15 September 2014 6:14 am
நினைவுகூரத்தக்க அரும்பணி! மொழி உணர்வினையும், இன உணர்வினையும் ஊட்டியதோடு சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அவலங்கள் கட்டுரைகளாக தமிழ் இலெமுரியாவில் வெளி வருவது சிறப்புக்குரியது. மராத்திய மாநிலத்திலிருந்து வெளிவருதும் குறிப்பிடத்தக்கது. இவ்விதழில் மும்பை சீர்வரிசை சண்முகராசனாரின் மறைவு குறித்த செய்தி நமக்கு வருத்தத்தை தந்தது. அவருடைய தமிழினப் பண்பையும் உணர்வையும் மாண்பையும் பற்றி படித்துப் பார்த்து மகிழ்ந்தோம். அவருடைய பணி என்றும் நினைவுகூரத்தக்க அரும்பணி என்பது திண்ணம். – தவத்திரு தயானந்த சந்திரசேகர், புதுக்கோட்டை – 622 001மாற்றுத் திறனாளிகளின் நாடு ஒரு போராளி இறப்பதில்லை. தன் இறப்பிலும் ஆயிரம் போராளிகளை உருவாக்கி விட்டுத்தான் செல்கிறான். இல்லையென்றால் தாராவிக் குடிசையிலிருந்து தண்டமிழை வளர்த்த சீர்வரிசை சண்முகராசாவுக்குக் குமணராசனின் மூன்று பக்கத் தலையங்கம் முகிழ்ந்திருக்காது. கூட்டுக் குடும்பம் தகர்ந்ததாலும், கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்வதாலும், அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதற்காக உலகமயமாக்கிப் பாரம்பரியத்தை மரபணுமாற்றத்தால் பாழ்செய்ததாலும் பிறந்த குழந்தைகளைத் தாக்கும் நோய் பற்றிய சுமத்திராவின் கட்டுரை, ஓசோனின் ஓட்டையால் ஏற்படும் விளைவுகளைப் போல ஏற்படும் என்ற எச்சரிகையை அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விழிக்கச் செய்யாவிட்டால் மாற்றுத்திறனாளிகளின் நாடாகத்தான் நாளை நாடு மாறும். கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109சிறந்த பண்பாளர் ஆவணித் திங்கள் தமிழ் இலெமுரியா இதழ் எனக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் கொண்டு வந்தது. தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன். எனது நினைவுகள் 28 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றன. திருமணமான புதிதில், மனைவியுடன் பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் மூன்று நாட்கள் பேச வந்திருந்தேன். திரு சண்முகராசன் மிக மிக எளிமையாகவும் அன்புடனும் பழகியது மட்டுமல்லாமல், என் மகளுக்கு சீர்வரிசை தருகிறேன்" எனக் கூறி நூல்கள் தந்தார். பல இடங்களுக்கு அழைத்துப் போனது, அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்தது இப்படிப் பல நினைவுகள்… பின்னர் சில ஆண்டுகள் கழித்து தேவதாசன் அவர்கள் பாண்டூப் திருவள்ளுவர் மன்ற விழாவிற்கு அழைத்திருந்த போது, சண்முகராசனார் கல்யாண் பகுதிக்குக் குடி வந்திருந்தார். தொடர்வண்டியில் வந்த என்னை, அந்த நிறுத்தத்திலேயே இறங்கச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துப் போய் பேசிக் கொண்டிருந்து, உணவளித்து பின் பாண்டூப் அழைத்துச் சென்றார். அதன் பின்னர் மும்பை வந்த போது சந்திக்க வாய்ப்பின்றி போயிற்று. தமிழ் இலெமுரியா இதழில் அவருடைய படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்து, மறுமுறை வரும் போது அவரை கண்டிப்பாக சந்திக்க எண்ணியிருந்தேன். அந்த வாய்ப்பு இல்லாமலே போயிற்று என்பது அதிர்ச்சியாகவும், பெரும் கவலையாகவும் உள்ளது. மிகச் சிறந்த பண்பாளர் ஆழ்ந்த இரங்கல்கள். – இலக்கியச் சுடர் வழக்குரைஞர் த. இராமலிங்கம்உச்சகட்ட அறியாமையில் தமிழினம் ஆடி இதழில் முதியவரின் ஏக்கம் என்ற தலைப்பில் தமிழுணர்வுமிக்க ஒருவரின் இதயத் துடிப்பினை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். உச்சகட்ட அறியாமை தமிழினத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதனால் இன்னமும் தன் நாடு எது? தன் மொழி எது? தன் இனம் எது? என்பதையே புரிந்து கொள்ள இயலாமல், பகையை, உறவென்று நம்பி அழிந்து கொண்டிருக்கிறது. அன்று 140க்கும் மேற்பட்ட ஏடுகள் தமிழுணர்வை இளைஞர்கள் உள்ளத்தில் ஊட்டி வளர்த்தது. இன்றோ? தமிழையே கொலை செய்யும் ஏடுகளும் ஊடகங்களும் பெருகிவிட்டன. அதனை தமிழர்களே வாங்கி அவைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுதான் மிகப் பெரிய கொடுமை. உண்மையிலேயே தமிழ் உணர்வோடு நடைபோடும் "தமிழ் இலெமுரியா" போன்ற ஏடுகள் புயல் நடுவே படகாய் தத்தளிப்பது அதை விடக் கொடுமை! பெருஞ்செல்வம் படைத்தோர், ஒரு சிறு பகுதியை தமிழ் வளர்ச்சிக்கு செலவிடுவார்களேயானால், நமது செம்மொழி இந்திய மொழிகளில் முதன்மை மொழியாகிவிடும். ஆனால் தமிழர் இன்று சொந்த நாட்டிலேயே ஏதிலி வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதுதான் வரலாறு காணா சோகம். இதை மாற்றுவது ஏடு நடத்துவோரின் தலையாயக் கடமை. அதனை உணர்ந்து செயல்படும் "தமிழ் இலெமுரியா" உண்மையிலேயே பாராட்டுக்குரியது. – க.தியாகராசன், குடந்தை – 612 501தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது! ஆடி இதழில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை தலையங்கக் கருத்துகள் உணர்த்தின. தமிழண்ணலின் மொழிப் பாடம் வேறு வழிப்பாடம் வேறு என்பதில் ஆட்சியாளர்கள், கல்வியாளர்களின் அக்கறையின்மையே தமிழ் மொழிக் கல்வி தேய்ந்துப் போன அவலத்திற்கு காரணம் எனக் கூறியிருப்பது மிகச் சரியே. ஆரம்பப் பள்ளி மாணவிக்கான அடையாள அட்டைக் கூட ஆங்கிலத்தில்! அவர்களின் வருகைப் பதிவும் ஆங்கிலத்தில்! இந்தி நுழைவு தமிழுக்கே அழிவு எனப் போர்க்களம் கண்டு ஆட்சி அரியணை ஏறியவர்களால்தான் தமிழ்வழிக் கல்வி தரமிழந்து போனது. ஆட்சியாளர்கள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். குசராத்தை விட தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது, எல்லாவற்றிலும் டாஸ்மார்க் பெருக்கத்திலும் மணல் கனிமவளக் கொள்ளை உட்படவும். – ச.பரமசிவன், மூலைக்கரைப்பட்டி – 627 354இன்றைக்கும் தேவையான கோட்பாடுகள் முனைவர் சிவ.இளங்கோவின் "வள்ளுவர் வழித்தோன்றல்" என்னும் கட்டுரையில் அயோத்திதாசரின் வாழ்வும் பணியும் குறித்து விளக்கியிருந்தார். சாதி எதிர்ப்பு, கல்வி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, பௌத்த நெறி ஆகியவைகள் இன்றைக்கும் தேவையான கோட்பாடுகளாகும். தமிழ் பௌத்தமே தமிழர்களுக்கு அடையாளத்தையும் விடியலையும் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. – க.இந்திரசித்து, உடுமலை – 642 126நெஞ்சை நிறைத்தன "மோட்டை போனால் கோட்டை வராது" தலையங்கத்துடன் முதன்மைக் கட்டுரையான "கற்பிக்க வேண்டிய மொழியும் வழியும் தொடங்கி, பண்டைத் தமிழ் ஊராட்சி முறை, நலிந்து போன நல்லவைகள், வள்ளுவம் வழித் தோன்றல், பண்டைத் தமிழர் வாழ்வியல், தமிழ் அறிஞர்கள் பட்டியல் என்பவற்றோடு ஆடியில் பிறப்பெடுத்த பெருந்தலைவர் காமராசர், இரட்டைமலை சீனிவாசன், பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ஆகிய தமிழ்ப் பெரியவர்கள் பற்றிய செய்திகள், கவிதைகள் என அனைத்தும் தமிழ் கூறும் நல்லுகத்தின் இன்றைய, அன்றைய நிகழ்வுகளாய் நெஞ்சை நிறைத்தன. பல இதழ்களுக்கிடையே "தமிழ் இலெமுரியா" ஆற்றும் பணியை எண்ணுந்தோறும் ஆடி மாதம் வாசகர் மடலில் பெரியவர் "செகதீசன்" கருத்துகளை அப்படியே வழிமொழிகின்றேன். – அ.கருப்பையா, பொன்னமராவதி – 622 407கேட்க நாதியில்லை! எடுத்த எடுப்பிலேயே முதல் பக்கத்தில் எழுச்சிக் கவிஞர் "பாவலரேறு பெருஞ்சித்தரனாரின்" கவிதையைப் படித்ததும் இரத்தம் சூடேறியது! தலையங்கம் வெகு சிறப்பு! புது மொந்தையில் பழைய கள் போலத்தான் உள்ளது இப்போது அமைந்துள்ள பா.ச.க தலைமையிலான அரசு. வெளிநாட்டுக் கொள்கைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. சுண்டைக்காய் நாடு, இலங்கை செய்யும் அக்கிரமங்களை நமது நாட்டு நடுவண் அரசு கண்டு கொள்ளவே இல்லை. நட்புக் கரம் நீட்டித் தமிழர்களைத் தலைகுனிய வைக்கிறது. நம் நாட்டு மீனவர்களை தொடர்ந்து மிகவும் துன்புறுத்துகிறார்கள். கேட்க நாதியில்லை! "கல்வி கற்க வேண்டிய வழியும் மொழியும்" கட்டுரை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய அருமையான கட்டுரை. தமிழ் வழியில் பயின்றதோடு ஆங்கில மொழிப்பாடத்தையும் திறம்படக் கற்றுத் தேர்ந்த அறிஞர் அண்ணா, இராசாசி, சி.சுப்ரமணியம், டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்ற பல அறிஞர்களை உதாரணமாகக் கூறலாம். பண்டையத் தமிழர் நாகரிகம் பற்றித் தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள் போன்ற அரிய பெரிய இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி எழுதப்பட்ட பண்டையத் தமிழர் வாழ்வியலில் நிலவிய களவொழுக்கம், கற்பொழுக்கம் கட்டுரை மிக மிக நன்று! அன்பர் நுணாவிலூர் கா.விசயரத்தினத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள். இரட்டை மலை சீனிவாசன், முத்துலெட்சுமி அம்மையார் ஆகியோரின் மகத்தான தொண்டினை எண்ணி மனம் நெகிழ்கிறது. இப்போது யார் அவர்களை நினைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களையெல்லாம் வரிசையாக வைத்து நினைவூட்டுகிறீர்கள். "நச்சு பொய்கை" சிறுகதை சிந்திக்க வைக்கிறது. மொத்தத்தில் இதழ் வெகு சிறப்பு! – த.சுப்பிரமணியன், செகந்தராபாத் – 500 061சீர்வரிசையார் நினைவஞ்சலி!சிந்தனைமிகு தமிழ்ச்செல்வர்சீர்வரிசை சண்முகராசனார்!சீரியநல் எழுத்தாளர்சிறந்தநல் பேச்சாளர்!மும்பை நகர்தன்னில்மூச்சாய் திகழ்ந்தவர்!மக்கள் போற்றிட முன்னேற்றம் கண்டவர்!கருஞ்சட்டை வீரராய்களப்பணி ஆற்றினார்!கருத்துப் புரட்சிதூவியகன்னல் தமிழர்!தமிழ்மறை மன்றம்தமிழ்எழுத்தாளர் மன்றமெனதமிழுக்காய் வாழ்ந்தவர்தமிழ்இலக்கிய ஆசான்! – அஞ்சாமை கதிரொளி, மும்பை – 400 088"