17 February 2015 4:47 pm
தி.க.சி. எனும் ஆளுமை- பேராசிரியர் இரா.மோகன், புதுகை மு.தருமராசன்தி.க.சி. அவர்கள் தம்மை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு, யாருக்கும் கட்டுப்படாத இடதுசாரி இலக்கியச் சிகரமாக விளங்கியவர். இளமையிலேயே தாய், தந்தையரை இழந்த அவரை வேறு எந்த துறையிலும் நாட்டம் கொள்ளாமல் தடுத்தவர் மகாகவி பாரதியார். எழுத்தாளர் வல்லிக் கண்ணன், தோழர் ஜீவா, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் நா.வானமாமலை அவரது ஆளுமைத் திறனை வழிக்கோலியவர்கள். தீவிர புத்தக வாசிப்பை தன் அன்னையாரிடம் கற்றுக் கொண்டு அறிவை வளர்த்துக் கொண்ட தி.க.சி. தனி ஒருவராக இருந்து ஓர் இயக்கம் போல் வாழ்ந்து காட்டியவர். சிரித்த முகத்துடன் மரணத்தைத் தழுவிய மா மனிதர். பல படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி. தன் இறுதிக் காலம் வரை சமுகத்தையும் இலக்கியத்தையும் தவிர வேறு எதையும் சிந்திக்காத மாமனிதர். தி.க.சி. படைப்புகள் நூல் வடிவம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் வல்லிக் கண்ணன் ஆவார். சொல்லப் போனால் தன் நூல் வருவதை விட எனது நூல் வெளிவருவதைக் கண்டு பெரிதும் மகிழ்வு கொள்பவர் வல்லிக் கண்ணன் என்று தன் நெஞ்சம் உருக குறிப்பிட்டுள்ளார் தி.க.சி. ஒரு செயல் வீராக திகழ்ந்த தி.க.சி., 90 வயது வரையிலாவது வாழ்வேன் என்று எண்ணியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறப்பை ஏற்றுக் கொண்டார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுறவுகளுக்கு ஒரு பேரிழப்பாகும். நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை எனும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தி.க.சி.யின் புகழ் நிலைத்திருக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 600 017.(பக்கங்கள் : 304 விலை: ரூ.200/-)"