20 July 2013 3:51 pm
எதிர் வீட்டிலிருந்து காற்றில் மிதந்து வந்த நாதசுவர இசை என் காதுகளைத் தாக்கியது. சன்னல் வழியாக வெளியே பந்தலைப் பார்த்தேன். யாரோ பெரிய மனிதர்கள் தம்பதிகளை “வாழ்த்தியருள” அழைப்புக் கொடுத்து வரவேற்கப் பட்டவர்கள், தங்கள் சொந்தக் கதைகளைப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
“அறுபது வயதுக் கிழவனுக்கும் இருபது வயதுக் குமரிக்கும் திருமணமாமே!”
ஊர் முழுவதும் பேசிக் கொண்ட இந்தக் கேலிப் பேச்சு என் காதுகளுக்குள்ளேயே தங்கித் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
கற்சிலையைச் சுற்றிக் கவர்ச்சிகரமான சேலையைக் கட்டி வைத்தால் அதைப் பார்க்கும் எந்தப் பொண்ணுக்காவது மன மயக்கம் உண்டாகி விடுமே என்ற சந்தேகம் என்னை அறியாமலே எழுந்தது.
பக்தி மனப்பான்மை இருக்கும் வரையில் எந்த விதமான பாதகமும் நேர்ந்து விடாது என்று என் மனத்தில் எங்கோ மறைந்திருந்த சமுதாய அமைப்பு சமாதானம் கூறியது.
“அப்போதுதான் பூத்த புதுமலரை அர்ச்சனைக்கென்று பிய்த்துச் சின்னாபின்னப் படுத்துவதுதான் பக்தியா?” என்று அறிவு எதிர்த்துக் கேட்டது.
திருமணக் கோலத்தில் இருக்கும் என் சக்குவின் உருவம் மன அரங்கில் தோன்றியது. செவ்விதழ்களும் சிரித்த முகமும்…! பட்டுப் போன்ற கன்னங்களும் பட்டால் விடாது பற்றிக் கொள்ளும் பார்வையும்…!
என்னென்னவோ கற்பனைகள் என் சிந்தனையிலிருந்து தெறித்துச் சிதறின.
அவள் ஒரு சிலையாகவோ, சித்திரமாகவோ இருந்திருந்தால், உலகம் அந்த அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டாவது இருந்திருக்கும். உயிரும் உணர்ச்சியும் கொண்ட பெண்ணாய் இருப்பதால்தான் அவள் வாழ்வை இன்று உருக் குலைக்கிறது.
கடுங் கோடையும் குளிருமே நிறைந்த என் வாழ்க்கைப் பாலைவனத்தில், என்னைத் தன்னந் தனியே தவிக்க விட்டுச் செல்லுகிறாள் அவள் என்பதை நினைத்த போது, உலகம் தலைகீழாகச் சுழலத் தொடங்கியது எனக்கு. நான் விட்டுப் பிரிந்த இறந்த காலம் என் மனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டது. தென்றலாகத் தொடங்கிய சிந்தனை மெல்ல மெல்ல வளர்ந்து புயலாக வீசத் தொடங்கிற்று. என் இதயக் கடல் குமுறிக் கொந்தளித்தது.
நான் என்று தொடங்கி எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் எப்படியோ சோகத்தின் சாயல் படிந்து விடுகிறது. துர்ப்பாக்கியம் மிகுந்த என் வாழ்வு மட்டும் அந்த விதிக்கு விலக்காக இருக்குமா? வாழ்க்கையை வசந்தமாகவே விரும்பி வரவேற்கிறேன். ஆனால் கடுங்கோடையே என்னைச் சுற்றிக் கவிழ்ந்து கொண்டு வாட்டி வதைத்தது. அந்தக் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளக் குளிர் தருவோ, தருநிழலோ, நிழல் கனிந்த கனியோ என் நினைவுக் கெட்டிய தூரம் வரை தட்டுப்படவே இல்லை.
சிறு வயதில் ஏதாவது ஒரு கரணத்துக்காக நான் தவறாமல் என் அப்பாவிடம் அடிவாங்கிக் கொண்டேயிருப்பேன். அப்போதெல்லாம் என் தாய் நான் அடிபடுவதைத் தடுக்காவிட்டாலும் “ஐயோ பாவம்” என அனுதாபங் காட்டக்கூட மாட்டாள்.
“இத்தனை அடி வாங்கியும் இன்னும் சொரணை வர வில்லையே” என்று ஏசித்தான் காட்டுவாள்.
அன்று வலியின் வேதனை தாங்கமாட்டாமல் திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். “எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா?” என்னும் எண்ணம் என்னைத் தன்பால் திருப்பிக் கொண்டிருந்தது. ஆனால் அழுகை மட்டும் ஓயவில்லை.
“வலிச்சுதா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். எதிர்வீட்டுச் சக்கு என்னெதிரே நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வையில் நிரைந்திருந்த கனிவு, குரலில் கலந்திருந்த குழைவு இரண்டுஞ் சேர்ந்து என் அழுகையை மேலும் அதிகமாக ஆக்கின.
சக்கு… என்றேன்.
ஏன்? என்று கேட்டுக் கொண்டே என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.
ஒரு வேளை நான் பேய்க்கும் பிடாரிக்கும் பிள்ளையாகப் பிறந்திருப்பேனா? என்று வெகு நாட்களாக எனக்கிருந்த சந்தேகத்தைக் கேள்வி உருவில் வெளியிட்டேன்.
உடனே வாய்விட்டு உரத்துச் சிரித்தாள் அவள். எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஓங்கி விட்டேன் ஒரு அறை, அவள் கன்னத்தில்.
“ஐயோ” என்று அலறி விட்டாள் சக்கு.
டேய் என்ற என் அப்பாவின் அழைப்பு உள்ளேயிருந்து கேட்டது. எங்கேயாவது ஓடித் தப்பித்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது எனக்கு. அப்படித்தான் ஓடினாலும் திரும்பி வந்து தானே ஆக வேண்டும். அப்போது…
நடுங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.
பிறகு…?
வழக்கமாகக் கிடைக்கும் அதே தண்டனை தான்! இந்த தடவை நான் திண்ணையில் வந்து உட்கார்ந்த போது சக்குவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“அவள் மட்டும் அழுதிருக்காவிட்டால்…”
அவளோடு பேசுவதே இல்லை என உறுதி செய்து கொண்டேன்.
“இப்படியாகும்”னு தெரிஞ்சிருந்தா நான் அழுதே இருக்க மாட்டேன்.
நிமிர்ந்து பார்த்தேன். சக்குவின் கண்கள் அன்பும், அனுதாபமும் நிறைந்து காட்சியளித்தன. அவள் கன்னம் இன்னும் சிவந்து தான் இருந்தது. பட்டுப் போயிருந்த என் உள்ளத்தில் கூடச் சிறிது கலக்கம் தோன்றியது.
“வலிச்சுதா?” என்று கேட்டேன்.
பேசாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் அவள்.
குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். குறும்பும் கேலியும் அதிலிருந்து கூத்தாடின!
உதிர்ந்து போகும் தாரகையைப் பற்றி இழுத்துக் கொண்டிருக்கும் வானத்தைப் போலத் தீய்ந்து கருகிக் கொண்டிருக்கும் என் வாழ்வு பாழாகாமல் காத்து வந்தாள் சக்கு. உலகிலேயே எனக்காகக் கண்ணீர் விட்ட ஒரே ஜீவன் அவள். அவள் உருவை என் உள்ளம் விரும்பி வரவேற்காத நாளே கிடையாது.
“சக்கு, என்னையே திருமணம் பண்ணிக்கிறியா?” என்று பல தடவைகளில் அவளைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவள் வாய் திறந்து எந்தவித பதிலும் சொல்வதில்லை. அன்பும், ஆசையும் நிறைந்த பார்வையால் என் முகத்தைப் பார்ப்பாள். பின்பு தலையைக் கவிழ்த்துக் கொள்ளுவாள். அவ்வளவுதான்!
திரையில் ஓடிக் கொண்டேயிருந்த படத்தை இடை வேளை என்ற அறிவிப்போடு, திடீரென நிறுத்தியதைப் போலக் கட்டுக் காவல் இல்லாது திரிந்த சக்குவுக்கு எதிர்பாராமல் சிறைவாசம் கிடைத்தது.
நான் தனியாள் ஆனேன். சூழ்நிலை வேறு என்னைச் சுற்றிநின்று வேட்டையாடத் தொடங்கியது. எட்டும் தூரத்தில்தான் இருந்தாள் என் சக்கு. ஆனால் எட்டாப் பொருளாக எனக்கு ஆகி விட்டாள். அவளுக்கு மட்டும் என் நிலை தெரிய நேர்ந்தால்…
திருமணமாகிச் சக்கு தன் கணவன் ஊருக்குப் போய் விட்டாள். என் வாழ்க்கைப் புத்தகத்தின் ஏடுகளை நான் புரட்டாமல் அவைகள் தாமாகவே புரண்டு கொண்டே சென்றன. காலப் போக்கில் ஏதோ ஒரு மாறுதல் என் உடலிலும், உள்ளத்திலும் தோன்றத் தொடங்கியது. பாரதியார் பாடல்களில் “கண்ணன் பாட்டு”க்களை விடக் “கண்ணம்மா பாட்டு”க்கள் தாம் என் கருத்தை அதிகமாகக் கவர்ந்தன. இதுவரையில் சுற்றி நின்று நிழல் தரும் சோலைதான் பெண் என்று நினைத்திருந்தேன். இப்போது தான் நான் அந்தச் சோலையில் கீதம் பாடித் தேன் குடிக்கும் வண்டு என்ற உண்மை எனக்குத் தெரிய வந்தது.
அழகும், அலங்காரமும் நிறைந்த அந்தப் புரங்கள், கட்டிலறைகள், கண்ணாடிக்கு முன் நின்று உடை மாற்றங் கட்டங்கள் இவைகளாகவே நிறைந்திருக்கும் கதைகளையும் நாவல்களையும் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினேன்.
பூப்போலப் பாதுகாத்திருக்க வேண்டிய என் மேன்மையான உள்ளத்தைச் சிறுவயதிலேயே கசக்கிக் கசக்கித் தீய்த்து விட்டதால், என் மனத்தில் இருந்த உயர்ந்த பண்புகள் எல்லாம் வற்றி வறண்டே போய் விட்டன. தெளிந்த நீரோடையில் எதிர் நீச்சல் போடும் மீன் குஞ்சுகளைப் போல என் உள்ளத்தில் உடல் வேட்கையால் தோன்றும் உணர்ச்சிகள் துள்ளி விளையாடத் தொடங்கின! என்னை விட ஏழெட்டு வயது மூத்த பெண்கள் மேல் கூடக் காதல் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் மட்டும் நானோக்குங்கால் நிலத்தையும், நோக்காக்கால் என்னையும்” பார்ப்பதேயில்லை!
பெண்கள் அழுதால் உலகமே ஓடி வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறது. ஆனால் ஆண்கள் அழுதால் கையாலாகாதவன் என ஏசித்தான் காட்டுகிறது. கெட்டு நாசமாகப் போன நான், என்னைத் தொல்லைப் படுத்திய சூழ்நிலையை விட்டு ஓடினேன். எங்கெங்கோ திருந்தேன், எங்கேயும் என் நிலைதான் இருந்தது. எல்லோருக்கும் “நானாக”வே தெரிந்தார்கள்.
கடைசியில் எப்படியோ சக்கு இருந்த ஊருக்கே வந்து சேர்ந்தேன். என்னைச் சக்கு வரவேற்ற போது அவள் உருவம் எனக்கு கலக்கத்தை உண்டாக்கி விட்டது. மெருகு கலைந்திருந்த அவள் தோற்றம் என்னைத் துடி துடிக்கச் செய்தது. அங்கே நான் தங்கியிருந்த அன்று முழுவதும் சேறும் சகதியுமாகவே என் மனத்தில் குழம்பிக் கொண்டிருந்தன.
“சீ! அவளையா அப்படி நினைப்பது?” என்று என் மனத்தில் எழுந்தது ஓர் எண்ணம்.
அவள் என்ன? அவளும் ஒரு பெண் தானே? என்ற சமாதானமும் கூடவே தோன்றியது.
“உனக்கு அவள் செய்த உதவிக்கு நீ செய்யும் கைமாறு இதுதானா?” என்று என்னிடம் கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த நல்ல பண்புகள் என்னைப் பார்த்துக் கேட்டன.
“பழுத்த பழத்தைச் சுற்றி வேலியமைத்துக் கொண்டு அதைப் பறிக்காமல் அழுக விடுவதை விட…” என்னையே தேற்றிக் கொண்டேன்.
இரவு படுக்கப் போவதற்கு முன், பால் கொண்டு வந்து கொடுத்தாள் சக்கு.
சக்கு என்றேன்.
மௌனமாக என் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
“வாழ்வில் இருள்படிய விட்டுக் கொண்டே இருப்பது அறியாமையல்லவா?” என்று கேட்டேன்.
பெருமூச்சும், சிரிப்புமாக என்னைப் பார்த்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, வேதனையோ இல்லை. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த ஒரு தோற்றம்!
“இருள் என்பது என்ன? உலகத்தின் நிழல் தானே! உலகம் என்ன அவ்வளவு கொடுமையானதா, அதன் நிழல் கூட வேதனை தரும் அளவுக்கு?” என்று பதிலளித்தாள் அவள்.
காய்ந்து சருகாகிக் கொண்டிருந்த மலரான அவளைப் பார்க்க என்னால் சகிக்கவில்லை அந்த மலர்ச் செடிக்கு மட்டும் நீர் வார்த்துக் காப்பாற்றினால்…? சிவந்த, மணம் நிறைந்த இதழ்களும் ஜீவசக்தியும் நிறைந்து விடுமே! மெல்ல அவள் கையைப் பற்றினேன். என் கைகள் நடுங்கிக் கொண்டேதான் இருந்தன. என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அந்த கைகளைப் பிடித்திழுத்தேன்.
ஓங்கி ஒரு அறை என் கன்னத்தில்!
வேகமாகத் திரும்பி வெளியே நடந்து போனாள் சக்கு. வலி ஏதும் தோன்றவில்லை எனக்கு. ஆனால் அவனைப் பின் தொடரும் நெஞ்சுரம் மட்டும் உண்டாக வில்லை. எங்கோ என் மனத்தின் ஒரு மூலையில் சக்கு மறுபடியும் வந்து “வலிச்சுதா” என்று கேட்க மாட்டாளா என்கிற ஆசை மட்டும் தோன்றியது!
அமைதி நிறைந்த அந்த இரவில் என் மன நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருந்தன அந்தப் பாழும் கனவுகள்! வெகு நேரம் என்னால் அயர்ந்து உறங்கவே முடியவில்லை. எப்போது அயர்ந்தேன் என்பது தெரியவில்லை. நான் எழுந்த போது விடிந்து வெகு நேரமாகி இருந்தது. வேலைக்காரி நானிருந்த அறையைக் கூட்டிக் கொண்டிருந்தாள்.
“மணி என்ன இருக்கும்?” என்று அவளை நான் கேட்ட போது, உண்மையிலேயே இரவில் நடந்த அந்த சம்பவம் வெளியில் தெரிந்து விட்டதா என்று அறிய வேண்டும் என்கிற ஆவல்தான் எனக்கிருந்தது.
“ஏன் ஐயா!ராத்திரி பாலைக் குடிக்காமே அப்படியே வச்சிட்டிங்களே; கெட்டுப் போயிருக்கே இப்போ” என்று சொல்லிட்டுப் பால் பாத்திரத்தை எனக்கு காட்டினாள் அவள்.
மேசையருகே சென்ற எனக்கு அதிலிருந்த கடிதந்தான் கண்களில் பட்டது. எடுத்துப் படித்தேன்.
“அன்புள்ள…
ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றின் எல்லையை விட்டுக் கவனித்தால் கூட உன் செயல் நல்லதல்ல. எத்தனையோ முறைகள் உனக்கு ஆறுதல் அளித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் குளிர்ச்சி நிறைந்த அருவியாக இருந்தேன். ஏக்கம் நிறைந்த இதயமும், தூக்கம் வராத இரவுகளும் என்னை இப்போது ஒரு எரிமலையாக ஆக்கி விட்டன. க்ஷயரோகத்தால் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டேயிருக்கிறென். நான் கெட்டாலும் பரவாயில்லை. உன்னைக் கெடுப்பது மட்டும்…
நீ இக்கிருந்தால் ஒரு வேளை எனக்கும் அந்த மயக்கம் ஏற்படலாம். ஆகையால் விடிந்ததும் என் பார்வையில் படாமலே போய்விடு.
அன்புள்ள சக்கு”
செம்பில் இருந்த பாலை எடுத்து வெளியே கொட்டினேன். பேசாமல் பையை எடுத்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றேன். நிராசையால் சாம்பலான என் உணர்ச்சிகள் என்னைத் தள்ளிக் கொண்டே சென்றன.
அப்பவே குடிச்சிருந்தா அந்தப் பால் கெட்டுப் போயிருக்காதுல்ல” என்று வேலைக்காரி சொல்லி கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது.
– டி.கே.சீனிவாசன்