18 November 2016 12:53 pm
வரலாற்றில் திரிபையும் சிதைவையும் ஏற்படுத்தி சமசுகிருதமே தேவமொழி என அறிவித்து தமிழுக்கு ஊறு விளைவித்த ஆரியர்களின் சூழ்ச்சியை முறியடிக்க, மறைமலையடிகளார் கண்ட தனித்தமிழ் இயக்க சாதனைக்கு நூற்றாண்டு! என விளக்கியுள்ள தலையங்கம் பல உண்மைகளை புட்டு வைத்தது. மும்பையின் வளர்ச்சிக்கு மராட்டியர்களை விட தமிழர்களே அதிகமாக தங்களை அர்பணித்துள்ளது சரவணா இராசேந்திரனின் கட்டுரையில் பளிச்சிட்டது. ஈதல் கட்டுரை இல்லார்க்கும் எளியோர்க்கும் ஈந்து அவர்களை முகமலர வைப்பதே கடமை என வலியுறுத்திற்று. தொலைந்து போன செல்வங்கள் பற்றியும் பெரியார் பகுத்தறிவு சிங்கம் என்பதையும் நினைவூட்டி சிந்திக்க வைத்ததற்கு நன்றி!ந. ஞானசேகரன், திருலோக்கி – 609804காவிரியையும் இழப்போம்!தலையங்கத்தில் சுட்டிக்காட்டியது போல காவிரி நீரில் இறையாண்மை கரையவில்லை. கருநாடக அரசு தன்னிலையில் சரியாகத்தான் நிற்கிறது. தம் மாநிலத்தின் நலனைக் காக்க உச்ச நீதி மன்றத்தையே எதிர்த்து நிற்கிறது. காழ்ப்போ, பகையோ, தலைக்கணமோ எதுவுமின்றி ஆளும் கட்சி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசி ஒருமித்த கருத்தில் துணிவோடு செயல்படுகிறது. இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த தேவேகவுடா தம் மாநில நலனுக்காக உண்ணாமல் அமர்கிறார். இத்தனைச் செயல்கள் அண்டை மாநிலத்தில் நடக்கும் பொழுது, தமிழ்நாட்டில் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் எண்ணாமல் ஆளும் கட்சி பேசக் கூட முன்வரவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது பற்றி எண்ணவுமில்லை. மத்தியில் ஆளும் பா.ச.க கருநாடகத்தில் ஆளும் பேராயக்கட்சிக்கு ஆதரவு தருகிறது. தமிழ்நாடோ குறைகூறிப் பேசுவதோடு, மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பாராட்டும் தெரிவிக்கிறது. இந்த நிலையில் கருநாடகாவையோ, மத்தியஅரசையோ குறைகூறுவதில் என்ன பயன்?அக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர் கள் எவ்வாறு தமக்குள்ளே ஒற்றுமையின்றி இருந்தார்களோ, அதே போலத்தான் இன்றும் தமிழர்கள் இருக்கிறார்கள். நம்மிடையே என்று ஒற்றுமை வருகிறதோ அன்றுதான் தமிழ் நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும். அதுவரை இலங்கையில் தமிழன் உரிமையை இழந்தது போலத்தான் காவிரியையும் இழப்போம்.கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109மனவேதனைஐப்பசி மாத இதழில் வெளியான ‘பால் மாறாட்டம்’ சிறுகதையில் ஆண்பால் பெண்பால் தெரியாமலேயே மூட நம்பிக்கையோடு காளை மாட்டினை லெட்சுமியாக நினைத்து கொண்டாடுவது சிரிப்பாகவும் சிந்தனை மிக்கதாகவும் இருந்தது. சாளரக்காற்று பக்கத்தில் கவிவேந்தர் வேழவேந்தனின் ‘ஔவையை மறந்த அவலம்’ கவிதை படித்ததும் மனவேதனைதான் மிகுந்தது. தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியால் தமிழ் மரபுகளும், நமது கலாச்சாரமும் வருங்காலத்தில் தொலைந்து போகுமோ? என அச்சமே மேலிடுகிறது.இளங்கோவன், மயிலாடுதுறை – 609 001மிகப் பெரிய அறிவாளிகள்தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கட்டுரை மிக மிக அருமை. நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் ரகுராம் ராஜன் போன்ற மிகப் பெரிய அறிவாளிகள் நிறைய பேரிருப்பதைக் கண்டு அவர்களை முன்னுக்கு கொண்டு வர ‘தமிழ் இலெமுரியா’ அயராது பணியாற்றும் என நம்புவோம். தொடரட்டும் ‘தாராவி’ உலகின் முன் மாதிரி நகராமாக திகழ வாழ்த்துகள். இந்திய வரலாற்றில் தனியொரு பெண்ணாக சோதனைகளை கடந்து சாதனை நிகழ்த்திய மூதாட்டியை மனதார பாராட்டுகிறோம். ஆ. ந.அருணகிரிசாமி, ஈரோடு – 638501அரசியல் விளையாட்டுஅக்டோபர் இதழில், ‘காவிரி நீரில் கரையும் இறையாண்மை’ தலையங்கம் அருமை! சிக்கல்கள் தீர நதிகள் இணையவேண்டும். கருத்தரங்குகளின் நெருக்குதல்கள் பெருக வேண்டும் தமிழ்நாட்டில் திராவிடம் நசுக்கப் பட்டு வருகின்றது. மழைநீரை நாம் ஜப்பானைப்போல நிலத்தடி நீராக சேமிக்க வேண்டும் நீருக்காக நாம் கருநாடகாவைத் தலைமுறைகளாக நம்புவது அரசியல் விளையாட்டுக்கு மட்டுமே துணை புரியும். மா. சுகுமார், கல்பாக்கம் – 603102விழிப்புணர்வு!பட்டினப்பாலை தந்த காவிரியின் பெருமை- பாடலை நினைவுக்கு கொண்டு, தன்னிகரில்லா தமிழகத்திற்கான காவிரி நீரின் உரிமையை எடுத்துக்கூறி, கருநாடக அரசு சிறு மதி படைத்து நடப்பதை துணிவுடன் கூறியுள்ளீர்கள்! நீதிமன்ற அவமதிப்பு நடத்துவதை கண்டிக்காத நடுவணரசு -தேசிய ஒருமைப்பாடு கொள்கையை அரசியல் நாடகத்தில் குழி தோண்டி புதைக்கிறது! காவிரி மேலாண்மை ஆணையத்தை அவமதிப்பது போன்ற விவரங்களும் தலையங்கத்தில் ஆய்வு செய்யப் பட்டது அருமை! தமிழரின் ஒற்றுமை -விழிப்புணர்வுக் கொள்ள வேண்டியது அவசியம்-.துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631501சாட்டை அடிபுதிய விடியலைக் காண உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என குரல் எழுப்ப எழுதப்பட்ட ‘காவிரி நீரில் கரையும் இறையாண்மை’ தலையங்கம் சரியான சாட்டை அடி! நகைச்சுவை உணர்வுடன் எளிய தன் எழுத்து நடையின் மூலம் எழிலாக எடுத்துச் சொல்லிய கிரிஜா மணாளனின் ‘பால் மாறாட்டம்’ சிறுகதையை பாராட்டாமல் விடமாட்டோம்!ப.லெ.பரமசிவம், மதுரை – 625009அனைத்தும் பலாஐப்பசி இதழில் ‘மலையாளன் மாரே’ கவிதை மனதில் அலைபாய்கிறது. சாமி சிதம்பரனாரின் ‘இடம்’ எத்தனை முக்கியமானதைத் தொட்டுக் காட்டியுள்ளது.இப்படிபல… அனைத்தும் பலாஒதுக்குவதற்கென்று சில. இல்லாமல் போனதுதான் உள.பெ. சிதம்பரநாதன், கோவை – 641002வீரத்தை அறிய முடிந்ததுஅக்டோபர் இதழ் கண்டேன். காவிரி நீரில் கரையும் இறையாண்மை தலையங்கத்தில், ஆளும் அரசின் கையாலாகாதத் தனத்தைக் காட்டுகிறது. நடுவண் அரசு காவிரியில் தன்மானத்தினையே கரைத்து விட்டு ஒதுங்கி நிற்கிறது. மறத்தமிழரின் வீர உரை வாசித்தேன் பழங்காலத்து வீரத்தை அறியமுடிந்தது. அப்படியே வெட்டி எடுத்து பத்திரப்படுத்துகிறபடி இருந்தது. ‘இதுதான் இந்தியா’ தொகுப்பு கண்டேன், கோட்சே ஒரு மகாத்மா என்பதுபோல் பாடதிட்டத்தில் கூட பதிவாகலாம்.மூர்த்தி, சென்னை – 600100வெந்தனலைக் கொட்டியதுஐப்பசி இதழ் கண்டேன் ‘காவிரி நீரில் கரையும் இறையாண்மை’ அருமைக்குரிய ஒருமைப்பாட்டின் தற்கால நடுவண் அரசின் வேடிக்கை பார்க்கும் நிலையும் வரலாறு புரியாத வல்லூறுகளும் ஓட்டு வங்கியில் நாட்டம் கொள்ளும் கலாச்சார செயலும் உணர்வும் நெஞ்சில் வெந்தனலை கொட்டியது போல் இருந்தது. ஒன்று பட்டு செயல்பட உலகத் தமிழர்களின் உறுதியை வலிமையை காட்ட வேண்டிய தருணமிது. கட்சி பாகுபாடுகள் காண்பது சீரியக் கோட்பாட்டின் எதிர் மறை என்பதை தொடர்புடைய யாவரும் சிந்திக்க வேண்டும்.செ.வ.மகேந்திரன், கள்ளக் குறிச்சி – 606202சிறக்கட்டும்!ஐப்பசி இதழ் கண்டேன் ‘தேய்ந்து வரும் தாய்மை’ கட்டுரை இக் கால பெண்களுக்கு, மாறி வரும் கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் தமிழர் பண்பாட்டை பேணிகாத்து, அதன் ஒரு பகுதியாக குழந்தை வளர்ப்பையும் கருதவேண்டும் என்ற அறிவுரையையும், 87 வயது இளைஞரான சா. கணேசன் அரசியலில் கடந்து வந்த பாதையையும் பதிவு செய்யப்பட்டது, மறத்தமிழரின் வீரம், இதுதான் இந்தியா, என எல்லாமும் அருமை! இனிப்பும் இழப்பும் கட்டுரையில் இழப்பை தவிர்க்கும் விதமான கருத்துகள் முத்தாய்ப்பு. தொடரட்டும், சிறக்கட்டும் இதழ் பணி!அ.கருப்பையா, பொன்னமராவதி – 622 407மூத்தகுடி!தலையங்கம் படித்தேன் ‘ஒரு சொட்டு நீர் கூடத் தர முடியாது’ என்கிறார் கருநாடக முதல்வர், உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பின்னும் தமிழர்களைப் பொறுத்தவரை மானம், மரியாதை, சூடு, சொரணை ஒன்றுமே கிடையாது. ஒன்று பட்டு நாம் போராட வேண்டாமா? இதுதான் இந்தியா, உத்திரபிரதேச சாதீய மாணவர்கள் மற்றும் ஆராதானா சாவும் வெகுவாகவே உலுக்கிவிட்டது. ‘கோவில் நிதி’ சிரிப்பதா? சிந்திப்பதா? நிதி மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. நீதி இல்லை. ஔவையை மறந்த அவலம் அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் கவிஞர் வேழவேந்தன். தமிழை மறந்தோம், தமிழர் என்பதையும் மறந்தோம். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் மக்களே! நாம் இந்தியர்களாக 70 ஆண்டுகளாகத்தான்! ஞா.சிவகாமி, போரூர் – 600 116