அமரா - தமிழ் இலெமுரியா

15 September 2014 5:55 am

மரக்கிளைகளுக்கிடையில் புகுந்து இலைகளை விலக்கிக்கொண்டு, மறைந்து மறைந்து சலசலக்கும் ஓடையை எட்டி எட்டிப் பார்த்து, வெட்கத்தில் மேகங்களுக்கிடையில் தலையை அடிக்கடி புகுத்திக் கொண்டான் சூரியன். மரத்தை கொத்திக்கினு கிடந்த மரக்கொத்தி ஒன்று மரங்கொத்துவதை விட்டுவிட்டு ஓடையையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தது. தண்ணீர் குடிக்க வந்த மான் கூட்டம் ஒன்று தாகத்தை அடக்கிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. எதைப் பத்தியும் கவலைப்படாத கன்னியம்மாவும் அமராவும் பாவாடையை நெஞ்சோடு கட்டிக் கொண்டு முகத்துக்கும் கை கால்களுக்கெல்லாம் மஞ்சள் தேய்த்து நீராடிக் கொண்டிருந்தனர். ஆசை கொண்ட மீன் குஞ்சு ஒன்னு கன்னியம்மாவைக் கடித்துப் பார்த்தது.அய்யோ! என்னடி அது, உன் ஒடம்பு இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் அழகு குறைஞ்சிக்கினே போவுதே. உன் முதுகெல்லாம் இப்படி பசலை கண்டபடி பரவிக் கிடக்குதே என்னடி ஆச்சி" – வருத்தத்துடன் கேட்டாள் அமரா."நான் என்னடி செய்யறது, நீயும் நானும் என்னைக்கு பக்கத்து ஊர் திருவிழாவுக்கு போனோமோ அன்னிக்கே இது வந்துவிட்டது. நான் அவனை அங்குதானே முதன்முதலில் பார்த்தது. பார்த்த உடனேயே இருவரும் மனச பரிமாறிக் கொண்டோம். அதன் பின்னாடி நான்கு ஐந்து வாட்டி என்னைக் காண இங்கேயே வந்திருக்கிறான். உனக்கு முன்னாடிதானே அந்த சந்திப்புகளெல்லாம் நடந்தது"."ஆமான்டி! ஆனா அதுக்கென்ன இப்ப?""இதே ஓடையிலே இந்த பாறை மீதே உட்கார்ந்துக் கொண்டிருந்தோமே. எங்களை விட்டுபுட்டு நீ மரத்துக்குப் பின்னாடி ஒதுங்கியிருந்தியே, அன்றே என்னை முத்தமிட அவன் தொட்டபோதே என் அழகையும் அல்லவா தூண்டில் போட்டுக் கொண்டு போய்விட்டான்"."உன்னோட விருப்பமில்லாமலா அவன் உன்னை தொட்டிருப்பான்?""ஆமான்டி செல்லாத்தா… என்னோட சம்மதத்தோட தான் அவன் என்னை தொட்டான், ஒத்துகிறேன். ஆனா இப்போ தூண்டிலில் பட்ட மீன் போல என் உள்ளம் துடிக்கிறதே. என்னோட ஒடம்பு மட்டும் தான் இங்கு கிடக்குது, உயிர் அவனோட தூண்டிலே போய்விட்டதே"."ச்சரி! இதுக்கு வழிதான் என்ன? காதல் கொண்ட என் உடம்பு அவனால் பசலையால் நிரம்பிடும் போல இருக்கே"."அவன் மீண்டும் வந்தாதான் போகும். நான் அவனை பார்க்காத வரைக்கும் என்னோட அழகும் வராது. என்னோட உயிரும் இராது"."இவ்வளவு பேசறியே.. கண்டிப்பா அவன் உன்ன நினைச்சிட்டிருப்பான்னு நீ நினைக்கிறியா? ஏன்னா… நீ மட்டும் தான் இப்படி பேசறியா அவனும் பேசுவானான்னு தான்"."அமரா! உனக்காக விடறேன். இதையே என்னிடம் வேற யாராவது கேட்டிருந்தா நடக்கிறதே வேற" – கோபமாக ஓடையை விட்டு மேலே வந்தாள் கன்னியம்மா."ஏன்டி இப்படி கோபப்படறே"."இதோ பாரடி… இனிமேல் அப்படி பேசாதே" பேசிக் கொண்டே உடைகளை மாட்டினார்கள். ஏக்கத்துடன் சூரியன் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தான்."என்னப்பத்தி பேசு. ஆனா என்னோட மனசுக்கு பிடிச்சவன பத்தி மட்டும் பேசாதே. நான் ஒன்றும் வேலம்மாவின் மகனப் போல மிகவும் மட்டமான ரெண்டாந்தரமான காதல் செஞ்சிடுல""உன்னோட காதல் தெய்வீகமானதுதான், ஒத்துக்கிறேன். வாடி போகலாம். வந்து ரொம்ப நேரம் ஆகிறது" அங்கிருந்து கிளம்பினார்கள். மான் கூட்டம் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தது. மரங்கொத்தி மறுபடியும் மரம் கொத்த ஆரம்பித்தது."அமரா! என்னோட காதல் வானத்த விட ஒசரமானது. இந்த நிலத்தவிட ரொம்ப ரொம்ப பெரிது. கடலை விட எவ்வளவோ ஆழமானது""நான்தான் நம்புகிறேனடி! எதுக்காக இதெல்லாம் சொல்ற""அப்ப தானடி உனக்கு இன்னும் புரியும்""சரி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கக் கூடாது""ம்……….""உன்ன கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு போன அவன் ஏன் இன்னும் வரல"."வருவான்! நிச்சயம் வருவான். அவனும் என்னைப் போலத்தானே துடிச்சிக்கினு இருக்கனும். எதுனா அவனுக்கு அங்கு முக்கியமான வேலை இருக்கும். இல்லைன்னா என்னைப் பார்க்க வராமல் இருக்க மாட்டானே"."சரி நீ எப்படியோ ஒன்னு நினைச்சிக்கினு உன் உள் மனச தேத்திக்கோ, நான் வரேன்" ஊர் வந்துவிட்டது. அமரா அவளோட வீட்டுக்குப் போனாள். இவள் மனதில் பலப் பல எண்ணங்களை அசைப் போட்டுக் கொண்டே தன்னோட வீட்டை நோக்கி நடந்தாள். அருகில் அசைந்தாடிக் கொண்டிருந்த தென்னை மரத்தை உற்று பார்த்தாள்.என்னத்த அப்படி மொறச்சி மொறச்சி பார்க்கிறாளோ தெரியலேயேன்னு அருகில் இருந்த பனைமரம் உச் கொட்டியது. அவள் பார்த்துக் கொண்டிருந்த தென்னை மரத்தில் புதியதாய் பூ பூத்து அது பாலையிலிருந்து வெடித்திருந்தது. அதன் சுவையை ருசிக்க ஊரிலுள்ள வண்டுகள் எல்லாம் வந்த வண்ணமிருந்தது.இதைப் பார்த்த கன்னியம்மா கண்கலங்கினாள். "என்னைக் காண மனசுக்கு பிடித்த என் காதலன் இன்னும் வரவில்லையே" என மனதுக்குள்ளே வெம்பினாள். வீட்டுக்குப் போனவள் துவைத்து வந்த துணிகளை காயப்போட்டு விட்டு காதலுடன் கொஞ்சிப் பேசிய பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.மாதங்கள் சில உருண்டோடின. முன் பனிக்காலம் வந்துவிட்டது, கொல்லையில் உழுந்து காய்ந்து முற்றியிருந்தது. அது பறவைகளின் கால் போலக் கிடந்தது. அதை மேய மான் கூட்டங்கள் தன்னோட குட்டிகளோடு துள்ளி துள்ளி வந்துக் கொண்டிருந்தது. தன்னோட காதலனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கன்னியம்மா இந்த சம்பவங்களைக் கண்டு வருத்தமானாள். "ஐயோ! அவன் என்னைக் காண வரவில்லையே" எனத் துடித்தாள்; புழுப்போல நெழிந்தாள். துடித்து துடித்து மழையிலே கரைந்த பச்ச மண் பாண்டங்களைப் போல கரைஞ்சிப் போனாள்.வாடைக் காத்து வீசிக் கொண்டிருந்தது. குளிர் இரவு நடுநிசியாகவும் கன்னியம்மா தூக்கம் வரமால் பெரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் கண்களை தழுவவேயில்லை. அப்போது அங்கிருந்து அடிக்கடி மணியோசை கேட்பதைப் போல உணர்ந்தவள் எங்கிருந்து வருகிறதென பார்க்க மெல்ல எழுந்து போய் கதவில் சின்னச்சின்ன ஓட்டை வழியாக பார்த்தாள்.தொழுவத்திலே கட்டியிருந்த பசு மாட்டின் கழுத்திலே கட்டப்பட்ட மணியிலிருந்து ஓசை வருவதைக் கண்டாள். ஈ வந்து துன்புறுத்துவதனால் அடிக்கடி தலையை ஆட்டி ஆட்டி ஈயை ஓட்டிக் கொண்டிருந்தது பசுமாடு. மறுபடியும் போய் படுத்துக் கொண்டவள், என்னோட துன்பத்தை அறிந்து அவன் ஏன் இன்னும் வரலே என ஏங்கித் தவித்துக் கொண்டே கிடந்தாள்.பொழுது மெல்ல மெல்ல விடிந்துக் கொண்டிருந்தது. கடைசி வீட்டு மாரியம்மாவின் கோழி கொக்கரக்கோவென கூவியது. கோழி கூவியதை கேட்டவள் மேலும் வருந்தினாள் "பொழுது விடிஞ்சத கூவக்கூட ஜீவன் இருக்குது, ஆனா விடியாமலிருக்கும் என் மனச அறிய அவன் வரலையே"பொழுது விடிந்து நிறைய நேரம் ஆகியிருந்தது. படுக்கையை விட்டு எழாமல் பாய் மேலவே கிடந்தாள். இவளைத் தேடிக் கொண்டு அமரா வந்தாள்."ஏன்டி! என்னடி ஆச்சி உனக்கு? ஒரு மாதிரியாகவே இப்பெல்லாம் இருக்கிறே" "நான் என்னடி செய்றது; என்னால தூங்க முடியலையே, ராத்திரியெல்லாம் அவனோட நெனப்புதான். செவுத்துல நறுக் நறுக்கென முட்டிக்கலாமான்னு இருக்கு""உனக்கென்னடி பைத்தியமா?""ஆமான்டி! எனக்கு பைத்தியம்தான்; காதல் பைத்தியம். கல்லைத் தூக்கி தலை மேலே மொட் மொட்டென இடிச்சிக்கட்டுமா"."என்னடி ஆச்சி உனக்கு! இப்படியெல்லாம் ஏன்டி பேசறே" கன்னியம்மாவிற்கு ஏதோ ஆயிடுச்சினு அமராவின் மனம் துடித்தது."சரியாகவே தூக்கம் வருவதில்லை. மனசு கண்டபடி அலையுது; நிம்மதியேயில்ல; நெஞ்சு என்னென்னமோ செய்யுது, அழுகைய அடக்கினாலும் விம்மிக்கினு வருதே. ஐயோ, அம்மான்னு கதறிக் கதறி கத்தனும் போலிருக்கே, நான் அப்படி கத்தட்டுமா? இல்ல கதறட்டுமா?""வேண்டான்டி கன்னியம்மா" அமராவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது."இந்த ஊர் நிம்மதியா தூங்குதே! என் துன்பத்த கண்டுகல்லியே, நான் என்ன செய்யறது. அவன் எப்போதான் வருவான்னு தெரியலியே""நான் உனக்கு ஓர் உதவி செய்யட்டுமா கன்னியம்மா""எனக்கு எதுனா நல்லது நடக்குபடி இருந்தா சொல்லுடி" "நான் உன்னோட காதலனைத் தேடி அவனது ஊருக்குப் போய் வரட்டுமாடி""அமரா! அது உன்னால முடியுமா? அவனை நீ கண்டிப்பா போய் பார்க்க முடியுமா?""ஏன் முடியாது! அவன் பூமிக்குள்ள புழுப்போல துளைப் போட்டா போயிருக்க முடியும்? இல்ல வானத்துல பறவையப் போல பறந்தா போயிருப்பான்? எப்படியும் இந்த உலகத்துலதான் அவன் இருந்தாகனும், நான் உனக்காக அவனைத்தேடி போகிறேனே.""அவ்வளவு தூரம் உன்னால எப்படி போக முடியும்? உன் ஆத்தாக்காரி கேட்டா என்ன சொல்லுவ?""பக்கத்து ஊருல என்னோட அத்தை இருக்கிறா. நான் அவள பார்க்கப் போறதா சொல்லிப்புட்டு போய்ட்டு வந்திடறேன்""ஒரே நாளிலே போய் வர முடியுமாடி""அத்த வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் காலையில அந்த ஊருக்குப் போய் அவனைப் பார்த்துட்டு மறுபடியும் அந்த வீட்ல வந்து தங்கிட்டு அடுத்த நாள் இங்கு வந்திடறேன்.""ச்சரி! எனக்காக நீ சீக்கிரம் அவனைத் தேடிப் போடி. எங்க அப்பனும் ஆத்தாலும் சேர்ந்து எனக்கு வேற இடத்துல மாப்பிள்ள பாத்திருக்கிறாங்க. எனக்கு என்னமோ பயமா இருக்குது. அவனை மறந்து என்னால வேற ஒருத்தன நினச்சுக் கூட பார்க்க முடியல. அவன் கிடைக்கலனா நான் உயிர் விடக் கூட கவலைப்பட மாட்டேன்""ஏன்டி அதுக்குள்ள இந்த வார்த்தையெல்லாம், நான் அவனை எப்படியும் பார்த்து கூட்டி வருகிறேன்டி" சொல்லிட்டு அமரா கிளம்பினாள்.இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு நாட்களுமே இரண்டு யுகங்களைப் போல கழிந்தது கன்னியம்மாவுக்கு. காதலனிடமிருந்து வரும் அமராவை எதிர்பார்த்து, எதிர்பார்த்துக் கண்கள் பூத்துக் கிடந்தாள்."போனவள் இன்னும் வரலையே? என்ன செய்வா… அவ இன்னும் என் காதலனைப் பார்த்திருக்க மாட்டாளா? இல்ல அந்த வீட்ல கோழிக் கறி சமைச்சி திண்ணுக்கினு கிடக்கிறாளா" மனம் பரவலாக யோசனை செய்து கொண்டே இருந்தது.சாயங்கால மஞ்சள் வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துக் கொண்டிருந்தாள். தூரத்து ஒத்தையடிப் பாதையில் அமரா நடந்து வந்துக் கொண்டிருப்பதைக் கண்ட கன்னியம்மா ஆவலில் அவளை நோக்கி மூச்சு வாங்க ஓடினாள்."அமரா… அமரா நீ அவன பார்த்தியா? அவன் நல்லா இருக்கிறானா""ம்……""வேற இடத்துல எனக்கு மாப்பிள்ள பார்த்திருக்கும் விசயத்த சொன்னியாடி?"அமைதியாக இருந்த அமராவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த கன்னியம்மாவின் நெஞ்சம் படபடத்தது."அமரா! ஏன்டி அழுகிறே? என்னடியாச்சி""அவனுக்கு இன்னும் ஒரு வாரத்துல வேற ஒருத்தியுடன் கல்யாணம் நடக்கப் போவுதுடி" கண்ணீரை தவணியால் துடைத்துக் கொண்டே சொன்னாள்."நெசமாகவாடி நீ சொல்ற" கன்னியம்மாவின் நெஞ்சமே வெடித்து விடுவதைப் போல இருந்தது."ஆமா. உன்ன ஏமாற்றி விட்டான்""நான் அவனுக்காக அவனையே நினைத்து நினைத்து ஏங்கிக் கிடப்பத நீ சொன்னியாடி""நான் எவ்வளவோ அவங்கிட்ட கெஞ்சிப் பார்த்திட்டேன். உனக்காக அவனோட காலில் கூட விழுந்துப் பார்த்துட்டேன். உன்னை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிபுட்டான்.""என்ன காரணமுன்னாவது சொன்னானா?""அவள் உன்னை விட அழகில் கொஞ்சம் கம்மிதான். ஆனா உன்னை விட அவ வசதியானவளாம். அவளை கட்டிக்கிட்டா அவளோட அப்பனின் சொத்து பூராவும் அவனுக்குத்தானாம். அதனால்தான் உன் காதலை தூக்கி வீசிட்டான்"இதைக் கேட்டதும் நெஞ்சம் வெடியாய் வெடித்தது. மனதுக்குள் ஓர் முடிவுடன் வேக வேகமாக ஓடினாள்."கன்னியம்மா….. கன்னியம்மா… நில்லுடி. விபரீதமான முடிவ எதுவும் எடுத்திடாதடி, நம்ம குல தெய்வம் பச்சியம்மா உனக்கும் ஒரு வழியை காட்டுவா" அவளுக்கு பின்னாடியே வேக வேகமாக இவளும் ஓடினாள். அவளுக்கு முன்பாக ஓடி அவளை தடுத்து நிறுத்தினாள்."என் நெஞ்சு ஒரு வழி நிற்க அடம்பிடிக்குதுடி, அலைகிறது, துன்புறுத்துகிறது. தாங்கிக்க முடியலையே. வசதிதான் பெருசுன்னு எண்ணிப் போய்ட்டானே! அழகும் அன்பும் அறிவும் பெருசுன்னு அவன் எண்ணலையே""இப்படி ஏமாத்துவான்னு நினைச்சிக் கூட பார்க்கலையேடி. உன்னோடு ஓடையிலே கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டு, உனக்குள் ஏக்கத்தை உண்டாக்கிட்டு இப்படி ஏமாற்றிட்டானே. சத்தியமா அவன் நல்லா இருக்கவே முடியாது"அங்கேயே உட்கார்ந்து கதறிக் கதறி அழுதாள். இவளின் அழுகையைக் கேட்ட சூரியன் ஓய்வெடுக்கப் போவதை மறந்து அப்படியே நின்றுக் கொண்டது."அமரா! நான் செத்துப் போயிடறேன்டி… இதுக்கு மேலயும் எப்படிடி என்னால உயிர் வாழ முடியும்""நீ ஏன்டி செத்துப் போகனும்; உன்னை ஏமாற்றிட்டு அவன் வேறு ஒருத்தியுடன் வாழும் போது நீயும் வாழ்ந்து காட்டனும்டி""இல்லடி என்னால முடியாதுடி""அவனுக்காக என்னை, இந்த ஊரை, உங்க அப்பன் ஆத்தாவை, சலசலக்கும் ஓடை எல்லாத்தையும் விட்டு போறியாடி?"வெகு நேரம் கதறிக் கதறி அழுதுக் கொண்டே இருந்தாள். மேகங்களுக்கிடையில் நிலா வேக வேகமாக எட்டிப் பார்த்து கவலைப்பட்டு கன்னியம்மாவைப் பார்க்க முடியாமல் மறுபடியும் மறைந்துக் கொண்டது. வெகு நேரம் அழுதவள் இறுதியாக ஓர் முடிவுக்கு வந்தாள். "அமரா நான் ஓர் முடிவுக்கு வந்துட்டேன்டி!""தயவு செஞ்சி சாகப் போறேன்னு மட்டும் சொல்லிடாதடி. நீயில்லாத இந்த ஊருல கடல், காத்து, வானம், இலை, செடி, கொடி, மலர், மான் எல்லாம் எப்படி இனியும் உயிர் வாழும்"."நான் அவன பழிவாங்கப் போறேன்டி" புரியாத அமரா அவளின் முகத்தையே பார்த்தாள்."காதல் செஞ்சிப்புட்டு அவனால மட்டுந்தான் இன்னொருத்தியுடன் கல்யாணம் செஞ்சிக்கினு வாழ முடியுமா? ஏன் என்னாலயும் அப்படி வாழ முடியாதாடி"."ஏன்டி முடியாது?""நீ இப்பவே என்னோட அப்பன் ஆத்தாக்கிட்டப் போயி, அவங்க எனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளயே எனக்கு கல்யாணம் செய்ய சொல்லிடு, அவனுக்கு முன்னாடி என்னோட கல்யாணம் நடக்கனும்"."சரி சொல்றேன்டி""அவனுக்கு முன்பாக நானும் என்னோட கணவனும் கைக்கோர்த்துக்கினு போகனும்டி""ச்சி… மறுபடியும் அந்த நாயை நாம ஏன்டி பார்க்கனும், அவனது முகத்துல முழிச்சாக் கூட பாவம்தான்டி சேரும். அவனை சந்தித்ததையே கெட்ட கனவா நினைச்சி மறந்துட்டு புதுமனுசியா நீ வாடி""ஆமான்டி! நீ சொல்லறதுதான் நல்லது. அவனை நான் எதுக்கு இனிமே பார்க்கப் போறேன்.""எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடி! சரி நீ போடி நான் என்னோட வீட்டுக்குப் போயி ஆத்தாக்காரிய பாத்துட்டு உடனே வந்து உன் ஆத்தாக்கிட்ட உன்னோட கல்யாணத்த பத்தி இன்னிக்கே பேசிடறேன்" என்றாள் அமரா.புது மனுசியாக அங்கிருந்து எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டே நடந்தாள் கன்னியம்மா. தன்னோட வீட்ட நோக்கி நடக்க ஆரம்பித்த அமரா மகிழ்ச்சியில் மௌனமாக அழுதுக் கொண்டு கன்னியம்மாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள்."பின்னே….? காதலன் பாம்பு கடித்து செத்து போய்விட்ட துக்கச் செய்தியை கன்னியம்மாவிடம் சொல்லாமல், அவனுக்கு இன்னொருத்தியுடன் கல்யாணம்னு சொல்லி இவளோட தற்கொலையை நிறுத்தினது மட்டுமல்லாமல் மனசை மாற்றி கல்யாணத்துக்கும் சம்மதிக்க வெச்சிபுட்டாளே… வெகு திறமைக்காரிதான் அமரா!"- பனிமுகில் கா.கதிர்வேல் "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி