தான்.மூர்த்தி, சென்னை - 600 100."