நம்மால் முடியும் – வாய்ப்புகளே மிகச் சிறந்த ஆயுதம் - தமிழ் இலெமுரியா

14 February 2014 7:55 am

சுசில்குமார் சிந்தே தியானத்தன்மையோடு எல்லாவற்றையும் அணுகுகிறார். விழிப்புணர்வு, செயல்திறன், எளிதில் முடிக்கும் தன்மை ஆகியவை உட்கொண்டுள்ள உடன்பாட்டுச் சிந்தனை அனைத்தும் நல்ல தியானம் மூலமே பெற முடியும். எந்தவொரு செயலையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கும் இவர், உயர் பதவிகளில் தற்போது இந்திய உள்துறை அமைச்சர் எனும் புதிய பணியை ஏற்றுள்ளார். சிந்தேயையும், அவருடைய புன்னகையையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ, அதே போன்று அவருடைய சிந்தனையும் செயலும் ஒரே நோக்கில் ஒளிர்கின்றன. சுசில்குமார் சிந்தே, இத்தகைய சவால் மிகுந்த பணியான இந்திய உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின், பல சிறப்பு அடையாளங்களைப் பெற்று மக்களின் நாயகன் எனவும் அழைக்கப்படுகிறார். சிந்தே அவர்களின் செயல்திறனைப் பார்க்கும் போது, சட்டத்திலுள்ள அனைத்தையும் அவர் நேர்மறை எண்ணங்களுடன் பார்க்கிறார் என்பதை அறியலாம். இந்த நேர்மறையான மனப்பாங்கே அவரை இத்தகைய உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்கத்தில் குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியாத நிலையில், ஒரு அலுவலக கடைநிலைப் பணியாளர் வேலையில் சேர்ந்து தன் வாழ்க்கையைத் துவங்கிய இவர், பின் ஏவலாளர், எழுத்தர், காவல்துறை துணை ஆய்வாளர், வழக்கறிஞர், அரசியல்வாதி என படிப்படியாக உயர்ந்து, தற்போது எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார். என்னால் முடியும்" என்னும் தாரக மந்திரமே இவருடைய வெற்றிக்குக் காரணம். பொதுவாக எந்தவொரு அரசியல்வாதி ஆளுநர் பதவியில் அமர்கிறாரோ, அத்துடன் அவருடைய அரசியல் வாழ்க்கை முடிவு பெறுகிறது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இவற்றிற்கு மாறாக சுசில்குமார் சிந்தே அவர்கள் முதலில் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு, பின் அமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்ட பணியை அயராது செவ்வனே செய்ததைப் பாராட்டும் விதமாக திருமதி சோனியா காந்தி, இந்திய உள்துறை அமைச்சராக சிந்தேவை நியமித்தார். இத்தகைய மதிப்புமிகு சுசில்குமார் சிந்தே "தமிழ் இலெமுரியா" இதழுக்கு மனமுவந்து அளித்த சிறப்பு நேர்முகம் இதோ…சுய-ஊக்கத்திற்கான ஒரு கருவியாக, இன்றைய இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எந்தவொரு வெற்றியாளரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கொண்டாலும், அனைத்து வெற்றிகரமான செயல்களிலும் பொதுவான ஒன்றைக் காணலாம். அது யாதெனில், கடின உழைப்பே வெற்றிக்கான சிறந்த வழி என்பதே. அதை விடுத்து தனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பணியையும் மனப்பூர்வமான அக்கரையுடன் செயல்படுத்த முடியாதவர்கள் வெளிச்சத்தைக் காண இயலாது. தடைகளும், தடங்கல்களும், விமர்சனங்களுமே ஒரு மனிதனின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி, வெற்றி பெற உதவும் மிகச் சிறந்த வழிகாட்டிகள் ஆகும். நானும் அப்படிப்பட்ட ஒரு தயாரிப்புதான். நான் ஒரு ஒற்றை பெற்றோரின் கீழ் வளர்க்கப்பட்ட சிறுவன், பள்ளிப்படிப்பை தொடர இயலாமல் அலுவலக கடைநிலைப் பணியாளாராக வேலைக்குச் சேர்ந்து, பின் மீண்டும் பள்ளிக்குச் சென்றதால் உள்துறை அமைச்சராக ஆக முடிந்தது. இவ்வாறு தடைகளை தகர்த்து "என்னால் முடியும்" என நினைத்ததால் சாதிக்க முடிந்தது.காவல்துறை துணை ஆய்வாளரான சிந்தேவையும், உள்துறை அமைச்சர் சிந்தேவையும் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்? வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது முடிவற்றது. ஒரு காவல்துறை துணை ஆய்வாளராக இருந்த போது, பெரும்பாலும் நான் என் உயர் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பணிபுரிந்தேன். ஏனெனில் அவர்களே என்னுடைய செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சியுடன் கூடுதல் பணியை வழங்கக் கூடியவர்கள். அதிக பணிச் சுமையைக் கண்டு நான் ஒரு போதும் தயக்கம் காட்டியதில்லை. இது என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே என்னுடன் இருந்த குணாதிசயங்களில் ஒன்றாகும். என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் ஏற்றிருந்த பல்வேறு பணிகளையும் திறம்பட செய்து முடித்ததற்கு இந்த குணாதிசயமே காரணம் என்பதை நீங்கள் என் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம் அறியலாம். நான் ஒரு அலுவலக கடைநிலைப் பணியாளனாக வேலைக்குச் சேர்ந்து ஒரு இரவுப் பள்ளியில் படிப்பை தொடர்ந்து, பின் முதுகலை பட்டம் பெற்றேன். அதன் பின் நான் காவல்துறை துணை ஆய்வாளராகப் பணியாற்றிய போது, சட்டம் படித்துக் கொண்டிருந்தேன். மேலும் நான் அமைச்சராக இருந்த போது, மராத்திய மாநில காங்கிரசு கட்சித் தலைவர் பணியையும் என் தோள்களில் எடுத்துக் கொண்டேன். இது போன்று கூடுதல் பணிகளை செய்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் மிகுதி. அதிக வேலை செய்தல் என்பது அதிக அறிவைப் பெறுதலுக்கு ஒப்பாகும். எவரொருவர் தனது கூடுதல் பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறாரோ, அவரே தன் எதிர்காலத்தில் பல தடுமாற்றங்களை சந்திக்கக் கூடியவராவார்.ஒரு உள்துறை அமைச்சராக உங்களுடைய முன்னுரிமை என்ன? உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் காரணிகளை தொடர்ந்து நாங்கள் பல்வேறு பரிமாணங்களில் ஆய்வு செய்து வருகிறோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலிருந்து நாட்டைப் பாதுகாப்பதே என்னுடைய முதன்மை திட்டமாக உள்ளது.நான் அதற்கு உடன்படுகிறேன். பல இடங்களில் பல காரணங்களுக்காக, நமது துணை இராணுவப் படையிலுள்ள கீழ்மட்ட பணியாளார்கள் – காவலர்கள் தங்களின் பணியின் போது கொடுரமாக நடந்து கொள்வதும், அதிகாரிகளைச் சுட்டுக் கொல்வதுமான சம்பவங்களைக் கண்டுள்ளோம். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்னை பொறுத்தவரையில் அவர்கள் முதலில் மனிதர்கள்; பல்வேறு சிக்கல் மற்றும் அழுத்தங்களின் கீழ் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவர்களுடைய உளவியல் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கான குறைந்த இடைவெளி, குடும்பத்தை விட்டு விலகி இருத்தல், குறைவான தகவல் தொடர்பு, குடும்பத்தாரிடம் திரும்ப வேண்டிய நிலை, விடுமுறைச் சிக்கல்கள் என பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் நமது துணை இராணுவப் படையினர் கடுமையான பருவநிலைகளில் பணி புரிகின்றனர். இராணுவ வீரர்கள் போன்ற அவர்களால்தான் நாம் வீட்டில் நிம்மதியாக உறங்க முடிகிறது என்பதை நன்கு உணர்வோம். மத்திய ஆயுதக் காவல் படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் தாக்கீது அனுப்பியிருக்கிறேன். அவர்கள் ஜவான்களின் குறைகளை ஒரு குடும்ப தலைவன் போல, கருணை உணர்வுடன் பரிசீலித்து சரி செய்ய வேண்டும். எல்லையிலுள்ள பாதுகாவலர்களின் மீதுள்ள அக்கறையை வலுவூட்ட, ஜவான்களின் நல்வாழ்வு குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் எந்த பரிந்துரைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இதை உளவியல் ரீதியாகச் சரிசெய்வதே பொருத்தமென்று கருதுகின்றேன்.குறைவான மனிதவளத்தைக் காரணம் காட்டி அவசரக் காலங்களில் கூட காவலர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுவது அவர்கள் மத்தியில் சலிப்பையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு காவலருக்கு விடுமுறை மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? பல்வேறு துணை இராணுவப்படையிலுள்ள தலைமை இயக்குனர்கள் அனைவருடனும் இத்தகைய சிக்கல் குறித்து விவாதித்து, தீவிர நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறோம். என்னுடைய அறிவுரையை ஏற்று இத்தகைய முதன்மைச் சிக்கல்கள் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இது போன்ற நிகழ்வுகள் ஏதேனும் உங்களுக்கு தெரிய வருமாயின் எங்களுக்கு எழுதுங்கள்.ஒவ்வொரு மாநிலமும் பெண் காவலர் படைகளை விரிவுபடுத்தி வருகின்றன… இது குறித்து சிறந்த திட்டம் ஏதும் உங்களிடம் உள்ளதா? ஒவ்வொரு துணை இராணுவப் படையிலும் அதிக இடங்கள் காலியாக உள்ளதே அதற்குரிய திட்டங்கள் ஏதேனும் உண்டா? ஆம் நிறையவே உள்ளது! அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.மத்திய புலனாய்வுத் துறையை (சிபிஐ) ஆளுங்கட்சி தங்களுக்குச் சாதகமாக தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.. அதற்கு உங்கள் பதில்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது எனில், அவர்களின் விசாரணை சிலருக்கு சாதகமாக இருக்கும் போது அவர்கள் புகழப்படுவதும், அதற்கு மாறாக சிபிஐ விசாரணை சிலருக்கு பாதகமாக இருக்கும் போது அவர்கள் விமர்சிக்கப்படுவதும் இயல்பானதே. இது காலகாலமாக உள்ள ஓர் குற்றச்சாட்டாகும். சிபிஐ விசாரணை குறித்து எந்த கருத்துகளையும் சொல்ல விரும்ப வில்லை. அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தலையிடக் கூடாது. மேலும் அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற வேண்டும்.எவ்வாறு உங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு காண்கிறீர்கள்? குறிப்பாக உங்கள் மனைவியுடனான… எங்களுக்கு திருமணமாகி 43 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய வாழ்வு முழுவதும் பாலும் தேனுமாக இனித்தது என நான் கூற மாட்டேன். இது மிகவும் பொதுவானது. சிக்கல்கள் எழும் போது அவற்றை பேசித் தீர்த்துக் கொள்வோம். எங்களிடமுள்ள வேறுபாடுகளை களைவதற்காக, ஒன்றன் பின் ஒன்றாக கலந்துரையாடி அதன் பின் ஏற்றுக் கொள்வோம். செய்த தவறுகளுக்கு சில நேரங்களில் நானும், சிலவேளைகளில் துணைவியாரும் மன்னிப்பு கோரிக் கொள்வோம். நாங்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளும் பொழுது, பனிமூட்டம் போன்று தெரியும் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காண முடிகிறது. ஒரு உள்துறை அமைச்சராக, தங்களைப் பற்றிய சுய மதிப்பீடு என்ன? நான் என்னுடைய சிறு வயதிலிருந்தே கடின உழைப்புடன் வாழ்ந்து வருபவன். மெத்தனமாக வேலை செய்வதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சவால்களை ஏற்கும் மனநிலையில் உள்ள எந்தவொரு மனிதனும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நான் வழக்கறிஞர் மற்றும் அரசியல் வாழ்க்கையில் நுழைந்த நாள் முதல் இருந்தே கடைபிடித்து வருகிறேன். காசாபை தூக்கிலிட்டது, பாட்கல், தண்டா பிடிபட்டது, அப்சல் குருவிற்கு மரண தண்டனை விதித்தது போன்ற நிகழ்வுகள், நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் உறுதிபாட்டை காட்டுகிறது. உங்களுடைய உள்துறை அமைச்சர் நாட்டை, நாட்டு மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்.- நேர்முகம்: ப.இரா.சுபாஸ் சந்திரன், ஐதராபாத்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி