16 June 2016 6:03 pm
மழை ஓய்ந்த பாடில்லை. தூறிக் கொண்டேயிருந்தது. நாலஞ்சு நாளா பெய்யறதினால் மண் தரையின் ஈரம் உலராமலிருந்தது. அந்த ஈரத்திலும் விடாது வெளியில் வந்து வேலை பார்க்கும் செண்பகத்தின் கால் சுவட்டினை மண்ணில் காண முடிந்தது. செண்பகம் சலிப்பாக வானத்தைப் பார்த்தாள். ‘‘இன்னைக்கும் பெய்யாத. இத்தோட முடிச்சிடு. இந்த ஈரத்தில், மண்ணுல வேல செய்ய முடியல. காலெல்லாம் அரிப்பு வேற’’ என மனதிற்குள் மழையிடம் வேண்டினாள்.ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. ‘‘ஏ செண்பகம் எங்கடி போன? இன்னும் காப்பித்தண்ணி போட அடுப்பு பத்தவெக்கல’’. ‘‘இதோ வந்துட்டேன் சித்தி. குடிதண்ணி எடுக்கப் போனேன். ஈரத்தில் வெரசா நடக்க முடியல’’’. ‘‘வாய் பேசாத; வேலய விட்டுட்டு வர்ற வழியில கத பேச நின்னிருப்ப; ஒன்ன பெத்தவ மாதிரியே!’’ கண்ணில் மளுக்கென்று நீர் கசிந்தது. தேவையில்லாம குற்றம் சாட்டுகிறதைக் கேட்டு மனசு ஒப்பவில்லை.கடைக் கண்ணால் அப்பாவைப் பார்த்தாள். அவர் பார்வை வேறொரு புறம் வெறித்திருந்தது.அந்த கிராமம் நெல்லும் மஞ்சளும் கரும்பும் விளையும் செழுமையான பூமி. காணும் இடமெல்லாம் கண்கள் பசுமை பூக்கும். நல்ல விளைச்சலைத் தரும். மண்ணுக்கு ஓய்வில்லாத உழைப்பை அவ்வூர் மக்கள் தந்தனர். இரு பக்கமும் வயல்களில் நெல் உயர்ந்து செம்மண் சேற்றுத் தண்ணியோடு வளமையாகயிருந்தது. அதில் கதிரேசுவின் வயலும் அடக்கம். ஊரில் மிராசாக விளங்கியதற்கு வயல் தந்த விளைச்சலும் பரம்பரைச் சொத்துமே சாட்சி.‘‘வள்ளி, சீக்கிரம் செண்பகத்த அழைச்சிட்டுக் கிளம்பு. வண்டி கட்டச் சொல்லிட்டேன். குல தெய்வக் கோயில் வரைக்கும் போகணும்’’.‘‘ஏனுங்க எதும் விசேசமா?’’ என்பதற்கு. ‘‘ஆமாம் இப்ப பேச நேரமில்ல’’. அத்தோடு அந்த பேச்சு நின்று போயிற்று.கதிரேசுவை வீட்டில் பார்ப்பதே அரிதாயிற்று. செண்பகமும் ‘‘அப்பா எங்கம்மா? நிறையப் பேரோட வெளியில போயிட்டுயிருக்காங்க. காணவேயில்ல. உட்காரக் கூட நேரம் இல்லாம’’ என்றாள்.‘‘வள்ளியம்மா உங்க நெலத்துல புதுசா கட்டடம் எழும்பப் போகுதாம். நிறையப் பேருக்கு வேல கிடைக்குமாம். எங்க வூட்டுக்காரருக்கும் ஒரு வேல போட்டுக் கொடுங்கம்மா’’ என்று பக்கத்துத் தெருவில் வசிக்கும் அருணா கேட்டாள். வள்ளியம்மாவுக்கு சுரீரென்றது. ‘‘என்னச் சுத்தி என்ன நடக்குது. அதான் காருல மக்கள் வர்றதும் போறதுமாயிருக்கா. கொஞ்ச நாளா வீட்டுக்கு வெளியில சுத்தறது இதுக்கு தானா?’’ என ஆவேசத்துடன் கதிரேசிடம் கேட்டாள்.‘‘இப்ப எதுக்கு குரல் ஒசத்துற, அரசாங்க பேக்டரிதான் வர போகுது. நெலத்தெல்லாம் வெல பேசி முடிச்சாச்சு. அன்னைக்கு கோயில் போனது முன் தொக வாங்கினதை வச்சு கும்பிட வேண்டி. நீ இதுக்கு ஒத்துக மாட்டேன்னு ஒன்கிட்ட சொல்லல’’.எவ்வளவோ கத்தல், சண்டை, வாய்ப்பேச்சு. ‘‘இருக்கிற பணம் போதும். ஊரில யாருமே கொடுக்காத போது நம்ம மட்டும் ஏன் இப்படி விளை நிலைத்த பேக்டரிகாரங்கிட்ட கொடுக்கனும்? எதற்கும் மசியவில்லை.கடைசியில் உடம்புல உயிர் தங்காது என்பதற்கும் அஞ்சவில்லை. ஆனால், வள்ளி சொன்னது நடந்தது. நிலம் நம்ம கையில் இல்லையென்பதே பெரும் மன நோயாகி நெல்ல படியளக்க இனி முடியாது முடியாது எனப் புலம்பி உயிரை விட்டாள்.வீட்டு வேலை, தோட்ட வேலை பார்த்து வந்த செங்கமலம் மனசு ஆத்திக்கங்க என ஆறுதல் சொல்லி கதிரேசுவிடம் அடைக்கலமானாள். அன்றிலிருந்து சித்தியாக கூப்பிட செண்பகம் பணிக்கப்பட்டாள்.அதிகாரம் அனைத்தும் செங்கமலம் வசமானது. நகை, ரொக்கப்பணம், வீடு எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக செங்கமலத்தின் உடன் பிறந்தவரிடம் போன நிலையில் கூட கதிரேசு கண் முழிக்கவில்லை.பட்டுப் பாவாடைக் கட்டி இரட்டை ஜடை ஆட ஊஞ்சலாடி மகிழ்ந்த செண்பகம் பாத்திரம் தேய்த்து, தண்ணீர் பிடித்து மிஞ்சிய ஓட்டு வீட்டில் வசிக்கும் சூழலில் தள்ளப்பட்டாள்.பாத்திரத்தின் சூடு கையில் பட சட்டென்று மனதை மாற்றி காப்பித் தண்ணியை செண்பகம் அவசரமாகக் கலந்தாள்.‘‘ஏய் எவ்ளோ நேரம் உனக்கு? கனா காணுறியா? பொம்பள புள்ளைக்கு மதமதப்பு கூடாதுடி. உன்ன எங்க உருப்படியா வளர்த்திருக்கா? நல்ல புடவைக் கட்டி மினுக்கவே பொழுது பத்தியிருக்காது. மிராசு வீட்டம்மால்ல.சித்தியின் அவலமானச் சொல் தன்னைத் துளைப்பது போல உணர்த்த தந்தையை நோக்கினாள். எப்போதும் போல அந்த பக்கம் வெறித்தப் பார்வை.மழை நீர் போல் கண்ணீரும் வழிந்ததைத் துடைத்துக் கொண்டாள்.‘‘ஏய்! மாடெல்லாம் தண்ணிக்கு கத்துது. காதுல வுழுவுதா? ஒன் நெனப்பெல்லாம் எங்கிருக்கு? நல்லா ஒசந்து நிக்குற. ஒனக்கு யாரு கண்ணாலம் கட்டறதுன்னுயிருக்கா. ஒன் அப்பன் கிட்ட காசு பணம் ஏதுமில்ல.’’இருந்ததெல்லாம் எங்க? என்று கேட்க வேண்டிய நோய்வாய்பட்டிருந்த தந்தையை எண்ணி இரவெல்லாம் கழிந்தது.‘‘இப்படி சீக்கு வருமா? தூக்கிட்டு அலைய முடியலயே. காசு பணம் யாரும் செலவு பண்றது? இது பொண்ண வச்சிப் பார்க்கறதே சுமை. இப்ப சீக்கு மனுசனும் கூட சேர்ந்துட்டாரே!’’அரசு மருத்துவமனையில் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வாங்கிய மாத்திரையோடு வீடு திரும்பிய செண்பகத்திடம்தான் இத்தனை கத்தலும்.‘‘ஏய்! ஒன்கிட்ட டாக்டரு சொல்லிட்டாருல்ல. இது மன நோயின்னு. அங்க கொண்டு வந்து சேருங்கண்ணு சொன்னாங்க. போயி போயி மாத்திரை வாங்கிட்டு வர்ற. உன்ன கரை சேர்க்கவே முடியாது. இதுல உன் அப்பன் நிலம இப்படி.என்னால முடியாது. இதெல்லாம் பார்க்க எனக்கென்ன தலையெழுத்தா. நான் போறேன். என் பொறந்த வீட்டுக்கு. யாரு உன்னையும் இவரையும் காப்பாத்துவான்னு பார்க்கறேன்’’.‘‘போங்க சித்தி. நல்லா போயிட்டு வாங்க. என்னால் அப்பாவ காப்பாத்த முடியும். எங்க அம்மாச்சி விட்டுட்டு போன மூணு மாடு தொழுவத்தில் நிக்குது. வீட்டு வேலையும் செஞ்சுக்க முடியும். என் அப்பா கடைசி வரைக்கும் இந்த வீட்டுல இருக்கிற மாதிரி நல்லா பார்த்துப்பேன். வைத்தியமும் பண்ண முடியும். என்னையும் அப்பாவையும் சேர்த்து பார்த்துக்கிற ஒருத்தர் கிடைச்சா கல்யாணம். இல்லேன்னா பரவால்ல. அப்பாவோட போகட்டும் என் காலம்’’ என்றபடி வெளியே சென்றாள் செண்பகம்.செண்பகத்தின் மனதில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அடை மழையாக பீறிட்டது. வெளியே மழை நின்றிருந்தது. – ம.கண்ணம்மாள், தஞ்சாவூர்