மேலை நாட்டு ஜி.டி.நாயுடு லூதர் பர்பாங் - தமிழ் இலெமுரியா

16 June 2016 6:24 pm

நம் நாட்டின் அறிவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஜி.டி.நாயுடு ஆவார். அவர் அறிவியல் துறையில் கண்டறிந்த மாற்றங்கள், நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். அவரைப் போன்றே வேளாண் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் லூதர் பர்பாங் என்னும் பேரறிஞர் ஆவார். லூதர் பர்பாங்க் செடி கொடிகளில் பல அற்புதங்களைச் செய்ததால் செடிகொடிச் சித்தர்" என்றும் பெயர் பெற்றவர் ஆவார். இவர் புதுவகையான செடி கொடிகளையும் மலர்களையும் பழங்களையும் உண்டாக்கினார். முள் நிறைந்த செடிகளை முள்ளற்ற செடிகளாகச் செய்தார். சுவையற்ற பழங்களைச் சுவையுள்ள பழங்களாக மாற்றி அமைத்தார். மணமில்லாத காட்டு மலர்களை மணமுள்ள மலர்களாக செய்து கொடுத்தார். இன்னும் எத்தனையோ விந்தைகளை செய்து காட்டினார். அவரைப் போல் செடிகொடிகளில் அற்புதம் நிகழ்த்தியவர் எவருமில்லை எனலாம். பர்பாங்க் 1849 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள் அமெரிக்க நாட்டின் லான்காஸ்டர் நகருக்கு அருகிலுள்ள பண்ணைக் காட்டில் பிறந்தார். அவருடைய தந்தையார் சாமுவேல் வால்ட்டன் ஓயாமல் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். அப்பழக்கம் பர்பாங்கிற்கும் வந்தது. இளம் வயதிலேயே டார்வின் என்னும் அறிவியல் அறிஞரின் நூல்களையும் படித்து முடித்து விட்டார். அவருடைய அன்னையார் ஆலிவ்ராஸ் தம் கணவருக்கு மூன்றாவது மனைவியாக வந்தவர். குழந்தை அழுதால் அன்னையார் மலர்களை எடுத்து குழந்தையிடம் கொடுப்பார். உடனே அதன் அழுகை நின்றுவிடும். அக்குழந்தை பொம்மைகளை வைத்து விளையாடாமல்  பூந்தொட்டிகளையும் மலர் கொத்துகளையும் வைத்தே விளையாடியது. அக்குழந்தை தான் பின்னாட்களில் வேளாண் விஞ்ஞானியாகப் போற்றப்பட்ட லூதர் பர்பாங் ஆவார். வீட்டின் பின்புறம் செடி கொடிகள் நிறைந்த குன்றுகள் இருந்தன. எனவே சிறுவனாக இருக்கும் பொழுது அக்குன்றுகளில் ஏறிச் செடிகொடிகளையும் மலர்களையும் ஆராய்ச்சி செய்வார். அவர் பழகி வந்த செடி கொடிகளில் ஒன்றாகவே பர்பாங்க் மாறிவிட்டார். தொடக்கக் கல்வி மட்டுமே பயின்றிருந்த பர்பாங் பாட நூல்கள் மட்டுமன்றி பல்வேறு நூல்களைப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக் கொண்டார். தந்தையார் ஒரு சிறிய பண்ணை வைத்து மரங்களை நடுவது, வளர்ப்பது, அறுப்பது முதலிய தொழில்களைச் செய்து வந்தார். செங்கல் அறுக்கும் வேலையும் மட்பாண்டங்கள் செய்யும் வேலையும் அங்கு நடைபெற்று வந்தன. பர்பாங்க் பன்னிரண்டு வயதிற்குள் அறிவியல் பாடங்களை நன்றாகக் கற்றுத் தேர்ச்சி அடைந்திருந்தார். பள்ளி படிப்பு முடிந்ததும் அவ்வூரிலிருந்த அறிவியல் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்று வந்தார். ஓய்வு நேரங்களில் நூல் நிலையத்திற்குச் சென்று பல நூல்களைப் படித்துக் கொண்டிருப்பார். அவரிடம் புதியது புனையும் ஆற்றல் இயற்கையாகவே அமைந்திருந்தது. அவருடைய கேள்விகளுக்கெல்லாம் தந்தையார் சலிக்காமல் விடை கூறுவார். பர்பாங்க தாமாகவே முயற்சி செய்து முதல் முறையாக ஒரு காற்றாலையும் நீர்ச்சக்கரமும் செய்து முடித்தார். ஓய்வு நேரத்தில் மட்பாண்டங்களில் புதுப்புது வேலைப்பாடுகள் செய்தும் களி மண்ணினால் அருமையான சிலைகள் செய்தும் விந்தைகள் பல நிகழ்த்தினார். இளம் வயதிலேயே எதைக் கண்டாலும் ஏன் எப்படி என்று ஆராய்ச்சி செய்வார். பர்பாங் செடிகொடிகளை நன்றாகக் கூர்ந்து பார்த்து ஆராய்ச்சி செய்து வந்தார். ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்த இவர், முதலில் செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். செடிகளின் வளர்ச்சியை மாற்றிப் புதுவகையான செடிகளை உண்டாக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்தார். படிப்பு முடிந்ததும் ஒர்சட்டர் நகரத்தில் ஒரு பெரிய தொழிற்சாலையில் பணியாற்றினார். அவர் பெற்ற ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. வேலைகளை விரைவாகச் செய்வதற்குப் புதிய இயந்திரம் ஒன்று கண்டு பிடித்தார். அதனால் அவருடைய வருமானம் சற்று உயர்ந்தது. அவரது மனம் இயற்கையின் அழகில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு இயந்திரத்தின் செயற்கை அழகு பிடிக்கவில்லை. அதுவன்றித் தொழிற்சாலையில் ஓயாது உழைத்ததால் அவரது உடல் நலம் குன்றியது. அதனால் தொழிற்சாலையை விட்டு மீண்டும் தோட்ட வேலைக்கே வந்து விட்டார். கலிபோர்னியாவில் தட்பவெப்ப  நிலை சமமாக இருப்பதாகவும் அங்கு ஆண்டு முழுவதும் செடிகள் பயிரிட்டு ஆராய்ச்சிகள் செய்யலாம் என்றும் கேள்விப்பட்டார். உடனே அங்குப் செல்ல வேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் வழிச்செலவிற்குக் கூடக் கையில் பணமில்லை. சிறிது நாட்களுக்குப் பின் நீராவி இயந்திரம் ஒன்று செய்து அதனைப் படகில் இணைத்து நீரில் ஓடும்படி செய்தார். அதற்கு நல்ல விலை ஒன்று உண்டாக்கினார். அதற்குமுன் கோணல் மாணலாகவும் செந்நிறமாகவும் இருந்த கிழங்கை உருண்டையாகவும் வெண்மையாகவும் வளரும்படும் செய்தார். அதற்குப் ‘பர்பாங்க் உருளைக் கிழங்கு’ என்ற பெயர் வந்தது. அதைப் பயிரிடும் உரிமையைக் கிரிகிரி என்ற விற்பனையாளருக்கு இருநூற்று ஐம்பது டாலர்களுக்கு விற்று விட்டார். கையிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு 1875 ஆம் ஆண்டு கலிபோர்னியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். பயணச் சீட்டு வாங்குவதற்குக் கொடுத்தது போக அவரிடம் பத்து டாலர்களும் பத்து உருளைக் கிழங்குகளும் இருந்தன. கலிபோர்னியாவில் சார்ந்த ரோசா என்ற ஊரில் இறங்கி வேலை தேடி அலைந்தார். வேலை ஒன்றும் கிடைக்காததால் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு சிறிய நிலம் கிடைத்தது. அவர் தச்சு வேலை செய்து கொண்டு ஓய்வு நேரங்களில் தோட்ட வேலையும் செய்து வந்தார். செடிகொடிகளை வளர்த்து விற்று வந்தார். அவருடைய வருமானம் ஆண்டு ஒன்றுக்குப் பன்னிரண்டு டாலர்களாக இருந்து படிப்படியாக உயர்ந்து 1880 ஆம் ஆண்டில் 1112 டாலர்களாகி விட்டது. 1887 ஆம் ஆண்டில் அவருடைய பழ மரங்களைப் பதினாறு ஆயிரம் டாலர்களுக்கு விற்றார். உயர்ந்த பழங்களும் மலர்களும் அவருடைய தோட்டத்தில் கிடைக்கும் என்ற பெயர் உலகெங்கும் பரவியது. செபாஸ்ட்டப்போல் என்னும் இடத்தில் ஒரு பண்ணை அமைத்து ஆய்வுகள் நடத்தி வந்தார், கையிலிருந்த பணமெல்லாம் கரைந்து விட்டது. நூறு டாலர்கள் அவசரமாக தேவைப்பட்டது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்நேரத்தில் அவ்வூரிலிருந்த பெரும் பணக்காரர் ஒருவர் அங்கே வந்தார். அவர் யாருக்கும் பண உதவி செய்ய மாட்டார் என்று பர்பாங்கிற்குத் தெரியும். ஆனால் மாறாக, அவர் பர்பாங்கிடம் வந்து அன்பாக பேசினார். "தம்பி, நீ திறமைசாலி என்று எனக்குத் தெரியும். ஓயாமல் உழைக்கிறாய்; ஆனால் பணமில்லாமல் அவதிப்படுகிறாய். பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேள்" என்று கூறினார். இவற்றைக் கேட்ட பர்பாங் மகிழ்ச்சிப் பெருக்கில் "இப்பொழுது நூறு டாலர்கள் எனக்கு கிடைத்தால் அதை பத்து மடங்காகச் செய்து விடுவேன்" என்று உணர்ச்சி பெருகக் கூறினார். "இதோ நூறுக்கு இருநூறாக வைத்துக் கொள். சீட்டும் வேண்டாம் வட்டியும் வேண்டாம். உன்னால் முடிந்த போது பணத்தைக் கொடு" என்று இருநூறு டாலர்களை எடுத்துக் கொடுத்தார். பர்பாங்கிடம் மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பது இதனால் விளங்கும். வித்தைக்காரன் தந்திரத்தினால் கறுப்புத் துணியை வெள்ளைத் துணியாக மாற்றுகிறான். இது போன்று பர்பாங்க் கறுப்புப் பழத்தை வெள்ளைப் பழமாக மாற்றினார். மந்திரவாதி பெட்டியிலிருக்கும் வெள்ளிப் பணம் மறைந்து போகும்படி செய்வது போல பர்பாங்க் பழத்திற்குள் இருக்கும் கொட்டையை மாயமாக மறையும்படி செய்தார். அவர் மந்திரவாதியைப் போல் தந்திரத்தினால் இவ் அற்புதங்களைச் செய்யவில்லை. இடைவிடாத ஆராய்ச்சிகளினால் உண்மையாகவே அவைகளை மாற்றி அமைத்தார். அவர் தமது ஆராய்ச்சியில் பின்வரும் வழிகளைக் கையாண்டார்.1. பூந்தாதுவை ஒரு மலரிலிருந்து எடுத்து மற்றொரு செடியின் மலர்க் கருவில் தூவுவார். ஆயிரக் கணக்கான மலர்களில் இனமாற்றம் செய்து புது வகையான விதைகளை எடுப்பார்.2. விதைகளைப் பொறுக்கி எடுத்து நடுவார்.3. முளைத்து வரும் போது பயனற்றவைகளை நீக்கி விடுவார்.4. நல்ல நாற்றுகளைப் பாத்திகளில் நட்டு வைத்து நாள் தோறும் ஆய்வுகள் நடத்துவார்.5. குறைபாடுடைய செடிகளை ஒவ்வொன்றாக அகற்றி விடுவார்.6. புது வகையான செடிகளில் நல்ல செடிகளைத் தேர்ந்தெடுத்து இனக் கலப்புச் செய்வார்.7. புதிய செடிகளைப் பெரிய மரங்களில் கிளைகளில் ஒட்ட வைத்து அவைகள் வளர்ந்து பலன் கொடுக்கும் போது மீண்டும் சோதனைகள் நடத்துவார்.அவருடைய ஆராய்ச்சி எளிமையானதென்று சொல்லி விடலாம். ஆனால் அதனைச் செய்து முடிப்பது மிகவும் கடினமாகும்.  "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"என்பது குறள். ஒரு புதிய செடியை உருவாக்க அவர் ஊணுறக்கமின்றி இரவு பகலாக உழைப்பார். அவருக்கு ஓய்வு கிடைப்பதே அரிதாக இருந்தது. அவரைக் காண வரும் மக்களுடன் பேசவும் அவருக்கு நேரமில்லை. ஒரு நிமிடம் கூட வீண் பொழுது போக்கமாட்டார். அவர் மிகவும் அன்புடையவர். வன்சொல் வழங்காதவர். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் சிந்தை படைத்தவர். தாமஸ் ஆல்வாய் எடிசன் என்னும் அறிவியல் அறிஞரும் ஃபோர்டு என்னும் தொழிலதிபரும் அவருக்குச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். எடிசனைப் போல் அவர் புதிய பொருள்களை கண்டுபிடித்தார். ஃபோர்டு புதிய மோட்டார் வண்டிகளை உற்பத்தி செய்ததுபோல் பர்பாங்க் ஏராளமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தார். பர்பாங்கின் புகழ் உலகெங்கும் பரவியது. 1903 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தினர் அவருக்கு ஒரு பொற்பதக்கம் அளித்தனர். சிறந்த பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன. 1914 ஆம் ஆண்டில் "பர்பாங்கின் முறைகளும் கண்டுபிடிப்புகளும்" என்ற நூல் வெளியிடப்பட்டது. செயற்கரிய செய்த பெரியார் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். சாந்தரோஸோ தோட்டத்தில் அவர் அருமையாக வளர்த்த மரத்தடியிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1927 ஆம் ஆண்டு நியூயார்க் பகுத்தறிவுக் கழகத்தின் சார்பில் அவரது முதலாண்டு நினைவு விழாக் கொண்டாடப்பட்டது. அவ்வறிவியல் மேதையின் நினைவை நிலைநிறுத்துவதற்கு மரம் நடுவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் மனத்தில் எழுந்த ஒவ்வொரு துடிப்பும் இயற்கையின் பேரழகிலேயே ஈடுபட்டிருந்தால் மரம் நடு விழாக் கொண்டாடியது மிகவும் பொருத்தமாக இருந்தது. – என்.கே.வேலன்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி