15 August 2016 7:42 pm
உலகில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என மூன்று தர வரிசைகளைக் காணலாம். இதன் அளவு கோலாக அமைவது நாட்டின் பொருளாதாரம், உற்பத்தி, வளர்ச்சி, சமுகச் சமன்பாடு போன்றவைகளாகும். வளர்ந்த நாடுகளாக கணக்கில் கொள்ளப்படுகின்ற நாட்டில், தனிநபர் வருவாய் அதிகமாகவும் சமுக நிலையில் ஒரு சமன்பாட்டுத் தன்மையும் முதுமைக் காலத்திலும் வாழ்க்கையில் ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பதற்கான பாதுகாப்பு கூறுகளும் நிலவும். ஏழை நாடுகள் என்பவை இதற்கு நேர் எதிராக அமைவதாகும். வளரும் நாடுகள் என்ற பட்டியல்தான் தற்காலச் சூழலில் பெரிதும் பேசப்படுகின்ற ஒன்றாகும். இதில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் மக்கள் வளமிக்க இந்திய நாட்டின் மனித உழைப்புத் திறன் முறையாகப் பயன்படுத்தப் பட்டால் இதன் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஏனைய உலக நாடுகளை விட பெரிதும் வேகமான ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. இயற்கை வளமும் மனித வளமும் சந்தைப் பெருக்கமும் நிறைந்த இந்த நாட்டில் ஏன் இன்றும் உரிய வளர்ச்சியை எட்ட முடியவில்லை? மூன்றாம் தர நாடுகள் வரிசையிலேயே இன்று வரை இந்திய நாடு காணப்படுகிறது காரணம் என்ன? பொருள் வளமிக்க நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையும் மாளிகைகள் நிறைந்த நாட்டில் குடிசைகளின் எண்ணிக்கையும் நிரம்பக் காணப்படுவதற்கான காரணங்கள் என்ன? ஆங்கில ஏகாதி பத்தியத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மக்களாட்சித் தத்துவத்தைத் தழுவிய இந்திய நாட்டில் ஏன் இன்றும் முறையான வளர்ச்சி நிலையை எட்ட முடியவில்லை? என பல கேள்விகளுக்கு விடையாக அமைவது இந்தியாவின் சமுக அறிவியல் மட்டுமே காரணமாகும். 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கையில் இந்தியாவை ஒரு நடுத்தர மனித வள வளர்ச்சி நாடு என பட்டியலிட்டது. ஆனால் இந்த தரவரிசைகளில் அடங்கிய 158 நாடுகளில் இந்தியாவின் இடம் 119 வது ஆகும். இன்று வரை அந்த தரவரிசையில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்து விட வில்லை. இது விடுதலை பெற்ற இந்தியாவின் 69 ஆண்டு காலச் சாதனை எனக் கொள்ள இயலாது. எனவே இந்தியாவின் உண்மையான வளர்ச்சியின் அளவு கோலாகக் கருத வேண்டியது அதன் சமுக அமைப்பு முறை மற்றும் மக்களின் மகிழ்ச்சி மனநிலை போன்றவையாகும். இதை ஆராயும் போதுதான் 120 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்ற விளிம்பு மக்கள், தலித் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினராக அறியப்படும் மலைவாழ் மக்கள் ஆகிய இரண்டு குழுக்கள் மக்களாட்சி அமைப்பில் தனக்குரிய இடத்தை அல்லது சமன்பாட்டை இன்றுவரை எட்ட முடியாததன் உண்மை விளங்கும். இது தேசிய வளர்ச்சியின் சராசரி அளவுகோலை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் அமையப் பெற்ற படிநிலையே, சமுக அமைப்பில் இந்த மக்கள் ஓர் அடிமை பொருளாகவும் உழைக்கும் வர்க்கமாகவும் இன்று வரை நடத்தப்படுவதற்கும் அரசியல் சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்ற தன்மைகளுக்கும் காரணங்களாகும். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் சமுகப் புரட்சியாளர்கள் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், நாராயண குரு போன்றவர்களின் முயற்சியால் நாடாளுமன்றத்திலும் மாநில சட்ட மன்றங்களிலும் இட ஒதுக்கீட்டு முறை சட்டமாக்கப் பட்டது. தாழ்த்தப் பட்டவர்கள் & மலைவாழ் மக்களுக்கு என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் வேறு சாதியைச் சேர்ந்தவர் போட்டியிட இயலாது என்ற நிலை உருவானது. இவை இன்று கிராமப் பஞ்சாயத்து தேர்தல் வரை விரிவாக்கப் பட்டுள்ளது. மேலும் சட்டத்தின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்து மதக் கோயில்கள் பலவற்றில் இந்த மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலை தற்போது பெரும்பாலான கோயில்களில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தற்போது ஒரு தலித் நடுத்தர மக்கள் என்ற பிரிவை உருவாக்கியுள்ளன. இன்னும் பல மக்கள் இந்த வட்டத்திற்குள் வர தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தேசப்பிதா என்று வருணிக்கப்பட்ட மோகன்தாஸ் காந்தி இந்திய விடுதலைக்கு முன்பே சொன்ன எச்சரிக்கை இங்கு நினைவுகூரத் தக்கதாகும். தலித் மக்களுக்கு எதிராக பிற சாதிகள் மேற்கொள்ளும் வன்முறைகளும் ஒதுக்கின வாதமும் தொடரும் வரை இந்தியா விடுதலை பெற்றதாகவோ, வளர்ந்து விட்டதாகவோ ஒருபோதும் எண்ண முடியாது" அவர் அந்த மக்களை கடவுளின் குழந்தைகள் என்று பொருள்படும் வண்ணம் ‘ஹரிஜன்’ என புதிய நாமம் சூட்டினார். இந்த நிலையே அம்மக்களின் தாழ்வு நிலை, கல்வி அறிவற்ற நிலை, தீண்டாத்தகாத நிலையை உணர்த்துவதாக அமைந்தது. இந்தியாவின் பல கிராமங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு செத்துப் போன விலங்குகளை அடக்கம் செய்யும் தொழிலிலும் கட்டாயமாக ஈடுபடுத்தப் பட்டனர். அம்மக்களின் கல்வியறிவற்ற நிலையும் வறுமையும் இத்தொழிலைச் செய்ய காரணமாக அமைந்தன. இந்திய விடுதலைக்கு முன்னர் இந்த சாதிய அமைப்பிலிருந்து ஒரே ஒருவர்தான் எழுந்து வர முடிந்தது. அவர்தான் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். அவர்தான் அந்த மக்களுக்கு உரிய உரிமைகள் குறித்தும் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் முறைகள் குறித்தும் சாதிய அடக்குமுறைகள் குறித்தும் பேச ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் தலித் இன மக்களில் மிகச் சிலரே கல்வி கற்க வாய்ப்பு பெற்றனர். ஆனால் அம்பேத்கர் பரோடா மன்னரின் ஆதரவுடன் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டமும் படித்து சிறந்த மாணவராக பெருமையுடன் வெளி உலகிற்கு வந்தார். பிறவி இழிவும் கல்வி அறிவற்ற நிலையும் பாமரத் தன்மையும் வறுமையும் சூழ்ந்துள்ள இம்மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தர எண்ணி இவர்களுக்கு தனித் தொகுதி முறையை ஏற்படுத்த விரும்பினார். அப்போதுதான் சாதி இந்துக்களின், பார்ப்பனர்களின் பிடியிலிருந்து விலகி அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என எண்ணினார். ஆனால் மகாத்மா காந்தி இந்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்தார். பின்னர் இந்த ஆலோசனைக்கு எதிராக அவருடைய கடைசி ஆயுதமான உண்ணாநிலை போராட்டத்தைக் கையிலெடுத்தார். காந்தியுடன் கருத்து வேற்றுமை நிலையிலும் காந்தியின் உயிர் காப்பாற்றப் பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர் தன் நிலையைத் தளர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த தருணத்தில் இந்தியா விடுதலை பெறுகிறது. காங்கிரசு கட்சியில் அங்கத்தினராகக் கூட இல்லாத டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இதில் காந்தியின் பங்கு அதிகம். சட்ட அமைச்சராகப் பதவியேற்ற அம்பேத்கர் இந்தியாவின் ஒரு நிலையான அடித்தளம் கொண்ட அரசமைப்பை தன் கூர்ந்த அறிவினால் ஏற்படுத்துகின்றார். அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது ‘‘எப்போது நாம் உண்மையான விடுதலையைப் பெறப் போகிறோம்? ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைப்படும் நாம் எப்போது தலித் மக்களுக்கு சமுக விடுதலையை தர விருக்கிறோம்? இன்னும் எத்தனை நாட்களுக்கு அம்மக்களுக்கு சமுகத் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் சமநிலை மறுக்கப்படும்’’ என பல கேள்விகளை தொகுத்து இறுதியாக ‘‘அரசியல் சனநாயகத்தை பிழைக்க வைக்கப்பதற்காக விளிம்பு நிலை மக்களுக்கு சமன்பாடு மறுக்கப்படுவது ஏன்? இது தொடர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி ஏற்படாது என்பது மட்டுமல்ல புரட்சி வெடிக்கும். எனவே இந்த நிலைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளியிடாமல் இந்திய வளர்ச்சி என்பது முயற்கொம்பே!’’ என எச்சரித்தார். அவருடைய தொலை நோக்குப் பார்வை எவ்வளவு உண்மை என்பது இன்றைய இந்தியாவின் கண்கூடான நிலையாகத் தெரிகிறது. ஆங்காங்கே தலித் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியும் பல்வேறு தளங்களில் குறிப்பாக கல்வியறிவு பெற்று எழுத்தாளர்களாக, வழக்குரைஞர்களாக பல்வேறு அரசுப் பணிகளில் அமர்ந்துள்ள நிலையிலும் அவர்களின் சமுக இழிவும் பிற சமுகத்தினரால் ஒதுக்கப்படும் நிலையிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. 1975 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் செராபூரில் தலித் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சாதி இந்துக்களின் உத்தரவுகளை மீறியமைந்த ஒரு கிராமமே தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய மறுத்தனர். பின்னர் ஊடகங்களின் அழுத்தத்தினால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகள் பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தனர் என வழக்குப் பதியப்பட்டு பிணையில் வெளிவந்து சுற்றித் திரிந்தனர். தலித் மக்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். பாபு ஜெகசீவன்ராம், ஒரு பல்கலைக் கழப் பேராசிரியர் சிலையை பாதுகாப்பு அமைச்சர் என்ற நிலையில் திறந்து வைத்த நிலையிலும் அது தீட்டுப்பட்டு விட்டதாக மதவாதிகளால் சிறப்பு பூசைகள் மூலம் தூய்மை படுத்தப்பட்டது. பீகாரில் மற்றொரு கிராமத்தில் தலித் தெருவில் உள்ள ஒரு தெரு நாய் ஜாட் இனச் சிறுவனைப் பார்த்து குரைத்தது என்பதற்காக தலித் மக்கள் தாக்கப்பட்டு அதுவே பெரும் கலவரமாக முடிவுற்றது. தமிழ்நாட்டில் உத்தமபுரம் என்ற ஊரில் பொது வழியில் தலித் மக்கள் செல்லக் கூடாதென ஒரு தடுப்புச் சுவரே எழுப்பப்பட்டு பின்னர் அரசு உத்தரவுகளால் இடிக்கப்பட்ட நிலையிலும் அம்மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய அய்யன் திருவள்ளுவரின் சிலையை சில நாட்களுக்கு முன்பு அரித்துவாரில் சில இந்துத்துவ சாதுக்களால் அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ் அமைப்புகளின் நெருக்குதலுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டது. மகாராட்டிரா மாநிலத்தில் தலித் சமூகத்தில் பிறந்து படித்து ஒரு பெரிய பொருளாதார மேதையாக உருவெடுத்த நரேந்திர ஜாதவ் என்பவரின் தந்தையார் அனுபவித்தக் கொடுமைகள் ஏராளம். இப்படி தலித் மக்கள் சிலரின் வாழ்க்கை நிலை நகர்புறங்களில் ஒரு நடுத்தர நிலையை எட்டியிருக்கிறது. இந்தியாவின் பல கிராமங்களில் இன்று வரை சமுக இழிவு தொடர் கதை என்பதன் தொடர்ச்சிதான் அண்மையில் குசராத் மாநிலத்தில் உனா என்ற இடத்தில் பசு பாதுகாப்பு இயக்கம் என்று ஓர் இந்துத்துவ அமைப்பு வெறிச்செயலில் ஈடுபட்ட நிகழ்வு. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலாவின் தற்கொலை, கேரள மாநிலத்தில் செவிலியர் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் மாணவி, மும்பை மாநகரில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்ட அம்பேத்கர் பவன், தமிழ்நாட்டில் சாதிய நிலைகளைப் படம் பிடித்துக் காட்டிய பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனின் நிலை, பீகார் மாநிலத்தில் உயர்சாதி இளைஞர் இரண்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்களை அடித்து உதைத்து அவர்கள் வாயில் மூத்திரம் பெய்த நிகழ்வு, சென்னையில் ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் ஏற்படுத்திய அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் என்ற அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு முடக்கப்பட்ட நிலை, தில்லி மாநகரில் இரண்டு தலித் பச்சைக் குழந்தைகளை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கொடுமை என அடுக்கடுக்கான அடக்கு முறைகளும் கொடுமைகளும் இன்றளவும் தொடர்வதற்கான காரணங்கள் இந்துத்துவ அமைப்புகளின் தொடர் வெறித்தனமும் சாதிய அமைப்பு முறைகளும் அவற்றை கட்டிக் காக்க வேண்டுமென்ற நோக்கும் ஆகும். இதில் மிகக் கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறும் மாநிலங்களாக உத்திர பிரதேசம், இராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா போன்றவை திகழ்கிறதென மத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தலித்துகளின் மீதான அடக்கு முறைகளுக்காக பதியப்படும் வழக்குகளில் 29 விழுக்காடு மட்டுமே உறுதி செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு அதிலும் தண்டனைகள் குறைக்கப்படுகின்றன. ஆனால் தலித் மக்கள் மீது போடப்படும் வழக்குகளில் 92 விழுக்காடு மக்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இப்படி ஒரு கொடுமையான சமுக ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்ற ஒரு நாட்டில் எக்காலத்திலும் பொருளாதார வளர்ச்சி என்பது ஏற்பட வாய்ப்பில்லை. விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும் சமுகக் கொடுமைகளை ஒழிக்கா வண்ணம் அரசியல் அறிவும் முதிர்ச்சியும் ஏற்பட வில்லையெனில் இந்திய நாடு காந்தி சொன்னது போல் என்றுமே விடுதலை அடைந்த நாடாகக் கொள்ள முடியாது; அண்மையில் இந்திய தலைமையமைச்சர் பங்கேற்கும் பல நிகழ்வுகளில் சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராக சற்று மவுனம் களைத்து பரப்புரைகள் ஆற்றி வருகிறார். ஆனால் அவர் உரைக்கு ஏற்ப எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. சட்டங்கள் போடுவதால் மட்டும் தீர்வுகள் ஏற்பட்டு விடாது. மக்களின் மனதிலும் மாற்றம் தேவை. சமுகம் மற்றும் கல்விச் சமன்பாடு இல்லாமல் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவது ஒரு மாயையே! இதனால்தான் தற்போது மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டனர். இந்நிலை நீடிக்குமானால் மக்கள் புரட்சி வெடிப்பது சாத்தியமே! – வளவன், மும்பை"