24 June 2013 1:49 pm
இந்தியாவில் அதிகம் விளையக் கூடிய வெற்றிலை மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. ஆண்மையைப் பெருக்கும்; சுவாசகாசம் எனும் ஆஸ்துமாவிற்கு வெற்றிலைச் சாறு நல்லது; இதில் உள்ள “டெர்பீன்களும், ஃபினால்களும்” உடலுக்கு வெப்பம் தந்து, ஜீரணத்தைச் சீர்படுத்துவதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும். மேலும் வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மேல் ஒட்டி வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், கடுமையான சுவாசம், இருமல், சளி ஆகியவை குணமாகும். இத்தகைய மருத்துவ குணமுடைய வெற்றிலைகள் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும், அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, இராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெற்றிலைப் பயிறுக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் போட்டுதான் பயிர் விளைவிக்கிறார்கள். கரும் பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் எனவும், இளம் பச்சை நிறத்திலுள்ள வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் எனவும் அழைக்கப் படுகிறது. தமிழர்கள் அனைத்து மங்கல காரியத்திற்கும் வெற்றிலையைப் பயன்படுத்துகிறார்கள்.