வறட்சி - தமிழ் இலெமுரியா

15 May 2016 6:42 pm

‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வானின்று அமையாது ஒழுக்கு’எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கொப்ப, மகாராட்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டின் பருவமழை பொய்த்ததனால் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது இவ்வரலாறு காணாத வறட்சி! ஆம்! மராட்டியத்தில்தான். வந்தாரை வாழவைக்கும் வளமிகு பூமியில்தான்.  இதில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மராத்வாடா, லாத்தூர், சாங்கிலி, தானே, மும்பை மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள பிற புறநகர் பகுதிகள் திகழ்கின்றன. இங்குள்ள மக்கள் பொன் பொருளுக்கோ, ஆடம்பரமான பகட்டு வாழ்க்கைக்கோ அரசை கெஞ்சவில்லை. தாகத்தால் வறண்ட நாவிற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டுத்தான் பெண்கள் குடங்களுடன் வீதியில் இங்கும் அங்கும் நீர்தேடி அலையும் அவலம் அன்றாடம் நடக்கும் தொடர் கதையாக உள்ளது. அதே போல மாநிலத்தின் மற்றொருபுறம் விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்ச இயலாமல் நில வறட்சியால் ஏழை விவசாயிகளின் தற்கொலை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. விவசாயத்திற்காக ஏர் பிடித்த கை இன்று தூக்குக் கயிற்றுடன்… சுற்றிக் கொண்டிருக்கிறது. மராத்வாடா மாவட்டம்  அணைகள்  நிரம்பிய பகுதிதான். இருப்பினும் ஏன் இந்த வறட்சி? மராத்வாடாவில் உள்ள பதினோரு அணைகளில் எட்டு அணைகளில் தண்ணீர் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதாகவும் அணையைத் திறந்தால் தண்ணீர் வெளியேறாது என்றும் மொண்டுதான்  செல்லவேண்டும் என்கிற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆறு எப்போதும் சிறுஓடைபோன்றாகிலும் நீரோடிக் கொண்டு இருக்கும். இப்போது வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கிறது. மாநிலத்தின் நீர்நிலை கடந்த ஆண்டின் கோடைகாலத்தில் பதினோரு விழுக்காடு இருந்ததாகவும் ஆனால் இவ்வாண்டு வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ளதாகவும் அரசு குறிப்பொன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தகைய கடுமையான வறட்சியை கண்டு மராத்திய மக்கள் துவண்டு கொண்டிருக்கும் வேளையில் மாநிலத்தின் சில பகுதிகளில் நடைபெறும் பொறுப்பற்ற செயல்களாலும் சில அமைச்சர்களின் அநாகரிக செயல்களாலும் பொதுமக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.  அமைச்சர் பங்கஜா முண்டே மஞ்சரா ஆற்றின் வறண்ட பகுதியில் நின்றவாறு தன்னை தானே ஒளிப்படம் (செல்பி) எடுத்து அதை சமுக வளைத் தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். இதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மற்றொரு அமைச்சரான ஏக்நாத் கட்சேவும் தமது பங்குக்கு, வறண்ட மாவட்டமான லாத்தூருக்கு வறட்சியை பார்வையிட சென்றபோது அவரின் வானுலங்கு (ஹெலிகாப்டர்) இறங்கிட புதிய தளம் அமைக்க வேண்டி, அதற்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வீணடித்துள்ளனர். இது ஒரு சிறிய கிரமாத்திற்கு ஒரு வாரம் குடிக்க பயன்பட்டிருக்குமே!. அதேபோன்று மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் சம்பந்தப் பட்ட நகராட்சியோ அரசு அதிகாரிகளோ எட்டிக் கூட பார்ப்பதில்லை. தானா மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் குடிநீர் குழாய் ஒன்றில் ஏற்பட்ட சிறு விரிசலின் விளைவாக நீர் பெரிதளவில் வெளியேறி வருகின்றது. சற்றொப்ப ஒரு மாத காலமாகியும் அந்தப் பகுதியிலுள்ள நகராட்சியோ அல்லது அரசு அதிகாரிகளோ துளையை அடைப்பதற்கான சிறு முயற்சியிலும் ஈடுபட வில்லை. அதற்கு மாறாக அவ்விடத்தில் சிறுவர்கள் குளித்து விளையாடும் சகதிக் குட்டையாக மாறியதே மிச்சம். இம்மாவட்டத்தின் மற்றொரு பகுதியான நித்தின் கம்பெனி பகுதியிலும் இதேநிலைதான். அரசோ, நகர்மன்றமோ ஏதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.  இதே போன்று பீவண்டியின் குடிநீர் குழாய் வழித்தடத்தில் பெரிய அளவிலான குழாய்களில் ஓட்டையிட்டு சமூக விரோதிகள் (நீர் மாஃபியாக்கள்) தன்ணீரைத் திருடி கட்டுமானப் பணிகள் நடத்தும் பண முதலைகளிடம் அதிகவிலையில் விற்று வருகின்றனர். இதை முதலில் தடுத்தாக வேண்டும்.  மும்பை வாங்கடே மட்டைப் பந்தாட்ட மைதானத்தில் இதுவரை ஐந்து ஐ.பி.எல் ஆட்டங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பதினோராயிரம் லிட்டர் வீதம் ஐம்பத்தைந்து ஆயிரம் லிட்டர் நீரை வீணடித்துள்ளனர். தற்போது விளையாட்டை வேறு இடத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாகும்.  நாம் இயற்கையை வெல்லவோ மாற்றியமைக்கவோ இயலாது. ஆனால் இவ்வாறு வீணாகும் தண்ணீரை சேமித்தால் மட்டுமே நாம் வறட்சியை சற்றேனும் எதிர்கொள்ள முடியும். இதற்கு அதிகாரிகளும் அமைப்புகளும்  பொதுமக்களும் ஒன்றுசேர்ந்து அரசின் செயல் திட்டங்களுக்கு  துணை நின்று, நம் விவசாய பூமியை காத்திட வேண்டும். -அண்ணா கதிர்வேல், அம்பர்நாத்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி