15 November 2013 2:19 am
தமிழ் இலெமுரியா" இதழை நான் வாசித்தேன். இவ்விதழில் வெளியாகியுள்ள அனைத்து செய்திகளும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய பயனுள்ள விடயங்களாகும். குறிப்பாக தமிழ் ஈழம் குறித்தும், தமிழ்நாடு மற்றும் இந்தியா குறித்தும் வெளியாகியுள்ள அனைத்து சமுகத் தகவல்களும் சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளன. பாரதியின் கனவை நினைவாக்கும் வகையில், இவ்விதழ் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கிடைக்கச் செய்ய வேண்டும். – ஜெ.அய்யாதுரை, மனித உரிமைக் கழகம், கனடா. தியோடர் பாசுகரனின் "கருப்பொருள் அழிக்கும் மனிதர்கள்" மிகமிகப் பொருள் பொதிந்த கட்டுரை. இயற்கைத் தாயை இழித்தே மனிதன் புரியும் அளவிலா அட்டூழியங்கள் பலப்பல. சில காலமே மண்ணில் உயிரோடிருக்கும் நாம், மண்ணின் மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், புள்ளினங்களையும், ஆறறிவில்லா விலங்கினங்களையும் சுயநலத்துக்காக அழிக்கும் கொடுமைகள் புரிவது நன்றா? – அ.இராசப்பன், கருமத்தம்பட்டி. "உணவே மருந்து" என்பதை உடற்பருமனைச் சீராக்கும் ஓர் கலை" என்கிற கட்டுரை அழகாக எடுத்துக் காட்டியிருந்தது. இந்த அவசர உலகத்தில் இதைக் கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம் என்பது காலமறிந்து கொடுத்த மருந்து. "தமிழ் கூறும் நல்வழிகள்" நாம் நடந்து வந்த வழித்தடத்தை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது. இது போன்ற கருத்துள்ள செய்திகளைத் தொடர் போல வெளியிடலாம். – அ.கருப்பையா, பொன்னமராவதி. இறைவன் தங்கும் ஆலயம் என்னும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் கட்டுரை படித்தேன். மதத் தீவிரவாதிகள், அரசியல்வாதிகள், பக்தியின் தீவிரவாதிகள் போல இன்றைய மனித இனம் சுயநலத் தீவிரவாத்தில் சுழல்வதை கட்டுரை உணர்த்திச் செல்கிறது. "சித்தர்களும், ஞானிகளும், சிந்தனையில் யோகிகளும், புத்தரும், ஏசுவும், உத்தமர் காந்தியும் என்னென்னவோ எழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க" என்ற பட்டுக் கோட்டையாரின் வரிகள் இந்தச் சமுகத்தை நோக்கிய கேள்விக்கணையாகத் தொக்கி நிற்கிறது. – இயற்கைதாசன், கொட்டாகுளம். "மலைப்பாம்பு முன் மகுடி ஊதலாமா? தலையங்கம் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் உலக அரங்குக்குமே பொருந்தும்! அவ்வளவு தெளிவான செய்திகள். மரம் தன் இனம் அழிவதைக் கண்டு கொள்வதில்லை. மனிதனும் மனித இனம் அழிவதைக் கண்டு கொள்வதில்லை. அதனாலேயே வள்ளுவப் பெருந்தகை "மரம் போல்வர்" என்றார். அப்படிப்பட்டவர்களால் ஆவதென்ன… மலைப்பாம்பு முன் மகுடி ஊதலால் மாற்றம் ஏற்படப் போவதில்லை! இறைவன் தங்கும் ஆலயம் ஒவ்வொரு பெற்றோர்களும் கற்க வேண்டிய கல்வியைப் புகட்டும் கட்டுரையாக உள்ளது. அறுபதாண்டுகள் தாண்டியும் ஈழ நிலைமை அதே இடத்தில் இருந்தாலும் அதன் பயணம் நெடியது. ஒரே இடத்தில் இருப்பது போல்தான் தெரிகிறது. இந்திய விடுதலைப் போர் இருநூறு ஆண்டுகள் பயணித்தது! ஈழ விடுதலையும் இருக்கிறது அண்மையில்! – க.அ.பிரகாசம், கொடுமுடி. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் "இறைவன் தங்கும் ஆலயம்" கட்டுரையை வாசித்தேன். அடுத்த தலைமுறைக்கான முன்மாதிரிகளாக காந்தியும், பெரியாரும், காமராசரும்தான் இருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்னும் வரிகள் மிகவும் சிந்திக்கத்தக்க வரிகளாகும். – கி.பெ.சீனுவாசன், ஆசிரியர் புதுவைப் பாமரன், புதுச்சேரி. (நவம்பர் – 2013)"