29 May 2013 4:22 pm
அட, நீங்களா? ஈரம் கசிந்த மண்ணில் அழுந்திய வெண்ணிலாவின் பாதங்கள் நிலை பெயராமல் நின்றன. “யாரது, நீயா?”
அலைகளில் மிதந்து வந்தவன் போல் அலையடிக்கும் கடலோரத்தில் நின்ற அவள் மீது விழிகள் மலர்ந்தன. பொங்கி வந்த அலைகள் வடிந்து பின் வாங்கின. அவள் மெல்ல நடந்து வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“அடேயப்பா! உங்களைப் பார்த்து எத்தனைக் காலமாகி விட்டது.” – அவள் குரலும், கண்களும் காலத்தை அளந்தன. பேச்சு மூச்சில்லாத லாகிரி நிலை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், “நீதானா, நீதானா” என்பது போல.
“உன்னை ஏதோ கனவில் கண்டது போலாகிவிட்டது.” அப்பொழுதே ஒரு கனவு காண்பவன் போலிருந்தான் அவன்.
“ஆனாலும் அவைகளையெல்லாம் மறக்க முடிய வில்லையே” – சின்னக் குழந்தை போல உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சொன்னாள் அவள்.
“எப்படி முடியும்? உனக்கு ஒரு மனத்தத்துவம் தெரியுமா? பூத்துக் குலுங்கும் மரத்தைவிடப் பட்டுப் போன மரந்தான் நினைவை விட்டு நீங்காது. அதுதான் இது…. அதன் சோகந்தான் இது!”
“அன்று போலவே இன்றும் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எவ்வளவோ மாறி விட்டீர்கள்!”
“இந்த உலகில் எதுதான் மாறவில்லை? யார் தான் மாற வில்லை?” அவன் சொன்ன “தினு”சைக் கண்டு அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.
“ஆனாலும் உங்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம்…”
“அப்படி எதைக் கண்டு விட்டாய்?”
“ஏன் இல்லை? உங்களுக்கு இப்பொழுது வயது என்ன இருக்கும்? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… அந்த நாட்களில் ஒருநாள் நான் உங்களின் வயதைக் கணக்கிட்டுச் சொன்னேன். அதற்குப்பிறகு, ஆமாம்… உங்களுக்கு இப்பொழுது வயது முப்பத்திரண்டு. ஆனால் நாற்பதைத் தாண்டியது போலிருக்கிறதே!”
“இருக்கலாம். காலத்தின் துரு சில வேளைகளில் மனிதனை இப்படி ஆக்கி விடுகிறது. அது போகட்டும்; நீயுங் கூடத்தான் மாறியிருக்கிறாய் – முன்பிருந்ததை விட இளமையாக, அழகாக.”
அவளை அறியாமலேயே சிரிப்பு வந்தது.
“அது ஒருவேளை பருவத்தின் கவர்ச்சியாக இருக்கலாம் அல்லது அலங்காரத்தின் கவர்ச்சியாக இருக்கலாம் அல்லது உங்களது மன உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம்”
“மிகச் சரியாகச் சொன்னாய் நீ. பெண்களைப் பகலில் பார்ப்பதற்கும், இரவினில் பார்ப்பதற்கும் எத்தனையோ வேறுபாடு! இரவில் கூட முன்னிரவில் பார்ப்பதற்கும், பின்னிரவில் பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசம்! அதுவும் இப்படி அலையடிக்கும் கடலோரத்தில், இருளும் பகலும் மருவும் இந்த வேளையில் தனிமைதந்த ஆளுகையிலிருக்கும் போது. ஏன் சிரிக்கிறாய்?”
“அதில்லை! நீங்கள் சினிமா நடிகரைப் போலல்லவா தங்கு தடையின்றி வசன மழைப் பொழிகிறீர்கள்…”
“நீ ஒரு சினிமா நடிகையாயிற்றே! உன்னிடம் அந்த பாஷையில் பேசினால்தானே நன்றாக இருக்கும். இப்போது என்ன சொன்னேன்?”
“அலை, அழகு, அந்தி நேரம்… என்றெல்லாம்!” – அவள் கேலி அவனுக்கு பிடித்திருந்தது.
அந்தப் பேச்சு… அதிலே நெளியும் கபடமற்ற தன்மை… இவைகள் அவனை “அந்தக் கால”த்திற்கு இழுத்துச் சென்றன.
“ஆமாம், அதுதான். முதலில் உன்னை என்னால் அடையாளமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் உனக்கே சொந்தமான உன் அழகுகள் மாறவில்லை இத்தனை காலம் சினிமா உலகில் இருந்தும் கூட!”
அவள் மௌனமானாள். இருள் நன்றாய் கவிந்து விட்டது. பொதுவாக இந்த இடத்தில் கூட்டம் அதிகமிருப்பதில்லை. அன்றைக்கென்று கூட்டமே இல்லை!
இந்த அலைகளுக்கென்ன களைப்பென்பதே இருக்காதோ?
“அன்றிலிருந்து உங்களுக்கு சினிமா, நாடகம் இவைகள் மீது தீராத வெறுப்புதான்; இல்லையா?” – அவள் குற்றம் சாட்டுவது போலத் தோன்றியது.
“அப்படி ஒன்றுமில்லையே! ஆனால், வெறுப்பில்லையாயினும் ஈடுபாடு என்னவோ வராமலே போய் விட்டது!”
“எப்படி ஆனால் என்ன? நாமிருவரும் முதன் முதலாக சந்தித்ததே நாடகத்தின் மூலமாகத்தான். நினைவிருக்கிறதா? அப்போது உங்கள் கல்லூரியின் கலை விழாவில் நாடகம் நடிக்க நாங்கள் வந்திருந்தோம்…”
அவள் அவனை வெகு நாட்களுக்குப் பின்னால் அழைத்துக் கொண்டு போனாள்.
“கல்லூரியில் நாடகம் நடத்துவது அதுதான் எங்களுக்கு முதல் தடவை! நன்றாக நடத்த வேண்டுமென்று எங்களுக்கு ஆசை. ஒப்பனை அறையில் நானும் மற்றப் பெண்களும் நாடகத்துக்காக அலங்காரம் செய்து கொண்டிருந்தோம். அப்போது தான் நீங்கள் திடீரென்று உள்ளே வந்தீர்கள்…”
“நான் என்ன செய்யட்டும்! கலைவிழா நடத்தும் குழுவுக்கு என்னைத் தலைவனாகப் போட்டிருந்தார்கள். நாடகத்துக்கும் தத்துவ ஆசிரியனுக்கும் என்ன சம்பந்தமோ! எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். அது ஒப்பனை அறை என்றா எனக்குத் தெரியும்? உள்ளே வந்தால் ஒரே பெண்கள் கூட்டம்! வர்ண உடைகளும், பவுடர் மணமும், சாயம் பூசிய முகங்களும்… என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள்…”
“அப்போது நீங்கள் சொன்ன ஒரு வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “நான் வகுப்பில் நுழைந்தும் இப்படித்தான் மாணவர்களும் மௌனமாகி என்னைக் கவனிப்பார்கள்’ என்று சொன்னீர்கள், இல்லையா?”
“சில வேளைகளில் நான் அப்படிப் பேசிவிடுவதுண்டு!” அவள் இத்தனை காலத்துக்குப் பிறகும் அதை நினைவு வைத்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது!
“என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்திய போது நீங்கள் பார்த்த பார்வையை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ ஒரு அதிசயத்தைப் பார்க்கும் பார்வை அல்ல அது. இளமையின் பொலிவைப் பருகும் பார்வையுமல்ல அது. “உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று உள்ளத்தைத் தீர்ந்து பார்க்கும் பார்வை! நாடக நடந்த போது நீங்கள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அடிக்கடி என் கண்கள் உங்கள் மன ஓட்டத்தை நிர்ணயிக்க முயன்றன. நீங்களும் என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.”
“அது என் குற்றமல்ல. அப்படியிருந்தாய் நீ. உயிர் பெற்ற கற்சிலை போல் வெறும் அழகைச் சுமந்து நிற்கும் பெண்ணாக இல்லை நீ. சுவரோரமாக, குளிருக்கு அடக்கமாக, சுருண்டு படுத்திருக்கும் பூனைக்குட்டி போல் “மௌனக் கவர்ச்சி, தரும் பெண்ணாகவுமில்லை நீ. புல்வெளியில் அங்குமிங்கும் ஓடித் திரியும் ஆட்டுக் குட்டி போலிருந்தாய்! உன் “கலகல” வென்ற தன்மைதான் என்னை வெகுவாகக் கவர்ந்தது…! உன் அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பதாக இல்லை; ஆனாலும் போகிறவனின் தோளைத் தொட்டு நிறுத்தி “என்ன சேதி” என்று விசாரிப்பதாக இருந்தது…”
“எனக்கு வெட்கமாக இருக்கிறது!”
மெய்யாகவே வெட்கம் அவள் கன்னங்களைத் தொட்டது. இருளாயிருந்ததால் அவனுக்குத் தெரியவில்லை. கரையில் மோதிய அலைகள் நுரை கக்கின.
“நாடகம் முடிந்து சென்ற பிறகும் இரண்டு நாட்கள் வரை உங்களைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது அதிசயந்தான். அத்தனை தூரத்துக்கு ஒன்றுமே நடக்கவில்லை! பிறகு மறந்தே போனேன். ஆனால் நிகழ்ச்சிகள் மறக்க விடுகின்றனவா என்ன? ஒரு நாள் இரயிலில் குற்றாலத்துக்குப் போக் கொண்டிருந்தேன்…”
“நீ மட்டுமா போனாய்? நானும் தான் வந்தேன்… முதல் வகுப்புப் பெட்டியில் நுழைந்ததும் முதலில் நீதான் என் கண்ணில் பட்டாய். சற்று முன்பு கேட்டாயே “யாரது நீங்களா” என்று; அது போல் அன்றும் கேட்டாய்…”
“‘நீ நீயானால், நான் நான் தான்’ என்று நீங்கள் உடனே பதில் சொன்னீர்கள். அப்படி நீங்கள் ஒருமையில் அழைத்தது என்னை உங்களுக்கு சின்ன வயதிலிருந்தே கூடத் தெரியும் போலத் தோன்றுகிறது! என்னைப் பற்றிப் பேச உங்களுக்கு உரிமை இருப்பது போலவும் தோன்றியது! அதை நான் விரும்பவும் செய்தேன். அன்றிரவெல்லாம் எவ்வளவு பேசினோம்! அதற்குப் பிறகும் தான் எவ்வளவு பேசினோம்! சின்னச் சின்ன விசயங்களைப் பற்றியெல்லாம் எத்தனை ஆர்வத்தோடு பேசினோம். பிறகு பேசுவதற்கு விசயங்களே இல்லாமல் போய்விடுமோ என்று சில நேரங்களில் கற்பனை செய்து கொள்வேன். நீங்கள் சில விசயங்களைச் சொல்வது குழந்தைக்குக் கதை சொல்வது போலிருக்கும்… வாழ்வின் தேனையெல்லாம் அந்த பத்து நாட்களிலேயே பருகித் தீர்த்து விட்டது போலிருந்தது…”
நினைவில் சுரந்த பரவசத்தில் இவள் குரல் ஒடுங்கிற்று. மோதும் சம்பவங்களின் சுமை தாங்காமல் இதயம் கனத்தது. அவன் கண்கள் கடலிலும் இருளிலும் எதையோ தேடின!
அந்த நாட்கள்! அந்த நாட்கள் தான்… உணர்வுகளும் உணர்வுகளும் கதை பேசிய நாட்கள்… அலையும் நிலவும் உறவு கொண்ட நாட்கள்… செடிகளெல்லாம் பூ விரித்த நாட்கள்!
காவியங்களில் சித்தரிக்கப் படுவது போல உறவுகள் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனாலும் சில நேரங்களிலாவது உறவுகள் காவியத் தன்மை பெறத்தான் செய்கின்றன. அந்த நாட்களைப் பற்றி நினைக்கயில் எனக்கு அப்படித்தான் படுகிறது…”
“என் நினைப்பு வேறு விதமாக இருந்தது. கல்யாணமாகி உங்களைப் போல ஒருவரோடு வாழ்ந்தால் எத்தனை ஆறுதலாக இருக்கும் என்று நினைப்பு ஓடிற்று. சில நேரங்களில் நீங்களே ஏன் என்னை மணம் செய்து கொள்ளக் கூடாது என நினைத்தேன். சமூகத்தின் அந்த “நாலு பேர்” முன்னிலையில் நான் கேவலம் ஒரு நடிகையாயிருக்கலாம்; ஆனால் ஒரு பெண்ணுக்கிருக்கும் இயல்பான ஆசைகள் எனக்கு மட்டும் இல்லாமலா போய்விடும்? கடைசியில் உங்களைக் கேட்கவும் செய்தேன்…”
“கேட்டதில் ஒன்றும் தவறில்லையே. உன்னை மணந்து கொள்ள நான் உண்மையாக விரும்பினேன். ஆனால் ஓர் அச்சம் தடுத்தது, உன்னால் ஒரு மனைவியாக இருக்க முடியுமா என்று…! நீ ஒரு தோழியாகலாம்… ஆனால் மனைவி யாவதென்பது…”
“இன்னமும் என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லையே! நடிகை மனைவியாக முடியாதா என்ன?”
“முடியலாம்; ஆனால் எனக்கு? நான் உன்னை வேண்டினேன். உன்னை என் மனைவியாகவே வேண்டினேன். என் குழந்தைகளுக்கு ஒரு தாயாக வேண்டினேன். ஆனால் ஒரு நடிகையாக வேண்டவில்லை! என் மனைவியை நாடக அரங்கின் ஒளியில் வைத்துப் பார்க்க ஏனோ என் மனம் ஒத்து வரவில்லை. நிலையைச் சொல்வதில் வெட்கமென்ன வேண்டியிருக்கிறது! அப்படிப்பட்ட பண்புகளால் நான் செய்யப்பட்டிருந்தேன்!”
“கடைசியில் உங்களுக்காக நடிப்பதை கைவிட்டுவிடவும் சித்தமாயிருந்தேன். நீங்கள்தான்…”
கை நழுவிப் போன சுகத்தின் ஏமாற்றம் அவள் குரலில் ஒலித்தது. சிந்திய பாலைப் பற்றி நினைக்கையில் வேதனையாகத் தானே இருக்கிறது!
“எனக்குத்தான் துணிவில்லை. நம் வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை எப்படியோ எனக்கேற்பட்டு விட்டது. அப்போது சுற்றி இருந்தவர்களின் கிண்டலையும், கேலியையும் சகித்துக் கொள்ளும் திராணி எனக்கில்லை. முன்னும் போக முடியாமல், பின்னும் நகர முடியாமல் நான் திண்டாடினேன். கடைசியில் ஒருநாள் இருந்த வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே போய் விட்டேன். உன்னை மறக்கத்தான்! உன்னைப் பற்றிய பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்காகத்தான்! நீ என்ன நினைத்தாயோ!”
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? “சரி, இவ்வளவு தான்” என்று தேற்றிக் கொண்டேன். நல்ல வேளையாக புதிய நாடகங்களில் நடிக்க வேண்டி நேரிட்டது. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போலிருந்தது. அவைகளில் எல்லாவற்றையும் மறந்து போனேன். ஆனால் ஓரிரு சமயங்களில் நினைப்பதுண்டு, நாமிருவரும் மணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எத்தனை சுகமாக இருந்திருக்குமென்று…”
“நான் அப்படி நினைக்கவில்லை. நீ நடிப்பதை எனக்காக விட்டுவிடத் துணிந்தாலும் அதிலிருந்த பற்றுதலை உன்னால் விட முடிந்திருக்குமா? நடிப்பதில் உனக்கு அத்தனை ஆசை இருந்ததே! ஒருவேளை என் கணக்கு தப்பாயிருக்கலாம். ஆனால் எப்படியோ அது நேர்ந்து விட்டது. உன்னையோ, என்னையோ பொருப்பாளியாக்குவதில் அர்த்தமே இல்லை. வாழ்வே சம்பவங்களும் மன நிலைகளும் கொண்டதுதானே! இவ்வளவு சொல்கிறனே தவிர, எதையோ பறிகொடுத்து விட்ட உணர்ச்சிதான் ஏற்படுகிறது. இதெல்லாம் ஏமாந்தவர்களின் தத்துவமோ, என்னவோ!”
அதற்கு மேல் பேச முடியாது திணறினான். கைகள் மணலைக் குவித்துக் கொண்டிருந்தன. இருட்டில் தெரியும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேசினால் அந்த வினாடியின் உணர்ச்சிப் பரவசம் கெட்டுவிடுமோ என்று பயந்தவள் போலிருந்தாள்.
வீணையின் சுருதி போல அலை ஓசை குழைந்தது. அதனின்று விடுபட சிறிது நேரம் வேண்டியிருந்தது.
“அப்புறம்?” – அவளது அந்த ஒரு சொல்லில் வாழ்வின் நிராசையை வேறு வழியின்றி ஒப்புக் கொண்ட பாவனை தென்பட்டது.
“அப்புறமென்ன? வழக்கமானதுதான். மணமாயிற்று. குழந்தைகள் பிறந்தன. மீண்டும் பழையபடி கல்லூரி ஆசிரியனானேன்! நாட்கள் போகின்றன. சில நாட்கள் ஆமை போல நகர்கின்றன. சில நாட்கள் பந்தயக் குதிரை போல தலைதெறிக்க ஓடுகின்றன. சில நாட்கள் நாடகம் முடிந்ததும் தோன்றும் நாடகக் கொட்டகையைப் போல வெறிச்சிட்ட நாட்கள். சில நாட்கள் நாட்டியக்காரியின் கால் சலங்கை போல் குலுங்கும் நாட்கள்…”
இப்படி உள்ளம் தொடப் பேசிக் கேட்டு எத்தனை காலமாயிற்று! அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். அப்பொழுது நாலைந்து மழைத்துளிகள் விழுந்தன. அண்ணாந்து பார்த்தாள், வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன.
“மழை வரும் போலிருக்கிறதே!”
“ஆமாம்; நேரமும் ஆகிவிட்டது. போகலாம்!” இருவரும் எழுந்து நடந்தனர்.
“வீட்டுக்கு வாங்களேன்!”
“இப்பொழுதா?”
“…ம்…”
“இல்லை… இன்னொரு சமயம் ஆகட்டும்!”
“ஏன் இப்படி சொன்னாய்; போவதற்கென்ன? என்று ஆசை மனதை இடித்தது. மனதோ “எல்லாம் எனக்குத் தெரியும்” என்பது போல் பேசாதிருந்து விட்டது.”
சாலை ஓரமாக நின்றிருந்த காரருகே வந்ததும் அவள் நின்றாள்.
“உங்களை என் காரில் வீட்டில் கொண்டு விடட்டுமா?”
“என்னத்திற்கு? கொஞ்ச தூரந்தான். நான் நடந்தே போய்விடுவேன்!”
“அப்படியானால் நான் வரட்டுமா?”
“சரி” கார் கிளம்பியது. அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் மணம் எண்ணமிட்டுக் கொண்டே வந்தது… அவன் நடந்து கொண்டிருந்தான்…
“நாளை பொழுது விடிந்ததும் இந்த வினாடியைப் பற்றி நினைத்துப் பார்க்க நேரமிருக்கப் போகிறதா என்ன? அவளுக்கு ஸ்டுடியோவுக்குப் போகவும், “மேக்கப்” செய்து கொள்ளவும், “காமிரா” வுக்கு முன்னால் கண்ணைக் கூசும் ஒளியில் நின்று இல்லாததை இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு நடிப்பெண்ணும் கலையை ஆராதிக்கவே நேரமிருக்காது. நான் மட்டுமென்ன? மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு நேற்று சொன்னதையே சொல்லப் போகிறேன். அவர்கள் போய் அவர்கள் இடத்திற்கு மற்றவர்கள் வந்தால் அவர்களுக்கும் அதையேதான் திருப்பிச் சொல்லப் போகிறேன். இதை விட்டால் இருக்கவே இருக்கிறது மனைவியென்றும், குழந்தை என்றும்…! ஆனாலும் இந்த நிமிடத்தின் நிரந்தரத் தன்மையே அலாதிதான்! இந்த வேளையின் உணர்ச்சிப் பரவசமே தனிதான். வாழ்க்கையில் இந்த வினாடிகளைக் கணக்கிடுகையில் இது சமுத்திரத்தின் ஒரு துளி போன்றதுதான். அதனால் என்ன? துளி நீராயினும் அதற்குள் வானம் முழுவதும் தெரிய வில்லையா என்ன?
மனதின் பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை!
– தில்லை மறை முதல்வன்