நல்ல விதைகள் செழிக்கட்டும்! - தமிழ் இலெமுரியா

16 June 2016 4:32 pm

ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்த சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவுற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் அ.இ.அ.தி.மு.க ஆட்சியே தொடரும் வண்ணம் முடிவுகள் வெளிவந்துள்ளன. அ.இ.அ.தி.மு.க பல முறை தமிழ் நாட்டை ஆண்ட கட்சியெனினும் கடந்த கால துய்ப்புகளிலிருந்து கற்றுக் கொண்ட பல விடயங்களில் தவறுகள் திருத்தப் பட்டு சனநாயக மரபுகளும் மக்கள் நலம் சார்ந்த தொலை நோக்குப் பார்வையுடனும் செம்மையாக ஆட்சி புரிந்திட எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  முன்னைய தேர்தல்கள் போல அல்லாமல், இம்முறை நிகழ்ந்த தேர்தலில் பலமுனைப் போட்டிகளும் புதிய கொள்கை முறைகளும் தமிழ்த் தேசிய அரசியலும் கூட்டணி ஆட்சித் தத்துவங்களும் கூட்டாட்சி முறைமைகளும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் என பல்வகை வழி போட்டி ஏற்படும் வகையில் பல அணிகள் அமைந்தன. ஊடகங்கள் பல உண்மைக்கு மாறான செய்திகளை யதார்த்தமென முழங்கின. ஆனால் தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று இன்னும் தமிழ்நாட்டில் முகிழ்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. எனினும் தமிழ் நாட்டின் வலிமை மிக்க அரசியல் கட்சிகளாக விளங்கும் தி.மு.க. அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அவரவர் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி சில இருக்கைகள் வித்தியாசத்தில் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க் கட்சியாகவும் வடிவம் பெற்றுள்ளன. கடந்த கால தேர்தல்கள் வரலாற்றிலும் இந்த இரு கட்சிகளின் வெற்றியும் தோல்வியும் அவைகளின் அரசியல் பணியால் அல்லது நயன்மையால் அமைந்தவை அல்ல; மாறாக ஒருவர் மீதுள்ள வெறுப்பு மற்றொருவருக்கு ஆதரவாகவும், பணப்பறிமாற்றம், சாதிய நோக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் ஊழல், நிருவாகத் திறமையின்மை, மதுக் கொடுமை என எல்லாரும் முன்வைத்த காரணிகளுக்கு விடை எதுவும் கிட்டவில்லை. எனவே தற்போதையத் தீர்ப்பின் அளவு கோல் மக்களாட்சி முறைமையில் மகிழ்ச்சியைத் தரத்தக்க ஒன்றாகக் கருதமுடியாது.   தலைமைத் தகுதிகளை வளர்க்காமல் தன்னைத் தானே முன்னிருத்திக் கொள்ளும் சில கட்சிகளுக்கும் தலைமைகளுக்கும் அவர்களுடைய இடம் என்ன என்பதும் தமிழ் நாட்டு மக்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அரசியல் இலக்கோ பொதுநல உணர்வோ இல்லா சில அரசியல் கட்சிகளும் மதவாதம் சாதியவாதம் உணர்ச்சித் தூண்டல் பேசிய சில கட்சிகளும் துடைத்து எரியப் பட்டுள்ளன. ஈழத் தமிழர்களுக்கு இரண்டகம் செய்த காங்கிரசுக் கட்சியும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியவில்லை. இவையனைத்தும் இடர்பாடுகளுக்குள் கிடைத்த ஒரு நன்மை என அறிய முடிகின்றது. இந்த முடிவுகளிலிருந்து அந்தந்த அரசியல் கட்சிகளில் தன்னை ஒரு தலைவராக முன்னிருத்திக் கொள்கின்ற ஒவ்வொரு தலைமையும் உரிய பாடம் பெற்றுத் தன்னைத் திருத்திக் கொள்வதே நாட்டிற்கும் அவர்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பதை உரியோர் உணரவேண்டும்.   இந்திய நாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டின் படி பதிவு செய்யப் பட்டுள்ள வாக்குகளில் எந்தக் கட்சி அதிகமான வாக்குகளைப் பெறுகிறதோ அந்தக்கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரமுடியும். நாட்டின் மக்கள் தொகையில் ஓர் 60 விழுக்காடு மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்று அவர்களில் சிலர் 60-70 விழுக்காடு மக்கள் வாக்களித்து அதில் பெரும்பான்மை பெறும் அரசியல் கட்சி பெறும் வாக்கு உண்மையிலேயே 25-30 விழுக்காடு தான் எனினும் அது பெரும்பான்மை என கணிக்கப் படுவது ஒரு தவறான மக்களாட்சித் தத்துவமாகும். எனினும் அவைதான் நம் நாட்டுத் தேர்தல் நடைமுறையில் உள்ளன. எனவே சில கட்சிகளின் வேட்பாளர்கள் பல இலக்க மக்களின் நம்பிக்கை வாக்குகளைப் பெற்றிருப்பினும் சில பத்துகளில், சில நூறுகளில் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியடைந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க இயலாத நிலை என்பது பல்வேறு தேசிய இனமக்களையும், குமுகாயம், மதம் அடிப்படையில் படிநிலைக் கட்டமைப்புடனும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு குமுகாய அமைப்பில் சரியானது அல்ல என்பது எம் கருத்தாகும். இந்த அரசியல் அமைப்பில் சிறுபான்மையினர், விளிம்பு நிலை மக்கள், வேளாண் குடிமக்கள், தொழிலாளர் என பலர் அரசியல் தளத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படுகிறது.  சமன்பாடில்லா சமுக அமைப்பில் அரசியல் அதிகாரம் நுகர்ச்சி ஈவு ஆகியவை பரவலாக்கப் படுவதற்கு கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கங்கள் இந்தியாவில், குறிப்பாகத் தென்மாநிலங்களில் முன்வைக்கப் பட்ட போதும் கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகள் தங்களின் இருப்பையும் அதிகார வேட்கையினையும் முதன்மையாகக் கொண்டு கொள்கைச் சமரசங்கள் செய்து கொண்டதின் விளைவாக கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி போன்ற நயன்மிகு செயல்பாடுகள் நலிவடைந்துள்ளன. தமிழ் நாட்டு மக்களின் சிந்தனை வளமும் செயல்பாடுகளும் உழைப்பும் இந்தியாவின் பிற மாநில மக்களுடன் ஒப்பிடுகையில் உயர்ந்ததேயெனினும் வட இந்திய கட்சிகளும் வட இந்தியத் தலைவர்களும் தமிழ்நாட்டின் உரிமை உணர்வுகள் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி செயல்படுவது தொடர்ந்து வெளிப்படுகிறது. இதற்குக் காரணம் தமிழ் நாட்டு மக்களிடையே இதுகாறும் ஆழமாகப் புகுத்தப் பட்டிருக்கும் உணர்ச்சி அரசியலும் தனிமனித வழிபாட்டுச் சூழலுமே என்பதை வடவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இது தமிழ் நாட்டின் பின்னடைவுக்கு ஒரு காரணியாகும்.  தமிழ் நாட்டின் ஏற்றமும் தாழ்வும் தன்னைச் சுற்றியே நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கும் தலைமைத்துவப் போக்கில் மாற்றம் பெற வேண்டும். அமைச்சர் பெருமக்களும் நிருவாக அதிகாரம் படைத்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி உறுப்பினர்களும் தம் சுய சிந்தனையை செயல்பாட்டை மக்கள் நலம் சார்ந்து செய்திட உரிமை படைத்தவர்களாக ஏற்றம் பெற வேண்டும். ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் காழ்ப்பு அரசியலையும் தனி மனித வெறுப்புணர்ச்சிகளையும் தவிர்த்து தேர்வு செய்யப் பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பய உணர்வின்றி, தன்னுணர்வோடு சுதந்திரமாக மாநில நலனுக்காகப் பாடுபட உதவி புரிந்திடும் வகையில் வெற்றியினைச் சூடியுள்ள ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் செயல் பட வேண்டும் என்பதே தமிழ் நாட்டு மக்களின் விருப்பும் அரசியல் கட்சிகளின் பொறுப்பும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நச்சு விதைகள் அழியட்டும். நல்ல விதைகள் செழிக்கட்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்  திருக்குறள் (654) – திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor In Chiefஆனி – 2047(சூன் – 2016)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி