மலைப்பாம்பு முன் மகுடி ஊதலாமா? - தமிழ் இலெமுரியா

14 October 2013 5:40 am

2013 செப்டம்பர் திங்களில் நடைபெற்ற அய்க்கிய நாடுகளின் அவை 68 ஆம் பொது சபைக் கூட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த கருத்துகள், அய்.நா. மனித உரிமைக் குழுவின் 24வது கூட்டத்தில் அதன் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசு குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் ஆகிய இரண்டும் உலகத் தமிழர்களாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அய்.நா. பொதுச்சபையின் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பான் கி மூன் இலங்கையில் அய்.நா.வின் செயல்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில் அய்.நா, அமைப்பு ரீதியாகத் தோல்வியைத் தழுவியுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்தவோ, மனித உரிமைகளைக் காக்கவோ தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும், அய்.நா.வின் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை எனவும், அய்.நா.வின் தோல்வியை ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாகவே தந்துள்ளார். இதே போன்று அய்.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்து, தனது வாய்மொழி மூல அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களில் காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை, போர் முடிந்து நான்கு ஆண்டுகள் முற்றுப்பெற்ற பின்னரும் தமிழர் பகுதிகளில் இராணுவமும், காவல் துறையினரும் குவிக்கப்பட்டு, நீதித்துறை முடக்கப்பட்டு, மக்களாட்சி உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் தன் பயணத்தின் போது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனை மையங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதென்று தெரிவித்திருப்பதுடன், குற்றத்தைச் செய்ததாகச் சொல்லப்படும் இராணுவத் துறையே குற்றங்களை விசாரிப்பது என்பது நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை எனவும், இலங்கை அரசு எதிர் வரும் மார்ச் 2014க்கு முன்பாக இருக்கும் ஆறு மாத கால நேரத்தைப் பயன்படுத்தி முறையான விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இதைச் செய்ய தவறுமானால் பன்னாட்டு அமைப்புகளின் மூலம் சுயமான விசாரணைகள் மேற்கொள்வது பன்னாட்டு அமைப்புகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு அய்.நா. அமைப்புகளை கண்ணீருடன் கெஞ்சிய நிலையில் உணர மறுத்த உண்மைகளை தற்போது அய்.நா. ஒப்புக் கொண்டிருப்பது ஒரு ஆறுதலான விடயமாகும்.  உலக நாடுகள் வழிகாட்டுதலுக்கு முதன்மை அமைப்பாக விளங்கும் அய்.நா. பொதுச் சபை மற்றும் அதன் உயரிய அமைப்பான அய்.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த இந்த கருத்துகளை, கருத்து தெரிவித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக இலங்கை அரசு மறுத்து, இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்திருப்பதுடன், வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணி முதலமைச்சர் சொல்வதனால் இலங்கை இராணுவத்தினரை வடக்குப் பகுதியில் இருந்து திரும்பப் பெற முடியாது எனவும் இலங்கை அதிபர் இராசபக்சே குறிப்பிட்டுள்ளார். வன்முறை ஒழிப்புப் போர்" என்ற போர்வையில், உலக நாடுகள் பலவற்றை தந்திரமாக தன் பக்கம் திருப்பி, போர்க் குற்றங்கள் புரிந்து, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவின் தற்போதைய நிலைப்பாடு வியப்பிற்குரியதல்ல. இலங்கை அரசின் இந்தத் துணிச்சலுக்குக் கரணியமாக விளங்குவது அய்.நா.வின் கடந்த கால நேர்மையற்ற நடவடிக்கைகளேயாகும். 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலகட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பது போன்று அறிக்கை வெளியிட்டமை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அய்.நா, கண்காணிப்புக் குழுவினரை இலங்கை அரசு வெளியேற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அய்.நா. மவுனம் காத்த போக்கு, இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை அறிவிக்க மறுத்து தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்த அனுமதித்த நிலை, இனப்படுகொலை நடத்தி முடித்து வெற்றி விழா கொண்டாடிய இலங்கை அரசின் விழாவில் அய்.நா. பொதுச் செயலாளர் பங்கேற்ற அவலம், 2012 ஆம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சி காணொளிகளுக்குப் பின்பும் அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இலங்கை அரசே அதன் அத்துமீறல்களை விசாரித்துக் கொள்ள அனுமதித்த அய்.நா.வின் நேர்மையற்ற செயல்கள் ஆகிய அனைத்தும் இராசபக்சேவின் கயமை எண்ணங்களுக்கு உரமூட்டி உள்ளன. அதன் விளைவே இன்று இலங்கை அரசை துணிச்சலுடன் மறுக்க வைத்துள்ளன என்பது உண்மையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்து வழிகளிலும் உதவி செய்த அமெரிக்கா, இந்தியா போன்ற சில நாடுகள் கூட, உண்மைகள் வெளிவரும் நிலையில், தற்போது தன் மனசாட்சியின் உறுத்துதலினால் தெளிவாகக் கருத்துத் தெரிவிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மவுனம் காத்து வருகின்றன. எதையுமே ஏற்காத, எவரையும் மதிக்காத இலங்கை அதிபரிடம் மீண்டும் மீண்டும் வேண்டுவதும், விளம்புவதும், மலைப்பாம்பின் முன் மகுடி ஊதும் மனிதனின் செயலுக்கு ஒத்ததல்லவா! தூய்மையும், வாய்மையும் இன்றி குருதிக் கொப்பளிக்க, கொடுமையின் உச்சத்தை எட்டி இன அழிப்பு செய்த ஒரு நாட்டில் மனித உரிமை, மக்களாட்சி, அமைதி, பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம் போன்ற கொள்கைகளை முன்னெடுக்கும் பொது நல நாடுகளின் மாநாடு என்பதும், அதற்கு இலங்கை அரசின் இராசபக்சே தலைவராக தேர்வு செய்யப்படுவதும் எந்த வகையான நீதி? அய்.நா.வும், இந்தியாவும் இதுவரை செய்த தவறுகள் போதாதா? தமிழர்களை அடக்கத் துடிக்கும், அழிக்கத் துடிக்கும், ஆதிக்க விலங்குகளிடமிருந்து இனியாவது இந்தியா விலகியிருக்க வேண்டும். இலங்கை அரசின் பொய்மை அறிவிப்புகளும், புனைவு வேடங்களும் உலக நாடுகளுக்குத் தெரிய வந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் இந்தியா நேர்மையுடன் செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காத் திட்டங்கள் என்கிறார்கள், தீர்வுகள் என்கிறார்கள், சட்டங்கள் என்கிறார்கள், ஏட்டிலே மட்டும் எல்லாமே இனிக்கிறது-இளிக்கிறது. தேசம் ஒன்று என்றும், நேசம் நன்று என்றும் சொல்வதோடு சரி, சொல்பவர்கள் எவரிடமும் நேசமும் காணோம், பாசமும் காணோம். மோசமும், நாசமும்தான் இதுகாறும் மிஞ்சியுள்ளன. இந்த நய வஞ்சகத்தினையும், நாணயக் கேட்டினையும் அகற்றினாலொழிய தீர்வை நோக்கிய திசை தெரிவது கடினம். இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவமை மகிழ்ச்சியிற் சோர்வு   (குறள்: 531) கனிவுடன், சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN, Editor in Chiefஐப்பசி – 2044(அக்டோபர் – 2013)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி