14 January 2017 4:14 pm
பூத்தது தைத்திங்கள் புது மலராய்; புத்தரிசி, புது மஞ்சள், கொத்தாம் இஞ்சி;தித்திக்கும் கரும்பு, புத்தாடையெனபுத்தாண்டில் எத்திக்கும் எதிரொலிக்கும் இன்பம் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என முத்தான சொத்தான நம் தமிழில் முழங்கிடும் வேளை இது! கருவில் தொடங்கி கல்லறை சென்றடையும் மனித வாழ்வின் நெடும்பயணம்; வாழ்க்கையின் வழித்தடம்; வரலாற்றின் தொடர்ச்சி ஆகியவற்றை அளந்து காட்டும் காலக்கருவியே ஆண்டு முறை ஆகும். அண்டத்தில் ஆங்காங்கே சுழன்று கொண்டிருக்கும்கோள்கள், விண்மீன்கள் வெளிப்படுத்தும் இயற்கை இயல்புகளுக்கொப்ப ஆண்டு, திங்கள், வாரம், நாள், நாழிகை என காலத்தின் வகைகளை வகுத்துக் கொண்டு பகுத்தறிவின் பயனால் மாற்றங்களைக் கண்ட ஓர் விலங்கு மனித விலங்கு மட்டுமே. விடிந்தும் விடியாதது போல் முடிந்து போனது; கடந்து போனது; முதிர்ந்து போனது ஓர் ஆண்டு. மலைகள், கடல்கள், காடுகள், நதிகள், வயல் வெளிகள் என நாடோடிகளாய் வாழ்ந்த மனித இனம் வரலாற்றின் தொடர்ச்சியில் அறிவின் முதிர்ச்சியில் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் நாடு, எல்லை, குமுகம், சட்டம், ஆட்சி என வகைப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. வளர்ந்த நிலையில் பரந்தும் பிரிந்தும் வாழ்கின்ற சூழலில் "குலமும் ஒன்றே குடியும் ஒன்றே; யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; ஒன்றே குலம் ஒருவனே தேவன்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழிலில் வேற்றுமை யான்? எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே; வாடியப் பயிரைக் கண்டு வாடும் என் மனம்; காக்கைக் குருவி எங்கள் சாதி காடும் மலையும் எங்கள் கூட்டம்; புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்; அறம் செய விரும்பு; ஆறுவது சினம்; சிந்தையின் நிறைவே செல்வம்; அன்பின் வழியது உயிர்நிலை; கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு; மானமும்அறிவும் மனிதர்க்கு அழகு’’ என ஒப்பற்ற சொற்கோவைகளை உலகுக்களித்து நம் இனத்தின் அகம் காட்டி செந்தமிழின் முகம் காட்டி நல் எண்ணங்களின் நாற்றாங்காலாய் விளங்கியது தமிழினம் ஆகும். ஆனால் வையமெல்லாம் போற்ற வளமுடன் வனப்புடன் வானளாவ வாழ்ந்து பசும்பொன்னைத் தோண்டி பாருக்கெல்லாம் வழங்கிய நம் இனம் இன்று விசும்பியும் விழி பிதுங்கியும் நிற்பவர்களாய் காட்சியளிக்கின்றனர். பிழைக்கத் தெரிந்த பிறவிகள் இங்கே எப்படியெல்லாமோ பிழைத்துக் கொண்டிருக்க உழைக்கத் தெரிந்த அளவுக்கு உழைப்பிற்கேற்ப தழைக்கத் தெரியாமல் உலகெங்கும் தவித்துக் கொண்டிருக்கும் இனமாக தமிழினம் விளங்குகின்றது. அறம் பாடிய அவ்வையும் அய்யன் திருவள்ளுவரும் அரசியல் அறிஞர்கள். குடிமக்களின் விருப்பத்திற்கிணங்க குடவோலை சீட்டு வைத்து மக்களாட்சி முறையை வகுத்த மதுராந்தகன் என்ற தமிழ் மன்னன் ஒரு அரசியல் சிந்தனையாளன். சனநாயகத்தின் ஊற்றாக விளங்கி புவியோர்க்குப் புதிய சிந்தனையை தாய்ப்பாலாய் ஊற்றி வளர்த்த தமிழினம் தற்போது தன் மொழி, இன, பண்பாட்டுஉரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. "ஒப்பிலாதது ஒருமைப்பாடு"; "ஒருதாய் மக்கள்" என்றெல்லாம் உரக்க ஒலிக்கும் இந்திய நாட்டில்தான் தமிழினம்வேற்று நாட்டவரைப் போல வேம்பாய் வெறுக்கப்படும் வேதனைக்குரிய நிலை. தமிழர் சிலரின் பதவிப்பித்தும் பல்லிளிக்கும் போக்கும் பொருள் மோகமும் நுகர்வுக் கலாச்சாரத்தின் முற்றுகையும் தமிழரின் வேளாண்மையை வேரறுக்கச் செய்து விட்டன. பொருள் மயக்கம் பெருகி குமுகத்தில் வறுமைக்கும் வளமைக்கும் உள்ள இடைவெளியை அகலப்படுத்தி விட்டன. தமிழர்களின் வெற்று உணர்ச்சிகளும் வெறுமைக் கிளர்ச்சிகளும் தமிழ்ப் பகைவர்கள் பலரின் பாதகச் செயல்களுக்கு பல்லக்குத் தூக்குவதாய் அமைந்துள்ளன. சனநாயகப் போர்வையில் வடவர்களின் சாதியும் மதமும் சனாதன வெறியும் கோலோச்சுகின்றன. நாட்டின் இறையாண்மையை அரித்தொழிக்கும் கரையான்களின் எண்ணிக்கை பரந்தும் விரிந்தும் வருகிறது. கெடுமதியாளர்களின் விருப்பங்களுக்கொப்ப மரபுகளை சட்டங்கள் மீறுகின்றன; சட்டங்களை சிலவேளை மரபுகள் மீறுகின்றன. இனியும் விழிப்பில்லையெனில் விடியல் என்பது தமிழினத்திற்கு வெறும் கனவாகவே மாறிவிடும். நம் வரலாற்றுச் சீர்மைகளை வாழ்க்கையின் வடிவங்களாக மாற்ற வேண்டிய தருணம் இது. அநீதிப்போக்கை அகற்ற வேண்டியது அனைவரின் கடமை. சிந்தைத் தெளிவுடன் சிற்றிளங் காளைகள் களத்தில் இறங்க வேண்டிய காலம் இது. தேளின் கொடுக்காய் கொட்டி ஒளிவோரை தெரிந்து கொண்டு செயலாற்ற உறுதி பூணுவோம். இனமும் மொழியும் உடலும் உயிரும் போன்றதாகும். கடந்து போன ஆண்டின் கசடுகளை மறந்து புத்தாண்டில் புதுப்பொலிவுடன் நல்லன விளைந்திட நம்பிக்கைகள் நாற்றாங்கால்களாகட்டும். அழகு தமிழின் அருஞ்சுவை அருந்தி அறிவியல் கண்கொண்டு அறிவாற்றல் பெருக்கி அன்பை விதைப்போம். மனித நேயம் வளர்ப்போம்! உறவுகளை வளர்ப்போம் நம் உரிமைகளையும் காப்போம்! உன் சீரளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!! வாழ்த்துதுமே!!! என வாய்மணக்க முழங்குவோம். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும்தூக்கிச் செயல் திருக்குறள் (471) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefதை – 2048(சனவரி – 017)"