உழந்தும் உழவே தலை - தமிழ் இலெமுரியா

26 March 2017 12:07 pm

உலகின் தொன்மையான நாகரிகத்தை உடையவர்கள் நாம்! காட்டுமிராண்டியாக காடுகளில் அலைந்து திரிந்த மனிதனை நாகரிகமாக்கியது உழவு. அதனால்தான், உழந்தும் உழவே தலை" என்று கொண்டாடுகிறது திருக்குறள். மண்ணை தாயின் மடியாக வணங்குகிற பண்பாடு நம்முடையது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தின் அடிப்படையே நம் வாழ்வின் அடையாளம்!உழைப்புக்குரிய இலாபம் கிடைத்தால் போதும் என்று நாம் நினைத்தவரை நமக்கு கேடு இல்லை. உழைப்பை மீறிய லாபத்துக்கு நாம் அடிமையாக்கப்பட்ட போது, ஆரம்பித்தது சிக்கல். தாய்ப்பாலும் பவுடர் பாலும் ஒன்றாகுமா?அதுதான் இயற்கை முறை விவசாயத்துக்கும்,  முறை செயற்கை முறை விவசாயத்துக்கும் உள்ள வேறுபாடு தமிழர்களே! திராட்சை, முட்டைகோஸ், காலிஃபளவர், பீட்ரூட், கேரட், கொண்டைக் கடலை, தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தமல்லி, புதினா, வெற்றிலை என நாம் அன்றாடம் விரும்பி உண்கிற காய்கள், பழங்களின் புத்துணர்ச்சி குறையாமல் இருப்பதற்காக நாம் என்ன செய்கிறோம் தெரியுமா?என்ட்ரின், எக்கோளக்ஸ், சுமதியான், மாலதியான், பாரதியான், பாலிடால், நுவோக்கரான், டெமெக்ரான், டைத்தேன், ஹினோசான், மனோகுரோடோபான், என்டோசல்பான்.. இப்படி வித விதமான நச்சுத்தன்மை உடைய ரசாயனங்களைத் தெளிக்கிறோம். நஞ்சு தெளித்து நஞ்சு வளர்த்து நஞ்சு சுவைத்து வளர்கிறோம். நிலம் நஞ்சாகி, பயிர் நஞ்சாகி, உணவு நஞ்சாகி, உடலே நஞ்சாகி… நெஞ்சம் துடி துடிக்கிறது தமிழர்களே!எடை குறைவாகப் பிறக்கின்ற குழந்தைகள், குழந்தை ஈனும் ஆற்றலில்லாத சிசேரியன் தாய்கள், சின்ன வயதிலேயே மூக்குக் கண்ணாடி அணியும் பிள்ளைகள், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் வைட்டமின் மாத்திரைகளை நம்பி வாழும் மனிதர்கள், மருந்து மாத்திரைகளை உணவாகக் கொள்ளும் முதியவர்கள்… இப்படி நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு நம் மரபான இயற்கை விவசாயத்தை மறந்ததுதான் காரணம்.வெளிநாட்டுப் பூச்சிக்கொல்லி மருந்துகளும், செயற்கை உரங்களும், வாழ்க்கையையே சூறையாடும் வெளிநாட்டு முதலாளிகளையும் எப்போது அடையாளம் காணப் போகிறோம்? அக்கறையுடன் இந்த நவீன முறைகளை மேலை நாடுகள் நம்மைப் போல வளரும் நாடுகளுக்குச் சொல்லித்தருகிறதாம். மூட்டைப் பூச்சிகள் எப்படி ரத்த தானம் செய்யும்? வெளிநாட்டு விதைகளை வாங்கி, அதற்கு நோய் வராமல் இருக்க விதவிதமான ரசாயனங்களைத் தெளிக்கிறோம்.கன்றுக்குப் பாலைத் தராமல், இயந்திரம் வைத்து எப்படிக் கறக்கிறார்களோ, அப்படியே இயற்கையையும், ரசாயனங்களை வைத்துக் கறக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு மடங்கு விதைத்தால் ஐந்து மடங்கு விளைச்சல் தர வெளிநாட்டு விதைகளை வாங்கினோம். இப்போது ஐந்து மடங்கு வறட்சிதான் மிச்சம். குறைந்த உழைப்பில் சத்துக் குறைவான விளைச்சலை பெறச் சொல்லி ஆசைத் தூண்டில் போடுகிறது செயற்கை முறை விவசாயம். எங்கும் எதையும் விதைக்கலாம் என்பதே விசப்பரிட்சையின் தொடக்கம்.களர் நிலத்தின் தன்மைக்கேற்ற களர் சம்பா என்கிற விதை நம்மிடம் இருந்தது. உவர் நிலத்துக்கேற்ற விதை நெல் உவர் சம்பா. வெள்ளம் ஏற்படும் காலங்களைக் கணித்து மடுவு மழுங்கி என்கிற விதை நெல்லை விதைத்தனர் தமிழர்கள். எவ்வளவு வெள்ளம் வந்தாலும், தண்ணீர் மேல் தாமரையைப் போல கதிரின் உயரம் வளர்ந்து கொண்டே போகும். மடுவு மழுங்கி விதையை செயற்கை முறை விவசாயம் விழுங்கி விட்டதால், இன்று வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் அழுகிப் போகின்றன. இல்லையென்றால் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிப் போகின்றன.300 அடி மரங்கள் இருந்த நீலகிரி மலையில் மரங்களை வெட்டி மூன்று அடி உயரத் தேயிலைத் தோட்டங்களை அமைத்து விட்டோம். மேகங்களைத் தடுத்து மழையும், வெயிலுக்கு நிழலும் தந்தன காடுகள். தோட்டங்களில் விளைகிற காபி, பயிரிடத் தேவையான தண்ணீரில் ஐந்தில் ஒரு மடங்கு தண்ணீர் இருந்தால் போதும், சத்துமிக்க தானியங்களை நம்மால் பயிரிட முடியும். ஆனால் ஒரு குவளை (டம்ளர்) தேநீருக்காக, பத்து மடங்கு தண்ணீரைச் செலவழிக்கிறோம். தமிழன் காபி குடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவன் தட்பவெப்ப சூழலுக்குரிய பயிர் காபி இல்லை என்பதுதான்.இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் மூலம் செய்கிற செயற்கை விவசாயத்தைக் கொண்டாடிய ஐரோப்பிய நாடுகள் இப்போது இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாக அலறியடித்துக் கொண்டு திரும்புகின்றன. அந்த நாடுகளில் மக்கள் விழித்துக் கொண்டனர். அங்கு விற்பனையாகாத ரசாயன உரங்களை, மருந்துகளை இன்று நாம் விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறோம்."மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும்போது உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது ஒரு புரட்சியைச் செய்துதானே ஆக வேண்டும்" என்று நாம் பசுமை புரட்சி செய்தோம். நாடு விடுதலை அடைந்து அரை நூற்றாண்டு ஆனபிறகும் பசுமையும் வரவில்லை; புரட்சியும் வரவில்லை. அதனால்தான், இந்தியாவில் இன்னும் மூன்று வேளை உணவு இல்லாதவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் 40 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கிறார்கள்.ஆற்று நீர் பாசனம் மட்டும் போதாது. மழைக்காலங்களில் உபரியாக வருகிற நீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்று 40 ஆயிரம் ஏரிகளை வெட்டினர் நம் முன்னோர். ஏழு கி.மீ. வரையில் நீண்டிருந்த ஏரிகள் இன்று நம் வரைபடத்திலேயே இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சிச் செழித்த வயல்கள் இன்று நீர் இல்லாமல் வாடியிருக்கின்றன. ஏரிப் பாசனத்துக்கான ஏரிகள் தூர்ந்து போய் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி இருக்கின்றன. ஏரியை வெட்ட எவ்வளவு மனித உழைப்பும், பொருளுழைப்பும் தேவைப்பட்டிருக்கும்? எல்லாவற்றையும் தொலைத்து விட்டு, வறுமைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறோம். உழைப்பது நாம்; பயன் யாருக்கோ போய்ச் சேருகிறது. செயற்கை விவசாயத்தை நம்பியதன் பலன் இது.இயற்கை விவசாயம் செய்கிற காலத்தில் பசி என்று வருபவர்களுக்குத் தர நம்மிடம் ஒரு பிடி உணவு இருந்தது. காரணம், நூறு ரூபாய் முதலீடு செய்து இருநூறு ரூபாய் இலாபம் பார்த்தார்கள். இன்று ஆயிரம் ரூபாய்க்கு முதலீடு செய்து ஆயிரத்து நூறு ரூபாய் சம்பாதிக்க வழி சொல்கிறது.உற்பத்தி என்பது வெறும் நெல் மட்டுமல்ல. வைக்கோலும் உற்பத்திப் பொருள்தான். மாட்டுக்குத் தீவனம் அது. மாடு பால் தருகிறது. தானியத்தை விட பால் மதிப்புமிக்கது. அதனால்தான் 300 கிராம் நெல் விளைந்ததால் 700 கிராம் வைக்கோல் வரும்படி உழுதார்கள் நம் முன்னோர்கள். நம் புரட்சி, வைக்கோல் 300 கிராம், தானியம் 700 கிராம் என்று ஆக்கியிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அதே 1, 000 கிராம் அளவுதான் உற்பத்தி. இரசாயன உரங்கள் உற்பத்தியைக் கூட்டிவிடவில்லை. நம் விரல் எடுத்து நம் கண்ணையே குத்துகிற வேலை இது.நெல்லை விட மதிப்புடைய வைக்கோலை பொருளாதாரச் சக்தியாகக் கருதாமல் போனதுதான் நம் இயற்கை வேளாண்மை செயலிழந்து போனதன் மூலவேர். வைக்கோல் இல்லாததால் மாடுகள் பால் சுரப்பது குறைந்து விட்டது. பயனில்லாதவை என்று முத்திரை குத்தப்பட்ட அடிமாடுகளாக நம் செல்வங்கள் சூறையாடப்படுகின்றன. "மாடு" என்ற சொல்லுக்குப் பொருளே "செல்வம்" என்கிறது தமிழ். நாம் எத்தனையெத்தனை செல்வங்களைத் தொலைத்து விட்டோம்?மாடு தருகிற பாலுக்கு இணையான மதிப்புடையது அதன் சாணம். வீட்டுக்குள் நாம் வளர்த்த மாடு, நெல்லோடு விளைந்த வைக்கோலைத் தின்று விட்டு பாலும் தந்து, இலவசமாக இயற்கை உரத்தையும் தந்து, கன்றுகளையும் ஈன்று தந்தது.மாடுகளை பலிபீடங்களுக்கு அனுப்பிவிட்டு நாமும் ரசாயன பலிபீடத்தின் மேல் ஏறிநின்று, எதிரியிடம் கத்தியை கூர் தீட்டித் தந்து நம் கழுத்தையும் நீட்டி விட்டோம். மாடு பூட்டி ஏர் மூலம் உழுவதை விட டிராக்டர் மூலம் உழுவதால் அதிக நன்மை என்கிறார்கள். ஒருமுறை டிராக்டர் மூலம் உழுவதால் அதிக நன்மை என்கிறர்கள். ஒருமுறை டிராக்டர் வாங்கினால் அடுத்த முறை பாதி விலைக்குத்தான் விற்க முடியும். எந்த டிராக்டரும் குட்டி போடாது நண்பர்களே…மனிதர்களைப் போலவே நிலமும் பழக்கத்துக்கு அடிமை. சிலமுறை வெளிநாட்டு விதைகளை விலைக்கு வாங்கி விதைத்து விட்டால் நிலம் அந்த விதைகளுக்குப் பழக்கப்பட்டுவிடும். நம்முடைய விதைகளுக்கு நம் இயற்கை உரங்கள் போதும். அவர்களுடைய விதைகளுக்கு அவர்களின் இரசாயன உரங்கள்தான் தேவைப்படும். விதையில் ஒரு இலாபம், உரத்தில் ஒரு இலாபம் என்று முடிந்தவரை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.வெளிநாட்டவர்களின் நாக்கு ருசிக்காக நாம் நம் தாய்மடி போன்ற விவசாய நிலங்களை கடல் நீருக்கு இரையாக்கி வருகிறோம். நல்ல நீரையும், உப்பு நீரையும் கலந்தால் இறால் செழித்து இனப்பெருக்கம் செய்யும். அதற்கு கடலோர வயல்களில் பள்ளம் பறித்து இறால் வளர்ப்பு மேற்கொண்டோம். கடல் நீர் கொஞ்சம் கொஞ்சமாகவே உள்ளே வந்து நல்ல விவசாய நிலங்களை சூறையாடி விட்டது. இறால் பண்ணை தொழில்நுட்பத்தை நமக்கு சொல்லித் தந்து இங்கிருந்து இறால் வாங்கிச் சாப்பிடுகிற புத்திசாலிகள் ஏன் அவர்கள் நாட்டில் இறால் பண்ணை அமைக்கவில்லை? இந்த கேள்வி நம் மண்டைக்குள் ஏறியிருந்தால் இன்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நல்ல விளைச்சல் நிலங்களை இழந்திருக்க மாட்டோம். மண்ணைத் தொலைப்பது என்பது மக்களைத் தொலைப்பதற்குச் சமம்; வாழ்க்கையைத் தொலைப்பதற்குச் சமம்."விதையில்லாத" (ஷிமீமீபீறீமீss) திராட்சை வேண்டுமென்று கேட்கிறவர்கள், விதை இல்லாமல் ஒரு பொருள் விளைவது ஆரோக்கிமல்ல என்பதை உணர வேண்டும். குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் மலடாகிப் போனால் துடிக்கிற இதயம், நம் பாரம்பரியமான நிலம் மலடாகும் போதும் துடிக்க வேண்டாமா?நம் முன்னோர்களின் இயற்கை அறிவைக் கொண்டாட அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டும். நாம் நம் குழந்தைகள் வயலை வாழ்க்கைக் கல்வியாக, விவசாயத்தை வீட்டுப் பாடமாகப் படிக்க வேண்டும். இப்போது காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் இல்லை. நம்முடைய பிள்ளைகளையோ, கிராமத்தில் வேலை இல்லை என்று கணிப்பொறி நிறுவனங்களுக்கு முன் காத்துக்கிடக்க அனுப்புகிறோம்.இரசாயன உரங்கள், வெளிநாட்டு விதைகள், கால்நடைகளை மறுத்த இயந்திரமயமாக்கல் போன்ற செயற்கை முறை விவசாயத்தை அரசு ஊக்கப்படுத்தக் கூடாது. இதனால், நிலத்தின் உயிரோட்டம் இழப்பு, அதிக செலவு, உணவு நஞ்சாக மாறுதல், நோய் உருவாக்குதல், நிலம் நீர் மாசு, உழவர் தற்கொலை போன்ற கேடுகள் நிகழ்வதோடு விதைகளோடு சேர்ந்து நிலத்தையும் தொலைத்து விடுகிறோம்.இயற்கை வேளாண்மையில் பண முதலீடு குறைவு. நிலவளம் கெடாது. உணவு நஞ்சாகாது. மக்கள் நோயில் விழ மாட்டார்கள். கடன்படாத விவசாயம் நடக்கும். மக்கள், அரசு, விஞ்ஞானிகள் இந்த மூன்று சக்திகளும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.ஆறு மாதம் உழைத்து பிள்ளையைப் போல பார்த்து பார்த்து வளர்த்த தானியத்தை உழவன் பதிமூன்று ரூபாய்க்கு விற்றால், வணிகர்கள் ஒரே நாளில் இருபத்தி ஆறு ரூபாய்க்கு விலை வைத்து இலாபம் பார்க்கிறார்கள். இந்த முறையை மாற்றினால்தான், விவசாயத்துக்கு விடிவு பிறக்கும்.இந்த மாற்றங்களுக்கான முதல் விதையாக ஆளுக்கொரு மரம் நடுவோம். இயற்கையைச் செழிக்க வைக்க இயற்கையிலிருந்தே உரங்களை எடுப்போம். இயற்கை முறையிலான உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!- இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி