18 May 2014 6:58 am
அன்புள்ள முதன்மை ஆசிரியர் குமணராசன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் சஞ்சிகை தமிழ் இலெமுரியாவில் வெளிவரக்கூடியவை உண்மையிலேயே சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன.அத்தகையவற்றை உட்கொள்வதனாலும் இருக்கலாம், ஆசுத்திரேலியா வானொலியில் என் நிகழ்ச்சி சினிமா முதலிய கவர்ச்சி அம்சங்கள் இல்லாமல் தமிழையும் இலக்கியத்தையும் மட்டும் கொண்டிருந்தும் கூட நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே கொள்கையில் பயணிக்கும் தமிழ் இலெமுரியாவின் உள்ளீடுகள் அவ்வப்போது ஆசுத்திரேலியா வானொலியில் ஒலிபரப்பப் படுகின்றன. நான் பெரிதாக எதையும் செய்து விடவில்லை. திறமைகளைக் காணுமிடத்து அவற்றைப் பாராட்டி பரப்புரை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். விரைவில் இந்த நிகழ்ச்சி பிரான்சு தமிழமுதம்" வானொலியிலும் இடம் பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற நல்ல செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்க…..வளர்க…..தொடர்க…..மிளிர்க….. !அன்புடன் சாத்தை.அப்துல் ஜப்பார்தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர்ஆசுத்திரேலியா வானொலி தமிழ் இலெமுரியா சித்திரை இதழின் முதன்மைக் கட்டுரை படித்தேன். அரேபியர்கள் பாலைவனத்தில் வெண்மைப் புரட்சி புரிந்த செய்தி கண்டு வியந்தேன். மேழிச்செல்வம் கோழைபடாது என்று நாம் படித்து மட்டுமே இருக்கிறோம். அதனை அவன் உணர்ந்து பயன்படுத்தி இருக்கிறான். ஆனால் வேளாண் தொழிலோடு இணைந்து மேழிச்செல்வங்களைப் போற்றிப் பாதுகாத்த நாம், அவற்றை இழந்து வருகிறோம். அளப்பரிய அறிவாற்றல் நிறைந்த மனிதவளம் கொண்டுள்ளோம். ஏற்கனவே நம்மிடமுள்ள பால் கூட்டுறவு சங்கங்களை அரசியல் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து அகற்றி உண்மையான கூட்டுறவுச் சங்கங்களாக மாற்றினாலே போதும். உழவே தலை என்ற வள்ளுவரின் வாக்கை மதித்து நடக்க நமது அரசுகளுக்கும் மக்களுக்கும் ஞானம் வர வேண்டும். இந்தியாவில் இதுபோன்று நடக்குமா என்று அய்யப்படத்தேவையில்லை. நம்மாழ்வார் போன்றவர்கள் படித்தவர்களின் பார்வையை கால்நடை வளர்ப்பில், வேளாண் பணியில் திரும்ப வைத்துள்ளனர். நம்பிக்கை கொள்வோம். நாளை உலகை வெற்றி கொள்வோம்.- வீ.க.செல்வக்குமார், சென்னை. "தோல்வியை உறுதி செய்க" ஆசிரிய உரை உணர்வார்ந்த தமிழனுக்கு சூடும் சுரணையும் தருவது மட்டுமல்ல; சரியான சவுக்கடியும் சாட்டையடியும் ஆகும். இற்றைத் தமிழன் பதவி, பணம், பகட்டு, விளம்பரம், புகழ், போலித்தனம், ஆகியவற்றிற்கு அடிமைப் பட்டு மரபு, மானம், மதிப்பு, மாண்பு அனைத்தையும் இழந்து பரிவுக்கும், இழிவுக்கும், ஆட்பட்டுத் தவிப்பவனாகத் தடுமாறுகின்றான். பாம்பைப் பழுதெனநம்பும் இவன் தோல்விகளுக்குத் தூது விடுவபன், வாக்களிக்கவும், வதை படவும், உழைத்திடவும் உதைபடவும் தமிழன் என்பதைத் தலையங்கம் தெளிவாக விளக்கியுள்ளது. இது உலக அரங்கில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையே!- முனைவர் கடவூர் மணிமாறன், பெரியார் நகர், குளித்தலை – 639104 தமிழ் மொழியில் மிகவும் சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் இலெமுரியாவின் ஒவ்வொரு கட்டுரையும் தனிச் சிறப்பு மிக்க ஒன்றாகத் திகழ்கிறது. தலையங்கம் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. அண்டனூர் சுராவின் சிறுகதை யதார்த்த நடையில் எழுதப் பெற்று தம்மிடம் பேசுவது போல் உள்ளது. அதே போன்று ஊர்ப் பெயர்கள், இளைஞர்களின் சாதனை, தமிழ் அறிஞர்கள் என ஒவ்வொன்றும் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளது. வாழ்த்துகள். - ஜே.ஜெபஸ்தியான்கிடப்பூரி, சிவகங்கை மாவட்டம்- 630 559 "பழந்தமிழகத்தை நினைவூட்டும் வகையிலும், தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கும் முயற்சியிலும் "தமிழ் இலெமுரியா" செயல்படுவதுடன் தமிழ் மரபைப் போற்றும் வகையில் மரபுக் கவிதைகளையும் தமிழை வாழ்வியலாக்க வளம் தரும் வகையில் கட்டுரைகளும் வெளியிட்டு வருவது பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ் உலகைப் படைக்கும் தமிழ் இலெமுரியா ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு! தமிழகத்திற்கு தமிழ் வழிக் கல்வியை வளர்க்கும் உணர்வை ஊட்டும் என மகிழ்கிறேன். வாழிய தமிழ் இலெமுரியா.- மருத்துவர் தகடூர்த் தமிழ்க் கதிர், கம்பை நல்லூர், தருமபுரி மாவட்டம்-635202 தமிழ் இலெமுரியாவின் "இதயஒலி"யான தலையங்கம், அடிமைச் சுகத்திலேயே மூழ்கிக் கிடக்கும் தமிழினத்திற்கு ஒரு சூட்டுக் கோல். "பால் சுரக்கும் பாலைவனம்" என்ற கட்டுரை முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முடியாத செயல் ஒன்றும் இல்லை என்பதை நன்கு விளக்குகின்றது. "நதியோர நகரங்கள்" அதையொட்டிய தங்கள் சிந்தனை இற்றைய அரசியல்வாதிகளுக்கு ஓர் கலங்கரை விளக்கம். மகாராட்டிர மாநிலத்தில் பணிபுரியும் தமிழர் பொன்.அன்பழகனாரின் செயல்பாடுகள் தமிழ் நாட்டினரை தலை நிமிர வைக்கின்றது. அறிவியல் ஆய்வுகள், கருத்தைக் கிளரும் கவிதைகள் அத்தனையும் இதழின் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டு. தொடரும் தமிழறிஞர்களின் வரலாறு வளரும் இளைஞர்களுக்கு ஏணிப்படிகள். அயல் மாநிலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் இதழியல் பணியில் தமிழ் இலெமுரியாவிற்கு ஓர் தனியிடம் உண்டு. தங்களின் தமிழ்ப்பணிக்குத் தாய்த் தமிழகத்தின் நன்றியும் பாராட்டுகளும் என்றும் உண்டு.- நெய்வேலி க.தியாகராசன், குடந்தை – 612 501. தமிழ் இலெமுரியா இதழ் கண்டேன். இயற்கையின் அத்தனைக் கூறுகளையும் அசைத்து எழுதிய அறிவுமதியின் ஆக்கம் நல்விதை விதைத்த்து. வியர்வையின் ருசியை இன்னொரு முறை நுகர்ந்தேன். பனையின் பயனை அறியா நிலையில் ஆய்வு அருமை. மீண்டுமொருமுறை அறிந்தேன் தமிழ்ச் சொற்சிறப்பு. அறிவியல், அறவியல், தன்னம்பிக்கை என அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியுள்ள உங்கள் இதழ் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.- கருவை புகழேந்தி, அழகாபுரம், சேலம் மாவட்டம்- 636016 ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் இலெமுரியா வாழ்க; வளர்க!. டாக்டர் பொன். அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்களை வாழ்த்தி வணங்குகின்றேன், இளைஞராயிருந்து மராட்டிய மாநிலத்தில் அவர் புரிந்துள்ள சாதனை எம்மை வியக்கவும் , சிந்திக்கவும் வைக்கின்றது. அன்பழகன் தன் மக்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். "மக்களை ஒன்றுபடுத்தும் ஆயுதமே கலை" கட்டுரை மிக மிக அற்புதமாக தமிழர் பண்பாட்டை நினைவுறும் வகையில் அமைந்திருந்தது. பால் சுரக்கும் பாலைவனம், மொரார்ஜிதேசாயின் நேர்மை, பாவேந்தரின் சீர்மை, செவ்வாய்க் கோள் குறித்த அறிவியல் ஆய்வு, திருமதி நீட்டாவின் தன்னம்பிக்கை, சொர்ணம் அம்மாளின் யதார்த்தமான நேர்முகம், நதியோரத்து நகரங்கள் குறித்தப் பதிவு என அனைத்தும் மிக அற்புதமான உள்ளீடுகள். முனைவர் நாகலட்சுமி டி.கே.எஸ். சகோதரர்களின் பேத்தி என்றறிந்து பெருமகிழ்ச்சி. தமிழறிஞர்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டி. தங்களின் சீரிய முயற்சிகள் அனைத்தும் சிறந்தோங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள். - முனைவர் சரசுவதி ராமநாதன்நுங்கம்பாக்கம்- சென்னை- 600 034 தமிழ் இலெமுரியா ஓர் சிறந்த சமூகச் சீர்திருத்த இதழாகத் திகழ்வது போற்றுதலுக்குரியது. கடந்த இதழில் வெளியான வருமுன் காவாதான் வாழ்க்கை தலையங்கம் அணுமின் உலை குறித்த சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தது. சிறப்பான செய்தியும் சிந்தனையைத் தூண்டும் விதமாக இருந்தது. ஏழாம் ஆண்டில் வீறு நடைபோடும் தமிழ் இலெமுரியாவிற்கு வாழ்த்துகள்.- ஜி.சுப்பையாதிருவனந்தபுரம்- 695036 சித்திரைச் சிறப்பிதழில் வெளியான செய்திகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகளாகும். இதழைப் படித்து முடித்து சற்றொப்ப இருபது நண்பர்களிடம் படித்துப் பயன் பெறுமாறு வேண்டினேன். தங்களின் தளராத இதழியல் பணிக்கு வாழ்த்துகள். நன்றி. - அய்.டி.சம்பந்தன், இலண்டன். ஏழைத் தமிழனின் நெஞ்சக் குமுறலை, அதிகாரத்தால் அடக்கப் பட்ட அடிமைத் தமிழனின் அவலக் குரலை, எத்தர்களிடம் ஏமாந்து நிற்கும் ஏமாளித் தமிழனின் ஏக்கக்குரலைத் தலையங்கக் கட்டுரை எதிரொலித்தது. வாய்கிழியப் பேசும் தமிழ்நாட்டுக் கட்சிகளால் தில்லியைக் கைப்பற்ற முடியாது. தில்லியில் அமரும் தேசியக் கட்சிகள் தமிழரின் நலன்களைக் காக்க முன்வருவதில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகளோ தேசியக் கட்சிகளின் கால்நக்கும் கட்சிகளாகவே இருக்கின்றன. இதில் எந்தக் கட்சியைத் தோல்வியுறச் செய்வது? எதனை வெற்றி பெறச் செய்வது? - பாவலர் கருமலைத் தமிழாழன்.ஓசூர், கிருட்டினகிரி மாவட்டம்- 635109 பெற்ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விட மேலானது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் உலகில் பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழர்கள் தங்கள் தனித்திறத்தால் பல நாடுகளுக்கு வளம் சேர்த்துள்ளனர். கடந்த இதழில் தமிழறிஞர் கி.ஆ.பெ. அவர்களின் "தமிழ் சொற்சிறப்பு" குறித்த கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. தமிழ் இலெமுரியா தமிழுக்கு மேன்மை சேர்க்கின்றது. நன்றி. - என். ரங்கநாதன், திருப்புள்ளையூர், இராமநாதபுரம் – 623532 இந்தியத் திருநாடு புதிய ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யவிருக்கும் காலக்கட்டத்தில் வாக்களர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல சிந்தனையைத்தூண்டும் வகையில் எழுதியிருந்த " சீர் செய்யும் மருந்து" தலையங்கம் மிக அருமை. வியர்வையின் ருசி என்ற பாவலர் அறிவுமதியின் கட்டுரையும் அதன் கருவாக அமைந்த மரம் வளர்ப்போம் கருத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய "கற்பகத் தரு பனை மரம்" என்ற கட்டுரையும் பயனுள்ள பல செய்திகளைத் தந்தன. பனை குறித்த செய்திகள் பெரு வியப்பு அளித்தன. தமிழ் அறிஞர்களின் படமும் அவர்களின் தொண்டும் குறித்த செய்திகளும் இன்றைய இளைஞர்களுக்குக் கட்டாயத் தேவையாகும். தொடரட்டும் தங்கள் சீரிய இதழ் பணி.- அ.கருப்பையாபொன்னமராவதி- புதுக் கோட்டை மாவட்டம்- 622407 இதழின் முகப்பு அட்டை சிறுவர் இதழ் போல இருந்த்து. மேலும் முதல் பக்கம் அவ்வளவு நன்றாக் இல்லை.நோஞ்சான் குழந்தைப்படம்.சிறப்பாகத் தேடியெடுக்க முடியவில்லையா? அரசியல் வாரிசுகளில் இன்னும் எத்தனையோ பேர் தமிழ்கத்தில் உள்ளனரே அவர்கள் படம் இடம் பெறவில்லையே ஏன்? இதழுக்குப் பொதுநிலைப் பண்பு வேண்டும். தமிழ் இன எதிரிகளுக்கு வலுச் சேர்ப்பதுபோல அந்தப்பக்கங்கள் அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது.- மு.தென்னரசு, பெங்களூரு. (பிற ஏடுகளிலிருந்து தேர்வுசெய்து வெளியிடப்படும் உள்ளீடுகளைத் திருத்துவது இதழியல் மரபல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் – ஆசிரியர்) சித்திரைத் திங்கள் இதழில் "தோல்வியை உறுதி செய்யுங்கள்" தலையங்க வரிகள் தாக்கமானவை. வேட்பாளர் தேர்வில் பல கோடிகள் செலவழிக்கத் தகுந்தவரே தகுதியானவர் என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது. தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு தொண்டர்கள் "தினக்கூலிகளாக" கொண்டு வ்ரப்படும் சூழல். களப்பணியிலிருந்து ஆட்சி அதிகாரப் பணிவரை கட்சிக் கொள்கையெல்லாம் புறந்தள்ளி ஆதாயத் தேடலில் அலைபாயும் அவலம். ஆனாலும் அரசியல் கட்சிகளெல்லாம் பேசுவது தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமென்பது. சனநாயகத் தேர்தல் எல்லா நிலைகளிலும் பணநாயமாக மாறிபோன இழி நிலை. சனநாயகத்திற்கான தோல்வியை உறுதி செய்த தேர்தல் என்பதே சரியானது. அட்டைப்படக் கட்டுரை வியக்க வைத்தது. ஆனாலும் இளங்கன்றுகள் கூட தாய்ப்பாலை சுவைக்க முடியாதத் தன்மை ஒரு ஆதங்கத்தை தந்தது. தள்ளாத வயதிலும் தளராத பெண்மணி, சாதனை படைக்கும் தமிழர் பொன்.அன்பழகன் இ.ஆ.ப. நேர்காணல் மிகுந்த பெருமிதம் தந்த்து.- ச.பரமசிவன்மூலைக்கரைப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- 627354 சித்திரை மாத இதழை மனமார நுகர்ந்து மகிழ்ந்து ருசித்து புசித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டேன். டாக்டர் பொன்.அன்பழகன் இ.ஆ.ப நேர்காணல் மாராத்திய மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும், தன் மகனுக்கு சத்திரபதி என பெயர் வைத்ததை சற்று தொலைநோக்குடன் சிந்தனை செய்வோம். சொல்லப்பட்ட விடயங்கள் அருமை! அருமை!! பால் சுரக்கும் பாலைவனம் அறியாத தெரியாத செய்தியைத் தந்த பூ.மாரிமுத்துக்கு முதல் வணக்கம். மேலும் இது போல பாபாசாகிப் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நேர்காணல், பயணப் பதிவு, இளைஞர்களின் சாதனை, தமிழகத்தின் தொன்மை, தென்மாவை தருமுவின் கவிதை நயம், பண்பாடு குறித்து மருதையன் ஆய்வு, ஊர்ப் பெயர்கள் இவை யாவும் இதழுக்கு மெருகூட்டுபவை. மனமார்ந்த வாழ்த்துகள். – காரை.கரு.இரவீந்திரன், பீவண்டி."