16 October 2014 1:02 am
இந்த புவிக்கோளம் ஒரு புறம் பனிப் பகுதிகளாகவும், இன்னொரு புறம் எரிமலைகளாகவும், மற்றொரு புறம் பாலைவனங்களாகவும் மாறுபட்ட நிலப்பரப்புகள், வேறுபட்ட காலநிலைகளைக் கொண்டிருந்தாலும் இவற்றுள் மானுட இனம் உயிர் வாழத் தேவையான அனைத்து காரணிகளையும் உள்ளடக்கிய பகுதிகள் மிக முக்கியமானது. ஆசிய நிலப்பகுதி அதனுள் மிக முக்கியமானது. இந்தியப் பிரதேசத்திற்கு முக்கிய காரணம் திராவிட இன மக்களும் அதன் வழிவந்த தமிழர்களும்தான்.பூமியினுள் விதைக்கப்படுகின்ற விதை எந்த கால நேரத்தில் விதைத்தால் நன்கு வளர்ச்சியடைந்து அதிக மகசூலைத் தரும் என்பதை மட்டுமல்லாமல், பெண்ணின் அண்டத்தில் விழுகின்ற வித்து எந்த கால நேரத்தில் விழுந்தால் ஆரோக்கியமான மானுட இனம் உருவாகும் என்பதையும், அண்டத்தை விட்டு அகிலத்தில் கால் பதித்த அரைமணி நேரத்திற்குள் அந்த மானுட இனத்தின் ஆயுள் எப்படி இருக்கும் என்பதையும் கணித்தவர்கள்தான் நம் முன்னோர்கள். இன்று ஏன் இது சாத்தியமில்லை எனக் கேட்டால் இன்று இயற்கை இயற்கையாகவே இல்லை, செயற்கையாலும் செயற்கை கோள்களாலும் ஆளுமை செய்யப்படுகின்றது.ஆசிய நிலப்பகுதி மனிதவளம் அதிகப்படியாக இருப்பதற்கு இங்குள்ள மானுட இனம் காமவெறி பிடித்தவர்கள் என்று பொருள் அல்ல. மானுட இனம் உயிர்வாழத் தேவையான காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இருப்பதுதான் காரணம். ஒரு நாட்டில் மனிதவளம் அதிகப்படியாக இருப்பது சிக்கல் அல்ல. அந்த மனிதவள ஆற்றல் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதுதான் சிக்கல்.இந்தியாவின் முதன்மையான வளம் இயற்கையும் அதனைச் சார்ந்த விவசாயமும்தான். அதற்காகத்தான் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து விவசாயத்திற்கும், நீர்வள ஆதாரத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த தலைவர்கள் அந்தத் துறையில் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்காது பொருளாதார வளர்ச்சி, உலகமயமாக்கல் என பல கோட்பாடுகளை வரையறுத்து, வேலைவாய்ப்பு என்னும் காரணத்தை முன்னிறுத்தி பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதித்து நலிவடைந்த விவசாயத்தை முற்றிலுமாக முடக்க அடித்தளமிட்டனர் என்பதுதான் உண்மை.விவசாயம் என்பது மனிதனின் உணவுத் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் தொழில் அல்ல. அதனையும் கடந்து மனிதனின் உயிர்வாழும் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கின்ற பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும், அதனைச் சார்ந்த இயற்கை வளத்தையும் அழியா வண்ணம் பாதுகாக்க உதவி புரிகின்றது என்கிற புரிதல் ஏற்பட வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் நம் கண்களுக்கு புலனாகாமல் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று அதன் மூலம் புவிக்கோளத்தை ஆரோக்கியமாகவும் உயிரோட்டமாகவும் இருக்க உதவிபுரிகின்றன. அவ்வாறான பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியதுதான் விவசாயம். விவசாய உற்பத்தி பாதிப்பிற்கு அவ்வாறான செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களே அடிப்படைக் காரணம். அவற்றை முறையாக ஆய்வு செய்து முழுமையான விவசாயம் நடைபெற வழி வகுத்தாலே உற்பத்தியில் தன்னிறைவு பெற முடியும். அதனைத் தவிர்த்து செயற்கையை உள்ளே அனுமதித்தால் இயற்கையின் சுழற்சியில் மாற்றத்தை உருவாக்கி விவசாயத்தை பாதிப்பதோடு மேலும் பல சிக்கல்களுக்கு வழி வகுத்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தனது எச்சத்தின் மூலமாக விவசாயம் என்னும் தொழிலை மானுட இனம் கற்றுக் கொள்ள வழிவகுத்ததே கால்நடைகள் தான். காடுகளிலும், வனங்களிலும் உள்ள பல்வேறு தாவரங்களை உண்டு அவற்றை சத்துமிக்க உரமாக சாணத்தின் மூலமாக கொடுத்ததோடு பல்வேறு சிறு பூச்சி இனங்கள் உருவாகவும் சிறுத் தாவரங்கள் உருவாகவும் வழிவகுத்தன. எனவே தான் விவசாயத்திற்கு கால்நடைகளின் சாணம் மிக முக்கிய உரமாக உள்ளது. ஆனால் இன்று மானுட இனத்தின் உணவுத் தேவைக்காக இவைகளின் அழிவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இவ்வாறான இழப்பு இயற்கையின் சுழற்சியில் பல சிக்கல்களை நம் கண்களுக்கு புலனாகாமலேயே உண்டு பண்ணுகின்றன. கால்நடை வளர்ப்பு முறையாக நடைபெறும் பட்சத்தில் அவைகளின் உணவுத் தேவைக்காக விவசாயிகள் பல்வேறு தாவரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. கால்நடைகளின் உணவு என்பது முழுமையாகத் தாவர வகைகளைச் சார்ந்தது. கால்நடை வளர்ப்பவர்கள் அவைகளின் உணவுத் தேவைக்காக விளை நிலங்களில் வரப்புகளில் ஆமணக்கு, அகத்தி, முருங்கை, வேம்பு, மஞ்சணத்தி போன்ற பல தாவரங்களையும் வளர்ப்பார்கள். இவை கால்நடைகளுக்கு உணவு கிடைக்கச் செய்ததோடு பல்வேறு பூச்சி இனங்கள் உருவாகவும் வழிவகுத்தன. மக்கிய கால்நடைகளின் சாணம் விளைநிலத்திற்கு உரமாக பயன்படுத்தியதால் அதன் மூலமாக பல்வேறு பூச்சி இனங்கள் உருவாகவும் சிறு தாவரங்கள் உருவாகவும் மண்புழு உருவாகவும் மூலக் காரணியாக இருந்தது. இந்த சிறுபூச்சி இனங்களையும், சிறு தாவரங்களையும் உண்டு வாழும் உயிரினங்களும் விளை நிலத்தில் வாழ வழி கிடைத்ததால் அவற்றின் எச்சமும் உரமாக மறைமுகமாக கிடைத்தது.கால்நடை வளர்ப்புக்கு மிக முக்கியத் தேவை நீர்வள ஆதாரம். கால்நடை வளர்ப்பு முறையாக நடைபெறும் பட்சத்தில் நீர்வள ஆதாரங்களான குளம், குட்டைகள், ஏரி போன்றவை முறையாக பயன்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் உயர வழி கிடைக்கின்றது. நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படும் பட்சத்தில் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை உயர்ந்து அவற்றை உணவாக உண்டு வாழும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் எச்சமும் மறைமுக உரமாக கிடைத்தது. கோடை காலத்தில் நீர்வள அமைப்புகளின் மண் விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அவை உற்பத்தியைப் பெருக்க உதவிகரமாக இருந்தன. இவ்வாறாக மறைமுகமாக விவசாயத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கின்ற கால்நடை வளர்ப்பை முறையாக ஊக்குவிக்கப்பட வேண்டும்.நீர்வள ஆதாரத்திற்கு மூலக் காரணமாக இருப்பது மரங்கள்தான். நீர்வள ஆதாரத்திற்கு மட்டுமல்ல சிறு தாவர இனங்கள் வளரவும், பறவை இனங்கள் வாழவும் மூலக் காரணமாக இருப்பதும் மரங்கள்தான். அதுமட்டுமல்ல அவை அனைத்தையும் தீர்மானிக்கின்ற ஆற்றலாக இருக்கின்ற காலநிலைகளையும் தீர்மானிப்பது மரங்கள்தான். இவற்றை அனுபவபூர்வமாக உணர்ந்ததால்தான் தமிழர்களின் வாழ்வியலில் பலவகையான மரங்கள் இன்றளவும் உள்ளன. ஆனால் பல்வேறு காரணங்களால் மரங்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இதுவும் விவசாய உற்பத்தி பாதிப்பிற்கு காரணம். இவற்றிற்கும் முறையாக தீர்வு காணப்பட வேண்டும். வறண்ட காடுகளையும் தனது எச்சத்தின் மூலமாக வளமான வனமாக மாற்றியதில் பறவைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பறவையினங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.இயற்கையின் கால சுழற்சியில் எல்லா பொருள்களும் எல்லா கால நிலைகளிலும் கிடைப்பதில்லை. எனவே கிடைக்கின்ற காலநிலையில் அவற்றை முறையாக பாதுகாப்பது மிக முக்கியம். இது மறைமுக உற்பத்திக்குச் சமமானது. விவசாயத்தை மூலதனமாகக் கொண்ட, மிகப் பெரிய மனிதவளம் கொண்ட இந்திய நாட்டிற்கு அவ்வாறாக சேமிப்பது மிகவும் முக்கியமாகும். நம் நாட்டில் அவ்வாறான பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் இல்லாதது ஒரு கெடு வாய்ப்பாகும்.விவசாயப் பண்ணைகள் இருக்கின்றன. அவை ஆய்வுக் கூடங்களாகவும், கன்று, விதை உற்பத்தி நிலையங்களாகவும் இருக்கின்றன. உற்பத்திப் பண்ணைகளாக இல்லை. அவ்வாறான அமைப்புகள் கூட நகர்புறங்களில்தான் உள்ளன. விளைநிலங்களோ கிராமப் புறங்களில் உள்ளன. எனவே விளைநிலங்களில் நேரடியாக கள ஆய்வு செய்யும் வகையில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய நடமாடும் விவசாய ஆய்வு வாகனங்களையும் விழிப்புணர்வு பரப்புரை வாகனங்களையும் கள ஆய்வு பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்பட வேண்டும். அனைத்து ஆய்வுகளும் இயற்கையோடு சார்ந்ததாக இருத்தல் அவசியம்.இன்று பெரும்பான்மையான மக்களுக்கு உணவு தானியம் எதுவென்றால் அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் இவைகள் தான். அதனையும் கடந்து பல தானியங்கள் இருக்கின்றன என்பதை மட்டுமல்லாது அவற்றை எப்படி உணவாக உட்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.தானிய வகைகளை எளிதாக உண்ணும் பொருள்களாக மாற்ற முறையான ஆய்வுகள் மேற்கொள்ளும் போது தேவைகள் அதிகரித்து உற்பத்திக்கு வழிவகை செய்யும். ஏனென்றால் விவசாய உற்பத்திக்கு மாட்டுச் சாணம் மட்டுமல்ல மனிதக் கழிவுகளும் மிக முக்கியமானது. விளை நிலங்களில் விளைகின்ற சொடக்கு தக்காளி, மிதுக்கங்காய், சுண்டைக்காய், குப்பை கீரைகள், மருத்துவ குணமுள்ள சிறு தாவரங்களின் வித்துகளைக் கடத்துவதில் மனித மலத்திற்கு முக்கிய பங்கு உண்டு.இயற்கை சூழ்நிலையில் மனிதனும் ஓர் விலங்குதான். மனிதனின் உணவுப் பழக்கம் அவனது உடல்நிலையை மட்டும் சார்ந்தது அல்ல; இயற்கை சுழற்சியையும் சார்ந்தது. மனித மலம் என்பது நஞ்சல்ல. மனித மலத்தை உண்டு அழித்த பன்றிகள் நன்றாக உயிர்வாழத்தான் செய்கின்றன. எனவேதான் எல்லா நோய்களுக்கும் இயற்கையான முறையில் தீர்வு கண்டனர். அதனால்தான் குளம், குட்டை, ஏரி போன்ற நீர்வள ஆதாரத்திற்கு அருகில் மலம் கழிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். மழைக்காலத்தில் அவை இயற்கையான முறையில் சுத்தப்படுத்தப்பட்டதோடு நீரில் கலந்து குளம், குட்டைகளில் தங்கி மீண்டும் விளைநிலங்களுக்குச் செல்ல வழி கிடைத்தது.ஆனால் இன்று மனிதனின் உணவுப் பழக்கமும் மருத்துவப் பழக்கமும் மாறி செயற்கை அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால் மனித மலமும் நஞ்சாக மாறி இயற்கையின் சுழற்சியில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 5 நபர்களுக்கு மேல் இருந்தனர். அதனால் விவசாயத் தொழில் நடைபெறத் தேவையான மனிதவளம் கிடைத்தது. ஆனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகின்றோம் எனக் கூறி 25 ஆண்டுகளுக்குள் கிராமங்கள் எல்லாமே மனிதவளமின்றி காலியாகிவிட்டன. ஒட்டுமொத்த தொழில் வளத்தையும் நகர்புறங்களில் குவித்ததால் கொஞ்சமாக இருந்த மனிதவளமும் நகர்புறத்தை நோக்கி படையெடுத்ததால் விவசாயத்தின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது.இயற்கையின் பேரழிவால் ஏற்படும் இழப்புகளை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதே மனிதவளத்தை மீட்டெடுக்க முடியாது. அதே போன்று மனிதவளம் வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். மனிதவளமில்லாத நாடுகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கின்றன. இயற்கை வளமில்லாத நாடுகள் செயற்கையை உருவாக்குவிக்கின்றன. இயற்கை வளம், மனித வள ஆற்றல் ஆகியவை இருந்தும் நாமும் அவற்றை பின்பற்றுவது அறியாமையே! நமது அறியாமையை வளர்ந்த நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வழிமுறைகளை வகுத்து, நமது மனித ஆற்றலையும் அறிவையும் அவர்களின் வளர்ச்சிக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான சிக்கல்களுக்கு முறையான தீர்வு காண வழிமுறைகளை வகுத்து விவசாய உற்பத்தி உயர வழி காண வேண்டும். செயற்கையை உள்ளே புகுத்தி இயற்கை வளத்தை அழிக்கக் கூடாது. இயற்கை என்பது கண்களால் கண்டு ரசிக்கக் கூடிய பொருள் அல்ல, உயிரோட்டமான வாழ்வாதாரத்திற்கான ஆதாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். -ஆர்.கே.பாரதநேசன், சென்னை