மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும் - தமிழ் இலெமுரியா

18 May 2014 12:46 am

பரந்து விரிந்த நீண்ட அண்டவெளியில் ஒரு சூரிய குடும்பம் பறந்து திரிந்து உலா வந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலா, விண்மீன்கள், ஒன்பது கோள்கள் ஆகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், சனி, விண்மம் (உறேனஸ் -Uranus), சேண்மம் (நெப்டியூன் – Neptune), சேணாகம் (புளுடோ – Pluto) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. சூரியன் நானூற்றி அறுபது கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும் பூமியானது நானூற்றி ஐம்பத்துநான்கு கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும், பூமி நிலாவானது நானூற்றி ஐம்பத்து மூன்று கோடி (453,00,00,000) ஆண்டளவில் தோன்றியது என்பதும் அறிவியலாரின் கூற்றாகும். சுமார் முன்னூற்றி எழுபது கோடி (370,00,00,000) ஆண்டளவில் பூமித்தாயில் நுண்ம உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.பூமித்தாய் கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமிக் கோளாகும். உருண்டை வடிவான பூமி நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்து அனற்பிழம்பாக விண்ணில் பல காலமாகச் சுழன்று கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின் மேற்பரப்புக் குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் பெருங் குழிகளில் தேங்கிக் கடல்கள் தோன்றின. மேற்கூறிய ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியில் மட்டும்தான் மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழ முடியும். பூமியில் அமைந்துள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இவை மற்றைய எட்டுக் கோள்களிலும் இல்லாதிருப்பதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியாது. சுக்கிரக் கோள்களுக்கு அடுத்து மூன்றாவதாகச் சூரியனை வலம் வருவதும், மற்றைய எட்டுக் கோள்களிலும் ஐந்தாவது பெரிய கோளாகவும் இருப்பதுதான் பூமியாகும். பூமியின் சுமார் 72 விழுக்காடு மேற்பரப்பு கடல் நீரினால் மூடப்பட்டுள்ளது. மிகுதியான மேற்பரப்பில் கண்டங்கள், நாடுகள், தீவுகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் உயிரினங்கள் போன்றன அமைந்துள்ளன. பூமியின் துருவப் பகுதிகள் பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளன. பூமியின் வளிச்சூழலில் வெடிமம் (Nitrogen), பிராணவாயு, மடிமம் (Argon), கரியமில வாயு ஆகிய வாயுக்கள் செறிந்துள்ளன. மேலும், பூமியுள் இரும்பு, பிராணவாயு, கன்மம் (Slicon), வெளிமம் (Magnesium), நிக்கல் (Nickel), கந்தகம் (Sulphur), சுண்ணகம் (Calcium), அலுமினியம் (Aluminium), கருப்பொன்னம் (Titaninum) ஆகிய கனிம வேதியப் பொருள்கள் நிலத்துள் பரந்து செறிந்துள்ளன. பூமியின் மேற்பரப்பில் செறிந்துள்ள மண்தான் பூமியின் சிறப்பும், புகழுமாகும். பூமியை உலகம், நிலவுலகம், நிலம், தரை, மண்ணுலகு, நிலத்தளம், நிலவளை, மண், மண்புழுதி, மங்கட்டி, நீலக் கோள், புவி, வையம், ஞாலம், பார், அவனி, வையம், தரணி, அகம், அகலிடம், அசலம், பூதளம், குவலயம், அம்புவி, அண்டகோளம், பூகோளம், தாலமி, மண்ணுலகம், பூவுலகம் என்றும் மக்கள் அழைப்பததிலிருந்து பூமியின் சிறப்புத் தெளிவாகின்றது. மண்ணைப் பூமித்தாய், நிலத்தாய், நில மடந்தை என்று பெண்ணாக நினைத்து உயிர் கொடுத்து மதித்தவன் தமிழன். மேலும் மண்ணை ஆற்றுமண், சேற்று மண், குளத்து மண், அருவி மண், காட்டு மண், உதிரி மண், மலைமண், அடி மண், பிடி மண் போன்ற நிலைகளில் வகுத்து வைத்து, அவற்றின் தன்மைகளையும் நன்கறிந்திருந்தனர். மேலும் உலக மண்ணை 1. மணல், 2. வண்டல், 3. களிமண், 4. களிச்சேற்று வண்டல், 5.தூள்மண், 6. சுண்ணம் நிறைந்த மண் என்று ஆறு பெரும் பிரிவுகளாக மண் நூல் துறையார் வகுத்துள்ளனர். அதன்படி உலக மக்களும் தாம் பிறந்த மண்ணின் தரத்தையும், செழிப்பையும் நன்கறிந்து அவற்றுக்கேற்ற பயிரை நட்டு விவசாயம் செய்து உலகப் பசியைப் போக்கி மகிழ்ந்து வாழ்கின்றனர்.இலக்கியங்களில் நிலமும் மண்ணும் இனி மண் பற்றியும், நிலம் பற்றியும் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.தொல்காப்பியம்:முதற் பொருள் என்பது நிலமும், காலமுமாகும். இதைத் தொல்காப்பியர், முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின், இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே" – (பொருள்.4)என்று கூறுவர். இந்நிலத்தைத் தொல்காப்பியர் (கி.மு.711) ஐந்து திணை நிலங்களாக வகுத்துக் காட்டுவர். மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த நிலத்தை முல்லை என்றும், வளம் குன்றிய நிலத்தை பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என்றும், அவற்றில் முறையே புணர்தலும், இருத்தலும், பிரிதலும், ஊடலும், இரங்கலும் நிகழ்த்தித் தம் வாழ்வியலை மேற்கொண்டு சிறந்து வாழ்ந்து காட்டியவன் தமிழனாவான். உலகு நிலம், தீ, நீர், வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் கலந்த ஒரு மயக்கம் ஆனது என்கின்றார் தொல்காப்பியர். நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்.." – (பொருள். 635)என்று நிலத்தின் புகழ் பேசப்படுகின்றது.புறநானூறு: "மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும்", – (2-2), நிலம் பெயரினும், நின்சொற் பெயரல் – (3-14), நிலம்புடை பெயர்வ தாயினும்" – (34-5), எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே! – (187-3, 4) என்று மண்ணினதும், நிலத்தினதும் சிறப்பினைக் கூறுகின்றது புறநானூறு.திருக்குறள்: "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும், கல்லார் அறிவிலா தார்" – (140), நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு – (234), உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும், கூம்பலும் இல்லது அறிவு – (452), மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு, இயைந்துகண் ணோடா தவர் – (576), உலகத்தார் உண்டென்பது இல்என்பான் வையத்து, அலகையா வைக்கப் படும் – (850), நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும், குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் – (959) என்ற குறள்களில் உலகத்தோடு, நிலவரை, உலகம், நிலத்தியல் பால், மண்ணோடு, உலகத்தார், நிலத்தில் என்று கூறி மண்ணினதும், நிலத்தினதும் மகிமைகளைக் கூறிச் செல்கின்றார் திருவள்ளுவர் (கி.மு.31). இனி, மரத்தின் தோற்றுவாய், மரம் தொடர்பான செய்திகள், மரங்களின் வாழ்நாள், இலக்கியங்களில் மரங்கள் ஆகியவை பற்றி விரிவுபடுத்திக் காண்போம்.மரத்தின் தோற்றுவாய்: முதன்முதலாகப் பூமியில் மரம் 38 கோடி (38, 00, 00, 000) ஆண்டுகளுக்கு முன் டெவோனியன் காலவட்டத்தில் (Devonian Period) பலிஓஜிக் ஊழிக்காலத்தில் (Paleozic era) தோன்றியது. அந்த மரத்தை யீன்ஸ் வோற்ரிஜா (Genus Wattieza) என்றழைத்தனர். அக்காலத்தில் அந்த மரத்தின் உயரம் 30 அடிகளாகவும், பூக்காத ஒரு மரமாக இருந்ததாகவும் கணிக்கப்படுள்ளது. அந்த இனமரங்கள் இன்றும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அவை இன்றும் தழை நிறைந்த, உயர்ந்த, பெருத்த மரமாக உள்ளதாக இரு புதைபடிவ ஆய்வாளர்கள் நியுயோர்க் நகரின் தளச் செங்கல் தொகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.மண்ணின் மரங்கள்: பூமிக்கு மண்ணும், மண்ணுக்கு மரமும் என்றும் மகிமையைத் தருகின்றன. இலை, கிளைகளுடன் நீண்ட மரவகைத் தண்டுடனும், அடிமரத்துடனும் சேர்ந்த மரமானது ஆண்டுக் கணக்கில் வாழவல்ல மரவினத்தைச் சேர்ந்ததென்று தாவரவியல் கூறும். மரங்கள் மண் உள்ளரிப்பைத் தடுத்து மண் வளத்தை மேம்படுத்தி நுண்ம உயிரினங்கள் செழித்து வளர உதவுகின்றன. ஒரு மரமானது ஓர் ஆண்டில் 48 இறாத்தல் கரியமிலவாயுவை உறிஞ்சி, அந்த மரம் 40 ஆண்டளவில் ஒரு டன் கரியமிலவாயுவைச் சேகரித்துப் பாவனைப்படுத்திக் கொள்கின்றது. பெரிய மரமொன்று நாளொன்றுக்கு 100 கலன் நீரைத் தரையிலிருந்து மேலே தூக்கிச் சென்று பாவனைப்படுத்திய பின் காற்று மண்டலத்தில் வெளியேற்றி விடுகின்றது. ஒரு பெரிய மரம் நாலு பேருக்கு ஒரு நாளைக்குத் தேவையான பிராணவாயுவை கொடுத்து உதவுகின்றது. ஐயாயிரத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருள்களை மரங்களிலிருந்து செய்து பெற்றுக் கொள்ளலாம். மரங்கள் யாவற்றையும் வீட்டு மரம், காட்டு மரம், கோயில் மரம் என முப்பெரும் பிரிவாக வகுத்துள்ளனர். வீட்டு மரங்களாக வாழை, பனை, தென்னை, மா, பலா ஆகியனவும், காட்டு மரங்களாக தேக்கு, வாகை, பாலை, முதிரை போன்றவை என்றும், கோயில் மரங்களாக அரசு, வேம்பு, கொன்றை, வில்வம், ஆல், மருதம், மகிழம் போன்றவை என்றும் வகுத்துள்ளனர். மரங்களைத் தெய்வமெனப் பூசித்து வாழ்பவன் தமிழன். பூசைகள் புரிந்து வணங்கி வாழ்ந்து வருவர். இன்று ஏறத்தாழ ஓர் இலட்சம் (1, 00, 000) அறிமுகமான வேறுபாடுடைய இனவகை மரங்கள் உள்ளதாக உலக வள ஆதார நிறுவனம் (World Resources Institute) கணக்கிட்டுள்ளது. மேலும் சுமார் 3.9 பில்லியன் ஹெக்டேர் அல்லது 9.6 பில்லியன் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் உள்ளன என்று வன வள ஆதார மதிப்பீடு – 200 (Forest Resources Assessment  - 2000) என்ற அறிக்கை கூறுகின்றது. இன்றுள்ள மரங்கள் பூமியின் தரைப் பரப்பில் 29.6 விழுக்காட்டை மட்டும் நிரப்புகின்றன. உலகில் சுமார் 40, 000 கோடி (40, 000, 00, 00, 000) மரங்கள் உள்ளதாக ஒரு கணிப்புள்ளது. ஆனால் "தேசிய வான்செலவுத் துறையும் விண்வெளி நிருவாகமும் (NASA) 2005 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 400, 246, 300, 201 மரங்கள் இருந்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். அடிமரம் பல மர இழைமங்களைக் கொண்டது. இவை மரத்துக்குப் பலத்தையும், வலிமையையும் கொடுக்கின்றது. இன்னும் சாறுசெல் நாள இழைமங்கள் (Vascular tissues) மூலப் பொருள்களை மரத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு உதவுகின்றன. மரங்கள் மக்களுக்குத் தேவைப்படும் பூக்கள், காய், கனி, இலை, விதைகள், நிழல், தங்கிடம், விறகு, மரத்துண்டுகள் ஆகியவற்றைத் தந்துதவுகின்றன.இலைகள்: மரத்துக்கு இலைகள் மிக மிக முக்கியமானவை. அவை இன்றேல் மரங்கள் இல்லை என்றாகிவிடுகின்றது. தரைக்கு மேலுள்ளக் கிளைகள் சிறு சிறு கிளைகளாகவும், தளிர்க் கொம்புகளாகவும் பிரிந்து விடுகின்றன. தளிர்க் கொம்புகள் இலைகளை உருவாக்குகின்றன. இவ்விலைகள் ஒளியையும், ஆற்றலையும் உட்கொண்டு ஒளி இயையாக்க மூலம் வேதியியல் ஆற்றலாக மாற்றி மர வளர்ச்சிக்கு வேண்டிய உணவைக் கொடுக்கின்றன. இலைகளிலுள்ள நீர் ஆவியாய் மாற்ற மடைவதால் நிலத்திலுள்ள நீரை மரவேர்கள் உறிஞ்சி மர உட்பிழம்பு (Xylem) மூலமாக இலைகளுக்கு அனுப்பப்படுகின்றது. போதிய நீர் இல்லையெனில் இலைகள் இறந்து விடுகின்றன. சூழல், தட்ப வெப்பம், அழுத்தம் காரணமாக இலைகள் சிறியனவாகவும், அகன்றதாகவும், ஊசி போன்றவையாகவும் அமைந்திருப்பதை நாம் காண்கின்றோம். குளிர் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு வளராது இருந்து விடுகின்றன. பின் கோடை காலத்தில் இலைகள் துளிர்த்து வர மரமும் வளரத் தொடங்கி விடும்.மரப்பட்டை: அதிகமான மரங்கள் மரப்பட்டையால் மூடப்பட்டு மரங்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றது. தக்கை தரும் சிந்தூர மரத்தின் (Cork Oak) தடித்த மரப்பட்டையிலிருந்து அடைப்பான்கள் (மூடுகள்) செய்யப்படுகின்றன. இந்த மரத்திலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மரப்பட்டைகளைச் சேகரித்து மூடிகளைச் செய்து பாவிப்பர். ஒட்டுப் பசையானதும், பாதுகாப்பானதும், மறைந்துள்ளதுமான இரப்பர் மரப் பால் மரத்தைச் செடி உண்ணும் மிருகங்களிலிருந்து காப்பாற்றுகின்றது. இரப்பர் மரத்திலிருந்து இப்பாலைச் சேகரித்துப் பல பொருட்களைச் செய்து விற்பனைப் படுத்துவர்.மரவேர்கள்: பெரும்பாலான மரங்களுக்கு ஆணிவேர் இருப்பதில்லை. ஆனால் பல கிளை வேர்கள் நாலாபக்கமும் சென்று மரத்தை நங்கூரமிடச் செய்து உறுதியைக் கொடுக்கின்றது. இவை ஈரத்தையும், ஊட்டச் சத்தையும் நிலத்திலிருந்து உறிஞ்சி மேல் மரத்துக்கு அனுப்புகின்றன. இக்கிளை வேர்களும் நிலத்தில் அதிக ஆழத்துக்குச் செல்வதில்லை. அதிகமான பக்க வேர்கள் பன்னிரண்டு அங்குலம் வரை நிலத்தில் செல்கின்றன. மரவேர்களுக்குப் பசுமை நிறப் பாசியம் (Chlorophyll) இருப்பதில்லை. அடிமரத்திலும் பார்க்க மரவேர்கள் கூடிய மாச்சத்தைச் சேமித்து வைக்கக் கூடியவை. நீர், தட்பவெப்ப நிலை, ஊட்டச் சத்து ஆகியவை கிடைத்தும் வேர் நீருறிஞ்சுப் பகுதிகள் (Root Hairs) சில நாட்களில் வளர்ந்து செயற்பட்டு மர வளர்ச்சிக்கு உதவுகின்றன.மரங்களின் வாழ்நாள்: மரங்கள் மிக நீண்டு உயிர்ப் பொருளாயும், அதி உயர்ந்தனவாயும், மிகப் பருமனாகவும் பூமியில் வாழ்ந்து வருகின்றன. மங்கி ட்றி கிறவுண் (Monkey tree Crown) என்ற மரம் 200 அடிகள் வரை உயர்ந்து வளர்கின்றன. சுவாம் ஆஸ்ட்றீ (Swamp ashtrees) என்ற மரங்கள் 300 அடிகள் வரை வளர்கின்றன. கோஸ்ரல் றெட்வூட்ஸ் (Costal redwoods) என்ற மரங்கள் 380 அடிகளுக்கு மேல் நீண்டு வளர்கின்றன. கலிவோனியா பூங்காவிலுள்ள ஜெயன்ட் செகுஒய்ய (Giant Seguoia) என்ற அரக்க மரம் 2, 000 டன் எடையுள்ளது. இதன் அடிமரத்தின் பரும அளவு சுமார் ஆயிரத்தி நானூற்றி எண்பத்தேழு கன மீட்டர் (1, 487ட்3) என்று கணித்துள்ளனர். சித்தூர மரங்கள் (Oaks) 500 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. இன்னும் கலிவோனியாவிலுள்ள பிரிஸிரிள்கோன் பயின் (Bristlecone Pine) என்ற மரத்தின் வயதை 2012 ஆம் ஆண்டு 4, 844 ஆண்டுகள் என்று கணித்துள்ளனர். இந்த மரத்தின் உள் மையப் பகுதி வரை துளையிட்டு அதிலுள்ள ஆண்டு வளர்ச்சி வளையங்களைக் கணக்கிலெடுத்து இம்மரத்தின் வயதெல்லை கணிக்கப்பட்டுள்ளது.தேசிய மரம் உலகத்திலுள்ள  நாடுகள் தத்தமக்குரிய மரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை தம் நாட்டின் தேசிய மரங்களாக அறிவிக்கை (பிரகடனம்) செய்துள்ளனர். அவற்றில் ஒரு சில நாட்டின் மரங்களைப் பதிவாக்கம் செய்து காண்போம். வங்களாதேசம் – மாரத்தையும், கம்போடியா – பனை மரத்தையும், கனடா – நிழல் மரத்தையும் (Maple), சீனா – விசிறி மரத்தையும் (Gingko), கியூபா – பல்மா றீயல் மரத்தையும் (Palma Real), டென்மார்க் – புங்க மரத்தையும் (Beech), இங்கிலாந்து – அரச சிந்தூர மரத்தையும், ஜெர்மனி – சிந்தூர மரத்தையும், கிறீஸ் – ஆலிவ் மரத்தையும், இந்தியா – ஆல மரத்தையும், இந்தோனேசியா – தேக்கு மரத்தையும், இத்தாலி – ஆலிவ், சிந்தூர மரங்களையும், வட கொரியா – தழைமலர் மரத்தையும் (Magnolia), மடகாஸ்கார் – பருத்த அடியுடைய மரத்தையும்(Baobab), மாலதீவு – தென்னை மரத்தையும், பாகிஸ்தான் – தேவதாரு மரத்தையும் (Deodar), பாலஸ்தீன் – ஆலிவ் மரத்தையும், பனமா – பனமா மரத்தையும், பிலிப்பைன்ஸ் – நர்றா மரத்தையும் (Narra), போலந்து – சிந்தூர மரத்தையும், போர்ச்சுகல் – தக்கை தரும் சிந்தூர மரத்தையும், ரஷ்யா – பூர்ச்ச மரத்தையும் (Birch tree), சிறிலங்கா – நா மரத்தையும் (Na tree), வியட்னாம் – மூங்கில் மரத்தையும் தமது தேசிய மரங்களாகப் பாவனைப் படுத்துகின்றனர்.இலக்கியங்களில் மரங்கள்: சங்க இலக்கியப் பாடல்களில் ஏராளமான மரங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ள செய்திகளையும் நாம் காண்கின்றோம். அக்காலப் பாடல்கள் இயற்கையோடு அமைந்தமையால் ஆங்கே இயற்கை மரங்களும் நிரம்பிப் பூத்துக் குலுங்குகின்றன.1. தொல்காப்பியம்: தொல்காப்பியர் ஐந்திணைகளில் காட்டும் மரங்கள் பற்றியும் பார்ப்போம். குறிஞ்சியில் – சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில், வேங்கை, கோங்கு ஆகிய மரங்களும், முல்லையில் – கொன்றை, காயா, குருந்தம், புதல் ஆகிய மரங்களும், பாலையில் – உழிஞை, பாலை, ஓமை, இரும்பை, கள்ளி, சூரை ஆகிய மரங்களும், மருதத்தில் – காஞ்சி, வஞ்சி, மருதம் ஆகிய மரங்களும், நெய்தலில் – கண்டல், புன்னை, ஞாழல், கைதை ஆகிய மரங்களும் அந்தந்தத் திணைகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன."புல்லும் மரனும் ஓரறி வினவே" – (பொருள். 572) என்று கூறி "மரம்" ஓரறிவு உடையது என்கிறார். இன்றைக்கு 2, 800 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் தோன்றாத காலத்திலேயே மரத்துக்கு ஓரறிவுள்ளது என்று கண்டறிந்த தொல்காப்பியரின் அறிவியலைப் பாராட்டுவோம். 2. குறுந்தொகை: காஞ்சி (10-4, 127-3), பலா (18-1, 83-4, 385-1), கொன்றை (21-3), மராஅம் – வெண்கடம்பு (22-3), வேம்பு (24-1, 67-2, 196-1, 281-3), புன்னை (351-6), வேரல் – மூங்கில் (18-1) ஆகிய மரங்களை குறுந்தொகையில் பூத்துக் குலுங்குகின்றன.3. கலித்தொகை: சிலை – வில் செய்யும் மரம் (பாலைக்கலி 14-1), வேங்கை (பாலைக்கலி 31-5 குறிஞ்சிக்கலி 2-6, 8-4, 9-18, 13-5), காஞ்சி (பாலைக்கலி 33-8), சந்தன மரம் (குறிஞ்சிக்கலி 7-3), வாழை – சுரபுன்னை (குறிஞ்சிக்கலி 7-1), காஞ்சி (மருதக்கலி 9-5), பெண்ணை – பனை மரம் (மருதக்கலி 18-8, நெய்தற்கலி 25-47, 29-59), ஆலமரம், மாமரம் (முல்லைக்கலி 1-13), கொன்றை, காயா, வெட்சி, பிடவம், முல்லை, கஞ்சங்குல்லை, குருந்தம், கோடல், பாங்கர் முதலிய மரங்கள் (முல்லைக்கலி 3-1, 2, 3) ஆகிய மரங்கள் கலித்தொகையில் நீண்டு வளர்ந்து மண்வளத்தை உயர்த்தி, வாசனை பரப்பி வாழ்கின்றன.4. ஐங்குறுநூறு: வேம்பு (30-1, 350-2), மருது (33-2, 74-3, 75-3), மாமரன் (61-1), பெண்ணை – பனை மரம் (114-4), ஞாழல் (141-1, 143-1, 144-1, 145-1, 146-1, 147-148-1, 149-1, 150-1), புன்னை (169-3), வேங்கை (297-1), கருங்கால் நுணவம் – நுணாமரம் (342-3), சிலை – வில் செய்யும் மரம் (363-1), மரா அத்து – வெண்கடம்ப மரம் (383-2) என்று கூறப்பட்ட மரங்கள் ஐங்குறுநூற்றுப் பாடல்களிற் செறிந்து நாட்டு வனப்பைச் சிறப்பிக்கின்றன.5. அகநானூறு: ஓமை (3-2, 5-8), முருங்கை (53-4), யாமரம் (65-13, 333-1, 337-1, 343-10:, பெண்ணை- பனை (120-14, 148-1, 305-11, 365-6), முல்லை (4-1), இல்லம்- தேற்றாமரம் (4-1), கொன்றை (4-2), மராமரம் (127-13), ஞெமை மரம் (145-5), வேம்பு (176-8), வேங்கை (182-1, 388-7), பலா மரம் (189-1, 348-4, 352-1, 382-10), மாமரம் (317-15, 341-3, 348-2, 355-1), கோங்க மரம் (341-2), தேக்கு (299-5), மருதம் (366-1, 226-9), வஞ்சி (226-9), நாவல் (380-4), விளாமரம் (394-1), களாமரம் (394-1), இலுப்பை (331-1) போன்ற மரங்கள் அகநானூற்றுப் பாடல்களில் தமது செய்திகளைக் கூறிக் கொண்டு வான் நிறைந்த நிலையில் உள்ளன.6. புறநானூறு: கடிமரம்- காவல் மரம் (23-9), போந்தை- பனை (24-12, 85-7, 265-3, 338-6, 225-1), தாளிமரம் (328-14), வேம்பு (76-4, 77-2, 296-1, 338-6), வேங்கை (120-1, 129-3, 137-9, 224-16), பலாமரம் (109-5, 128-1, 150-2), விளாமரம் (181-1), புன்னைமரம் (386-15), ஆத்தி (338-6) ஆகிய மரங்கள் அங்குள்ள மக்களுக்கு வேண்டிய பூ, இலை, காய், கனி ஆகியவற்றைக் கொடுத்து உதவுகின்றன.7. பரிபாடல்: வேங்கை (7-12, 11-20, 15-32, 19-77), மாமரம் (7-14, 11-19, 18-4, 10-6), கடம்பமரம் (8-126), புன்னை (11-16), சுரபுன்னை (11-17, 12-5), நாகமரம் (12-4), ஞெமை (12-5), அகரு- அகில் (12-5), ஆரம்- சந்தனமரம் (12-5) ஆகிய மரங்கள் பரிபாடலில் வான் பார்த்துக் கதைக்கின்றன.8. பதிற்றுப்பத்து: கடம்பமரம் (11-12, 17-5), கவிர்- முள்முருக்க மரம் (11-21, 23-20), தென்னை (13-7), மருது (13-7, 23-18), சந்தனமரம் (86-12, 87-2), விடத்தேரை மரங்கள் (13-14), உன்னமரம் (23-1, 40-17), காஞ்சி (23-19), வேங்கை (41-8, 88-34) வேம்பு (44-15), வழை- சுரபுன்னை (41-13), போந்தை- பனை (51-9, 70-6), எழு- கணையமரம் (45-10, 53-15), தாழை (55-5), ஞாழல்- புலிக்கொன்றை மரம் (51-5) போன்ற பல மரங்கள் பாடல்களில் பரந்து செறிந்து நின்று சூழல்களைத் தூய்மைப்படுத்துகின்றன. 9. நற்றிணை: வேம்பு (3-2, 103-2, 218-7, 279-1), புன்னை (4-2, 91-2, 145-9, 159-6, 167-1, 175-5, 231-7), ஆரம்- சந்தனம் (5-4, 292-1), குமிழமரம் (6-7), வேங்கை (13-7, 151-9, 158-8, 202-5, 216-6, 368-2, 396-3), வெள்ளில்- விளாமரம் (24-5), பலவின்- பலாமரம் (26-6, 102-5, 201-5, 213-2, 326-1), ஆசினி- ஆசினிப் பலா (44-9), காம்பு- மூங்கில் (55-2), முருக்கின்- முருக்க மரம் (73-1), ஞாழல் (74-5, 267-4), ஓமை (107-6, 198-2, 252-1, 279-7), பெண்ணை- பனை (135-1, 199-1, 323-1, 338-9, 372-2), கொன்றை (141-3, 246-8, 296-4), தாளம் போந்தை- தாளிப்பனை (174-2), யாமரம் (198-1), மாமரம் (243-3, 246-3, 381-4), நொச்சி (246-3, 267-1, 293-1), பிடா (246-8), குருந்தமரம் (321-9), காயா (371-1), கண்டல் (372-13), வாழை (399-14, 400-1) ஆகிய மரங்கள் ஒன்பதுஅடிச் சிறுமையையும், பன்னிரண்டடிப் பெருமையையும் கொண்ட நற்றிணைச் செய்யுட்களில் நின்று இயற்கை வளப் பெருமை பேசுகின்றன. 10. சிலப்பதிகாரம்: அகில் (2-67, 4-36, 5-18, 13-115, 14-108, 22-92, 25-37, 28-17), அட்ட- கொன்றை (24-54), அமை- மூங்கில் (10-157, 27-217), ஆ- ஆச்சாமரம் (12-76), இலவம்- இலவமரம் (5-214, 12-81), ஏத்தம்- ஏற்ற மரம் (10-110), ஓமை மரம் (11-75), கடப்பம்- கடம்புமரம் (24-74), கமுகு- பாக்குமரம் (11-83, 13-193, 25-46), கவிர்-முருக்கமரம் (13-164, 30-57), கழை- மூங்கில் (3-97), குடசம்- வெட்பாலைமரம் (13-157, 14-87), சண்பகம் (2-18, 8-45, 10-67, 13-119, 22-40), செயலை- அசோகமரம் (24-81), சேடல் (13-153, 22-69), ஞாழல்- புலிநகக் கொன்றைமரம் (7-52), பலவு- பலாமரம் (10-75, 11-84, 25-44), புனை- கட்டுமரம் (13-179, 14-75), போதி- அரசமரம் (10-11, 15-103, 23-76, 27-108, 30-28), போந்தை- பனை (26-46, 70, 219;  27-45, 112, 175, 189, 248;  28-9, 134;  30-116), மரவம்- வெண்கடம்பமரம் (11-207, 13-152), மருது (12-162), மாதுளம் (16-25), மாமரம் (15-22, 25-43, 28-25), வாழை (11-83, 13-193, 16-26, 42, 25-47), வேங்கை (11-207, 12-79, 13-151, 23-191, 24-3, 14:  25-17, 57:  28-220), வேம்பு (29-191) ஆகிய மரங்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களுக்குப் பிராணவாயுவைக் கொடுத்தும், ’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற கருப்பொருளைக் கூவிக்கொண்டும், நீண்டு வளர்ந்து நாட்டைக் காப்பாற்றி வருகின்றன.முடிவுரைஇதுகாறும் சூரியன், அதன் தோற்றுவாய், பூமித்தாய், அதன் தோற்றுவாய், இலக்கியங்களில் நிலமும் மண்ணும், மரத்தின் தோற்றுவாய், மண்ணின் மரங்கள், மரஇலைகள், மரப்பட்டை, மரவேர், மரங்கள் வாழ்நாள், தேசிய மரங்கள், இலக்கியங்களான தொல்காப்பியம், குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம் ஆகியவை மரங்கள் பற்றிப் பேசும் பாங்கு  போன்ற செய்திகளை மேலே பார்த்தோம். மண்ணும், மரங்களும் மனிதனுக்குமுன் தோன்றியவை. அதிலும், மரங்களுக்குமுன் தோன்றியது மண் ஆகும். மண் இன்றேல் மரங்களும் இல்லை. மண்ணை நம்பித்தான் மனிதன் வாழ்கின்றான். மனிதன் மண்ணில் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி, வளர்ந்து, விளையாடி, வாழ்ந்து, அதே மண்ணில் இறந்து விடுகின்றான். மனிதன் தன் வாழ்வியலை அமைக்க மண் உதவுகின்றது. மனிதன் தனக்கு வேண்டிய உணவை மண்ணிலிருந்து பெற்றுப் பசியைத் தீர்க்கின்றான். மண்மேல் வீடமைத்து அதில் பாதுகாப்பாய் வாழ்ந்து வருகின்றான். மண்ணைக் குடைந்து நீரைப் பெற்றுத் தன் தேவைகளுக்குப் பாவிக்கின்றான். மண்ணில் கிடைக்கும் இயற்கைக் கனிமங்களும் மனிதன் சொத்தாகும். மண் பார்த்து மண்ணில் பிறக்கும் குழந்தை, கண் விழித்துப் பார்ப்பதெல்லாம் வியப்பைத்தான் தந்தது. மண், விண், மரம் யாவும் அக்குழந்தைக்கு வியப்பைக் கொடுத்தன. நாளடைவில் குழந்தை வளர்ந்து மனிதனாகிய பொழுது மண்ணின்றி, விண்ணின்றி, மரமின்றித் தான் வாழமுடியாதென்பதை அறிந்து, மண்ணையும், விண்ணையும், மரத்தையும் நேசிக்கத் தொடங்கினான். அப்பொழுது மண் அவனுக்கு உணவைக் கொடுத்தது; விண் அவனுக்கு வாழ்வைக் கொடுத்தது;  மரம் அவனுக்கு வாழும் சூழலையும;, சுகத்தையும் கொடுத்தது. அதனால் அவன் வாழ்வியலும் மேம்பட்டது. சங்க காலத்தில் இருந்துள்ள எல்லா மரங்களையும் எம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. உழிஞை, ஓமை, இரும்பை, ஞாழல், கைதை, சிலை, காயா, கோடல், ஞெமை, ஆசினி, யாமரம், பிடா, கண்டல், சேடல் ஆகியவை ஒரு சில உதாரணங்களாகும். ஒருவேளை இவற்றை வேறு பெயர்களில் இன்று அழைக்கக்கூடும். பனை மரத்தைச் சங்ககாலத்தில் ‘பெண்ணை’ என்றும், ‘போந்தை’ என்றும் அழைத்தனர். இவ்வண்ணம் மனிதன் மண்ணின் மைந்தனானான். அதே நேரம் மனிதன் மரங்களின் உறவானான். மண்ணும், மரங்களும் என்றும் நிலைத்திருக்கும். எனவே இயற்கையைக் காப்பது என்பது நம் உடன்பிறந்த உறவுகளைக் காப்பதற்கு ஒப்பாகும்.- நுணாவிலூர் கா.விசயரத்தினம், இலண்டன்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி