மராட்டிய மண்ணிலிருந்து மாதந் தவறாமல் மணக்கும் தமிழ் ஏடாக “தமிழ் இலெமுரியா” - தமிழ் இலெமுரியா

5 July 2013 12:34 pm

Mail box

இதழியல் பணியில் “தமிழ் இலெமுரியாவின்” பங்கு பாராட்டுக்குரியது. ஆழமான – அழுத்தமான கருத்துகளைத் தாங்கி வரும் கட்டுரைகளும், கவிநயம் ததும்பும் கவிதைகளும், அற்புதமான வடிவமைப்பும், சிந்தனையைச் சிறக்கச் செய்யும் ஒளிப் படங்களும் தரமான தாளில் கண்ணை உறுத்தாத அச்சும் “தமிழ் இலெமுரியாவின்” தனிச் சிறப்பாக அமைந்துள்ளன. “வடக்கு வாழ்கிறது” என்பதற்கு நிதர்சன அடையாளம் “தமிழ் இலெமுரியா”.

– உதயம்ராம், சென்னை.

மரபை மறவோம் என்கிற தலைப்பில் மனைவியே போற்றி கவிதை எழுதிய ப.முத்துச் சாமிக்கு மிக்க நன்றி. முத்துச்சாமியின் கவிதை முத்து முத்தாக மரபை மறக்காமல் எழுதப்பட்டுள்ளது.

– ந.மோகன், திருவாரூர்.

தமிழரின் பெருமையை தமிழரே இன்னமும் அறிந்து கொள்ளவில்லையே. “சீமான்களே! சீமாட்டிகளே! எனக் கூட்டத்தினரைப் பார்த்து, அமெரிக்காவில் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருந்த காலத்தில் விவேகானந்தர், என் உடன் பிறப்புகளே என முழங்கியதைப் பெருமையோடு பேசியவர்கள்.., 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என உலகத்திலேயே முதன்முதலில் மனிதநேயத் தென்றலை தவழ விட்டவன் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட மறந்தது ஏன்? தமிழினத்தின் பண்பாட்டுப் பெருமையை இன்னும் உணராது ஏமாளியாய், எதிலியாய் தமிழன் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் பெரிய கொடுமை. 

இந்த இழிவைத் துடைத்து அவனுக்கு புது வாழ்வுக்கு வழி காட்டும் புதுமை இதழே “தமிழ் இலெமுரியா”. தங்களின் இந்த முயற்சிக்கு விழித்தெழும் தமிழகம் என்றும் நன்றி பாராட்டும்! வளர்க தமிழ் இலெமுரியா!

– க.தியாகராசன், குடந்தை.

பழிக்குப் பழி சிறுகதை அருமை. பழிவாங்கும் புத்தியில் இருந்தவர்கள், போதையில் இருந்த போதும் மனம் மாறி “கொலைவெறி” கொள்கையைக் கைவிட்ட தகவல் சொன்ன சிறுகதை சிறப்பு. போதையில் இருப்பவர்கள் இப்படியாவது திருந்துவார்களா? என்கிற ஏக்கமே எழுந்தது. தமிழினம் அழியுது மதுவாலே; அதன் தரமும் குறையுது அதனாலே. சினமும் பெருகுது இதனாலே. சீர்படப் போவது எவராலே.

– மூர்த்தி, வேலூர்.

மகாராட்டிரா மாநிலத்தில் தமிழியம், தமிழறம் நெறியம், மரபு வழியியம் பேணி வெளிப்படுத்தி, காக்கும் அருமை “தமிழ் இலெமுரியா” விடை (மே) இதழ் கிடைக்கப் பெற்றேன். “அடிவாரம் சரியில்லை எப்படி கோபுர மாளிகை எழுப்ப இயலும்!” என்பதில் கருத்தியல் வேறுபாடு காணல் இயலாது. 

இலண்டன் வாழ் தமிழன்பர் விசயரத்தினம் பித்தக்கோரசு தேற்றங்களையும், போதையனார் தேற்றங்களையும் ஒப்பாய்வு செய்து, தமிழம் அறிவியல் கணிதம் அறிஞர் தேற்றமே முதன்மை வாய்ந்ததும், கற்பதற்கு எளிமையானதுவும் ஆகும் என மெய்ப்பித்துள்ளார். இலண்டன் விசயரத்தினம் எங்கிருந்து போதையனார் நூலை பெற்று ஆய்ந்து வெளிப்படுத்தினார் என்பது தெரிந்திடல் இல்லை! உலகெங்கும் வாழும் தமிழ் மற்றாளர்கள் இது போல் நூல்களை தோண்டி எடுத்து கருத்தியல் அச்சாரங்களை வெளிப்படுத்துவார்களேயானால் தமிழக மக்களுக்கும், தமிழம் மக்களுக்கும் ஆக்கப் பயன் விளையும்.! இவ்வாறான ஆய்வியல் கட்டுரைகளை வெளிப்படுத்தும் “தமிழ் இலெமுரியா” தமிழியம் போல் நீடு வாழி!

– பெ.காவளர் தமிழ் அறிவன், பேட்டைவாய்த்தலை.

அட்டைப் படத்தில் அருமைத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அழகுருவம் அலங்கரிக்கிறது.! அவர் ஒரு முன்மாதிரித் தலைவர்! அவர் பெரிதும் விரும்பும் திருக்குறள் வழி நடந்தாலே நமது வாழ்வு வளம் பெறும். குறளைப் படிப்பதோடு சரி! குறள் வழி நடக்கின்றோமா? “வேறுபாடு, மாறுபாடு விளக்கம்” மிகவும் அருமையான கட்டுரை. அறிவு விளக்கம் பெற உதவியாயுள்ளது! மொத்தத்தில் அனைத்து அம்ப்சங்களும் அருமையே! தமிழர் ஒற்றுமையை வளர்க்கும் தரமான “தமிழ் இலெமுரியா” இதழ் மேலும் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.

– த.சுப்பிரமணியன், செகந்தராபாத்.

இத்திங்கள் “தமிழ் இலெமுரியா”வில் தலையங்கம் படித்தேன். மேல் சாதியினரின் அடக்குமுறை கொண்ட “இடைக் காலத்திலும் கூட, சாதிப் பகைகள், “கொலைவெறி” பிடித்தாட் கொள்ளவில்லை. கீழ்சாதி என ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவும், மனத் துணிச்சலும் கொண்டு உயர்வு பெறும் இக்காலத்தில் அவர்களிடமும் பிரிவுகள் பல முளைத்தெழுந்து உட்பகையால் பழிக்குப்பழி என்னும் களம் இறங்கும் அவலம். இதற்கெல்லாம் வித்திட்டது வாக்குவங்கி அரசியலன்றி வேறெதுவும் இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் ஆங்கிலேயன் நம்மை நூறாண்டுகளுக்கும் மேலாக நம்மை ஆளுமை கொண்டான். அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் சாதிக் கட்சிகளை முளைக்கச் செய்து ஆளுமை கொள்ளத் துடிக்கிறது அரசியல் ஆதாய சகுனிகள். சாதி நமக்கு அறிமுக முத்திரையாகவே கொள்வோம். அதை வீராப்புக்கு அடையாளமாக களம் இறக்கச் செய்தால், அத்தகைய உட்பகை தன்னையும் அழித்து சமுதாயத்தையும் சீரழித்து விடும். “மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா ஒதம்பலவும் தரும்” என்கிற வள்ளுவத்தின் கூற்றை மனதில் கொள்வோம். தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பு பேராண்மைக்கு இழிவு இல்லா நிலையை காண்போம். வாக்கு வங்கி அரசியலுக்கு எந்த சாதியினரும் சோறம் போய்விடாமல் பொது அமைதி காப்பதே சிறப்பு. 

– ச.பரமசிவன், மூலக்கரைப்பட்டி.

மராட்டிய மண்ணிலிருந்து மாதந் தவறாமல் மணக்கும் தமிழ் ஏடாக “தமிழ் இலெமுரியா” தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஓர் இலக்கிய – சமுதாய – அரசியல் இதழைத் தமிழில் நடத்துவது என்பது எவ்வளவு இடற் மிகுந்த பணி என்பதை எம் போன்றோரும் அறிவர். ஆனால் அச்சாக்கம், படைப்புகள், படங்கள் என அனைத்திலும் தரம் குன்றாத தமிழ் ஏடாக உங்கள் இதழ் தொடர்ந்து வெளிவருவது எல்லையற்ற மகிழ்ச்சி தருகிறது.

– தமிழேந்தி, வேலூர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி