22 October 2017 12:20 pm
அது நகரின் பிரதான இடம். ஆனால் பார்ப்பதற்கு சற்று உள்ளடங்கியதுபோல் தோன்றும். பெரியபெரிய பங்களாக்கள் அமைந்தப் பகுதி அது. அப்பகுதி முழுவதும் மரங்கள் அடர்ந்து அழகிற்காகச் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு பார்ப்பதற்கு பசுமையும் குளிர்ச்சியும் பொருந்திய தோற்றம் கொண்ட இடமாக காட்சியளித்தது. அதன் மையத்தில் அமைந்த அப்பங்களாவின் உட்புறம் பரந்து விரிந்திருந்தது. வெளி வாசலுக்கும் நடு வாசலுக்கும் நடந்து போக மூன்று நிமிடங்களாவது ஆகும். ஆனால் இடைப்பட்ட பகுதியில் கொஞ்சங்கூட வெய்யில் தெரியாமல் கூரை வேய்ந்தது போல் மரங்களின் நிழல் போர்த்தப்பட்டிருக்கும். அதன் நடுவில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி சதாசிவம் பெரும்பாலும் அமர்ந்திருப்பதால் வெளியில் போவோரைப் பார்க்க முடியாது. எவ்வளவோ சதாசிவம் மகனிடம்… ‘கொஞ்சம் உயரத்தை குறச்சலா பண்ணினா மனுசங்களைப் பார்க்கலாம். இது சிறைசாலை மாதிரி இருக்குன்னு’ ஆனால் மகன் ஏத்துக் கிட்டாத்தானே..‘அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை காலம் கெட்டு கிடக்கு..’ மகனின் இந்த மறுமொழியால் வாயடைத்துப் போனார் சதாசிவம். வீட்டுக்குள்ளே மனிதர்களை பார்க்க முடியல இதுல வர்றவங்கள கேமிரா (ஒலிப்படக் கருவி)வைச்சு பதிவு வேற பண்றான். என மனதில் வைச்சு நொந்துக்கொள்வார். அதிலிருந்து மரம், செடி, கொடிகள் மலர்களிடம் உற்ற தோழமைக் காட்டி பேசுவதும், ரசிப்பதும் தான் அவரது பொழுது போக்கு. அவரும் பேத்தியும் மட்டும் அங்கு வசித்தனர். மகனும், மருமகளும் தில்லியில் உயர் பதவியில் இருக்க பேத்தியின் கல்லூரிப் படிப்புக்காக இவர்கள் இங்கே இருந்தனர்.ஒருநாள் பேத்தி கல்லூரி செல்ல வெளியில் வரும் பொழுது கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்த அஞ்சல் ஊழியரைப் பார்த்தார். அந்த நேரம் சரியான உச்சி வெய்யிலைக் கொண்டிருந்தது. ‘ஏதும் கடிதம் இருக்கா எனக்கு?’‘இல்ல சார். சைக்கிள் மிதிக்க முடியல.ரொம்ப வேர்த்தது கொஞ்ச நேரம் நின்னுகிலா முன்னு…’‘பரவாயில்ல…வாங்க , உள்ள வாங்க தண்ணி வேணா தரவா?’இப்படிதான் அஞ்சல்காரர் முத்து அவ்வீட்டு சதாசிவத்துக்கு நண்பரானார்.அதிலிருந்து முத்து வரும் நேரத்துக்கு சதாசிவம் சரியாகக் காத்திருப்பார்.தினமும் அஞ்சு நிமிசத்துக்கு குறைவான உரையாடலே அங்கு நிகழும்.தன்னைப் பார்த்ததுமே அந்த பெரியவரிடம் ஒரு மலர்ச்சி ஏற்படுவதை முத்து தன் மனைவி பிள்ளைகளிடம் கூறிய பொழுது.. ‘எல்லோரும் கடிதத்தை கையில் வாங்கியவுடன் நகர்ந்துடுவாங்க.. இவர் ஏன் என்மேல் வாஞ்சையோடு உள்ளார்னு புரியல..’‘பரவாயில்லங்க சித்த நேரம் பேசிட்டுத்தான் போங்களேன்..’ மனைவி சொல்வதுண்டு.ஒருநாள் அவர் முத்து உனக்காக இன்னைக்கு வெய்யில் குறையணுமுன்னு வேண்டிக்கிறேன் என்பார்.பரவாயில்ல சார். வேலைன்னு வந்தாச்சு.புள்ளைங்களுக்காக உழைக்கணுமே. ஏதோ காலம் ஓடுது என்றாலும் மனதிற்குள் எனக்காக இவர் கவலைப்படுகிறாரே என்ற ஒரு மகிழ்ச்சி மனதில் எழுந்தது.சைக்கிள் மணி அடிப்பதற்கு முன்பே இப்பெல்லாம் வாசல் கதவு திறந்திருப்பது வழக்கமாயிற்று.ஒருநாள் மோர் கொடுத்து இளைப்பாற்றினார்.‘ஐயா, மரத்தோட கிளைகளைக் கொஞ்சம் கழிச்சு விடலாமே. ரொம்ப அடர்த்தியாயிருக்கு. இந்த பூ பூக்கிற கொடிகளையும் வெட்டிவிடலாம். ஏதாவது பாம்பு, பூச்சி இருக்கப்போவுது’ என்றதற்கு..‘நீ வேற முத்து. இருந்தா இருந்துட்டுப் போவட்டுமே .. எவ்வளவு பறவைக் கத்துறது உனக்கும் கேட்குமே இதனாச்சும் என்னோட கூட இருக்கட்டும். எல்லாம் கூடு கட்டி இருக்குது அப்பப்ப சாப்பிட ஏதாவது வைப்பேன்’ என்றவரிடம் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியல.அன்றொரு நாள் கடுமையான வெய்யில், எனக்காக கையில் குடிக்க குளிர்நீர் வைத்துக் கொண்டு காத்திருந்தார். ‘வா.. முத்து உன்ன நினைச்சுகிட்டே இருந்தேன். இவ்வளவு அனல்ல எப்படி வருவேன்னு. ஒரு பத்து நிமிசம் மழை வந்தா நல்லாயிருக்கும் இல்லையா வெப்பம் தணியும்’ இருக்கட்டும் ஐயா மழை வந்தாலும் போயித்தானே ஆகணும் என்பேன்.பெரும்பாலும் அவரது உரையாடல் இளமைப் பருவத்தை ஒட்டியே அமையும்.‘அப்பல்லாம் காந்தியோட நெறிமுறைகளைக் கேட்டு என்னை ஒழுங்குப் படுத்திக்கிட்டேன். இப்ப, அதெல்லாம் நினைக்கவே முடியல. பள்ளியிலாச்சும் இதைப்பத்தி ஒரு வகுப்பை கட்டாயமா புள்ளைங்க படிக்கும்படி செஞ்சா நல்லாயிருக்கும்’ என்பார். அவரை முதலில் சார், என்றுதான் அழைப்பேன் ஒரு முறை கடிந்து கொண்டார். அவரே தம்மை ஐயா என்று அழைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும் அந்தத் தெருவில் நுழையும் போதே என்னோட சைக்கிள் வேகமாக போவது போல் தோன்றும். அன்னைக்கு அவர் முகத்துல கலையே இல்லை..‘ஏய்யா, என்னமோ மாதிரி இருக்கீங்க? ‘ஒன்னுமில்லேப்பா. பேத்தியோட கொஞ்சம் வாக்குவாதம். இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கப் போறேன். எந்த கேள்வி கேட்டாலும் பதில் இல்லப்பா. இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் மனுசங்களோட வாழலை மிசினோடதான் வாழறாங்க. என்னமோ எல்லாம் சரியாய் இருந்தால் சரிதான்’ என்றவர், திடீரென்று ‘முத்து என்னைக்காவது நீ வரும் போது மழை வரணும்’ என்பார். அவரே விளக்கத்தையும் சொல்வார். ‘மழை வந்தா நீ.. கடிதங்கள் நனையாதிருக்க உள்ளே வருவே இல்ல. அப்ப கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாமே’ என்பார்.எனக்கு என்னவோபோல் ஆனது. கண்கள் ஓரம் ஈராமாயின. இந்த பெரியவருக்கு என்மீது இத்தனை வாஞ்சையா? சிலிர்த்துப்போனேன். ஐயா நான் இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மத்தியானம் வரை உங்ககிட்டே பேசரேய்யா, கண்டிப்பா வருவேன். என்றேன். அவர் கண்களில் புத்தொளியுடன் பெரிய மகிழ்வு ஏற்பட்டது. ஆனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராத விதமாய் கிராமத்தில் ஒரு உறவினரின் வீட்டில் துக்கம் நடந்தது அங்கு சென்ற நான் மேலும் மூன்று நாள் தங்க வேண்டியதாகியது.எல்லாம் முடிந்து பணிக்கு வந்தேன் உடன் பணியாற்றும் ஒரு பெண்மணி ‘முத்து உங்களுக்கு தெரியாதா?’ என்றவர் பெரியவரைப் பற்றி சொன்னதுமே என் சைக்கைள் நேராக அந்த மருத்துவ மனைவாசலில் வந்தடைந்தது. நான் ரொம்ப சிரமப்படாமல் பெரியவரின் பேத்தியைக் கண்டு கொண்டேன்.’அங்கிள், தாத்தா தண்ணியிலே கால் வச்சு வழுக்கி விழுந்துட்டார். பின் தலையில அடி பட்டுடுச்சு, ஆபத்தான நிலைன்னு டாக்டருங்க சொல்றாங்க, அம்மாவும், அப்பாவும் வந்துகிட்டே இருக்காங்க..அவள் கண்ணீர் உகுத்தாள். எனக்கு வார்த்தைகள் வாயை விட்டுவெளியே வரவில்லை. எதோ ஒருபெரிய அடைப்பைக் கொண்டு நெஞ்சை அடைத்ததுபோல் இருந்தது. சே…! என்ன மனுசன் நான்..? என்மீதே எனக்கு கோபம் வந்தது. நாலு நாளாய் காணுமேன்னு தேடியிருப்பார் என் வரவை எதிர்ப் பார்த்திருப்பார். ‘முத்து உன் மேலே எனக்கு எப்படி ஒரு பிடிப்பு ஏற்பட்டுச்சுன்னே தெரியல.’‘உன்னோட பேசினாத்தான் அன்னயப் பொழுது போனமாதிரி இருக்கு. ‘நேரமாயிடுச்சே.. விடுமுறையோன்னுப் பார்த்தேன். அப்புறம் உடம்பு எதும் சரியாயில்லையோன்னு வேற கவலப்பட்டேன்.இப்படியாக பல்வேறு நிகழ்வுகள், உரையாடல்கள் என மனதை விட்டு அகலமறுத்தன. ஏதோ என்னிலிருந்து ஒன்று விடுபட்டது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. வெளியில் மழை பெய்துகொண்டிருந்தது.