16 February 2016 11:06 pm
கல்லாடனார் கல்விக் கழகம் சார்பில் புதுவை ஜெயராம் உணவகத்தில் கல்லாடனின் திருக்குறள் மும்மொழி (தமிழ் – ஆங்கிலம் – பிரெஞ்சு) உரை, ஒரு குறள் ஓர் உரை ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. நீதியரசர் டாக்டர் தாவீ தன்னுசாமி கலைமாமணி கல்லாடனின் நூல்களை வெளியிட்டுத் திருக்குறளின் மாண்பையும் உலக அளவில் அது வழங்கியுள்ள அறநெறியையும் வாழ்க்கை முறையையும் எடுத்துரைத்தார். முன்னதாக கவிச்சித்தர் க.பொ.இளவழுதியின் படத்தை திறந்து வைத்த திருச்சி ப.மணவாளன் கவிச்சித்தரின் படைப்புகள் பற்றியும் அவர்தம் உயரிய பண்புகள் பற்றியும் எடுத்துரைத்தார். புதுச்சேரி அரசு சமுக நலத்துறை இயக்குநர் இரா.மீனாகுமாரி ஆனந்தரங்கப் பிள்ளை அரசினர் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டினார். சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு தெளி தமிழ், தமிழ் இலெமுரியா, தொல் புதையல், தழல், தமிழ் முகில் ஆகிய இதழ்களுக்குத் தியாகி அப்துல் மஜீத் நிதியளித்துப் பாராட்டினார். நிறைவாக, சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் ய.மணிகண்டன் உலக அளவில் திருக்குறள் வகித்து வரும் உயரிய இடத்தைச் சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார். கலைமாமணி நா.இராச செல்வம் விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். ஜாதிருக் கபிலனின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.