15 March 2016 9:14 pm
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் ஏறத்தாழ இருபது நாட்கள் சிறையிலடைக்கப் பட்ட நிகழ்வை நாடறியும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக பலமுறை விவாதிக்கப்பட்டது. தற்காலத்தில் இந்துத்துவத்திற்கு எதிராகப் பேசினாலே அதை ஒரு தேசத் துரோகமாகப் பார்க்கப்படும் போக்கு நிலவுகிறது. யார் இந்த கன்னையாகுமார்? பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்து சிற்றூரில் பிறந்து, பீகாரின் தொழில் நகரமான பரவுனி நகரில் அமைந்துள்ள ஆர்கேசி உயர்நிலைப் பள்ளியில் தன் கல்விப் பயணத்தை தொடங்கிய கன்னையாகுமார், தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிஎச்டி (முனைவர்) பட்டம் பயின்று வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் அரசியலில் ஈடுபாடுடையவராக இருந்தார். செப்டம்பர் 2015 இல் ஜ.நே.பல்கலைக்கழகத்தின் முதல் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய பேச்சுத் திறமையே மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. உண்மையில் கன்னையாகுமார் தேசத் துரோக முழக்கத்தை எழுப்பினாரா? நாட்டு மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டினாரா? என்பது குறித்து நீண்ட போராட்டத்திற்குப் பின் சிறையிலிருந்து பிணையத்தில் வெளிவந்த இவர் 2016, மார்ச் 3 ஆம் நாளன்று நிகழ்த்திய விளக்கவுரை நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள ஏதுவான ஓர் உரையாகும். அதைக் கேட்டவர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்கள். தங்களை அவருடைய எதிரியாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் தூக்கம் இழந்தனர். அவருடைய அன்றைய பேச்சு, ஒரு மாபெரும் வருங்காலத் தலைவரின் அரசியல் வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததுபோல இருந்தது. உணர்ச்சி வேகம், நகைச்சுவையுணர்வு, சமுதாயத் தெளிவு, அஞ்சா நெஞ்சம், இளமை வேகம், தலைமைத்துவப் பண்புநலன் ஆகியவை அவருடைய பேச்சில் வெளிப்பட்டதைக் கண்டு மாணவர் சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமே அவரை வியந்து பார்த்தது. கன்னையா குமார் ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு’- ஆசிரியர் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் என் புரட்சிகரமான வணக்கம். இப்பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்ற, ரோகித் வெமுலாவுக்கு நியாயம் கிடைப்பதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஊடகங்கள், பொது மக்கள், அரசியல் சார்புடையவர்கள், அரசியல் சார்பு அற்றவர்கள், உலகம் நெடுகிலுமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவருக்கும் என் செவ்வணக்கத்தை கூறிக் கொள்கிறேன். குறிப்பாக, பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, எது சரி, எது தவறு என்று முடிவு செய்து கொண்டிருக்கின்ற முக்கியமான, பெரிய தலைகள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்களுக்கும் அவர்களுடைய காவல் துறையினருக்கும் ‘அந்த’த் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் என் நன்றி. அவப்பெயர் வந்தால்தான் என்ன? அப்படியாவது நம் பெயர் வெளியே தெரிய வந்துள்ளதே!" என்று எங்கள் கிராமத்தில் ஒரு கூற்று உண்டு. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதுதான் அந்தத் தனியார் தொலைக் காட்சிகளின் நோக்கமாக இருந்தாலும்கூட, நாடெங்கிலு முள்ள பல்லாயிரக் கணக்கானோர், நம்முடைய இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பாகப் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான வாய்ப்பை நாம் இப்போது பெற்றுள்ளோம்! எங்களுக்கு யார்மீதும் பகையுணர்வு இல்லை. குறிப்பாக, ஏபிவிபி (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பைச் சேர்ந்தவர்கள்மீது எங்களுக்கு எந்தப் பகைமையும் இல்லை. ஏனெனில், வெளியே இருக்கின்ற ஏபிவிபி அமைப்பினரோடு ஒப்பிடுகையில், எங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கின்ற ஏபிவிபி அமைப்பினர் அதிக ‘அறிவார்ந்தவர்கள்.’ நாங்கள் உண்மையான சனநாயக வாதிகள். எனவே நாங்கள் அவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. மாறாக, ஓர் அரசியல் எதிரணியாகவே பார்க்கிறோம். நண்பர்களே, நான் எந்தத் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட மாட்டேன். ஏனெனில், வேட்டையில் கூட, வேட்டையாடப்படத் தகுதி வாய்ந்தவை மட்டுமே வேட்டையாடப் படுகின்றன. சரியானவற்றைச் சரியென்றும் தவறானவற்றைத் தவறென்றும் கூற ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் ஒருபோதும் தயங்கியதில்லை. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையுடன் நான் துவக்கினேன். இப்போது சமவுடைமை, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையுடன் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் இங்கு சொற்பொழிவாற்றப் போவதில்லை. வெறுமனே, என் அனுபவத்தை மட்டுமே நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில், நீதிமன்றத்தின் செயல்முறையைப் பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அரசமைப்புச் சட்டத்தை உண்மையிலேயே நேசிக்கின்றவர்கள், அண்ணல் அம்பேத்கரின் கனவுகள் நனவாக வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நான் என்ன கூற வருகிறேன் என்பதைப் புரிந்து கொள்வார்கள். ஆனால், ‘வாய்மையே வெல்லும்’ (சத்யமேவ ஜயதே) என்று நம்முடைய தலைமையமைச்சர் ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்டார். "தலைமையமைச்சர் அவர்களே, உங்களோடு எனக்குப் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், ‘வாய்மையே வெல்லும்’ உங்களுடையது மட்டும் அல்ல, அது இந்த நாட்டினுடையது, நம் அரசமைப்புச் சட்டத்தினுடையது. எனவே, நானும் ‘வாய்மையே வெல்லும்’ என்று கூறுகிறேன்." வாய்மை வெல்லத்தான் போகிறது! தங்கள் மோதிரங்கள் எல்லா ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்று மக்களை நம்ப வைத்து அவற்றை அவர்களிடம் விற்கின்ற செப்படி வித்தைக்காரர்கள் பல ரயில் நிலையங்களில் இருப்பார்கள். அதேபோல, ‘கருப்புப் பணம் திரும்பி வரும், ’ ‘ஹர ஹர மோடி, ’ ‘பணவீக்கம் குறையும், ’ ‘எல்லோருக்கும் வளர்ச்சி’ என்று கூறுகின்றவர்களும் இந்நாட்டில் இருக்கின்றனர். இவையெல்லாம் வெற்று முழக்கங்கள் மட்டுமே. இந்தியர்கள் எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவர் என்பது உண்மைதான், ஆனால் இம்முறை நடந்துள்ள இக்கூத்து நம்மால் மறக்க முடியாத அளவுக்குப் பெரிதாக ஆகிவிட்டது. தாங்கள் கொடுத்தப் பொய்யான வாக்குறுதிகளை நாம் மறந்து போகும்படி செய்வதற்குத்தான் அவர்கள் முயற்சிக்கின்றனர். எப்படி? இந்நாட்டில் முனைவர் படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரின் ஆய்வுதவித் தொகைகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டனர். ஆய்வுத் தொகையைத் தரும்படி மாணவர்கள் கெஞ்சும்போது "முன்பு நாங்கள் ஐயாயிரம் ரூபாயோ அல்லது எட்டாயிரம் ரூபாயோதான் கொடுத்துக் கொண்டிருந்தோம். அதையே தொடர்ந்து நாங்கள் கொடுக்கிறோம்" என்று அவர்கள் கூறுவார்கள். பிறகு ஆய்வுதவித் தொகை அதிகரிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். இதையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்தான் தட்டிக் கேட்பார்கள்! இந்நாட்டில், மக்களுக்கு எதிரான அரசாங்கம் இது என்று அவர்களை நீங்கள் அழைத்தால், அவர்களுடைய ‘சைபர் செல்’லில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? தில்லுமுல்லு செய்து மாற்றியமைக்கப்பட்ட ஒரு வீடியோவை அனுப்பி வைப்பார்கள். உங்களைப் பற்றி அவமானகரமான விமர்சனங்களை அனுப்பி வைப்பார்கள். உங்கள் குப்பைத் தொட்டியில் எத்தனை ஆணுறைகள் உள்ளன என்று கணக்கிடுவார்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. ‘யுஜிசி ஆக்கிரமிப்பு’ இயக்கத்தைச் சட்டமுறைமைக்கு எதிரானதாக அவர்கள் அறிவிக்க விரும்பியதும், ரோஹித் வெமுலாவுக்கு நியாயம் கேட்டு நாம் போராடிக் கொண்டிருந்ததும்தான் அவர்கள் இத்திட்டத்தை உருவாக்கியதற்குக் காரணம். ஆர்எஸ்எஸ் அமைப்பால் நம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியாது. நாட்டின் எல்லையில் நம்முடைய ராணுவ வீரர்கள் செத்துக் கொண்டிருப்பதாகப் பாராளுமன்றத்தில் ஒரு பா.ச.க தலைவர் கூறினார். நான் அந்த வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன். ஆனால் நான் அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான். அந்த ராணுவ வீரர் உங்கள் சகோதரரா? நமக்காக உணவு உற்பத்தி செய்து கொடுக்கின்ற, இந்தியக் கிராமங்களில் தற்கொலை செய்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகளும் ராணுவத்தில் செத்துக் கொண்டிருக்கும் வீரர்களும் யார்? வயல்களில் வேலை செய்து கொண்டிருப்பது என்னுடைய தந்தை. என் சொந்தச் சகோதரன்தான் ராணுவத்தில் சேர்ந்து அங்கு சாகிறான். எனவே பொய்யான பிரச்சாரங்களைக் கொண்டு மக்களை ஒன்றிணைப்பதற்கு இவற்றை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. பழங்குடியினரும் ஒதுக்கப்பட்டச் சமுதாயத்தினரும் மடிந்து கொண்டிருக்கின்றனர். எனவே, நான் கேட்க விரும்புவதெல்லாம், பாராளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக அரசியல் செய்கின்ற நீங்கள் யார்? செத்துக் கொண்டிருப்பவர்களுக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமான பங்கு கிடைக்கும்வரை இவ்வுலகில் அமைதி இருக்காது. இச்சூழ்நிலையில், விடுதலை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? யாரிடமிருந்து நீ விடுதலை கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்கவில்லை, இந்தியாவிற்குள் விடுதலை வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இரண்டுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நண்பர்களே! "செவ்வணக்கம், செவ்வணக்கம் என்று நீங்கள் கூறுகிறீர்களே. அதற்கு என்ன பொருள்?" என்று ஒரு காவலர் என்னிடம் கேட்டார். அவரோடு பேச்சுக் கொடுத்தபோதுதான் அவரும் என்னைப் போன்றவர்தான் என்பது எனக்குப் புரிந்தது. இந்நாட்டில் யார் காவலர்களாக இருக்கின்றனர்? விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் மகன்கள்தான் காவலர்களாகப் பணியாற்றுகின்றனர். நானும் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூடக் காவல் துறையில் வேலை செய்கின்றனர். என்னுடன் வந்த காவலர் (கான்ஸ்டபிள்) என்னிடம் பேசத் தொடங்கினார். "செவ்வணக்கம் என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். "செவ்வணக்கம் என்றால் புரட்சிக்கு வணக்கம் என்று பொருள். இன்குலாம் ஜிந்தாபாத் (புரட்சி நீடூழி வாழ்க!) என்ற முழக்கம் உங்களுக்குத் தெரியுமா?" என்று நான் கேட்டேன். "அது எனக்குத் தெரியும், என்று அவர் கூறினார். புரட்சிக்கு உருது மொழியில் இன்குலாப் என்று பெயர், என்று நான் விளக்கியபோது, ஏபிவிபி அணியினரும் இதே முழக்கம்தானே முழங்குகிறார்கள்?" என்று அவர் கேட்டார். "அவர்கள் போலிப் புரட்சிக்காரர்கள், நாங்கள் உண்மையான புரட்சிக்காரர்கள் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?" என்று நான் அவரிடம் கேட்டேன். பிறகு அவர் என்னிடம் இப்படிக் கூறினார்: "ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு அரசாங்க மானியம் வழங்கப்படுவதால், அவர்களுக்கு எல்லாமே மலிவாகக் கிடைக்கிறது என்று நான் கேள்விப்பட்டேனே!" அதற்கு நான், உங்களுக்கு ஏன் அந்த மானியம் கிடைப்பதில்லை? என்று கேட்டேன். அவர் ஒரு நாளுக்குப் பதினெட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததை நான் அறிந்து வைத்திருந்தேன். "கூடுதல் நேரம் வேலை(ஓவர்டைம்) பார்ப்பதற்கு உங்களுக்குக் கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறதா?" என்று கேட்டேன். "இல்லை, என்று அவர் பதிலளித்தார். பிறகு எப்படிச் சமாளிக்கிறீர்கள்?" என்று நான் கேட்டதற்கு, கையூட்டு (லஞ்சம்) என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதன் மூலம்தான்! என்று அவர் கூறினார். சீருடைக்கென்று அவர்களுக்கு 110 ரூபாய் கொடுக்கப்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன். "இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு உள்ளாடைகள்கூட வாங்க முடியாதே. ஒருவரால் சீருடை எப்படி வாங்க முடியும்?" என்று நான் கேட்டபோது, இதே கேள்வியைத்தான் காவலர்களாகிய நாங்கள் எங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறோம், என்று அவர் கூறினார். "இதிலிருந்து விடுதலை கேட்டுத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். பசி, ஏழ்மை, சாதி அமைப்புமுறை போன்றவற்றிலிருந்து விடுதலை வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம், என்று நான் கூறினேன். இதில் எந்தத் தவறும் இல்லையே. இதில் தேசத் துரோகம் எதுவும் இல்லையே, என்று அவர் கூறினார். போலியான செய்திகளை வெளியிடுகின்ற ஆர்எஸ்எஸ் நபர்களிடமிருந்துதான் நாங்கள் விடுதலை கேட்டுக் கொண்டிருக்கிறோம், என்று நான் கூறினேன். நண்பா, நான் உன்னிடம் ஓர் உண்மையைக் கூறட்டுமா? இப்போது நீயும் நானும் ஒரே பக்கத்தில் நின்று கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது, என்று அவர் கூறினார். பிறகு அவர் என்னைப் பார்த்து, முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) உன் பெயர் இருக்கிறதே…" என்று கேட்டார். "எஃப்ஐஆரில் இடம்பெறுவதற்கு முன்பு அது ஏபிவிபியின் அறிக்கையில் இடம் பிடித்து விட்டது. குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் எங்கள் அனைவரின் பெயர்களுமே எஃபஐஆரில் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக அவர்களுடைய அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருந்தன, என்று நான் கூறினேன். நீ இங்கு வந்தவுடன் உன்னை அடித்து நொறுக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் உன்னுடன் பேசிய பிறகு, அடித்து நொறுக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது, என்று அவர் கூறினார். என்னைப் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தக் காவலர் என்னைப் போலவே பிஎச்டி படிப்புப் படிக்க விரும்பினார். படித்தவர்களுக்கும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் அவரால் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர முடியவில்லை. மாறாக, அவர் இன்று காவல் துறைக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். அதிகாரத்தில் உள்ளவர்களே, சமுதாயத்தின் கீழ்மட்ட நிலையைச் சேர்ந்த ஒருவன் பிஎச்டி படிப்புப் படித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் எங்கள் குரலை ஒடுக்க விரும்புகிறீர்கள். அதனால்தான், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை நீங்கள் இழுத்து மூட விரும்புகிறீர்கள். அரசியல் விடுதலை மட்டுமே போதாது என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சமவுடைமை தழைப்பதற்கு சனநாயகம் இன்றியமையாதது, என்று லெனின் கூறியுள்ளார். ஒரு அலுவலக உதவியாளரின் (பியூனின்) மகனும் ஒரு குடியரசுத் தலைவரின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கக்கூடிய நிலை வர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் சனநாயகத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும், சமத்துவத்தைப் பற்றியும், சமவுடைமையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் எங்கள் குரலை ஒடுக்க விரும்புகிறீர்கள். ஏழ்மை, பசி, அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் வரை, தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள், மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை நாங்கள் எங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிடப் போவதில்லை. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலமாகவும் பாராளுமன்றத்தின் வழியாகவும் சட்ட அமைப்பு முறையின் வாயிலாகவும் இந்த விடுதலையும் உரிமைகளும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதுதான் எங்கள் கனவு. இதுதான் அண்ணல் அம்பேத்கரின் கனவு. இதுதான் எங்கள் தோழர் ரோஹித் வெமுலாவின் கனவு. நீங்கள் ஒரு ரோஹித்தைக் கொன்றுவிட்டீர்கள், ஆனால் அதைத் தொடர்ந்து, நீங்கள் எந்த எதிர்ப்பை அடக்கியொடுக்க விரும்பினீர்களோ, அந்த எதிர்ப்பு இப்போது எவ்வளவு பூதாகரமாக வளர்ந்து ஒரு மிகப் பெரிய இயக்கமாக ஆகியிருக்கிறது என்று பாருங்கள். நண்பர்களே, சிறையில் எனக்குக் கிடைத்த இன்னோர் அனுபவத்தைக் கூறுகிறேன். எனக்கு உணவு பரிமாறப்பட்ட இரண்டு கிண்ணங்களில் ஒன்று சிவப்பு நிறம், மற்றொன்று நீல நிறம். ஒரே தட்டில் இவ்விரண்டு கிண்ணங்களையும் நான் கண்டபோது, இந்நாட்டிற்கு விரைவில் ஏதோ நல்ல காரியம் ஒன்று நடைபெறப் போகிறது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நீலக் கிண்ணம் அம்பேத்கரின் இயக்கம் போலவும் சிவப்பு நிறக் கிண்ணம் இடதுசாரி இயக்கம் போலவும் எனக்குத் தோன்றின. இந்நாட்டில் இந்த ஒற்றுமையைக் கொண்டுவர முடிந்தால், நம் நாட்டை விற்கின்றவர்களை நாம் வெளியேற்றி விடலாம். எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொள்ளக் கூடிய ஓர் அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். ‘எல்லோருக்கும் வளர்ச்சி’ என்பதை நாம் உண்மையாக்குவோம். இதுதான் நம்முடைய போராட்டம். மாண்புமிகு தலைமையமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று ஸ்டாலினைப் பற்றியும் குருச்சேவைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டிக்குள் நுழைந்து, அவருடைய சட்டையைப் பிடித்து, மோடி அவர்களே, ஹிட்லரைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன் . . . சரி, ஹிட்லரை விட்டுவிடுங்கள், முசோலினியைப் பற்றியாவது கூறுங்கள். அவருடைய கருப்புத் தொப்பியைத்தானே நீங்கள் (ஆர்எஸ்எஸ்) அணிந்து கொண்டிருக்கிறீர்கள்? இந்தியத்துவத்தின் வரையறையை ஜெர்மானியர் களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று போதித்த உங்களுடைய குரு கோல்வால்கர், முசோலினியைச் சந்திக்கத்தானே சென்றார்?" என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது. நண்பர்களே, இன்று வரை நான் ஒரு விஷயத்தை யாரிடமும் கூறியிருக்கவில்லை. என் குடும்பத்தின் மொத்த வருமானம் மூவாயிரம் ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் என்னால் பிஎச்டி படிக்க முடியுமா? ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகமும் அதற்கு ஆதரவு காட்டிய மக்களும் தாக்கப்பட்ட விதம், நமக்காகக் குரல் கொடுத்த மக்கள் தாக்கப்பட்ட விதம் – இவர்கள் எல்லோருமே தேசத் துரோகிகள் என்று அழைக்கப்பட்டனர். சீதாராம எச்சூரி, ராகுல் காந்தி, டி.ராஜா, கெஜ்ரிவால் ஆகியோர் கூட தேசத் துரோகிகள் என்று அழைக்கப்பட்டனர். நமக்கு ஆதரவு காட்டிய அனைவரும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவமானப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படிச் செய்கின்றவர்கள் எப்படிப்பட்ட தேசியவாதிகள்? பாராளுமன்றத்திற்கு வெளியே, மக்களுடைய நியாயமான கோரிக்கைகளிலிருந்து அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காகப் புதிய புதிய திட்டங்களை அவர்கள் தீட்டுகின்றனர். ரோஹித் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது இங்கு யுஜிசி ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ரோஹித் வெமுலாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பப்பட்ட போது, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் தேசத் துரோகிகளின் கூடாரம் என்று கூறி, இங்கிருக்கும் தேசத் துரோகிகளைப் பாருங்கள்! என்று கூக்குரலிட்டு மக்களின் கவனத்தை அதன் பக்கமாகத் திருப்பினர். ஆனால் இது நீண்டகாலம் இப்படியே செல்லாது. அதிகாரத்தில் உள்ளவர்களே, ஒரே குதிரையை எத்தனை முறை சவுக்கால் அடிப்பீர்கள்? மக்களை முட்டாளாக்கியதன் மூலம் ஒரு முறை 80லிருந்து 180க்கு நீங்கள் சென்றீர்கள். நண்பர்களே, நாட்டைப் பற்றிக் கேட்கப்பட வேண்டிய நியாயமான கேள்விகளைப் பற்றி யாரும் பேசவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்பதற்காக அவர்கள் நம் கண்கள் மீது திரைபோட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பத்திரிகையான ‘ஆர்கனைசர், ’ நம் பல்கலைக் கழகத்தைப் பற்றி ஒரு ‘தலைப்புக் கட்டுரை’ எழுதியது. சுப்ரமணிய சுவாமியும் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சனநாயகத்தின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நான் பேசிக் கொண்டிருப்பதை என் ஏபிவிபி நண்பர்கள் கேட்டுக் கொண்டிருந்தால், அவர்களிடம் நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். சுப்ரமணிய சுவாமியை எங்களோடு நேருக்கு நேராக ஒரு விவாதத்தில் கலந்து கொள்ள வைக்கும்படி நான் உங்களைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். இப்பல்கலைக்கழகம் நான்கு மாதங்களுக்கு மூடப்பட வேண்டும் என்று அவரால் தர்க்கப்பூர்வமாக நிரூபிக்க முடிந்தால், பிறகு நான் அவரோடு உடன்படுவேன். அப்படி அவரால் நிரூபிக்க முடியவில்லை என்றால், ஏற்கனவே முன்பொரு முறை அவர் செய்திருந்ததைப்போல, இப்போது மீண்டும் அவர் இந்நாட்டைவிட்டு வெளியேறி விடும் படி நான் அவரிடம் கேட்டுக் கொள்வேன். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்கு எவ்வளவு தூரம் திட்டமிடப்பட்டது, எத்தனை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன என்பதைப் பார்க்கும் போது சுவாரசியமாக இருக்கிறது. இப்பல்கலைக் கழகத்திற்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அதே போஸ்டர்களைத் தான் இந்து கிரந்தி சேனாவும், ஏபிவிபி அமைப்பும், ‘முன்னாள் ராணுவ வீரர் களும்’ கூடத் தங்கள் அணிவகுப்பில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைநகரான நாக்பூரில்தான் அனைத்தும் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். இவை எதுவுமே தன்னிச்சையான நிகழ்வுகள் அல்ல. அவர்களுடைய முக்கிய நோக்கம் இதுதான். இந்நாட்டில் ஒலிக்கும் போராட்டக் குரல்களை ஒடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விசயங்களிலிருந்து அவர்களைத் திசை திருப்ப வேண்டும். உமர், அனிர்பன், ஆனந்த், அஷுதோஷ், கன்னையா, மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மற்ற அனைத்து மாணவர்களும் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டி, இப்பல்கலைக்கழகத்தின் நியாயமான குரலை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதிகாரிகளே, இது அவ்வளவு சுலபமாக இருக்காது. உங்களால் எங்கள் போராட்டத்தைத் தரைமட்டமாக்க முடியாது. நீங்கள் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறீர்களோ, எங்கள் இயக்கம் அவ்வளவு பெரிதாக வளரும். நண்பர்களே, இது நீண்டகாலம் நடைபெறப் போகின்ற ஒரு போராட்டம். இப்பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற, இந்நாட்டைக் கூறுபோட நினைக்கின்ற நபர்களுக்கும் இந்நாட்டை ஒட்டு மொத்தமாக அழிவின் விளிம்பிற்குக் கொண்டுவர விரும்புகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராக நாம் ஒன்று சேர வேண்டும், அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். யுஜிசி ஆக்கிரமிப்பும், ரோஹித் வெமுலாவும், அமைதியை விரும்புகின்ற, முற்போக்குச் சிந்தனை கொண்டுள்ள இந்நாட்டின் மக்களான நீங்களும் துவக்கி வைத்துள்ள இப்போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்து வோம், அதில் நாம் வெற்றி பெறுவோம். இப்போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். இப்போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் நான் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி! நம் புரட்சி நீடுழி வாழட்டும்!. – தமிழில்: இளங்கோ"