16 February 2016 10:52 pm
தமிழ் இலெமுரியா" தமிழர் திருநாள் சிறப்பிதழாக வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற பொருள் பதிந்த வாசகத்துடன் (அட்டைப் படத்துடன்) நம்முடையத் தமிழ்ப் பெண்கள் பொங்கப் பானையுடன் காட்சியளிக்கும் படமும் கருத்தும் அருமையாக அமைந்திருந்தன. வரலாறு காட்டும் வழித்தடத்தின் இலக்கு என்ற தங்களின் தலையங்க கட்டுரை சமுதாயத்தில் அறநெறி பேணுவோரின் மனத்தை பிரதிபலிப்பாகவே நாம் பார்க்கிறோம். வாழ்க்கை என்பது நரகம் என்ற நிலை என நினைக்கின்ற இன்றைய சூழலில், பேராசிரியர் க.அழகப்பனார் அவர்களின் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கருத்துக் கட்டுரை எக்காலத்திற்கும் பொருந்துமாப் போல அமைந்திலங்குகின்றது. தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய மொழியினரும் அறிந்து உணர வேண்டிய தருணம் இது. பழைய சோறும் பச்சை மிளகாயும் என்ற விவசாயிகளின் மனக்கிடக்கையை சாறாக இல.செ.கந்தசாமி அவர்கள் பிழிந்து தந்துள்ளது படிப்போரை சற்றேனும் மனம் வெதும்ப செய்யும். அறிவா? அன்பா? என்ற மனவளம் பற்றிய தோழர் த.ஸ்டாலின் குணசேகரனின் கட்டுரை இளையோரை சிந்திக்க வைக்கும். விமர்சனத்திற்கு தோழர் ஜீவா கூறியுள்ள உவமை அருமை. நேர்முகம் பகுதியில் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ.மாதவன் பற்றி அறிகையில் மலையாள மண்ணில் வாழ்வில் 80 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வாழ்ந்தவராயினும் மலையாள கலப்பில்லாமல் தமிழைப் பேச முடிகிறது என்ற செய்தியும் சு.மாதவன் அவர்கள் யாதார்த்தவாதியாக தன்னை அடையாளம் கண்டுள்ள பாங்கினையும் தன்னையறியும் அறிவையும் பெற்றுள்ளதைப் பாராட்ட வேண்டும். பெரியார் ஓர் அறிவியல் விஞ்ஞானி அவரின் தொலைநோக்குப் பார்வை இன்று நிஜமாகிறது என்பதை எடுத்துரைப்பதாக இருக்கிறது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னரே, அத்தகைய ஆற்றலை சிந்தனை வளத்தினை பெரியார் பெற்றிருப்பது, அவர் சிறந்த ஞானி எனச் சொல்லத் தோன்றுகிறது. சமுதாய ஞானி இப்படி கூறினால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம்.சிறந்த தமிழறிஞரும் நமது அன்பிற்கினியவருமான சிலம்பொலியாரின் பாரதிதாசன் உணர்த்தும் இலக்கியக் கொள்கை என்ற இலக்கியக் கட்டுரை அருமையிலும் அருமை. கலைஞன், கவிஞன், படைப்பாளனின் எண்ண ஓட்டம் அவன் வாழ்வின் காலத்திற்கேற்ப அருமையும் என்பதையும் பாவேந்தரின் பாடலின் வழியே எடுத்துக்காட்டுகளும் சிறப்பு சேர்க்கிறது. இலக்கியக் கொள்கைகள் பற்றிய விளக்கத்தினையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். மூத்த தமிழறிஞரும் அண்மையில் மறைந்தவருமான முனைவர் தமிழண்ணல் அவர்களின் வாழ்வியல் விழுமியக் கல்வி என்கிற கட்டுரை இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய கட்டுரையாக அமைகின்றது. நமது முன்னோர்களின் வாழ்வியலையும், குறிப்பாக மானிட மதிப்புக் கல்வியினைப் பற்றிய கருத்துகளை அழகுற எடுத்துக் காட்டியிருக்கின்ற விதம் அருமை. வடநாட்டில் தென்மொழி என்ற பழங்கஞ்சிப் பானை கட்டுரை தமிழன் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் என்றே நம்புகிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே வங்காளக்காரர் ஒருவர் இத்தகைய சிந்தனையை கொண்டுள்ளார் என்பது வியப்பிக்குள்ளாகியது. எல்லா இனங்களிலும் சிறந்தவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் இருக்கத்தானே செய்வார்கள். அந்த வகையில் அவர் தெரிவித்துக் கருத்துக்கள் இன்றும் பொருந்துகிறது. இன்னும் அக்கனவு பலிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. விரைவில் அது நிஜமாகும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். நாமும் முயற்சிப்போம். இவ்விதழில் வந்த அனைத்தும் கருத்துக் கருவூலங்களாகவே இருக்கின்றன. இதற்கு காரணமாக தங்களை பாராட்டி மகிழ்கிறோம். தொடரட்டும் தங்களது தூய தமிழ் இலக்கியத் தொண்டு. வாழ்க! வளர்க!- தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், புதுக்கோட்டை – 622 001திலகம்செங்கதிரோன் மென் கதிருக்குசென்னிமலை சிகரம் திலகம்செம்மொழியாம் நம் தமிழுக்குசான்றோன் அண்ணா பேச்சு திலகம்மூங்கில் இலை மேல்கொட்டும் பனித்துளிகள் திலகம்பதவி பிடிக்க அரசியல்வாதிக்குபாமரனின் வாக்கு திலகம்மும்பை மாத இதழ்களில் சிறப்புக்கு‘தமிழ் இலெமுரியா’ இதழ் திலகம்- கவிஞர் பரணி, மும்பை – 400 101நேர்த்தியான வடிவமைப்பு‘தமிழ் இலெமுரியா’வின் தமிழர் திருநாள் சிறப்பிதழ் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது! வாழ்த்துகள். இந்தாண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவனின் நேர்காணல் நன்றாக அமைந்திருந்தது. அவரது பன்முக ஆளுமையை நேர்காணல் மூலம் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இதழின் வடிவமைப்பு நேர்த்தியாக மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியர் குழுவிற்கு எனது வாழ்த்துகள்.அ.கோவிந்தன், சேலம் – 636203.மெய்ஞானிதை ‘தமிழ் இலெமுரியா’ இதழ் படித்தேன். இந்தக் குளிரிலும் கொஞ்சம் சூடேற்றியது ‘பாரதிதாசன் உணர்த்தும் இலக்கியக் கொள்கை’ கட்டுரை. வழக்கம் போல கருமலைத் தமிழாழன், கல்லாடன் கவிதைகள் அருமை. பெரியார் ஓர் அறிவியல் விஞ்ஞானி கட்டுரை இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற புரட்சியாளரைப் பற்றி பலர் அறியாத கருத்துகளைக் கொண்டிருந்தது. என்னுள் மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் விஞ்ஞானி & மெய்ஞானி பெரியார் ஆவார். ‘அறிவா? அன்பா’ கட்டுரை சிறந்த ஊக்கக் கட்டுரை. தலையங்கமோ வலிக்குத் தைலம் தடவுவதாக இருந்தது.- ஞா.சிவகாமி, சென்னை – 600 116நறுமணம்உலகத் தேருக்கு அச்சாணியே உழவர் என்றார் அய்யன் திருவள்ளுவர். ஆனால், இன்றோ? மண்ணைப் பொன்னாக்கிவிட்டு, தன் வாழ்வை மண்ணாக்கிக் கொண்டு வாழ்பவனும் அவனே! எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் அதே தொழிலில் ஆர்வத்தோடு உழைப்பதே, அவன் காணும் இன்பம். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிவிட்டு அவன் முதுகெலும்பை முறிக்கின்ற செயல்களிலும் உலகுக்கே அச்சாணி என்று சொல்லி அந்த அச்சாணியை முறிக்கின்ற செயல்களிலும் அரசு ஈடுபடுவது அவனது வாழ்வையே பாலையாக்கிவிடும். எனவே உலகத் தேரின் அச்சாணி முறியாமல் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. இதனை ‘‘பழைய சோறும் பச்சை மிளகாயும்’’ கட்டுரை அருமையாக விளக்குகிறது. அறிவுப்பூக்களின் நறுமணமாக ‘தமிழ் இலெமுரியா’ தனிமணம் வீசுகிறது. வெல்க தங்களின் தமிழ்த் தொண்டு!- க.தியாகராசன், குடந்தை – 612 501தமிழ் இலெமுரியாவைப் போற்று!உழவனவன் படுதுயரும் உழைப்பின் மேன்மைஉரைத்தந்தத் திருமணத்தின் சிறப்பைக் கூறிசுழலுகின்ற வாழ்வோட்டம் தொடரச் சொல்லிசுடர்விடும் நல் அறிவோடே அன்பின் தாக்கம்வழிய விட்டுக் கேரளத்து மாதவன் தான்வாங்கியுள்ள சாகித்திய விருதும் பற்றிமொழிந்திட்டுப் பெரியாரின் பெருமை பேசிமுழக்கமிடும் தமிழ் இலெமுரி யாவைப் போற்று!- அறிவுத் தொகையன், திருலோக்கி – 609 804அறிவியல் பாடம்!ஒவ்வொரு புத்தாண்டின் விடியலில் புதுமையை எதிர்பார்க்கும் மக்கள் – ஆண்டு முடிவில் கடந்து போன காலம், தத்தம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தர்க்கங்களையும் மாற்றங்களையும் எண்ணிப் பார்த்து ஏமாற்றத்தால் வாடி நிற்கும் அவல நிலை அறிந்து மனம் வெம்புகிறது. அல்லவை அகற்றி அறிவுப் பார்வை முகிழ்க்கும் வண்ணம் – ‘புத்தாண்டு அமைய வேண்டும்!’ என வேண்டி இறுதியில் ஆறிவுப் பூர்வமான விடயங்களை மிக நேர்த்தியாக சொல்லி எழுதப்பட்ட தலையங்கம் – உலகிற்கே நடத்தப்பட்ட, நல் அறிவியல் பாடம்! திசை எங்கும் பரவட்டும் "தமிழ் இலெமுரியா" புகழ்!ப.லெ.பரமசிவம், மதுரை – 625 009தமிழ்ப் பணிதமிழர் திருநாள் சிறப்பிதழ் பொங்கல் கவிதைகள் படிப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. தமிழ் இலெமுரியாவின் தமிழ்ப் பணி வெல்க!அ.காஜாமைதீன், பழனி – 624601.சித்தத்தில் பதிந்தது‘தமிழ் இலெமுரியா’ பொங்கல் மலர் பொலிவு தந்தது. தலையங்கம் மிகுந்த துன்பங்களையும் குறைந்த இன்பங்களையும் கூட்டிக் கழித்து இனிமேல் வரும் வரவு நல்லதாகிட வழி கூறியது சித்தத்தில் பதிந்தது. ‘பழைய சோறும் பச்சைமிளகாயும், வாழ்க்கை வாழ்வதற்கே, அறிவா அன்பா, கோவா விடுதலை, கடைத்தெரு கதாசிரியருக்கு சாகித்ய அகாதமி விருது, ஓர் எழுத்தாளனுக்கான பரிசு’ ஆகிய அனைத்து கட்டுரையும் படிக்க ஈர்ப்பாக இருந்தது. பெரியார் ஓர் அறிவியல் விஞ்ஞானி வியப்பளித்தது. அவரால் அறிந்து கொள்ளத்தக்கன நிறைய உள்ளன என்பதை ஆராய வைத்தது. மொத்தத்தில் அனைத்துப் படைப்புகளும் கவனம் செலுத்தத் தக்கனவாக அமைந்திருந்தன. வணிக இதழ்களை எல்லாம் புறந்தள்ளி முன்னிலை வகித்த ‘தமிழ் இலெமுரியா’வுக்கு வாழ்த்துகள்! வளர்க நாளும் வையமெல்லாம் படர்ந்து.க.அ. பிரகாசம், கொடுமுடி – 638151.விடியலில் மகிழ்ச்சிஒவ்வொரு புத்தாண்டு விடியலில் மகிழ்ச்சியும் முடிவில் திரும்பிப் பார்த்தால் மக்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் தன்னலமில்லாத் தலைமைகளை அடையாளம் காண முடியாத அவலநிலைகளையும் தலையங்க உரையில் குறிப்பிட்டதைக் கண்டேன். தன்னலமில்லாத் தலைவர்களை எல்லாம் மக்கள் எப்போதோ புறம் தள்ளி வைத்து விட்டார்கள். வரலாறு காணாத கடும் மழையால் பாதிக்கப்பட்ட என் தமிழ் மக்களுக்கு மராத்தியத்திலிருந்து நிவாரண நிதி வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன்.மூர்த்தி, சென்னை – 600100.அறிவூட்டமே!‘தமிழ் இலெமுரியா’ சுறவம் பொங்கல் சிறப்பிதழ் புதுப்பொலிவு எழிலொடு அமையலுற்றதுவை கிடைக்கப் பெற்றேன் முழுமையும் படித்தேன்! இதழின் இடம்பெற்ற கட்டுரை, பாடல், நேர்காணல், சிறுகதை, மடலோசை எல்லாமே பொங்கல் போன்று உடலூட்டம்படுத்தும் அறிவூட்டமே! ஆனால் மடலோசையில் பதினேழுவரில் மூவர் பெயர் மட்டுமே தமிழ் பெயர்கள்! இவர்கள் பெயர்களை தமிழாக்குவதில் ஏன் பின்னடைவு?அ.ம.பெ.காவளர் தமிழ்அறிவன், பேட்டைவாய்தலை – 639112.முத்தான, சத்தான ஆய்வு!தலையங்கம் கடந்த ஆண்டு உலகளவில் பல கோணங்களில், பல்வேறு நிகழ்வுகளில் இழந்த மனித உயிர்களை வரிசையிட்டு, விளக்கமாக கூறப்பட்டிருந்தன. மக்களும், உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்கிற வேண்டுதல் நோக்குடைய தங்களுடைய கருத்து தலையங்கத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பது முத்தான, சத்தான ஆய்வு வரிகளே! ‘அறிவா அன்பா’ கட்டுரை மிக அருமை. மன வளத்திற்கு அடிப்படை அன்பின் ஆட்சியே! அறிவுடன் இணைந்த அன்பின் தரமும் அன்பு இணையாத அறிவின் தரமும் நீண்ட இடைவெளிக்கு உட்பட்டது என்பதை கட்டுரை ஆய்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது.துரை. சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631501. படிப்போரை ஈர்க்கும் இதழ்தொல் தமிழனின் வாழ்வியல் தொடங்கிய முதல் கண்டம் இலெமுரியா ஆகும். இத்தகையச் சிறப்பான பெயருடன் தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக அருமையான படைப்புகளை வெளியிட்டு படிப்போரை ஈர்த்து வருகின்ற திங்களிதழ் ‘தமிழ் இலெமுரியா’ ஆகும். என் மனம் குளிர்ந்த நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.மதலை மணி, பெங்களூர் – 560 001முகப்பே சிறப்பு!தமிழர் திருநாள் சிறப்பிதழைத் திறந்ததுமே, இனிய கவிதை புதுப்பொங்கல் பற்றி இடம் பெற்றிருந்தது மன நிறைவைத் தந்தது. வழக்கம்போல் தலையங்கம் சிறப்பு. ‘பழைய சோறும் பச்சை மிளகாயும்’ அருமையான விழிப்புணர்வு கட்டுரை. பேராசிரியர் க.அன்பழகனின் கட்டுரை மிக நன்று. பழைய திராவிடத் தலைவர்களில் அப்பழுக்கற்ற இனிமையான தலைவர். அவர் கூறும் கருத்துகள் மிகவும் மதிப்புடையவை.- த.சுப்பிரமணியன், செகந்தராபாத் – 500 061"