14 December 2013 8:33 am
கோயில் பூசை செய்வோர் சிலையைக்கொண்டு விற்றல் போலும்வாயில் காத்து நிற்போர் வீட்டைவைத்து இழத்தல் போலும்!" பாஞ்சாலியை, கட்டிய கணவனே கொண்டு போய் எதிரிகளிடம் சூதுக்குப் பணயமாக வைத்த காட்சியை விளக்கும் போது வெகுண்டெழுந்து பாரதி சொன்னது இது. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு பண்பாடு உண்டு. அது அந்தச் சமூகத்தின் சுயமான அறிவு உற்பத்தி; அனுபவ உற்பத்தி! "பண்பாடு" என்னும் சொல் "பண்படு" என்னும் சொல்லில் இருந்து வருவது. பண்படுத்தப்பட்ட நிலம்தான் அதிக விளைச்சலைத் தரும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை உற்பத்தி செய்யும். தீங்கு தராத ருசியைத் தரும். கரடு முரடாக, சமமில்லாமல் இருந்த நிலப்பரப்பைச் சமப்படுத்தி, நல்விளைச்சலுக்குப் பண்படுத்துவது என்பது ஒரு நாளில் நடைபெறுகிற சாதனை இல்லை. தலைமுறை தலைமுறையாக அதற்கு உழைத்திருக்க வேண்டும். ஒரு நிலத்தைப் பண்படுத்தவே பல தலைமுறைகள் வேண்டும் என்றால், ஒரு சமூகத்தைப் பண்படுத்த எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்? அந்த அனுபவங்களின் பலனுக்குப் பெயர்தான் பண்பாடு. பண்பாட்டை இழப்பது என்பது நம் அறிவை இழப்பதாகும். நம் முன்னோர்களின் அனுபவங்களை இழப்பதாகும். நம்முடைய அனுபவங்களில் உயர்வு – தாழ்வு கற்பிக்கிற சில குப்பைகள் சேர்ந்திருக்கின்றன நண்பர்களே! "நாகரிகம்" என்ற பெயரில், நாம் சந்திக்கிற இழப்புகள் இன்னும் நமக்கு உறைக்கவே இல்லை. உதாரணமாக ஒன்றிரண்டு பேசுவோம்… நல்லனவெல்லாம் நாம் கூடிச் சிந்திப்போம். கருப்பு நிறம் என்பது நம் நிலப்பரப்பின் சூழலியல் சொத்து. சுட்டெரிக்கும் வெப்ப மண்டலவாசிகளுக்கு தோல் கறுப்பாகத்தான் இருக்கும், அப்படி இருந்தால்தான் அது ஆரோக்கியம். ஆனால், நமது இளைய தலைமுறை தங்கள் வருமானத்தில் பெருமளவு தோலை வெள்ளையாக்கச் செலவழிப்பது, அவர்கள் தம் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. நமது கடவுள்கள் கூட "கறுப்பர்கள்"தான். ஆனால், நாம் கருப்புத் தோலுடைய மணப்பெண்ணுக்கு அவளின் நிறத்தைக் காரணமாகக் காட்டி அதிக வரதட்சணை கேட்பது அவமானம்தானே? கருப்பும், சிவப்பும் வெறும் நிறமாக இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது. கறுத்த தோலுடையவன் கீழ்ச் சாதிக்காரன், வறுமைப் பட்டவன், நாகரிகம் அற்றவன், படிக்கத் தகுதியற்றவன், அழகற்றவன் என்னும் கருத்தை உருவாக்கினால்தான் அரிசியை விட அழகுக் கலவை(க்ரீம்)களை அதிக விலை வைத்து விற்க முடியும் என்கிற வணிக துர்புத்திக்கு நம் பண்பாடு பலியாகிப் போனது. பண்பாடு பலியாகிறது என்றால், நாமே பலியாகிவிட்டோம் என்று அர்த்தம். தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்ப மண்டலப் பகுதி. இங்கே வாழும் மனிதர்களுக்கு நீர்தான் முக்கியமான் ஆதாரம். வெப்பம் போக்கிக் குளிர்விப்பதால் நீரைத் தண்ணீர் என்று அழைத்தனர் நம் முன்னோர். நீருக்கும், நிலத்துக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்து போன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவர்ப்பாக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டு வைப்பது நமது பண்பாடு. நெல்லிக்காய் தின்று தண்ணீர்க் குடித்தால் இனிப்புச் சுவை தெரியும். நம் பாட்டன் விளைவித்த நெல்லிக்கு அமெரிக்கர்கள் "காப்புரிமை" கேட்கிறார்கள். ஒரு கூடை ஆப்பிளுக்கு ஒரு பெரு நெல்லி சமம் என்கிறது அறிவியல். நமக்கு நெல்லி உண்பது கேவலம். ஆப்பிள் உண்பது நாகரிகம். நெல்லியை இழக்கத் தயாராக இருப்பவர்கள், நீரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்களா என்ன? இயற்கையின் பேராற்றலில் திராவிடர்கள் நீரை முதன்மைப்படுத்தினர். திட உணவை விட இளநீர், மோர், நீராகாரம் போன்றவையே நம் தட்ப வெப்பத்திற்குத் தேவையான உணவுகள். நமக்கு வாழ்வாதாரமான நீரை எங்கிருந்தோ வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களிடமே தண்ணீரை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறோம். பாலை விட நீரின் விலை இன்று அதிகம். உணவு விடுதிகளில் தண்ணீர் வைப்பதற்குப் பதில் இப்போது வெளிநாட்டுக் குளிர் பானங்களை வைக்கிறார்கள். காரமான உணவுக்கு ஈரமான நீரை அருந்தாமல், வேதியல் பொருட்கள் கலந்த ஏதோ ஒரு பானத்தை அருந்துவது நாகரிகமாகி வருகிறது. "கூலி கொடுத்து சூன்யம் வைத்துக் கொள்வது" என்று வட தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. பத்து ரூபாய் தந்து நாம் குளிர்பானத்தை வாங்கவில்லை. பத்து ரூபாய் தந்து நம் பண்பாட்டை விற்றுக் கொண்டிருக்கிறோம். அடிமை தேசத்தில் அடிமையாக இருப்பதைக் கூட சகித்துக் கொள்ளலாம். விடுதலை பெற்ற நாட்டில் அடிமையாக இருப்பதை விட அவமானம் வேறென்ன இருக்க முடியும்? "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவை அல்ல!" என்பதுதான் நம் பண்பாடு பத்து ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குவது என்பது வெறும் காகித நோட்டோடு சம்பந்தமுடைய விடயமல்ல. "காசு இருக்கிறவன் சுகாதாரமாக இருந்து கொள்வான், பணம் இல்லாதவன் எப்படியாவது கெட்டுப் போகட்டும்" என்று சொல்கிற பணக்கார ஆதிக்கச் செயல் அது. என் தாகம் தீர்க்க இரண்டு ரூபாய் கோலி சோடாவோ, மோரோ, பதநீரோ போதுமானது. நான் செலவழிக்கிற அந்தத் தொகையும் என் சகோதரனுக்கே போய்ச் சேரும். என் வருமானத்தின் இரண்டு ரூபாய் மட்டுமே என் தாகத்திற்கு செலவழிக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது நான் எதற்காக யாரோ ஒரு வெளிநாட்டு முதலாளிகளுக்குப் பத்து ரூபாய் செலவழிக்க வேண்டும்? டெண்டுல்கரும், ஐஸ்வர்யா ராயும் சிரித்துக் கொண்டே குடிக்கிற பானங்களை, ஒருநாள் முழுக்க இந்த வெயிலில் உழைத்து முப்பது ரூபாய் சம்பளம் பெறுகிற சாதாரண மனிதனால் அருந்த முடியாது. உணவு என்பது எதையாவது உண்பது ஆகாது. ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளை பொருள்கள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தி வருகிற, தீங்கு இல்லாதவற்றை உண்பதுதான் உணவு. நிகழ்கால விரைவு உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) பண்பாட்டில் உடல் நலம் குறித்த அக்கறையை விடச் சுவை குறித்த பார்வையையே ஆளுமை செலுத்துகிறது. "மிகினும் குறையினும் நோய் செய்யும்!" என்று உணவையே நோயாகவும், மருந்தாகவும் பார்த்த சமூகம் நம்முடையது. தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள், பொரித்த உணவுகள் தமிழர்களின் உணவு ஆகாது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண்ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்து இருக்கிறது. பொருளாதாரச் சந்தையில் எண்ணெயின் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. உணவு, வலிமையைத் தருவதற்குப் பதிலாக நோயாளிகளை அதிகம் உற்பத்தி செய்யக் காரணம், நாம் நம் உணவுப் பண்பாட்டைத் தொலைத்ததுதான். "உன் பங்கு உணவில் ஒரு பிடியேனும் தானமிட்டு உண்!" உன்று போதித்த அதே தமிழன் அடுத்த வரியில், ஏற்பது இகழ்ச்சி! என்று மான உணர்வு ஊட்டுகிறான். சமத்துவமுள்ள தேசத்தில் யாரும் பிச்சை எடுத்து உண்பவர்களாக இருக்கக் கூடாது. உடலுழைக்க இயலாத முதியோர், ஊனமுற்றோர், விலங்குகள், துறவிகளுக்கு மனமுவந்து ஒரு பங்கைத் தருவது நம் கடமையாகவும், பெறுவது அவர்களின் உரிமையாகவும் இருப்பதுதான் பண்பாடு. குளிர் சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) என்கிற ஒரு கண்டுபிடிப்பு நம் வீட்டுக்குள் நுழையும் போது, இயலாதவர்களுக்குத் தானமிட வேண்டும் என்கிற நற்பண்பை வெளியில் அனுப்பி விட்டோம். குற்றம் அந்த அறிவியல் பொருளின் மேல் இல்லை. கருவிகள், நம் தொன்று தொட்ட பண்புகளைக் கருவறுக்க அனுமதிப்பது நம்முடைய குற்றம். நமக்கு வேலை செய்ய வந்தவர்கள் நம் எஜமானர்களாவதும் இப்படித்தான்! உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றில் காலத்துக்கேற்ப மாற்றம் நிகழ வேண்டும் என்பது இயல்புதான். ஆனால், அது பொருத்தமானதாக இருக்க வேண்டும். கோடை வாட்டும் ஒரு நிலப்பரப்புக்கு கோட்டும் சூட்டும் தீங்கு தரக்கூடிய உடைப் பழக்கங்கள். பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் மீது கூட நாம் இரக்கம் காட்டாத நாகரிக மனிதர்களாகி விட்டோம். "சிமென்ட் ஷீட்" வேயப்பட ஒரு வகுப்பறையில் கொளுத்தும் வெயிலில் வெம்மை தகிக்கும் சூழலில் உடல் முழுவதையும் மூடி மறைக்கிற, காற்றோட்டம் இல்லாத உடை உடுத்தி, இறுக்கமான காலணி (சூ) அணிவித்து போதாதென்று "டை" கட்டிப் படிக்கச் சொல்வது கருத்தியல் வன்முறை. மைனஸ் டிகிரி குளிர்ப் பிரதேசத்து குழந்தைகள் அப்படிப் படிப்பது அவர்களின் தேவை. அது அவர்களின் பண்பாடு. வெப்ப மண்டலப் பகுதிக் குழந்தைகள் அப்படி உடுத்திப் பள்ளிக்குப் போவதை நாகரிகம் என்றால் நாம் நம் அறிவையே அடகு வைத்துவிட்டோம் என்றுதானே பொருள். குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய பெற்றோர்களும், அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய அரசாங்கமுமே இந்தத் தீங்கை குழந்தைகளுக்குச் செய்கிற அவலத்தை எங்கே போய்ச் சொல்வது? கதராடை அவமானமாகவும். காற்று புகாத பாலிஸ்டர் துணி கௌரவமாகவும் ஆனது எப்படி? அந்த அவமானத்துக்கும் கௌரவத்துக்கும் இடையில்தான் தொலைந்து போனது நம் பண்பாடு. ஒற்றுமை உணர்த்தும் "கபடி" விளையாட்டு மறந்து, சகோதரனையே எதிரியாகப் பாவிக்கும் "டபிள்யூ டபிள்யூ எஃப்" (WWF) ஆட்டத்தை நம் குழந்தைகள் ரசிப்பது ஆரோக்கியமானதல்ல. "கூட்டுணர்வுக்கும், விளையாடுவதற்கும்தான் விளையாட்டு!" என்பது தமிழர் பண்பாடு. வெல்லுவதற்காக மட்டுமே விளையாட்டு என்பது வெளியிலிருந்து வந்த நாகரிகம். தேவைக்குச் சேமிப்பது! என்பது தமிழர் பண்பாடு. சேமிப்பை முறையான வழியில் செலவிட வேண்டும் என்பது அவர்களுக்கு முன்னோர் போதித்தது. முக்கியமாக சேமிப்பின் நோக்கம் கடனாளியாகக் கூடாது என்பதுதான். இன்று பல ஆயிரங்கள் சம்பாதிக்கிறவர்கள் கூட கடனாளியாகவே இருக்கிறார்கள். ஆண்டின் முதல் நாளே தவணை முறையில் வீட்டில் பொருட்களை வாங்கிக் குவிக்கிற பண்பாடு நம்மிடம் இன்று பரவி வருகிறது. நம்மிடம் நிகழ வேண்டிய தேவையான மாறுதல்கள்… பெண் விடுதலை, சாதி விடுதலை, எல்லோருக்கும் கல்வி, சமமான மருத்துவம் என்று அமைய வேண்டுமே ஒழிய, இருப்பதையும் தொலைப்பதாகக் கூடாது. தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடாமல், ஹேப்பி நியூ இயர் சொல்வதும், பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்காமல் தீபாவளியைக் கொண்டாடுவதும், அறிமுகமாகிற மனிதரிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பதுமென பண்பாட்டு அழிவின் அடையாளங்கள் நம்மில் நிறைய இருக்கின்றன.பட்டால், புரியும் வலி.பண்பாட்டால் காண்போம் நல் வழி!- தொ.பரமசிவன், பண்பாட்டு ஆய்வாளர்."