17 July 2013 5:53 pm
உடலிலுள்ள கழிப் பொருட்களை வெளியேற்றுவது மற்றும் உடலின் தட்பவெப்ப நிலையைச் சீராக வைத்திருப்பது ஆகியனவற்றை தோலின் வேலைகளாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த இரு வேலைகளைச் செய்வதற்கும் தோலுக்கு அடியில் உள்ள வியர்வைச் சுரப்புகள் பயன்படுகின்றன. நமது உடல் முழுவதும் வெப்பமாக இருந்தால், இரத்தத்திலுள்ள நீரைப் பிரித்து, அவற்றை வியர்வை நாளங்கள் வெளியேறுகின்றன. அப்படி வெளியேறுகிற நீர், நமது கண்களுக்குத் தெரியாமலேயே தோலிலிருந்து ஆவியாகி விடும். அதிகமான வெப்பத்தில், அதிகப் படியாக வெளியேறும் நீர்தான் வியர்வையாக தோலில் தங்கி விடுகிறது. நமது உடல் குளிர்ச்சியாக இருந்தால், உடலிலுள்ள வெப்பம் வெளியேறாமல் தடுப்பதற்காக தோலிலுள்ள வியர்வைத் துவாரங்கள் மூடிக் கொள்கின்றன. தோல், உடலிலுள்ள நீரை வெளியேற்றுமே தவிர, ஒரு போதும் வெளியிலிருந்து நீரை உடலுக்குள் செல்ல அனுமதிக்காது.