15 February 2017 6:55 pm
இந்திய நாடாளுமன்றத்தின் கடந்த அமர்வு முற்றிலுமாக முடங்கியிருப்பது இந்திய நாட்டின் சிதைவுத் தன்மையைக் காட்டுகிறது. இத்தகைய இடர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பு நிர்ணய சபையில் தனது இறுதி உரையின்போது, அவர் முன்பே எச்சரித்த தொலைநோக்கான அறிவுரையை நாம் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் தன் கல்வியறிவு மற்றும் மெய்யறிவால் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்காக மட்டும் இங்கே நினைவுகூரத் தக்கவர் அல்ல; இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, தன் முன்மாதிரிகளில் ஒருவராக அம்பேத்கரை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறுவதாலும் அம்பேத்கருக்கு மதிப்பளித்து அவருடைய சொற்களுக்கு தலைமையமைச்சர் தனிக் கவனம் அளித்து செயல்பட வேண்டும். முதல் இடராக விளங்குவது நாடாளுமன்றம் தொடர்பாக அண்ணல் அம்பேத்கரின் மனதில் இருந்த கணிப்பை மெய்யாக்குவதாக அமைந்திருப்பதுதான். ஆங்கிலேயர் ஆட்சிமுறையை எதிர்ப்பதற்கு மகாத்மா காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தவறாக பயன்பட்டு விடக் கூடாது என்பதே அவர் எண்ணம். ஒரு மக்களாட்சி தத்துவம் உடைய நாட்டில் சட்டத்திற்கு கீழ்படியாமை, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் போன்ற அரசமைப்புக்கு முரணான வழிமுறைகளானது அராஜகத்தின் இலக்கணமே அன்றி வேறில்லை" என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணல் அம்பேத்கர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட விதிகளுக்கு கீழ்ப்படியாமலும் கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் போன்றும் எதிரி கும்பலைப் போன்று நடந்து கொள்வதும் நாடாளுமன்றத்தின் மொழிநடையை அராஜகத்தின் இலக்கணமாக மாற்றியிருக்கிறது. இத்தகைய அராஜக பாரம்பரியத்தை உருவாக்கி அவற்றை பராமரிக்கும் குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. பொதுமக்களிடையே நேரடியாக மேடைகளில் பேசும் இந்திய தலைமையமைச்சர் பாராளுமன்றத்திற்கு செல்லாமல் புறக்கணித்து வருவதற்கு காரணம் பொதுமக்கள் அவரை நேரடியாக கேள்விகள் எதுவும் கேட்கமாட்டார்கள் என்பதால்தான். மக்களாட்சியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது தேர்தலாகும். இந்த ஆண்டில் மட்டும் 6 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. ஆனால், இத்தேர்தலில் பங்கேற்கும் குறிப்பிடத்தக்க கட்சிகளின் உரிமை ஓர் ஆண் அல்லது பெண்ணின் கட்டுப்பாட்டில் உள்ளது. உதாரணமாக காங்கிரசு போன்ற சில கட்சிகள் குடும்பத் தலைவனால் நிருவகிக்கப்படும் வணிக நிறுவனத்தைப் போன்று குடும்ப அரசியல் கட்சியாக செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளை மாயாவதி தன் சொந்த உடைமையாகக் கருதுகின்றார். ஆம் ஆத்மி கட்சி ஒரு சாமானிய மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்திற்கு மாறாக அரவிந்த் கெஜ்ரிவால் அதைக் கைப்பற்றி செயல்படுத்தி வருகிறார். உட் கட்டமைப்பு ஜனநாயக மரபைக் (பாரம்பரியத்தை) கொண்டுள்ள பா.ஜ.பா நரேந்திர மோடியால் கைப்பற்றப் பட்டுள்ளது. ஆக, அம்பேத்கரின் மற்றொரு எச்சரிக்கையும் புறக்கணிக்கப் பட்டுள்ளது. அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையானது பக்தி பாரம்பரியமாக இந்தியாவை மாற்றுவதால், குறிப்பாக தனிமனித வழிபாட்டை மையமாகக் கொண்டு கட்சிகள் வழிநடத்தப் படுவதால் சில நேரங்களில் நாடு முழுவதும் ஒற்றை மனிதரின் அதிகாரத்தால் இயக்கப்படும் சூழல் உருவாகிறது என்பதுதான். இதனால் மக்களாட்சி தடம் புரள்கிறது. "மதத்தில் பக்தி என்பது ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான ஒரு பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தனிநாயக வழிபாடு என்பது சர்வாதிகார பயன்பாட்டிற்கும் சீரழிவிற்குமான பாதையே அன்றி வேறில்லை" என அரசமைப்பு நிருணய சபையில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஒருநபர் மேலாதிக்கமே மிகுந்து காணப்படுகிறது. கருத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை; சகிப்புத் தன்மை இல்லை. "கட்சிகளின் கட்டுப்பாடு என்பது அரசமைப்பு நிர்ணய சபை தனிநபருக்கு ஆமாம் சாமி போடும் கூட்டமாக மாற்றி இருக்கலாம். ஆனால் நல்வாய்ப்பாக அங்கே எதிரெழுச்சியும் உண்டாகிறது" என அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். அரசியல் கட்சிகளிடம் அராஜகம் இருக்க வேண்டும் என இங்கே அம்பேத்கர் வலியுறுத்தவில்லை. "நிர்ணயச் சபையில் அரசமைப்பு சட்டத்தினுடைய அனைத்து வரைவுகளையும் சுமுகமான முறையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள உரிமை வழங்கியது" என காங்கிரசு கட்சியின் ஒழுக்கம் குறித்து அவர் இவ்வாறு கூறி தன் நன்றியை தெரிவித்தார். ஆனால் காங்கிரசு கட்சியின் ஒழுக்கமானது தனி மனித புகழ் பாடும் வகையில் ஓர் ஆண் அல்லது பெண்ணின் கட்சியாக காங்கிரசு மாறி வருவதை சுட்டிக்காட்டினார். அரசியலில் சமயக் கோட்பாட்டை உட்புகுத்தி இருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய தோல்வியாகும். இப்போது கூட உத்திர பிரதேசத் தேர்தலில் பா.ச.பா இந்து மத ஓட்டுகளை பெறுவதற்காக முயன்று வரும் வேளையில், ஐக்கிய முஸ்லீம் ஓட்டுகளின் மீது காங்கிரசு மற்றும் பொதுவுடமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது போன்ற மத அரசியலுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "தங்களின் மதத்திற்கு மேலே தேசம் இருக்க வேண்டுமா? அல்லது தேசத்திற்கு மேலே மதக் கோட்பாடுகள் அமைய வேண்டுமா?" என அம்பேத்கர் கவலையுடன் கேட்கிறார். மேலும் அவர், இதனுடைய ஆபத்து எனக்கு தெரியாது. ஆனால் இது மிகையானால் கட்சிகள் தேசத்தின் மீது மதத்தை திணித்தார்கள் எனில், நிச்சயமாக நம் நாட்டின் சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்துக்குள்ளாகுவதுடன் நாம் நிரந்தரமாக இழக்க நேரிடும். நாட்டிற்கே முதலிடம் தர வேண்டும் என நாட்டுப்பற்றின் மீது மிகைப்படியான சொல்வன்மையை செலுத்தும் தற்போதைய அரசாங்கம், வாக்குகளைப் பெறுவதற்கு மதக் கோட்பாடுகளை (சமயத்தை) பயன்படுத்துகிறது என்பது மிகப்பெரிய முரண்பாடு, ஒழுங்கின்மை ஆகும். மீண்டும் ஒருமுறை இந்த ஆண்டும் அரசியல்வாதிகளால் சாதிய அடிப்படையில் வாக்குகளைப் பெற இந்தியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 70 ஆண்டுகளாக மக்களாட்சி முறைமையில் ஆட்சி நடைபெறுகின்ற போதிலும் வாக்கெடுப்பியலின் படி, சமத்துவமற்ற நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் சாதிய வாக்குகளின் கணக்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மக்களாட்சி தத்துவமற்ற இப்போக்கே இந்தியத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. "சாதியம் சமுகத்தில் பிரிவினையை கொண்டு வருவதுடன், சாதிகளிடையே பொறாமையும் பகையையும் உருவாக்குகிறது. நாம் ஓர் உண்மையான தேசத்தை உருவாக்க விரும்பினால், இத்தகைய அனைத்து விதமான சிக்கல்களிலிருந்தும் நாம் மீண்டுவர வேண்டும்" என அம்பேத்கர் சுட்டிக் காட்டுகின்றார். அரசமைப்பு நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் எச்சரிக்கைகளை நாம் அலட்சியம் செய்தால் அங்கே "மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு" எனும் மக்களாட்சி தத்துவத்தை இந்தியர்கள் இழக்கும் அபாயம் உண்டாகும். இதுவரை இவை நடைபெறவில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து சாதி, மத, கல்வி பயின்றவர்கள், ஏழை, பணக்காரன், ஆண், பெண் என பெரும் எண்ணிகையில் வாக்களித்துள்ளனர். அரசு மாற்றங்களை, அதிகார இடமாற்றங்களை அமைதியாக கொடுத்திருக்கிறார்கள். காலனித்துவத்திற்கு பிந்தை பெருவாரியான குடியரசு ஆட்சியின் வரலாறு இத்தகைய மகத்தான சாதனைகளை காட்டுகிறது. இந்த நிலையை எட்டுவதற்கு பல நூற்றாண்டுகளை கடந்திருக்கிறோம். ஆனால் அவை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதன் பொருள் அம்பேத்கரின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்துவதுதானே?(இந்துஸ்தான் டைம்ஸ், 08.01.2017)(தமிழில்: வெற்றிச்செல்வன்)"