குத்தும் குதிரைக் கொம்பு - தமிழ் இலெமுரியா

26 March 2017 12:56 pm

மகன் வசந்துக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை! அதன் காரணம் அம்மா ராணிக்கு தெரிந்து விட்டது. ஆம்! மகனின் சாதகம் இருக்கிறதே, அதில்தான் ராகு, கேது- பரம எதிரிகளாக, மகனை பந்தாடுகிறார்கள். ஊரில் ராமன், ராகவன், ராசன், ரங்கன், ரத்தினம், ராசு, ரஞ்சன், ராகுல் என ‘ரா’வில்  தொடங்கும் பெயர்கள் கொண்ட இவர்களில், ஒருவரிடமிருந்தாவது உபத்திரம் உண்டா. அப்படி உண்டானாலும் சமாளிக்கலாம். இவர்கள் கண்முன் தெரிபவர்கள். ஆனால் மறைந்திருந்து, மல்லுக்கட்டும் ராகு – கேதுவை என்ன செய்யலாம்?மகனின் சாதகக் கட்டத்துக்குள் அமர்ந்து கொண்டு பாதகம் செய்கிறார்கள். இவர்களை கட்டிப்போட்டு கட்டம் கட்ட என்ன செய்ய வேண்டும். ராகு கேது ராசியாக என்ன வழி…?சோதிடர் சொன்னாரே, அதன்படி பரிகாரம் செய்தாகிவிட்டது. அபிசேகம், அர்ச்சனை என்று குளுப்பாட்டிக் கொண்டாடியும் விட்டாள். போதாது என்று மந்திரித்த கயிறும் மகன் கையில் கட்டிவிட்டாள். அம்மாவின்  ஆசையைத் தடுக்க மனமின்றி, வசந்த் ஏற்றுக்கொண்டான். ஆனாலும் அரசுப்பணி கிடைத்தபாடில்லை.வசந்துக்கு அப்பாவும் உண்டு. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதைப்  பற்றிக் கருதுபவராகவும் தெரியவில்லை. ஏதோ பாராமுகமாகவே இருப்பதாகப்பட்டது.வசந்த் அவர்களுக்கு ஒரே மகன். வயது இருபத்தேழு. திடாகாத்திரமான உடல் வாகு, திட்டமான உயரம், மாநிறம், சுருட்டை முடி-, தமிழாசிரியர் பயிற்சி முடித்துள்ளான்…மனதில் சில வைராக்கியங்கள்…வேலை கிடைக்கட்டும் அப்புறம் பாருங்கள் என்கிறான். அவன் வகுப்பில் தூங்கவே மாட்டானாம்-வார மாத இதழ்கள் உள்ளதே…அவைகளை படிக்கவேண்டுமே. தமிழ்ப் பாடப் புத்தகத்தை எடு. அதன் மத்தியில் வார மாத இதழ்களை மறைத்துவை. இப்போ படி…யாருக்குத் தெரியப்போகிறது என்கிற வேலையெல்லாம் செய்ய மாட்டானாம்…இறந்து விட்ட தன் பாட்டியை, அடிக்கடி கொன்று, அடிக்கடி விடுப்புகளை விரயம் செய்ய மாட்டானாம். மாணவர்களில் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் இருப்பாங்களே அவர்களை அடையாளம் காட்ட, நாடகமெல்லாம் போடுவானாம். பாகவதர், சிதம்பரம் ஜெயராமன், டி.எம்.எஸ், சீர்காழி, சுசிலா, சித்ரா, ஜானகிகளை உருவாக்கி, சங்கீத உலகின் சாபக்கேட்டை நீக்குவானாம்…ஆனால் ஒன்று, இந்த விடயத்தில் மட்டும் கண்டிப்பாக இருப்பான். ஆம் – காமராசர், அண்ணா, ஜீவா அப்துல்கலாம், கக்கன் இவர்களைப் போல, மாணவர்களை ஒருபோதும் உருவாக்க மாட்டானாம்… ஏன்? பாவம் அவர்கள். கைசுத்தம், கண்சுத்தம், அறிவுசுத்தம், அகச்சுத்தம் பார்ப்பார்கள். பினாமி மூலம் சொத்துக்குவிப்பு செய்யமாட்டார்கள்… இந்த காலக் கட்டத்திற்கு இவர்கள் லாயக்கா… மக்கள் இவர்களை ஏற்பார்களா? மாட்டார்களே. வீண் வேலை எதற்கு? அவர்கள் புகழோடு நன்றாக இருக்கட்டுமே…அவனுக்கு கூடுதலான ஒரு திறமை உண்டு. அதை நண்பர்களிடம் நகைச்சுவையாக சொல்வான். ‘‘எல்லோருக்கும் எப்போது வேணும்னாலும் பாடை வரும். ஆனா எனக்கு மட்டும்தான் பாடவரும்’’ என்பான். ஆம்! அவனுக்கு  நல்ல இனிமையான குரல் வளம் உண்டு.  அவன் முதன் முதலில் கலந்து கொண்ட நேர்முகத் தேர்வு. கல்வி அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம், தயங்கவே இல்லை. சட்டைப் பையில் தயாராய் வைத்திருக்கும் பதில்கள் போல, அள்ளி கொடுத்தான். பிறகு பாரதியார் பாட்டு தெரியுமா என்றனர் தெரியுமே என்று பாடிக் காட்டினான். எதற்கும் தயங்கவில்லை. எந்த தடையும் இல்லை. நம்பிக்கையிலும் குறையில்லை. ஆனால் வேலைதான் கிடைக்கவில்லை.சிலமாதங்கள் சென்றன. இரண்டாவது முறையாக ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளச் சொல்லி கடிதம் வந்தது. தவறாமல் கலந்து கொண்டான். பாரதியார் பாட்டும் பாடச் சொன்னார்கள் பாடினான். எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொன்னான். அப்போதும் வேலை கிடைக்கவில்லை.இந்த இரண்டு முறை நடந்த தேர்வுப் பந்தயங்களில் சாபக்கேடு, முயலே வேகமாக ஓடியது- ஆமைகள் ஓடவே இல்லை. ஆனாலும் ஆமைகளும், முயலாமைகளும் வென்றன;  வேகமாக ஓடிய முந்திய முயல் தோற்றுப் போனது.வேலை கிடைக்காதது ஒருபுறம் வேதனை. அப்பாவால் இன்னொருபுறம் வேதனை. அம்மா மட்டுமே அவனைப் பற்றிக் கவலைப் படுகிறாள். அப்பா எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளவே இல்லை. ஒரு ஆறுதலும் சொல்லவில்லை. ராகு கேதுவோடு அப்பாவையும் சேர்க்கலாம். இப்போது மூன்றாவது முறையாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அம்மா எதுவும் பேசவில்லை. முன்பு அடிக்கடி கோயிலுக்கு போவாள் ராகு, கேதுவை சுற்றி வருவாள். இப்போது அவளுக்கு நாட்டமில்லை. என்னதான் விழுந்து விழுந்து வணங்கினாலும் வேலைக்கு ஆகதாம். ராவடி என்றால் அப்படியொரு ராவடி. அவர்கள் இப்போது இருக்கும் கட்டத்தை விட்டு காலிசெய்ய வேண்டும். அதற்கு இன்னும் ஓராண்டு பிடிக்குமாம். அதுவரை தலை கீழாக நின்னாலும் வேலை கிடைக்காதாம். இரண்டாவது தடவை சோசியம் பார்த்தபோது சொல்லிவிட்டனர்.அதனால் தான் அம்மாவுக்கு மனம் விட்டுப் போயிற்று. நேர்முகத் தேர்வுக்கு போகும் அவன் கிளம்பும் போதெல்லாம் வழக்கமாக, அம்மா காலில் விழுவான். வழக்கம் போல அம்மா அவனை ஆசீர்வதிப்பாள். ஆனால் இந்த மூன்றாவது தடவை அம்மா தனது கண்ணீரால்தான் அசீர்வதித்தாள்.வசந்துக்கு மனம் கொள்ளாத விரக்தி, வெறுப்பு கூடவே வைராக்கியம். அவன் பேருந்தில் கிளம்பினான். சரியாகப் பத்துமணிக்கு போய் சேர்ந்துவிட வேண்டும். அரைமணி நேரப் பயணத்தில், முன்பு இரண்டு  தடவை தேர்வுக்குச் சென்று கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது.விரிவாக அசைபோட்டான், அப்போது…‘எதிரே அதிகாரிகளிடம் தன்  விருது, பரிசு சான்றிதழ்களைக் காட்டினான். இதற்கு முன்பு பல பாடல் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறானே. அதனை அதிகாரிகள் சரிபார்த்தனர். பிறகு இவனது புலவர் படிப்புத் தேர்ச்சிப் பட்டையங்களையும் ஆய்ந்தனர். பிறகு எடுத்த எடுப்பில் அவர்கள் சொன்னது ‘எங்கே ஒரு பாரதியார் பாட்டு பாடுங்க’ அதில் ஒருவர் இப்படிச் சொன்னார்’ பாவனையோடு பாடணும்’ வசந்துக்கு மேலே பறக்காத குறை. அவனிடம் இருக்கும் திறமைக்கு சரியான சந்தர்ப்பம். விடக்கூடாது… வெளுத்துக் கட்டு… தொண்டையை கணைத்துக் கொண்டு, பாவனையோடு பாட வேண்டுமே… இரு கைகளையும் நீட்டினான். நாலரைக்கட்டை எணும் உச்சம்.. பாரதியை தன்னுள் இறக்கிக் கொண்டான்…‘நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்தநிலை கெட்ட மனிதரைநினைந்து விட்டால்…நெஞ்சு பொறுக்குதில்லையே…..’ -போதும் என்று  கையசைவு மூலம் செய்கை காட்டி ஒருவர் பேசினார்…’ பாடத்தெரியுமா என்று கேட்டதற்குப் பாடத் தெரியும் என்றீர்கள். இப்போது கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு ஓடத்தெரியுமா’‘ உம்-தெரியுமே’‘எங்க…ஓடு’‘எதுவரை’‘உங்க வீடு வரை’‘ஓடி….?’‘உங்க வீடு போய்ச் சேருங்கள்’ ‘பிறகு…’‘வீட்டிற்குள் போனீர்களா? பிறகு, இந்தத் திசையைத் திரும்பிக் கூட, பார்க்கக் கூடாது’வீட்டிற்குத் திரும்பினானவன் எதிர்பர்த்தது போலவே ஏமாற்றம். ‘பாரதியாரே… உங்க பாட்டால் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது… ஆனா… எனக்கு விடிவு கிடைக்கலையே..’முதல் தடவை அப்படி… இரண்டாவது தடவையாக, அழைப்பு வந்ததே… அப்போதும் கேள்விகள் கேட்கப் பட்டது. ‘பாட்டுப் போட்டியில் பல பரிசுகள் வாங்கியிருக்கீங்க, பாரதியார் பாட்டு ஒன்னு பாடுங்க…’அவனுக்கு விளங்கிவிட்டது… ஓகோ…! இவர்களுக்கும் சூது சூழ்ச்சியா? எப்படியும் நெஞ்சு பொறுக்கு தில்லையே என்று பாடுவேன்… பாவனையோடு, அதுவும் எதிரே நின்று கை நீட்டிப், பாடும் போது, நம்மை குறித்துதான் குத்தலாக பாடுகிறான் என எண்ணுவீர்கள். உடன் தயங்காமல், சொல்வீர்கள்… இங்கிருந்து ஓடிவிடு என்பதன் மூலம், வேலை இல்லை என்பதையும் உணர்த்துவீர்கள்… இவையெல்லாம் எனக்குத் தேவையா?அவன் இந்த தடவை ஏமாறப் போவதில்லை. முதல் தடவை அனுபவம் உள்ளதே- தனக்குத் தானே சூடு போட்டுக்கொள்வானா? இந்த தடவை வேறு ஒரு பாடலைத்தான் பாடவேண்டும். அது சாதாராணப் படலா? எந்தப் பாடலும் அதற்கு இணையாகுமா? மக்களின் அறியாமைக்கு அடித்த சாவு மணி அல்லவா. சமூகப் பார்வை இவனுக்கு நிறைய உண்டு என நிச்சயம் வேலை கொடுப்பார்கள். கணீர் குரலில் பாடினான்… பிசுறே தட்டவில்லை……..ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி, அலையும் அறிவிலிகாள்- பல்ஆயிரம் வேதம் அறிவுஒன்றே தெய்வம்உண்டாம் எனில் கேளீரோ…மடனைக் காடனை வேடனைப் போற்றிமயங்கும் மதியிலிகாள்….. அவன் அடுத்த வரிகளுக்கு போக வேண்டும். உடனே அடிக்கப் பாய்வது போல ஒரு குரல்.. ‘போதும் நிறுத்து நீங்க போகலாம்’.வசந்த் வீடு திரும்பினான். அவனோடு வந்த பலருக்கும் வேலை கிடைத்தது. அவனுக்கு மட்டும் உத்தரவு வரவே இல்லை. அதற்கு முன் நண்பர்கள் சொன்னார்கள் வசந்த் உனக்கு வேலை நிச்சயம்டா.. மாரியாத்தா பொரி மாவு மாதிரி, அப்படியே அள்ளிக்கலாம். ஆனா, எங்களுக்கு அது குதிரைக்கொம்பு…"அவனுக்கு மனம் வெறுத்துப் போயிற்று. முடிவில் அவனைத்தான் குதிரைக் கொம்புகள் குத்திக் கிழித்தன. நிலம் விளையும், விளையும் என எதிர்பார்த்து, முடிவில் வறட்சியால் பாதித்த விவசாயி போல, அவனது நிலை. பாரதியையும் நொந்துக் கொண்டான்…. பாடலை எழுதியதும் பாடியதும் நீதான். உனக்கு மட்டும் எங்கும் விழா… கவியரங்கம்… பட்டிமன்றம்… பாராட்டு… ஆனால் எனக்கு?….அவனுக்கு இந்த முறையும் வேலை கிடைக்காததன் காரணம், அவனுக்கு தெரிய நியாயமில்லை. உண்மை இதுதான்…… தேர்வு செய்யும் முக்கிய அதிகாரிக்கு அவன் பாடிய பாடலால் எரிச்சல் பாய்ந்த கோபம். அவர் தன் மகளின் திருமணத்தடை நீங்க தோசப்பரிகாரம் செய்ய வேண்டும். அதனால் சோதிடர்கள் சொன்னபடி கோயில் கோயிலாக செல்லவேண்டிய  நெருக்கடி. இந்த நிலையில் வசந்த் பாடிய பாடல், தன்னை கேலி செய்வதாக உணர்ந்தார். விளைவு வேலை இல்லை.அவனது அம்மாவும் முன்பு போல இல்லை. மாறியிருந்தாள். தோசம் பரிகாரம்  என அலைவதில் பயனில்லை. இந்த ஒரு ஆண்டு செல்ல வேண்டும். அதுவரை வேலை கிடைக்காதாம். நல்ல நேரம் வரும் அப்போது தானாக வேலை கிடைக்குமாம். இதில் உறுதியான நம்பிக்கை அவளுக்கு.ஆனாலும் இந்த முறை வந்த நேர்முகத் தேர்வின் அழைப்பை புறக்கணிக்கவில்லை. கலந்துக் கொள்ளப் புறப்பட்டான் ஆனால் ஒன்று. இந்த முறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போவதில்லை. அந்த உறுதியுடன்தான், இதோ அதிகாரிகள்முன் நிற்கிறான்…..‘உங்களுக்குப் பாடத்தெரியுமா?’‘அதுக்கும் எனக்கும் அறுபது கிலோமீட்டர் தூரம்யா’‘இலக்கியம் தெரியுமா…?’‘தெரியாதையா…’‘அகநானூறு பாட்டுல ஏதாவது ஒன்று சொல்லுங்களேன்’‘மறந்துட்டேன்’‘கல்வியைப்பற்றி வள்ளுவர் என்னச் சொல்றார்?’படிப்பு, பட்டம், கல்வியெல்லாம் கற்பது, வீணாய்ப் போகிறவன் செய்யும் வேலையாம், அவர் சொல்றார் என கூறிவிட நினைத்தவன், சமாளித்து, சவ்வு மிட்டாய் போல இழுத்தான்…‘அது வந்து…..’‘ சரி நீங்க போகலம்…’வசந்த் வெளியேறினான். அதன் பின் அதிகாரிகள் மெல்ல பேசிக் கொண்டனர். ‘அவன் பதிலைப் பார்த்தீங்களா… மகா  திமிரு பிடிச்சவனா இருப்பான் போலிருக்கு. இவனுக்கு இந்த சென்மத்துல வேலை கிடைக்காது…’ ஆனால் வசந்த்துக்கு அப்பாடா என்னும் மகிழ்ச்சி… "ஒழுங்கா பதில் சொல்லிட்டா மட்டும் வேல கொடுத்திடுவாங்களா?"வீட்டிற்கு வந்தவன், அம்மாவிடம் இந்த தடவையும் வேலை கிடைக்காதம்மா என்றான். அவளுக்கு அளவற்ற கோபம். மகன் கையில் கட்டிய மந்திரித்த கயிற்றை அறுத்தெரிந்தாள். அது எந்த வேலையும் செய்ய வில்லையாம். கயிறு, தோசப் பரிகாரச் செலவு என, ஆன மொத்தச் செலவு ஐயாயிரம் ரூபாய் தெண்டம். அடப் போறாத காலமே என முணுமுணுத்துக் கொண்டாள்.ஆனால் அப்பா அவரும் ஒரு கயிறு வாங்கி வந்தார். செல்வாக்குமிக்க மேலிடத்திலிருந்து வாங்கப்பட்ட. சிபாரிசு எனும் கயிறு. அது நன்றாகவே வேலை செய்தது. அதன் விலை இரண்டு லட்ச ரூபாய். வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை, தபால் காரார் கொடுத்துவிட்டுப் போனார்… அப்பா அன்று அலட்சியமாக இருந்ததின் விளக்கம் இப்போது புரிந்தது. குடியிருந்த ஒரே ஒரு வீட்டை இரண்டு லட்சத்துக்கு விற்று விட்டார். "இனி வாடகை வீடு பார்த்தாக வேண்டும். அதற்கான முன் பணத்திற்கு என்ன செய்வது? எப்படி செய்வது? முடியுமா? அடப் போறாத காலமே" என அப்பாவும் முணுமுணுத்துக் கொண்டார்… – பரிக்கல். ந. சந்திரன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி