கொண்டை வலை - தமிழ் இலெமுரியா

14 November 2015 9:13 pm

வானம் பார்த்த பூமி என்பதால் ஒரு போகம் பயிர்தான். அருகிலேயயே கடற்கரை. அதன் முகத்துவாரத்தில் பழவேற்காடு ஏரி. அதனால் சுற்றியுள்ள ஊர்களில் நிலத்தடி நீர் உப்பு நீர்தான். பயிர் செய்யாத காலங்களில் பழவேற்காடு ஏரியைச் சுற்றியுள்ள ஊர்மக்கள் ஏரியில் இறால்மீன் பிடிக்கக் செல்வார்கள். என் சித்தப்பாவும் போவார். அவர் ஒரு முறை என்னையும் இறால்மீன் பிடிக்க கூட்டிச்சென்றார்.வலையைத் தோல் மீது வைத்துக்கொண்டு அவர் முன்னே செல்ல நான் பின் சென்றேன், ஊரைத்தாண்டியதாம் ஊரில் உள்ள மற்றவர்களும் வலையை தூக்கிக் கொண்டு வரிசையாக எங்களை பின் தொடர்ந்தனர். மாலை நான்கு மணிக்கு நடந்தது பழவேற்காடு ஏரிக்கு போய்ச்சேர மணி ஏழு ஆகிவிட்டது. ஏரிக் கரையோரம் இருந்த புதர் மறைவில் வலையை வைத்து உட்கார்ந்தோம். எங்கள் பின் வந்திருந்த பங்காளிங்க, மாமன், மச்சான் பன்னிரண்டு வலைக்காரர்களும் எங்களுடன் அமர்ந்தனர். அவர்களும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள். கேலியும் கிண்டலுமாக இருந்தது அந்த இடம்.நான் இறால்மீன் பிடிப்பதற்கு புதியவன் என்பதால் சிலர் அறிவுரை சொன்னார்கள்.நாங்கள்தான் இந்த உப்பு தண்ணியில மாரடிக்குறம், நீ எங்காவது வேற வேலைக்கு போறதது தானே" எனச் சொன்னார்கள்."இல்ல மாமா நம்ப ஊர்ல இருந்து நீங்க எல்லாரும் இந்த இறால்மீன் பிடிக்கப் போகும்போது உங்களோடு இறால்மீன் பிடிக்க எனக்கும் ஆசை. அதுவும் இல்லாம முகம் தெரியாத யாரோ ஓர் ஆள்கிட்ட போயி வேலை செய்யறதை விட நமக்குத்தெரிஞ்ச மக்களோடு வேலை செய்யறது மகிழ்ச்சிதானே?" என்றேன்."சரி சொன்னா கேட்கமாட்ட வந்து பட்டாத்தான் தெரியும், படு! நிலா வந்த பிறகு போலாம்". என்றார்."ஏன் நிலா வந்த பிறகு போகனும்? இப்பவே போலாமே" என்றேன்."உன் சித்தாப்பாவைக் கேளு சொல்லுவார்" என்றார்.அதுவரை கேட்டுக்கொண்டு இருந்த சித்தப்பா "மவனே நிலவு வந்த பிறகு ஏரியில வெள்ளம் அதிகமா வரும் இறாலும் நிறைய கிடைக்கும்" என்றார்."வெள்ளமா"?"ஆமாம், வெள்ளம்னா கடல் நீர் ஏரியை நோக்கி வரும். அப்ப நிலா வெளிச்சத்தில், வெள்ளத்தில இறால்கள் துள்ளிக்குதித்து கடலை நோக்கிசெல்லும். கடலில் உள்ள இறால்கள் ஏரியை நோக்கி வரும் அந்த நேரத்தில் வலை இழுத்தால் இறால்கள் அதிகமா கிடைக்கும்.""நிலவு மறைந்ததுன்னா வெத்தம் ஓடும்"."அப்படின்னா"?"வெத்தம்னா கடலிலிருந்து வந்த தண்ணீர் மீண்டும் கடலை நோக்கிப்போகும். அப்போது நிலவு மேற்கில் மறைந்திருக்கும். அப்போது வலை இழுத்தால் இறால்கள் கிடைக்காது வலை இழுக்குறவங்க கரையேரிடுவாங்க. முழு நிலவு போயி இன்னிக்கி ஆறுநாள் ஆவுது. நிலவு எப்படியும் இரவு பதினோரு மணிக்கு அல்லது பன்னிரண்டு மணிக்குத்தான் வரும். அதுவரை நாம் இங்கேயே படுத்திருந்திட்டு நிலவு வந்த பிறகு தண்ணிள் இறங்குவோம். சரி, இப்ப படுத்துத்தூங்கு நிலவு வந்த பிறகு போலாம்". என்றார். அனைவரும் வலை மீது தலை  வைத்துத் தூங்கினோம்."எல்லாம் எந்திரிங்க போலாம்" சித்தப்பா எழுப்பினார். நான் எழுந்து பார்த்த போது நிலவு உதித்திருந்தது. அனைவரும் போட்டிருந்த உடையை மடித்து தலையில் தலைபாகையாகக் கட்டிக் கொண்டார்கள். சித்தப்பா எனக்கு கட்டிவிட்டார். நல்லிரவு கரையோரம் இருந்த என்மீது ஈரக்காற்று உடம்பில் படவே உடல் முழுவதும் குளிரில் நடுங்கியது. அங்கிருந்தவர்கள் பீடியை இழுத்துக்கொண்டார்கள். சித்தப்பாவும் புகைபிடித்தார். வலையில் சுருட்டி வைத்திருந்த உரக்(யூரியா) கோணியை எடுத்து உடலில் போட்டுக்கும்படி என்னிடம் கொடுத்தார். அதை பிரித்ததும் சட்டை போல தைத்து இருந்தது! உடலில் போட்டுக்கொண்டதும் உடலில் ஈரக்காற்று படுவது தெரியவில்லை."சரி போலாம் வலையை எடுங்க" என்றார் சித்தப்பா. யாரும் வலையை எடுக்கிற மாதிரி தெரியல.நீ எடு, நீ எடு என மாறி மாறி சொல்லிக் கொண்டார்கள். முதலில் வலையை எடுக்கிற ஆளுக்கு அன்று இறால் மற்றவர்களை விட குறைவாக கிடைக்குமாம். அதனால்தான் இவர்களுக்குள் போட்டிப் போட்டு உட்கார்ந்து இருந்தார்கள். எப்படியிருந்தாலும் சித்தப்பாதான் முதலில் வலையை எடுப்பாராம்."இன்று வேனா, நான் புதிய ஆளைக்கூட்டி வந்திருக்கேன் நீங்க யாராவது வலையை எடுங்க" என்றார்."சித்தா நான் எடுக்குறேன், எடுங்க வலையை" என எங்க பங்காளி பசங்க வலையை முதலில் எடுத்துக் கொண்டு தண்ணீரில் நடக்க தொடங்கினார்கள். அனைவரும் வலையை எடுத்துக்கொண்டு அவர்கள் பின் சென்றோம். முழுங்கால் தண்ணீரில் ஆறு கல் தொலைவு சென்றால்தான் இடுப்பளவு தண்ணீர் வருமாம்! அவ்வளவு தண்ணீரில்தான் இறால் பிடிப்பார்களாம் நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம் தண்ணீரைக் கொஞ்சம் கையில் எடுத்துக் குடித்துப் பார்த்தேன், ஒரே உப்பு. அனைவரும் வேகமாக தண்ணீரில் நடந்துகிட்டு இருந்தாங்க. சித்தப்பா வலையைத் தலைமேல வச்சுக்கிட்டுத் தண்ணிய ஒதைச்சுக்கிட்டே வேகமாக நடந்தார்.என்னால் அவர்கள் நடைக்கு ஈடுகொடுக்க முடியல. தண்ணீரில் கால்கள் நகர்த்த முடியவில்லை. சிறிது நின்று அவர்கள் பின் சென்றேன். பின்புறம் திரும்பிப் பார்த்தேன். கரையோர விளக்குக்குள் மின்மினிப் பூச்சிகள் போல இருந்தன! நீண்ட தொலைவு வந்துட்டோம்! தொடைகள் இரண்டும் வலி. இன்னும் தண்ணீர் முழங்காலை விட்டு மேல உயரவில்லை. "எப்பதான் போய்ச்சேர்வோம்?" அருகில் நடந்தவர் கிட்ட கேட்டேன்."அங்க போய்ச்சேர இன்னும் மூன்று கல் தொலைவு இருக்கு. அது ஒரு கால்வாய் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் பழவேற்காடு ஏரியில்தான் அவர்கள் வணிக கப்பல்கள் வந்து செல்லும். அப்போது துறைமுகம் கட்ட எடுத்த கால்வாய்தான் இது, ஆனால் அவர்களால் இங்கு துறைமுகம் கட்ட முடியவில்லை, அப்படியே விட்டுவிட்டு சென்னை துறைமுகத்தை கட்டினார்கள். நமக்கு இடுப்பளவு கழுத்தளவு தண்ணீர் மாறி வரும் அங்கதான் வலை இழுப்போம்." என்றார். இடுப்பும் தொடைகளும் அதிகமாக வலி எடுத்தன. உடல் வேர்த்துகொட்டியது. அவர்கள் வைத்திருந்த வலையை ஒருவர் மாற்றி ஒருவர் எடுத்துக்கொண்டார்கள். என்னிடம் வலையைத் தரவில்லை சித்தப்பா.எதிரில் ஏதோ கருப்பாக ஓடுவது போலவும் நிற்பது போலவும் தெரிந்தது. சித்தப்பாவிடம் என்ன என்று கேட்டேன். "மீனவர்கள் மீன் இறால் பிடித்துக்கொண்டு படகில் கரைக்குப் போறவங்க அங்கே கட்டு வலை கட்டி விட்டு படகுல இருப்பாங்க. பொழுது விடிந்ததும் வலையை தண்ணீரில் இருந்து எடுத்து உதறி இறாலை எடுத்துக்கிட்டுக் கரைக்குப் போவாங்க. நம்ம இழுக்கிறது, கொண்டவலை. அவர்கள் இழுப்பது, கட்டுவது, கட்டுவலை. அவர்களுக்கு பிழைப்பே இந்த தண்ணீரில் மட்டுதான். நமக்கு வலை இழுக்கும் போது தண்ணீரில் ஏதாவது நஞ்சுள்ள மீனோ, பாம்போ கடிச்சுதுனா அந்த நேரத்தில் அந்த மீனவர்கள் கிட்ட சொன்னம்னா படகுல ஏத்திக்கிட்டு கரையில் விடுவாங்க". என்றார்.கரை சேறாய் காணப்பட்டது. இப்போது தண்ணீர் இடுப்பளவு வந்திருந்தது. சித்தப்பா என்னைக் கூப்பிட்டு உரக் (யூரியா) கோணியை கொடுத்து என் இடுப்பில் கட்டிக்க சொன்னார். இதில்தான் பிடித்த இறால்களைப் போடுவார்களாம். அந்த உரக்கோணி பாட்டி வைத்திருக்கும் சுருக்குப்பை போல இருந்தது. இடுப்பில் கட்டிக்கொண்டேன். எங்களுடன் வந்தவர்கள் வலையை விடத் தொடங்கினார்கள். சித்தப்பாவும் வலையின் ஒரு முனையிலிருந்து இணைக்கப்பட்டிருந்த கொடுப்பை(கட்டைவிரல் அளவு கொண்டமரக்குச்சி) என்னிடம் கொடுத்தார். அதைக்கால் கட்டை விரல் இடுக்கில் பிடித்துக்கொள்ளச் சொன்னார். அது இடுப்பளவுள்ள கொம்பாய் இருந்தது.முப்பது அடி வலையின் நடுவில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வலையின் இரண்டு முனைகளும் இணைக்கப்பட்ட கொடுப்புகள் முப்பது கட்டப்பட்டிருந்தன. அதில் ஒரு முனை என்னிடமும் மறுமுனை சித்தப்பாவிடமும் இருந்தன. ஒவ்வொரு கொடுப்பையும் தண்ணீரில் விட்டு பின்நோக்கிச் சென்று கடைசிக் கொடுப்பைப் பிடித்துக்கொண்டார். எனக்கும் அவருக்கும் முப்பது அடி தொலைவு இருந்தது. கால் விரலிடுக்கில் இருந்த கொடுப்பைத் தரையோடு நகர்த்தி முன்னோக்கி வலையை இழுக்கச் சொன்னார். தான் சொல்லும் போதுதான் வளைந்து வரவேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் கால் இடுக்கில் இருக்கும் கொடுப்பை விடக்கூடாது என்றும் எச்சரித்தார். வலையை இழுத்துக் கொண்டே முன்னோக்கிச் சென்றேன்.எங்களுடன் வந்தவர்களைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர்களும் வலையை இழுத்துக் கொண்டிருந்தார்கள். உப்புத் தண்ணீர் சில்லென இருந்தது. வலையில் விழப்போகும் இறால் மீன்களை பார்க்க வானில் மீன்கள் கூடியிருந்தன போலிருந்தது விண்மீன்கள். நிலவு வெளிச்சத்தில் ஆங்காங்கே மீனவர்கள் படகு நிற்பது அழகாயிருந்தது. கோடிக்கணக்கான உயிரிகள் வாழும் இடமானாலும் நாங்கள் நகரும் சலசலப்பைத் தவிர வேறெந்த ஒலியும் காதில் விழவில்லை. அப்படியொரு அமைதி! வலை இழுக்கத் தொடங்கி நீண்ட நேரம் ஆகியிருக்கும். "வளைந்து வா:" என அழைத்தார். அவரும் வளைந்து வந்து இருவரும் ஒவ்வொரு கொடுப்பையும் கையில் இழுத்து அடுக்கினோம். அனைத்துக் கொடுப்புகளையும் என் கையில் கொடுத்துத் தலைக்கு மேல் கைகளை உயர்த்தச் சொன்னார். மார்பளவு தண்ணீரில் வலையை உதறினார். வலையின் கடைசி நுனியை பிடித்து அவர் உதறும் போது வலையில் சிக்கியிருந்த இறால்கள் எகிறுவது தெரிந்தது. உயர்த்தியிருந்த கொடுப்பை கை வலியால் இறக்க முயன்றேன். "கீழே இறக்க வேண்டாம். கைகள் வலித்தாலும் தாங்கிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இறால்கள் இறக்கிய கொடுப்பு வழியாக எகிறி தண்ணீரில் விழுந்துவிடும்." என்றார்.தோள் பட்டை அதிக வலி எடுத்தன. வலைக்குள் இறால்களின் அழகிய துள்ளலால் வலியைப் பொருட்டாகக் கருதவில்லை. வலையில் சிக்கியிருந்த இறாலை உதறிவலையின் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து என்னிடம் உள்ள கொடுப்பை ஒன்றை வாங்கிக்கொண்டார். கொடுப்பின் வழியாக வலையிலுள்ள  இறால்களை கொண்டு வந்து வலையைப் பிரித்துக்காட்டினார். நிலவு வெளிச்சத்தில் பெரிய இறால், சிறிய இறால், சில நண்டுகள் என இடுப்பில் கட்டியிருந்த பையில் போட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நானா இந்த இறால்களைப் பிடித்தேன்!.முதல்முறை இழுத்த மாதிரி பன்னிரண்டு முறை இழுத்தோம், எனக்கு தூக்க விழிப்பு கண்ணை எரித்தது. பசி வயிற்றை இறுக்கியது. உடலில் வலி இல்லாத இடமே இல்லை. கிழக்கில் இருந்த நிலவு மேற்கே மறைந்து கொண்டிருந்தது. கால்களை சேற்றில் அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாத வலி, இடுப்பில் கட்டியிருந்த பையைத் தூக்கிப்பார்த்தேன். அரைபை வரை இறால்கள் இருந்தன. மறுபடியும் வலையின் கொடுப்பை என்னிடம் கொடுத்தார். இந்த முறை வலை இழுக்க எனது கால்களால் முடியவில்லை, மறத்துப்போய் இருந்தது. முயற்சி செய்து இழுத்தேன். காலில் பிடித்திருந்த கொடுப்பு தரையில் படியவில்லை இதனால் சித்தப்பா வலையை உதறியதும். இறால்கள் வலையில் இல்லை. அவருக்கு தெரிந்திருந்தது. இதற்கு மேல் என்னால் முடியாது என. அருகில் வலை இழுத்துக் கொண்டிருந்தவர்களிடம் "கரையேறலாமா?" எனக்கேட்டார். அவர்களும் "போகலாம்" என்றனர்.அனைவரும் முழங்கால் அளவு தண்ணீருக்கு வந்து பாசி படிந்த வலையை அலசித் தூய்மை செய்தனர். இடுப்பில் இருந்த இறால் பையை அவிழ்த்துப்பையின் வாயைக் கயிறால் கட்டிவிட்டார், சித்தப்பா. இறால் பையை என் தோளில் தூக்கி வைத்துக் கொண்டேன். வலை இழுத்த அனைவரும் கரையை நோக்கி நடந்தோம்.திடீரென மழை கொட்டியது எங்கள் முன் இருந்த கரை தெரியவில்லை. அனைவரும் தண்ணீரில் நின்றுவிட்டோம். எந்த பக்கம் கரை இருக்கிறது என தெரியாததால் அனைவரும் புலம்பினார்கள். மழை விட்ட பிறகுதான் கரை தெரியுமாம். அதுவரை நின்ற இடத்தை விட்டு நகரக்கூடாது என சொன்னார்கள். அப்படி நடந்தால் பாதை மாறி நடு தண்ணீருக்கோ, வேறு ஊர் கரைக்கோ போய்விடுவார்களாம். அதனால் திக்கு தெறியாமல் நின்றுவிட்டோம். சிறிது நேரம் கழித்து மழை விட்டது. கரை தெரிய ஆரம்பித்தது. அனைவரும் கரையை நோக்கி நடந்தோம். கரையேறும் வழி சேறு நிறைந்த வழியாக இருந்தது. சேற்றில் தொல்லைப்பட்டு நடந்தோம். அதுவும் சில இடத்தில் முழங்கால் தொடை வரை சேற்றில் நடக்கவேண்டி இருந்தது.தோளில் வைத்திருந்த பையின் எடை, பசியின் கொடுமை, உடலின் வலி என்னால் நடக்கமுடியவில்லை. "இதுவரை நீ உழைச்ச உழைப்பையெல்லாம் இனிமேல் கரைபோய்ச் சேர்ப்பதுதான் உன் திறமை" என்றார் மற்றொரு வலைக்காரர். வலை இழுத்து இந்த வழியாகக் கரையேறும்போது பலரால் முடியாமல் இறால் பையைப் போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என அவர்கள் மட்டும் கரை சேர்வார்களாம். அந்த மாதிரியான வலியாம்!சித்தப்பாவாலும் நடக்க முடியவில்லை ஈரவலை எடை அதிகமாக இருந்தது அவருக்கு. எங்களுடன் வந்தவர்களுடைய நிலையும் அதேதான். இரவு முழுவதும் குடிதண்ணீர் இல்லாமல் தொண்டை வறண்டுவிட்டது. சித்தப்பா சொன்னது சரிதான் எனப் புரிந்தது. இனிமேல் இந்த பக்கமே வர வேண்டாம் என எண்ணிக் கொண்டேன். வாழ்க்கையில் வேற எதாவது வேலை கூட செய்திடலாம், ஆனா இந்த கொண்டை வலையை இழுக்கற வேலைக்கு மட்டும் வரவே கூடாதுனு தோன்றியது. எங்களுடன் வந்தவர்களும் "என்னடா வேலை இது, உயிரே போயிடும் போல இருக்குது இரண்டு நாள் கழித்துதான் வலைக்கு வரனுமென"  ஒருவர் மாறி ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.அடிவானம் வெளுக்கத் தொடங்கியது. கரையோரத்தில் மூட்டிய தீயைச் சுற்றி ஐந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். சித்தப்பாவிடம் யாரது? எனக் கேட்டேன். "அவர்கள் நாம் பிடித்துச்செல்லும் இறால்களை வாங்கும் வணிகர்கள். வலை இழுக்கற ஆட்கள் அந்த வணிகர்கிட்ட உடனடித் தேவைக்காக முன்பணம் வாங்கியிருப்பார்கள் அதனால் அந்த வணிகர் சொல்லுற விலைதான் நம்ம இறாலுக்குக் கிடைக்கும். கரையேறும் நமக்கு நாங்கள் இந்த இடத்தில்தான் இருக்கிறோம் என நமக்கு வழிகாட்டவே தீ மூட்டுவார்கள்" என்றார்.ஒரு வழியாகக் கரைவந்து சேர்ந்தோம். உடலில் உயிர் இருக்கிறது எனகரை வந்த பிறகுதான் உணர்ந்தேன். கரையேறிய அனைவரும் தலையில் கட்டியிருந்த உடையை எடுத்து உடலில் மாட்டிக்கொண்டோம். அவரவர் பிடித்த இறால்களை வணிகர்களிடம் கொடுத்தனர்.நானும் சித்தப்பாவும் பிடித்த இறால்களை வணிகரிடம் எடைபோட்டுக் கொடுத்தோம். வெவேறு வகையான இறாலுக்கு ஒவ்வொரு விலையென நானூற்றி தொண்ணுற்றி ஐந்து ருபாய்க்கு வணிகர் இறாலை எடுத்துக்கொண்டு எங்களிடம் பணத்தை கொடுத்தார். இதுவே இந்த இறால்களை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு போனால் ஆயிரம் ருபாய் கிடைத்திருக்கும். ஆனால் வணிகரிடம் உடனடித் தேவைக்காக முன்பணம் வாங்கியதனால் அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் எங்களுக்கு கிடைக்குமாம். இப்படித்தான் உழைக்கும் மக்களின் உழைப்பு வேறு ஒருத்தருக்குப் போய் சேருது.வலை இழுத்த அனைவரும் வணிகரிடம் இறால்களை போட்டு விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு மீதம் இருந்த இறால்களையும் சில நண்டுகளையும் வீட்டிற்கு கொண்டு வந்தோம்.தூக்கக் கலக்கத்தோடேயே வீட்டுத் திண்ணையில் படுத்தவன்தான். விழிப்பு வந்து எழுந்தபோது மறுநாள் காலையாகியிருந்தது! உடலில் வலி குறையவில்லை. அத்துணைக் கலைப்பு தெருவுக்கு வந்து பார்த்தேன். நேற்று இரவு மீண்டும் வலை இழுக்கச் சென்ற சித்தப்பாவும் மற்றவர்களும் ஈர வலையுடன் வந்துக் கொண்டிருந்தார்கள்! மா.ராஜ்குமார், பள்ளிப்பாளையம்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி