17 November 2014 11:58 am
1940 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப் பெற்ற பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தின் பவளவிழா ஆண்டு இவ்வாண்டு அக்டோபர் திங்களில் தொடங்குவதையொட்டி பவளவிழா சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 26.10.2014 ஞாயிற்றுக் கிழமை இ.சக்திவேல் குழுவினரின் மங்கல இசையுடன் விழாத் தொடங்கப் பெற்றது. விழாவிற்கு மும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.கண்ணன் தலைமையேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக டாடா குழுமத்தின் நிருவாக இயக்குனர் ஆர்.கோபால கிருட்டிணன் மற்றும் மகாராட்டிர மாநிலத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் பவளவிழாவையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சங்கப் பவளவிழா சிறப்பு உறை" வெளியிடப்பட்டது. இதனை மும்பை அஞ்சல்துறை மூத்த கண்காணிப்பாளர் திருமதி ரேகா ரிசுவி வெளியிட ஆர். கோபால கிருட்டிணன் மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழ்ச் சங்க வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் ஒளி ஒலி திரையிடப்பட்டது. சங்கத்தின் முன்னாள் தலைவர் என்.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக திருமதி மாலா சங்கர், செல்வி அபிராமி ஆகியோரின் தமிழிசை நிகழ்ச்சி விருந்தாக அமைந்தது. விழாவில் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு, தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மராத்திய மாநில எழுத்தாளர் மன்ற செயலாளர் வதிலை பிரதாபன், மும்பை தி.மு.க தலைவர் கொ.வள்ளுவன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், புலவர் பாலையா, தமிழ் முழக்கம் இறை சா.இராசேந்திரன், நகைச்சுவை மன்ற தலைவர் ஆறுமுகப் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்ச் சங்கச் செயலாளர் மிக்கல் அந்தோணி விழா நிகழ்வுகளை நெறியாள்கை செய்தார்."