நிழலற்ற பயணம் - தமிழ் இலெமுரியா

15 November 2013 2:01 am

நிழலற்ற பயணம் – ப.இரா.சுபாசு சந்திரன்வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி வாகை சூடுவது என்பது ஒருவன் கடந்து, நடந்து வந்த பாதையை எடுத்துக்காட்டும் மைல் கற்களாகும். நிறைய வெற்றிகளைக் கண்டவன் நிறையத் தூரங்களைக் கடந்து விட்டவனாக இருப்பான். அறிவும் பட்டறிவும் சேரும் போதுதான் புதுமை பூத்துக் குலுங்குகிறது.  சிலர் தோன்றுவதால் சில ஊர்கள் பெருமை பெற்றுவிடும். சில ஊர்கள்-சிலர் தோன்றுவதால் முன்பெற்ற பெருமையோடு மேலும் மேன்மை பெற்றுவிடும். என்னைவிட இன்னும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் கூட மாபெரும் செயல்களைச் செய்து முடித்துள்ளனர். மற்றவர்கள் செய்த செயல்களை விட என்னாலும் செய்து காட்ட முடியும் என்கிற தன்னம்பிக்கை ஒருவனை முன்னேற்றப் பாதையில் வீறுநடைக்கு வித்திடும் என்பதற்கு ‘நிழலற்ற பயணம்‘என்னும் இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயலோ, மழையோ, தென்றலோ எதுவானாலும் அசையாது அமைதியாக இருக்கும் மலைமுகடுவைப் போன்ற மன உறுதியைப்  பெற்றவர்களே செயல்திறனில் வரலாறு படைத்து வருகிறார்கள். சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள், எதிர்ப்புகள் போன்றவற்றைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்பவனை  உலகம் ஒதுக்கித் தள்ளிவிடும்.இவைதான் ஒருவனுடைய திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. நிழலற்ற பயணத்தில் தலித்வாடாவில் இருந்து தலைநகர் வரை பயணித்துக் கொண்டிருக்கும் சுசில் குமார் சிந்தேயின் வாழ்க்கை வரலாறு சுவை மிகுந்ததும் எல்லாரும் அறிந்து கொள்ளக்கூடியதும் ஆகும். சிந்தேயின் பிறப்பு வளர்ப்பு என்பதில் தொடங்கி, அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சுவையான நிகழ்வுகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. வாழும் காலத்திலேயே தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூலாகக் காண்பது என்பது வெகு சிலருக்கே அமையும் அரிய வாய்ப்பாகும். அந்த வகையில் சிந்தேயின் வாழ்க்கை சிறப்புப் பெறுகிறது. ‘எதிர்கொள்ளும் தோல்விகள் ஒவ்வொன்றும் ஒருவரின் ஆளுமைத் திறனை வளர்த்திட படிக்கற்களாக அமைத்திடும் என்று உலகுக்கு உணர்த்திடவே சிந்தே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் துணிந்தேன் என்பதேயன்றி வேறு நோக்கம் ஏதும் இல்லை’ என்று சமுகப் பொறுப்புணர்வோடும் மிகுந்த அக்கறையோடும் ஆற்றல் மிக்க எழுத்தாளரும் நூலாசிரியருமான சுபாசு சந்திரன் தெளிவுபடுத்துகிறார்.    இருபத்தெட்டு நூற்பிரிவுகளோடு (அத்தியாயம்) 454 பக்கங்களில் நூல் அடங்கியுள்ளது. படிக்கும்போது அலுப்போ சலிப்போ இல்லாமல் அடுத்த நூற்பிரிவில் என்ன என்கிற ஆவலைத் தூண்டி விடுவதில் வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர். ஆங்கில மூலம் தமிழுக்குத் தரப்பட்டுள்ளது. நல்ல மொழிநடையோடு வெளிவந்துள்ள ஓர் அருமையான தமிழ்ப்படைப்பு. பயனுள்ள படித்துப் பார்க்கவேண்டிய பாராட்டக்கூடிய படைப்பு.             வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், 41-பி,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை-600098. பேசி:044-26359906,26258410.பக்கங்கள்: 454     விலை: 300.-தென்மாவை தருமு.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி