16 July 2013 4:09 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இந்திய நாட்டின் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நம் நாட்டில் கடந்த ஆண்டு திசம்பர் மாதம் புது தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்ட நிகழ்வு நம் அனைவரின் கண்களைத் திறந்தது எனவும், அதன் விளைவாக நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபம் எங்களை சிந்திக்க வைத்ததுடன், அதுபோன்ற குற்றங்களைத் தடுக்க இந்தியக் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர நடுவண் அரசு முனைப்புடன் செயல்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனி மனித உரிமைகள் பறிக்கப்படுவதையோ, பாதிக்கப்படுவதையோ பார்த்துக் கொண்டு, மனிதாபிமான நெறிகளைக் கடைப்பிடிக்கின்ற நாம் வாளாவிருக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மனித உரிமைகள் மீறல்களை உள் நாட்டில் மட்டுமன்றி, கடந்த ஆண்டு அமெரிக்க நாட்டில் சீக்கியர்கள் கோவில் தாக்கப்பட்ட போதும், ஆசுத்திரேலியா நாட்டில் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட போதும் மனிதாபிமான உணர்வோடு துரிதமாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆசுத்திரேலியா தலைமையமைச்சரிடமும் தொலைப்பேசி மூலம் நேரடியாகப் பேசி உயிரிழப்பிற்காக ஆழ்ந்த வருத்தத்தையும், வன்முறைக் குறித்த கண்டனத்தையும் தெரிவித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. உலகின் மிகப் பெரிய குடியாட்சி முறைமை நாடாக விளங்கும் இந்தியாவின் தலைமையமைச்சர் என்ற முறையில் அவருடைய சொற்பொழிவும், செயல்பாடுகளும் பாராட்டப் பட வேண்டிய, வரவேற்கத் தக்க ஒன்றாகும்.
எனினும், மேற்கண்ட பரிவும், வேகமும், துரித செயல்பாடுகளும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு மட்டும் இடர்படும் நேரங்களில் கிடைக்கவில்லை என உணரும் போது தான், நம் தலைமையமைச்சரின் சொல்லும், செயலும், உணர்வும், மெய்ப்பாடும் ஆய்வுக்குரியனவாகின்றன. “நாற்புறத்தும் பகைவர் கூட்டம், நடுப்புறத்தில் நம் தமிழ்த்தாய்” எனப் பகர்ந்த புரட்சிப் பாவேந்தரின் வரிகளை நினைவு கூறும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்களும், இலங்கை நாட்டை வாழ்விடமாகக் கொண்ட தமிழர்களும் படும் துன்பங்களும், துயரங்களும் எழுத்தில் வடிக்க இயலாதவை. நூற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், பல்லாயிரக்கணக்கான முதியோர்களும், குழந்தைகளும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் புதைக் கிடங்குகளில் அள்ளி வீசப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் நம் கண் முன்னே நடந்த கோரத் தாண்டவங்கள், இனப் படுகொலைகள். எனினும், தமிழர்களுக்கு எது நேர்ந்தாலும், எது செய்தாலும் ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை என்று எண்ணும் அளவுக்கு இந்திய அரசின் கண்கள் இறுக மூடப்பட்டிருந்த நிலை நீதியாகுமா?
2009 ஆம் ஆண்டு ஈழ மக்களை இலங்கை அரசு இனப்படுகொலைக்கு உள்ளாக்கி உயிரைக் குடித்த போது, காந்தியின் கொள்கை தேசம் கண்டு கொள்ளவில்லையெனினும், செக் குடியரசு, எஸ்டோனியா, சுவிட்சர்லாந்து, போலந்து, இத்தாலி, பெல்ஜியம், யூ.கே, சுவீடன், நெதர்லாந்து, பிரான்சு, டென்மார்க், மெக்ஸிகோ, கனடா உள்ளிட்ட 31 நாடுகள் அய்க்கிய நாட்டு அவையின் மனித உரிமைக் குழுவை அவரசமாகக் கூட்ட வேண்டுகோள் விடுத்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு எதிராக ஓர் தீர்மானம் 25.05.2009 அன்று முன் மொழியப்பட்டது. ஆனால் இந்தியா, அந்தத் தீர்மானத்தைத் தவிர்த்தது மட்டுமன்றி, அதற்கெதிராக இலங்கை அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதாகவும், அவற்றிற்கு உலக நாடுகள் உதவி அளிக்க வேண்டுமெனவும் கூறும் மற்றொரு தீர்மானம் இலங்கை அரசால் முன்மொழியப்பட்ட போது, இந்தியாவின் பகை நாடுகள் என்று சொல்லப்படுகின்ற சீனா, பாகிஸ்தான், கியூபா, பிலிப்பைன்ஸ், எகிப்து, நிகாரகுவா போன்ற நாடுகளுடன் இணைந்து தமிழர் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதரவான ஓர் நிலையை முன்னெடுத்த நிகழ்வு மனித உரிமை போற்றும் நீதியாகுமா?
அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அய்க்கிய நாட்டு அவையில் மார்சுகு தாருசுமன் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கை இலங்கை அரசால் தன்னிச்சையாக அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுமம் (LLRC) என்பது முறை கேடானது, பன்னாட்டுத் தரத்திற்கேற்ப அமையாதது என அறிவித்ததோடு மட்டுமன்றி, இலங்கை மண்ணில் நடைபெற்றப் படுகொலைகளை கண்டறிந்து, 2009 ஆம் ஆண்டு அய்.நா மனித உரிமைக் குழுவில் இலங்கை, சீனா, இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் முன்மொழிந்து நிறைவேற்றியத் தீர்மானம் மறுபரிசீலனை ஆய்வுச் செய்யப்பட வேண்டும் என அறிவுரை வழங்கிய பின்னரும், 2012, 2013 ஆண்டுகளில் இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுமம் (LLRC) என்ற தவறான செயல்பாடுகளுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு நீர்த்துப் போன தீர்மானங்களை வல்லரசுகளின் பக்கம் நின்று போர்க் குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் மறைப்பது மனித உரிமை போற்றும் இந்திய நாட்டின் நீதியாகுமா?
மேற் சொன்னவைகள் மட்டுமன்றி, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை, மனித உரிமை மீறல் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணை, ஈழத் தமிழர்க்கு சம உரிமை என நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் அனைத்தும் நாடாளுமன்றக் கருத்துக் கேட்பின்றி தன்னிச்சையாக நிராகரிக்கும் நடுவணரசின் மனப்போக்கு மக்களாட்சி இறைமையின், முறைமையின் நீதியாகுமா?
குடியாட்சி முறையில் ஆட்சிப் பொறுப்பும், அதிகாரமும், உரிமைகளும் மக்களைச் சார்ந்ததேயொழிய தனிமனிதரின் மன நிலை சார்ந்தது அல்ல. “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் வாக்கை விதியாக, மதியில் ஏற்றி, இந்திய நாட்டின் உணர்வொத்த உறுப்பாக, பொறுப்பாகக் கடமையாற்றும் தமிழர்களின் நிலையைச் சற்று கண் திறந்து பாருங்கள். களங்கமின்றி கடமையாற்றுங்கள் என்பதே மனிதர்களாகக் கனிவோடு நாம் விடுக்கும் வேண்டுகோள்.
பேரரசுகள் நீடித்து நிலைப்பதில்லை. அடிமைத் தனமும், ஏகாதிபத்தியமும் எந்நாளும் தொடர்வதில்லை, விடுதலைக் குரல்களின் வலியும், ஒலியும் வலுவடையும் போது ஒடுக்குபவர்களும், அடக்குபவர்களும் இருந்த இடம் தெரியாமல், வாழ்ந்த சுவடுகள் மறையும் முன்பே ஓடி விடுவார்கள். இது வரலாற்று நியதி! வாழ்வியல் உண்மை!
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்
(குறள்)
கனிவுடன்,
சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்.
(சித்திரை 2013)