14 November 2015 9:51 pm
இந்திய இலக்கியச் சிற்பிகள் கு.ப.ராஜகோபாலன்- இரா.மோகன்கு.ப.ரா என்று அன்புடன் அழைக்கப்பட்ட கு.ப.ராஜகோபாலன் மணிக்கொடி காலத்தின் எழுத்தாளராவார். 42-ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்தாலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு திறனாய்வு, வாழ்க்கை வரலாறு என பல்வேறு இலக்கிய வடிவங்களில் தமது படைப்புகளை வெளிப் படுத்தியவர். தமது சிறுகதைகளில் ஆண் – பெண் உறவை நயத்தக்க, நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியவர். கவிதை நடையில் வசனக் கவிதை நடையை தனது பாணியில் எழுதியவர். சிறந்த மொழிப் பெயர்ப்பு நூல் ஆசிரியராகவும் திகழ்ந்தார். ‘சிறிது வெளிச்சம்’ என்கிற நூலில் ‘என்ன அத்தாட்சி’ சிறுகதையில் விலை மகளிர் அவலத்தை சித்தரிக்கும் விதமாக விலை மகளிடம் ராமு என்னும் இளைஞன் அனுதாபம் கொள்ள, அதற்கு அவள் அனுதாபத்திற்கு அத்தாட்சி கேட்பதும் இளைஞன் அவளை திருமணம் செய்வதும் அக்காலத்திலே புரட்சிகரமான கதையாகக் கருதப்பட்டது. அவரின் முற்றுப் பெறாத நாவலில்… நேர்மையும் துணிவும் உள்ளவர்கள் மணமாகும் முன் குடும்பம் நடத்துவது தப்பில்லை. இதனை பழைமைவாதிகளும் ஏற்கும் காலம் வரும் என்கிற முற்போக்கான கருத்தையும் காணமுடிகிறது. கு.ப.ரா தம் கதைகளில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களைப் பற்றியும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட விலை மகளிரையும் கோரிக்கையற்று கிடக்கும் விதவையரைப் பற்றியும் உரிமையோடு வாழ நினைக்கும் பெண்கள், என பெண்களின் நிலைதனையும், ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என அடக்கத்தோடு வாழும் பெண்களையும், நெருக்கடியான நேரங்களில் துணிந்து செயலாற்றும் மனைவியையும் பாத்திரங்களாக (கதை மாந்தர்களாக) படைத்துள்ளார். இப்படி கு.ப.ரா வைப்பற்றி இரா.மோகன் நமக்கு படம் பிடித்து காட்டி விளக்குகிறார். இன்றைய இளைஞர்கள் கு.ப.ராவைப் பற்றி அறிந்துக் கொள்ள அவரின் பன்முக ஆற்றலை தெரிந்துக் கொள்ளவும் இந்நூல் உதவும்.வெளியீடு : சாகித்திய அகாதெமி குணா பில்டிங் 443, அண்ணா சாலை, தேனாம் பேட்டை, சென்னை – 600 018 (பக்கங்கள் : 128 விலை : 50)