11 September 2016 5:07 pm
கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் – செயம்பாள் இணையரின் 80 அகவை முத்து விழா பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் அரங்கு, வேமண்ணா மேடையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இள.முல்லைக்கோ வரவேற்புரை மற்றும் இணைப்புரை நிகழ்த்திட அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவர் முத்துச் செல்வன் முன்னிலையில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. மு.சானகிராமன் – செயம்பாளுக்கு பயனாடையும் சரிகை மாலைகளும் அணிவிக்கப்பட்டது. கழகத் தோழர்களால் இரு சக்கர வாகனம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புமிகு எழுச்சியுரை நிகழ்த்தி மலரை வெளியிட்டுச் சிறப்பித்தார். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் வீரமணி அவர்களுக்கு வீரவாள் கேடயங்கள் வழங்கப்பட்டன. பெரியார் சிலையும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் பாவலர் கி.சு.இளங்கோவன் தலைமையில் கவி மன்றமும் குடும்ப விழா கலை நிகழ்ச்சியும் கழகத் தோழர்களின் வெளிப்பாட்டால் நிகழ்ந்தது. கோழிக்கோடு இராஜிவன் பேபி ஜெபக்குமார் இணைந்து மந்திரமில்லை! எல்லாம் தந்திரமே! எனும் நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா நிறைவுற்றது. நிறைவாக மாநில பொருளாளர் செயக் கிருட்டிணன் நன்றி கூறினார்.