14 November 2015 10:03 pm
தடுமாறும் போக்குஇன்றைய பட்டிமன்றங்களுக்குச் செல்லும் மக்கள் பட்டிமன்றத்தில் திரைப்படப் பாடல்கள் பாடுவார்கள்; வயிறு குலுங்கச் சிரிக்க நகைச்சுவை சொல்வார்கள் என்றளவில் வெறும் பொழுதுபோக்கிற்காக வருகிறார்கள். பேச்சாளர்கள் இலக்கியம் பேசினால் அவை கலைந்து விடுமோ, ஆய்வுப் பூர்வமாக விவாதம் செய்தால் மக்கள் சலிப்புற்று எழுந்து போய்விடுவார்களோ என்கிற ஐயத்தில் அவர்களும் நகைச்சுவையை மட்டும் மையமாக வைத்துப் பேசுகின்றனர். எனவே தற்காலத்தில் பட்டிமன்றத்தின் போக்கு கண்டபடி தடுமாறுகிறது. தமிழ் மணக்கவில்லை. மாறாக கேலி கிண்டல்கள் அவையோரைக் கூச்சமிடச் செய்கிறது. - பா.சரவணன், பரமகுடி- 623 707எவ்வாறு நம்புவது?நீருக்குள் நிழலை அதுவும் கண்களை மூடிக்கொண்டல்லவா தேடச் சொல்கிறது அமெரிக்கா. அதற்குப் பன்னாடுகளும் ஒத்து ஊதுகின்றன. எதிர்த்துப் பேச தகுதி பெற்ற இந்தியாவோ அவர்களுடன் கை கோர்த்து ஆமாம் போடுகிறது. இந்தியாவின் ஓர் உறுப்பு தமிழ்நாடு என்கிற எண்ணம் கிஞ்சித்தும் முந்தைய பேராயக்கட்சி ஆட்சிக்கும் இல்லை, இன்றைய ஆட்சிக்கும் இல்லை. காவிரி நீரைத் தரமுடியாது என்று கருநாடக அரசு துணிவாகக் கூறுவதைத் தட்டிக் கேட்காத நடுவண் அரசு ஈழத் தமிழர் சிக்கலில் செயல்படும் என்று எவ்வாறு நம்புவது. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள், மனித நேயமுள்ள அந்நிய நாடுகளால் தாம் ஈழத் தமிழர்களுக்கு விடிவு பிறந்தால் பிறக்குமே அன்றித் தமிழகத்துத் தலைவர்களால் ஒருபோதும் பயன் ஏற்படப் போவதில்லை.. – கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635109 மெக்காலே கல்விமெக்காலே கல்வி பற்றிய கட்டுரை ஆங்கிலம் பரவிய உண்மையைக் கூறுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயரில் பலர் இழி நிலையில் வாழ்கின்றனர். வீடற்றவர்களாக, அநாதைகளாக, வேலை வெட்டி இல்லாதவர்களாக அரசு உதவித் தொகை பெற்று வாழ்கின்றனர். எனவே ஆங்கிலம் படித்தவர் எல்லாம் உயர்ந்த அறிவாளிகள் அல்ல என்பதே உண்மையாகும்.கமால் பாஷா, சென்னை – 600 007நல்லதா? கெட்டதா?ஐப்பசி இதழ் கண்டேன், இலங்கைத் தமிழர் நிலை பற்றிய தலையங்கம் கண்டேன். ஈழக் குற்றங்களில் இலங்கை, ஐ.நா., இந்தியா என பலவற்றை விமர்சித்ததோடு தமிழர்களிடையே உணர்ச்சிகள் ஊடியிருந்த அளவுக்கு, ஒற்றுமை இல்லாது போயிற்று" என்கிற வரிகள் வெளிப்படையான உண்மை. தமிழர்களிடம் ஒற்றுமை செத்துவருவதால், எங்கேயும் எப்போதும் ஓலங்களே கேட்கிறது. பட்டிமன்றம் ஒரு பார்வை இருபக்க அலசல் வாசித்தேன். மக்கள் எதை விரும்பி கேட்கிறார்களோ, அப்படிதான் பட்டிமன்றத் தலைப்புகள் அமையும். நாட்டு நலனை சரி செய்யும் புரட்சிகரமான தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தினால், மக்கள் பார்வை வேறு பக்கம் திரும்பிவிடும். ‘தீர்ப்பு’ சிறுகதை அருமை, மகனைக் கொன்ற கொலைகாரனுக்கு நஞ்சைக் கொடுத்து பழிவாங்கிய பாட்டி கதை. அருமை. நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத கொடும் குற்றவாளிகள் இது மாதிரி பழிக்குப் பழி பாணியில் கொல்லப்படுவது நாளும் ஒரு நல்ல செய்திகளாக நாளேடுகளில் பதிவாகி வருகிறது. இது நல்லதா? கெட்டதா? தீர்ப்பு சொல்ல முடியவில்லையே. - மூர்த்தி, சென்னை – 600 100வேடிக்கை பார்க்கும் நிலைமைஅரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையின் அன்றாட நிகழ்வுகளைக் கண்டு வருகிறேன். ஐக்கிய நாடுகள் மன்றம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கத் தவறி விட்டது என்றே சொல்லலாம். இறுதிப் போரின்போது ஐ.நா. மன்றம் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததன் மூலம் தமிழ் இனத்திற்கு பெரும் பாதகம் இழைத்து விட்டது. இந்தியாவும் தமிழர்களுக்கு எதிராக, சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்திருந்தால் இந்தியா தன் வீரர்களைப் பலி கொடுத்திருக்க வேண்டாம்.தமிழர்கள் என்பவர்கள் ஒற்றுமை இல்லாத தனிப்பிறவிகள். அவர்களுக்குள் ஒற்றுமை என்பது சுட்டுப் போட்டாலும் வரவே வராது. உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் எல்லாருக்கும் இது பொருந்தும்.- அழகனார், கள்ளிக் கோட்டை – 673 004கசப்பான உண்மையேவணக்கம். ‘எது சிறந்த உணவு’ கட்டுரையில் கூறியவாறு பல புதிய உணவுகள் நம் நாவை அடிமைப்படுத்தும் வகையில் உள்ளன என்பது உண்மையே. நம் நாட்டில் உணவு உற்பத்தி பன்னாட்டு வணிகப் பிடிக்குள் கார்ப்பரேட்களின் வசதிக்காகத் தள்ளப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே "வெளிநாட்டு மோகம்" திட்டமிட்டுத் திணிக்கப்பெற்றது. நாடு விடுதலை பெற்ற பின்னர் நமது அரசுகளும் அந்நிய மோகத்தை வளர்த்து வருகின்றன என்பது கசப்பான உண்மையே! - பெ.சிவசுப்பிரமணியன், சென்னை – 600 081எண்ணத்தை ஊட்டியது‘தமிழ் இலெமுரியா’ பெயரைப் போலவே இதழும் உயர்ந்து இருக்கிறது. கவிதைகள் அருமை. நவமணியின் கவிதை இஞ்சிச்சாறு மிக அருமை! பாதிக்கப்பட்ட ஒரு மனதின் எண்ணத்தை அப்படியே எளிமையாக எடுத்துரைத் தவிதம் சரியானதாக உள்ளது. இதழ்களை ஒன்று விடாமல் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஊட்டியது.- கே.கணேசன், கல்லிடைக்குறிச்சி – 627416பூந்தமிழுக்கு மகுடம்‘தமிழ் இலெமுரியா’ இதழ் முழுவதுமே அருமை சிறந்த படைப்புகளை சிறந்த முறையில் அச்சிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்து வருவது பெருமைக்குரியது. பூந்தமிழுக்கு மகுடம் சூட்டுவதுபோல் தமிழ் இலெமுரியாவின் தமிழ்ப் பணி உள்ளது! வாழ்த்துக்கள்.- இரா.நவமணி, அம்பை – & 627401கருத்துப் பெட்டகம்நீருக்குள் நிழலைத் தேடலாமா? தலையங்கமும் முதன்மைக் கட்டுரையும் தமிழ்நாட்டின் மீது தங்களுக்குள்ள பற்றும் அக்கறையையும் ஆழ அகலத்தோடு முகங்காட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய கருத்துப் பெட்டகம்! அனைத்து வகையாலும் தொடர்புடைய இந்தியா கடமையும் உரிமையும் இருந்தும் ஈழத்தமிழர்களைக் கைகழுவி விட்டிருக்கிறது. நாளையும் கைகழுவ முந்தும். அதன் நோக்கமெல்லாம் சீனாவும் பாக்கிசுதானும் அங்குக் காலூன்றிவிடக் கூடாது. குறிப்பாக அதற்காக ஈழத் தமிழரை மட்டுமல்ல, தமிழ்நாட்டு தமிழர்களையும் விட்டுக் கொடுக்க அது தயங்காது. ஆட்சி மாறினாலும் காட்சியில் மாற்றமில்லை. மனித உரிமை என்பது கேட்டுப் பெறுகின்ற பிச்சை போலாகிவிட்டது என்கிற தங்களின் கருத்து நூற்றுக்கு மேலும் உண்மை.- த.இராமலிங்கம், சின்னமணல்மேடு – 607308விழிப்புணர்வின் உச்சம்!ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பு நாடுகள் சிங்கள அரசின் விருப்புக்கு ஒப்ப ஒரு உள்ளக உசாவுகை என ஒப்புக் கொண்டிருப்பது தமிழினத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அநீதியும் மனித உரிமைக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஓர் அறைகூவலும் ஆகும் எனும் மனக் குமுறலுடன் எழுதப்பெற்ற தலையங்கம் விழிப்புணர்வின் உச்சம்! - ப.இலெ.பரமசிவம், மதுரை – 625 009படைப்புகள் தொடர்கமுதன்மை ஆசிரியரின் ‘உலகை மாற்றிய உரை வீச்சுகள்’ கட்டுரை அருமை. போர்க்குணமிக்க கருப்பின மங்கை ரோஜா பார்க்ஸ் பொதுப் பேருந்தில் வெள்ளையர் இருக்கையில் அமர்ந்து புரட்சி செய்ததும் அதன் தொடர்பாக நடந்த உரிமைப் போராட்டத்தின் மூலம் மார்ட்டின் லூதர் கிங்கின் முழக்கங்களும் வரலாற்றுப் புகழ்மிக்கச் சொற்பொழிவுகளும் பாதிக்கப்பட்ட கருப்பின மக்களின் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கவும் காரணமாக இருந்த அமெரிக்க வரலாறு மிகச் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது போன்ற படைப்புகள் இதழில் தொடர்ந்து இடம் பெற வேண்டுமென்பது என் அவா.- க.முத்துக்கண்ணன், வைகை கரை – 623 707"