11 September 2013 12:27 am
தேவை மறு ஆய்வு" இன்றைய கீழ்மை அரசியலின் அவலத்தை நறுக்காகச் சொல்லும் நல்ல தலையங்கம். 75 விழுக்காட்டு மக்கள் எதிர்த்தும் 25 விழுக்காட்டு மக்களின் ஆதரவால் நாறுகிறது நம் நாட்டின் குடிநாயகம் என்பதை மென்மையான சொற்களால் வெளிப்படுத்தியுள்ளது தலையங்கம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்; நம் தலைவர்களுக்கு…"வேண்டாம் மதவாதம்" கோவை ஞானியின் கட்டுரை சிறப்பு. "திசை மாறிய தெலங்கானா" "தண்ணீர்த் தன்னிறைவு" கட்டுரைகளும் உணர்வூட்டும் படைப்புகளாய் ஒளிர்ந்தன. நீர்த் தேவையை நிறைவு செய்வதில் இங்கிலாந்து மக்களின் பொறுப்புணர்ச்சி வியப்பைத் தந்தது."உலகை அறிவோம்" தொடர் ஒவ்வொன்றும் இலவயமாய் எமக்கு அமையும் வானூர்திப் பயணம் போன்றது. இம்முறை காங்கோ பயணம் இனித்தது. இவ்விதழில் எங்களுக்குப் "பிளேட்டோ" பாடம் எடுத்தார். அறிஞர் டால்ஸ்டாய் பிச்சைக்காரனிடம் அன்பான வார்த்தை பேசி அறிவு கொளுத்தினார்.கவிச்சோலையின் அத்தனைப் பாக்களும் தித்திக்கும் தேனடைகள். "கவி"யும் "பா"வும் தமிழ்ச் சொல்லே என முனைவர் கணேசனார் கழறினாலும் "கவி" வடசொல் என்பதே மொழிஞாயிறு பாவாணரின் முடிவு. இச்செய்தியில் பாவேந்தர் மேல் அவர் பாய்ந்தார். "தமிழ் இலெமுரியா" பயணம் தொடர வாழ்த்துகள். - பாவலர் தமிழேந்தி, அரக்கோணம்."