16 March 2014 12:32 am
தமிழ் இதழ்கள் பல வெளி வந்திடினும், தூய தமிழில், தமிழ் ஆர்வத்துடன் வெளி மாநிலத்திலிருந்து தமிழ்ப் பற்றுடன் வெளிவரும் ஒரே மாத இதழ் தமிழ் இலெமுரியா" என்பது பெருமைபட வேண்டிய உணர்வாகும். ஒவ்வொரு தலையங்கமும் நடுநிலையாக மனத்தில் பசு மரத்தாணி போல் பதியும் படியான, பொன்னான எழுத்துகளால் பொறிக்கப்பட்ட வாசகங்கள்!"வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்" எனும் குறள் வாக்குக்கொப்ப அருமையான தலையங்கம். ஆகவே நமது அரசாங்கமும், மிகவும் விழிப்புடன் முன் யோசனையுடனும் ஆய்ந்து செயல்புரிய வேண்டும் என்பதை அணு மின் நிலைய அமைப்பு" பற்றி அருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனமார்ந்த பாராட்டுகள்! – த.சுப்ரமணியன், செகந்ராபாத். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு உணர வாசித்தேன். கற்பிழந்து களர் மண்ணாகப் போன நமது மண்ணின் அவலம் பற்றிய அவரது உரை அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை. நம்மவர்கள் அந்நிய மோகத்தில் திரிபவர்கள் இதனால் மொழி, விவசாயம், உண்ணும் உணவு, உடையணிவது, விளையாட்டு என பலவற்றிலும் மாறுபட்டு விட்டனர். நம்மாழ்வார் மரணம், மண் விரும்பிகளுக்கு ஓர் பேரிழப்பு. சுசில்குமார் சிந்தே நேர்முகம் கண்டேன். சி.பி.ஐ விடயத்தில் உண்மையைச் சொல்லாமலேயே மறைத்து விட்டார். அரசியல்வாதி அல்லவா? இது போன்றவர்கள் நேர்காணலை விட தமிழ் அறிஞர்கள் தொகுப்பு போன்றவைகளை வரவேற்கிறேன். – மூர்த்தி, வேலூர். "வருமுன்னர் காவாதான் வாழ்க்கை" தலையங்கத்தின் கடைசி 8 வரிகளை கொட்டை எழுத்துகளில் போட்டிருக்கலாம். துணுக்குகள் சரியானவை, அருமை. கொங்கு நாடு கட்டுரை அருமை, பற்பல வரலாற்றுத் தகவல்கள் தெரிந்து கொண்டேன். தமிழ் அறிஞர்கள் பற்றிய கட்டுரை அருமை, தொடர்ந்து வெளியிடுக. – அ.முரளிதரன், மதுரை. எதிர்கால இந்தியாவை எண்ணிச் செயல்படும் அரசியலாளர்கள் நேரு, காமராசர் காலத்துடன் முடிந்து விட்டது. மலிவான வாக்குறுதிகள், உடனடி பலன் இதுவே இன்றைய அரசியல்வாதிகளின் கொள்கை, குறிக்கோள். வருங்கால சந்ததியினர் வளமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை இருந்திருந்தால் அணுமின் உலைகளே இந்தியாவில் அமைந்திருக்காது. சூரிய ஒளி மின்னாற்றல், நீர் மின்னாற்றல், காற்றலை மின்னாற்றல், கரியாற்றல் மின்னாற்றல் ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் என்றோ நாம் தன்னிறைவு பெற்றிருப்போம். தன்னலத்தால் வந்ததிந்த அவலங்கள். தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று இனியாவது வருமுன் காக்கும் நல்ல சிந்தனை ஆட்சியாளர்கட்கு வந்தால் அச்சமின்றி மக்கள் வாழும் நாடாக இந்தியா திகழும்! – கருமலைத் தமிழாழன், ஓசூர். கடந்த மாத இதழில், புத்தொளி பரவட்டும் தலையங்கம் மனத்தூய்மை, நேர்மை, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒளிக்கீற்று. தமிழ் நாட்டில் இசை விழாக்கள் நடைபெறும் காலத்தை நினைவு கூறும் வண்ணம் தமிழகத்து இசைக் கருவிகள் கட்டுரை சிறப்பாக இருந்தது. இசைக் கருவிகளின் பெயர்கள் தமிழன் இசையைப் போற்றி வளர்த்ததை விளக்கியிருந்தது. நிறைவாக இன்றைய இலக்கணக் கல்வி கட்டுரை சிந்திக்க வைத்தது. இன்று மொழிப் பாடத்த்ல் சிறப்புற வேண்டுமெனில், அதற்கு அடித்தளம் அமைப்பது இலக்கணமே. அதை இன்றைய பாடத்திட்டமும் வலியுறுத்தவில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களும் பின்பற்றுவதில்லை. எல்லா அழகும் மொழிக்கு இலக்கணத்தால்தான் அமையும் என்பதை உணர்த்திய கட்டுரை செய்திகளைக் கவனத்தில் கொண்டு மொழித் திறனை வருங்கால மாணவரிடம் வளர்க்க வேண்டும். தமிழ் இலெமுரியாவின் இலக்கணப் பணியை பாராட்டுகின்றேன். – அ.கருப்பையா, பொன்னமராவதி. கடந்த மாத இதழில் ஓட்டங்கள் எனும் கவிதை, நம்மால் முடியும், உழந்தும் உழவே தலை எனும் கட்டுரைகள், கொங்குநாடு பற்றிய வரலாறு ஆகியவற்றை "தமிழ் இலெமுரியா"வில் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. – பொன் தங்கவேலன்"