16 August 2016 12:40 pm
கண் சிமிட்டும் நேரத்தில் என் மகிழுந்து அந்தக் கிராமத்தைத் தாண்டிச் சென்று விட்டது.ஆனால் நூறு வீடுகள் கூட இல்லாத அந்தச் சிற்றூரைக் கடக்கும் போது மீண்டும் அங்கே வர வேண்டியிருக்கும்; என் வாழ்வில் கண்டிராத அதிசய நிகழ்ச்சிகளைக் காண வேண்டியிருக்கும் என்பதைக் கனவிலும் நான் நினைக்கவில்லை.இரண்டு நிமிடம் கூட இருக்காது. அதற்குள் காவலர் ஊர்தி (போலீஸ் ஜீப்) என்னைத் துரத்திக் கொண்டு வந்து வளைத்துக் கொண்டது. நான் அவ்வளவு வேகமாகப் போயிருக்கக் கூடாதாம். ஒரு சேவலை ‘சட்னி’ செய்திருக்கக் கூடாதாம். அடடா, அதை நான் கவனிக்கவே இல்லையே! என்ன இருந்தாலும் இவ்வளவு அசட்டை கூடாதுதான். சேவலுக்குப் பதிலாக குழந்தை சிக்கியிருந்தால்..?‘சரி தொலையட்டும்’ என்று என்னை விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நேராக காவல் நிலையத்திற்குத் திருப்பிக் கொண்டு போனார்கள்!சின்ன ஸ்டேசன்தான். பழைய காலத்து வீட்டை ஸ்டேசனாக மாற்றியிருந்தார்கள். சுற்றுச்சுவருக்குள் இருந்த கட்டடத்தின் முன் அறை இன்ஸ்பெக்டர் அறை. உள்ளே ஒரு பெரிய அறை. அதன் கோடியில் இரண்டு அறைகளாகத் தடுத்து ‘ரிமாண்டு’ அறைகளாக்கி இருந்தார்கள். முகப்பறையின் நடுவே மைச்சுவடுகள் பதிந்திருந்த பெரிய மேசை. அதை அடுத்து ஒரு நீளமான மேசை. சுவரில் அரை டஜன் துப்பாக்கிகள், ஒரு பிரம்பு, இத்யாதி.‘ரிமாண்ட்’ அறைக்குள் என்னை உட்காரச் சொன்ன போது பக்கத்தறையில் நகர்ப் புறத்து இளைஞன் ஒருவன் தலைவரிக் கோலமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாவம்! நான் வந்த போது கூடத் தலையத் தூக்கிப் பார்க்கவில்லை.காவல் நிலையம் மிகச் சிறியதாக இருந்தாலும் அன்று மிகப் பரபரப்பாக இருப்பது போல் தெரிந்தது. எல்லாரிடமும் ஒருவிதத் துடிப்பு. கண்களில் ஒரு மிரட்சி! அடிக்கொரு தரம் காவலாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் வெளியில் யாருடனோ கோபமாகச் சத்தம் போடுவது கேட்டது.உள்ளே, முகப்புக் கூடத்தி(ஹாலி)ற்குள் வரும் காவலாளர்கள் எல்லாம் ஏன் அப்படி என் பக்கத்தறை இளைஞனையே பார்த்தார்கள் என்பது அப்பொழுது எனக்கு விளங்கவில்லை. தலைமைக் காவலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது.அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருத்தியை அவன் கொலை செய்து விட்டானாம்!அடப்பாவி! இவனா? பார்த்தால் எவ்வளவு அமைதியானவன் போல் இருக்கிறான்! ம்… எந்த சமயத்தில் யார் யார் எப்படி நடந்து கொள்வார்களென்று யாரால் சொல்ல முடியும்?பக்கத்தறையிலிருந்த இளைஞன் பத்து மைல் தூரத்திலுள்ள நகரத்தைச் சேர்ந்தவனாம். போட்டோ பிடிக்க அடிக்கடி பக்கத்துச் சோலைக்கு வருவதுண்டாம். அப்போது அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் ஏதாவது தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். இப்பொழுது ஏதோ தகராறு காரணமாகக் குத்தியிருக்க வேண்டும்!" என்று போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டார்கள்.இத்தனைக்கும் அவன் வாயே திறக்கவில்லை. பேயடித்தவன் போல் உட்கார்ந்து கொண்டிருந்தான். இருள் கவ்விக் கொண்டு வந்தது. இப்பொழுது ஸ்டேசனுக்குள் அதிக நடமாட்டமில்லை. தலைமைக் காவலர் மட்டும் அறையின் நடுவில் போடப்பட்டிருந்த மேசையருகில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.உள்ளே புழுக்கம் தாங்கவில்லை. எனக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. என்னை இப்படி உள்ளே தள்ளாமலிருந்திருந்தால் இந்நேரம் இருநூறு மைலாவது போயிருப்பேன். என் கார் வெளியே நின்று கொண்டிருக்கும் நினைவு வந்தது. அதில் பிளாஸ்கில் ஊற்றி வைத்திருக்கும் காப்பியின் மணம் நினைவில் மிதந்தது."உஸ், அப்பாடி..!" என்று தன் தொப்பையை எடுத்து மேசை மேல் கவிழ்த்துவிட்டு, இரண்டு கை விரல்களையும் கோத்து நெட்டி முறித்துப் பெருமூச்சு விட்டுப் பின்னால் சாய்ந்தார் அந்த தலைமைக் காவலர். பெருமூச்சைத் துரத்திக் கொட்டாவி ஒன்று பாய்ந்து வந்தது.கொட்டாவியால் கண்களில் பனித்த நீரைத் துடைத்துக் கொண்டு விளக்கைப் போட்டார். நாற்பது வாட்ஸ் பல்ப் ஒன்று நீண்ட நாள் காய்ச்சலில் கிடந்த நோயாளி கண்ணைத் திறப்பதைப் போலக் கண் மலர்ந்தது!அப்பொழுதுதான் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். காவலாளரைப் பார்த்து, கந்தசாமி! நான் டவுன் வரைக்கும் போயிட்டு வாரேன். பார்த்துக என்று சொல்லிவிட்டு, என் பக்கம் பார்த்து "சாரி சார்! உங்க விசயம் இப்ப உடனடியா கவனிக்க முடியல. வந்து எதாச்சும் செய்யலாம்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினார்.வெளியே ஜீப் கிளம்பும் ஓசை கேட்டது."ஏன் சார்! டீ ஏதாச்சும் சாப்பிடறீங்களா?" என்று ஆதரவோடு கேட்டார் கந்தசாமி."ஆமாம்" என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினேன்."இருங்க, கொண்டாரச் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு, பக்கத்தறையில் இருந்தவனைக் கசப்போட பார்த்துவிட்டு வெளியே சென்றார்.என்னுடைய அறைக்கும் பக்கத்தறைக்கும் இடையே நாலடி உயரத்திற்கு சுவர் வைத்து அதற்குமேல், மேல் தளம் வரை கம்பிகளை அடித்திருந்தார்கள். கீழே உட்கார்ந்து தன் கரங்களில் முகம் பதித்துக் கொண்டிருந்த கொலைகார இளைஞனின் முகத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது."தம்பீ! ஸ்.. ஸ்.." என்றேன். அவன் தலைநிமிர்ந்து மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தான். மறுபடியும் சட்டென்று முகத்தைத் திருப்பி முழங்கால்களின் மேல் கவிழ்த்துக் கொண்டான்.உலகத்துத் துன்பத்தையெல்லாம் வடித்துப் பூசிய இளம் முகம். என்ன பரிதாபம்! இவன் ஏன் சிக்கினான்? நான் மறுபடியும் அவனை அழைக்கப் போகும் தருணத்தில் ‘தடதட’வென்று யாரோ ஓடி வரும் பூட்ஸ் காலடியோசை கேட்டது.என் நெஞ்சு ‘திக் திக்’கென்று அடித்துக் கொண்டது. அடுத்த வினாடி தலைமைக் காவலர் கந்தசாமி முகத்தில் பீதி படர உள்ளே ஓடி வந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை."என்னங்க..?" என்றேன்."இந்தப் பையனைப் பழிக்குப் பழி வாங்க ஊர்க்காரரெல்லாம் ஒண்ணாச் சேந்து தடி, கம்பு, வல்லயம், அரிவாள், கடப்பாரையோட ஸ்டேசனை வந்து தாக்கப் போறாங்களாம். இவனை அடிச்சே கொல்லப் போறாங்களாம்! இப்ப என்ன செய்யறது? இன்ஸ்பெக்டர் வேற டவுனுக்குப் போயிட்டாரே?" என்று பதறினார்."ஏனுங்க? வேற போலீஸ்காரங்க?" என்று இழுத்தேன். "அதுதான் சங்கடம். எல்லாம் பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்தவங்க. இங்கே வீடு கிடைக்கல. நானும் இன்ஸ்பெக்டருந்தான் இந்த ஊர்லே இருக்கிறோம். மூணு பேருக்கு ஆஃப்; ரெண்டு பேரக் கூடக் கூட்டிட்டுப் போயிட்டாரு இன்ஸ்பெக்டர்!" என்று அங்கலாய்த்தார் கந்தசாமி.உடனே பரபரப்பாகச் சென்று வெளிக் கதவு, உள் கதவு, நடு அறைக் கதவுகளையெல்லாம் உள்பக்கம் தாளிட்டார். ஒரு துப்பாக்கியை எடுத்துச் சரிசெய்து மேசைமேல் வைத்தார்!நான் பக்கத்தறையை மெல்ல எட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த இளைஞன் மிரண்ட கண்களோடு எழுந்து நின்று கொண்டிருந்தான்!பால் வடியும் முகம்; மிரண்ட பார்வை! என்ன செய்வது! அவன் தலைவிதி இப்படிச் சிக்கிக் கொண்டான். என் விசயமும் அப்படித்தானே? நேரம் பறந்து கொண்டிருந்தது. எங்கள் மூவர் நெஞ்சங்களிலும் ஒருவிதத் துடிப்புதான். ஒன்பது மணியடித்து சுவர்க் கடிகாரம் எங்களைத் திடுக்கிடச் செய்தது.கந்தசாமி கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பக்கத்தறைக் காரனைப் பார்த்தார்! எழுந்து ஒரு மூலைக்குச் சென்று, விளிம்பு நசுங்கியிருந்த தகர டம்ளர் ஒன்றில் தண்ணீரை எடுத்துக் கொண்டு பக்கத்தறையை அணுகினார்! எனக்கு ‘டீ’யின் நினைப்பு வந்தது. தலைமைக் காவலர் நீர்க்குவளையைக் கம்பிகளுக்குள் நீட்டி விட்டுத் திரும்பிய அதே வினாடியில், அந்த இளைஞனது கரங்கள் அவரது கழுத்தைச் சுற்றி வளைத்து இழுத்து இரு கம்பிகளுக்கிடையே வைத்து அழுத்தின!நான் வெலவெலத்துப் போய்ப் பதறினேன்! இரண்டு நிமிடங்களில் விழிபிதுங்க காவலாளர் கீழே சுருண்டார். இளைஞன் பாக்கெட்டிலிருந்த சாவிக் கொத்தை எடுத்து உரிய சாவியைத் தேடிப் பிடித்து வெளிப்பக்கம் கைவிட்டு இரும்புக் கதவைத் திறந்து கொண்டு என் அறைக்கு வந்தான்!கதவைத் திறந்தான். உடனே பாய்ந்து சென்று மேசை மேலிருந்த துப்பாக்கியைக் கையிலெடுத்துக் கொண்டு அருகில் வந்தான்."சார்! அதிகம் பேச நேரமில்லை. ஒரே பேச்சு. உங்கள் உடைகளை உடனே கழற்றிக் கொடுங்க"வாதாட நேரமில்லை. அப்பொழுது என் சிந்தனை செத்துக் கிடந்தது. கழற்றிக் கொடுத்தேன். தன்னுடையதைக் கழற்றி என் முகத்தின் மேல் எறிந்து விட்டு என்னுடையதைக் கழற்றி துப்பாக்கியோடு இருளில் ஓடி மறைந்தான்!எல்லாக் கதவுகளும் திறந்து கிடந்தன! டிராயர் பனியனோட எவ்வளவு நேரம் நிற்பது. பேசாமல் அவனுடைய உடையை மாட்டிக் கொண்டு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் காவலாளர் முகத்தில் தெளித்தேன். நல்ல காலம்! அவர் சாகவில்லை!அடுத்த விநாடு ‘துமுதுமு’வென்று பலர் ஓடி வரும் ஓசை! பத்துப் பதினைந்து பேர் கம்பு, தடியுடன் உள்ளே பாய்ந்தார்கள்."அதோ! அவன்தான்! கான்ஸ்டபிளையும் கொன்று விட்டான்! ஓடப் பார்க்கிறான்; விடாதே அடி!"தடியொன்று சுழன்று வந்து மண்டையை மடாரென்று முத்தமிட்டது! நினைவிழந்தேன். நினைவு நழுவிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கொலைகார இளைஞன் உடை மாற்றியதன் காரணம் புலப்பட்டது.கண் விழித்த போது விடிந்திருந்தது. தலை ‘விண் விண்’ணென்று வலித்தது. ஒரு முரட்டுப் பாயில் படுத்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இன்ஸ்பெக்டரும் இரண்டு காவலர்களும் நின்று கொண்டிருந்தார்கள்."நல்லவேளை தப்பித்துக் கொண்டீர்கள்! உங்களை முதலில் இந்த உடையில் அவர்கள் பார்த்தபோது, அந்தக் கொலைகாரன் என்று நினைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் நல்லவேளை யாரோ அடையாளம் கண்டு கொண்டதால் தப்பித்துக் கொண்டீர்கள். ஓடிப்போன கொலைகாரனைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்றார் இன்ஸ்பெக்டர்.அவருடைய ஆறுதல் மொழியோடு காப்பி ஒன்றும் கிடைத்தது. என்னையும் போகச் சொல்லி விட்டார்கள். அந்தக் கொலைகாரனின் உடையோடு வெளியில் வந்தேன். வெளியில் வெயில் ‘சுள்’ளென்று காய்ந்து கொண்டிருந்தது. வெளியில் நின்று கொண்டிருந்த என் காரில் ஏறிக் கிளம்பினேன். இரண்டு மைல் கூட வந்திருக்க மாட்டேன். இளம் பெண் ஒருத்தி, ஆளரவமற்ற அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஒரு ஆட்டுக் குட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்.என் நினைவு பின்னோக்கிப் பறந்தது. நேற்று பிற்பகல், அந்தக் கிராமத்தை நெருங்குவதற்கு முன்னால், காருக்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்ற சாலையோரத்தில் நிறுத்தினேன் அல்லவா. அங்கே நின்று கொண்டிருந்த ‘அந்தப் பெண்’ணின் நினைவு வந்தது.என் கைகள் முறுக்கேறித் துடித்தன! பற்கள் ‘நற நற’வென்று கடித்தன! "அய்யோ! மறுபடியும் எனக்கு ‘அது’ வந்து விட்டதா?"கை தானாகப் பாக்கெட்டைத் துழாவியது. ஓ! என்னுடைய உடைதான் பறிபோய் விட்டதே!இருந்தால்தான் என்ன? என்னிடம்தான் ஒன்றுமில்லையே. அவளைக் குத்திய பின் அந்தக் கத்தியைக் காட்டிலுள்ள குளத்தில் வீசியல்லவா எறிந்து விட்டேன்!என் மகிழுந்து அவளைத் தாண்டி பறந்தது. – புவியரசு"