18 July 2016 4:03 pm
உலகம் முழுவதும் அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு மண்வளம், நீர்வளம் அமைந்து, அதன் அடிப்படையில் மண்ணுயிர் தோன்றி, வளர்ந்து வாழ்ந்து பல்வேறு உயிரினங்களாகப் பரிணமித்து இன்றைய காலகட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. முதலில் பண்படுவது மண். பண்பட்ட மண்ணிற்கு ஏற்றபடிதான் அதில் வாழும் உயிரினங்கள். மனிதனைப் பொறுத்தமட்டில் உடல் நிறம், முடிநிறம், உடல் அமைப்பு (மூக்கு, கண், புருவம், நெற்றி, உதடு) உயரம் உட்பட பல்வேறு வேறுபாட்டுடன் அமையப் பெற்றுள்ள மக்கள் தனித்தனி இனங்களாக பாகுபடுத்தப் பட்டு விட்டார்கள். விளைபொருட்களும் உணவு வகைகளும் மரம், செடி, கொடிகளும் விலங்கினங்களும் அந்தந்த மண்ணிற்கு உரித்தான முறையில் வளர்ந்து இயற்கைச் செல்வங்களாகி விட்டன. நீர் வளம் நிரம்பிய பகுதியில் நீர்தாங்கி வளரும் நெற்பயிர் வகைகளும் புற்களும், அதனை உண்டு வாழும் அசைபோடும் விலங்குகளாக ஆடு மாடுகள் உள்ளன. நீர்வளம் குன்றியப் பகுதியில் புஞ்சை தானிய வகைகள், வறட்சி தாங்கி வளரும் வரகு, கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற தானியங்கள், செடிகள், காட்டு மரங்கள், சப்பாத்திக் கள்ளி, ஈச்சை, பேரீச்சை, பனை போன்றவைகளும் ஒட்டகம் போன்ற விலங்கினங்களும் வாழ்கின்றன. குளிர் பகுதியில் கம்பளி போர்த்திய ஆட்டினங்கள், தொங்கும் முடி வளர்ந்தமாடுகள், கரடிகள், ஊசி இலை மரங்கள்; சூரியனையே காண முடியாத பனிமண்டலங்களில் வட, தென் துருவங்களில் பனிக்கரடிகள், பென்குயின் பறவைகள், பனியுறை நாய்கள், வகையறாக்கள் ஆகியவற்றை காணலாம். இவை வெட்ட வெளியிலும் பொந்துகளில் ஒளிந்தும் வாழக் கூடியவை. பகலில் உறங்கி இரவில் நடமாடுபவையாகவும் இருக்கும். இதே போல குடிநீர் அதிகம் தேவைப்படும் உயிரினங்கள் -& குடிநீர் அவ்வளவாகத் தேவைப்படாத உயிரினங்கள் என பல வகைப்பட்ட உயிரினங்களைக் கொண்ட உலகமாகி விட்டது. நீர் நிறைந்த பகுதியில் நீர்குளியல் விலங்குகள், நீர் கிடைக்காதப் பகுதியில் மண்குளியல் விலங்குகள் – இதுதான் இயற்கையான பரிமாணம். மனிதன் உட்பட அனைத்து விலங்கினங்களும் தனித்தனி வாழ்வியல் முறைகள் அமையப் பெற்று பல்வேறு உயிரினங்கள் வாழும் உலகமாகிவிட்டது. அந்தந்தப் பகுதியில் உள்ள உயிரினங்கள் அந்தந்தப் பகுதியில் விளையும் பழம், பருப்பு, காய்கள், இலை தழைகள், கிழங்குகளை உண்டு வாழும் மரபு வழியைக் கற்றுக் கொண்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்கின்றன அல்லவா! பெரிய மீன்கள் சிறிய மீன்களை சாப்பிட்டு வளர்வதும் அப்படித்தான். ஒரே மாதிரி வாழ்வியல் கொண்ட உலகமாக இருந்திருந்தால் ஒரே வித உணவு எப்படி உலகம் முழுவதும் சாத்தியப்படும்? பழங்கள் கொள்வன, கொட்டைகள் -& பருப்பு வகைகள் உண்பன, தானியங்கள், இலைதழைகளை உண்பன, சிறுசிறு புழு பூச்சிகளை மட்டும் உண்டு வாழ்வன – & என எத்தனை வகை! ஒன்றுக்கு இன்னொன்று உணவு; ஒன்றுக்கு ஒரு உணவு; மற்றொன்றிற்கு வேறு உணவு. அப்படி மனிதர்களுக்குள்ளும் பல்வேறு பிரிவுகள்; கருப்பர்கள் இனம்; நீல நிற மனிதன் இனம்; வெள்ளையர்கள்; சுருட்டைத் தலை முடியினர்; தங்க நிற முடியினர்; கருப்பு நிற முடியினர்; தடித்த உதடுகள்; சப்பை மூக்கினர்; நீண்ட கூரிய மூக்கினர்; நீலக் கண்கள்; கருமைக் கண்கள் என்று பாகுபடுத்தக் கூடிய அளவில் தனித்தனி குணாதிசயங்கள். கருப்பர்கள் இனம் ஆப்பிரிக்கப் பகுதியில் சுருட்டைத் தலைமுடியுடனும் தடித்த உதடுகள் கொண்டும், வெள்ளையர்கள் இனம் ஐரோப்பா பகுதியில் நீண்ட கூரிய மூக்கு உள்ளவர்களாகவும், குட்டை உருவம் தட்டை மூக்கு கொண்டவர்கள் மங்கோலிய இனமாக சீனா, ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளிலும், கிரேக்க நாட்டில் தங்க நிற முடி கொண்ட சுமேரிய இனமும், நடுத்தர உயரத்துடனும் வெள்ளையும் இல்லாமல் கருப்பும் இல்லாமல் நடுத்தர மா நிறத்திடனும் சற்றே பெருத்த தட்டையான மூக்கு, சற்றே தடித்த உதடுகள் அமைந்தவர்களாக தமிழ் (திராவிட) இன மக்களாகவும் பாகுபடுத்தப்பட்டு தனித்தனி இன மக்களாக உலகம் முழுதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்தந்த இனத்தின் உடல் அமைப்பு பல்லாயிரக் கணக்கான தலைமுறைகள் தாண்டியும் வம்சா வழித் தன்மை நிலைப்படுத்தப் பட்டுள்ளது என்று சொல்லத்தக்க அளவில் மூலக் கூறிலேயே (ஜீன் குரோமசோம்களில்) பொதிந்துள்ள இயற்கையான செல்வம் இது. இதுவே ஒவ்வோர் இனத்தின் அளப்பறிய செல்வம். மனிதர்கள் இன்று எங்கெல்லாம் காணக் கிடைக்கிறார்களோ அங்கேயே அவர்கள் தோன்றியவர்கள் அல்ல. எங்கோ ஓரிடத்தில் உயிராகத் தோன்றி, பலப்பல படிநிலைகளைக் கடந்து மனித உருவம் பெற்று, எங்கெல்லாமோ சிதறி பரவியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கடல் அலைகளும் புயல் காற்றலைகளும் பூகம்பங்களும் கடல் கோள் விழுங்கலும் மக்களை சிதறி ஓட வைத்து, உலகம் முழுதும் வீசி எறியப்பட்டனர். வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் மனித உடல் உறுப்புகள், குருதி நாளங்கள், அவையவைய அமைப்புகள், குரோமசோம்கள், ஜீன்கள், இரத்த அணுக்கள், ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது காட்டு விலங்காக வாழ்ந்த மனிதன் உலகின் ஏதோ ஒரு பகுதியில்தான் மனிதனாகப் பரிணமித்து இருக்கிறான் என்பது தெளிவு. அந்தந்தப் பகுதிதான் உயிர்கள் தோன்றுவதற்கு ஏற்றபடியான குளிர்ச்சி அடைந்த பகுதி. அதுதான் குமரிக் கண்டம் (இலெமுரியா) என்று சொல்லக் கூடிய முன்னைய தென்முனைப் பகுதி. அன்றையத் தமிழ் பகுதி; மனிதகுல நாற்றாங்கால்; மனித குலத்தின் தோற்றுவாய். அவன் பேசிய மொழி அவனைப் போலவே பல பரிமாணங்களைத் தாண்டி, இன்று தமிழ் மொழியாக நிற்கிறது. இப்போது இருப்பது போல நீர்பகுதி 71 விழுக்காடும் நிலப்பகுதி 29 விழுக்காடும் அப்போது இல்லை. அப்போதைய உலகம் நிலப்பகுதி பெருமளவாகவும் நீர்ப்பகுதி (கடல்) குறைவாகவும் இருந்தது. உலகமே ஒரே கண்டமாக இருந்த போது பாங்கியா கண்டம் என்ற பெயராக இருந்தது. காலம் நீர் பகுதியை பெருக்கி, நிலப்பகுதியை சுருக்கிக் கொண்டு வந்து விட்டது; வருகிறது. சிலப்பதிகாரக் கூற்றுப்படியே இருபெரும் ஆழிப் பேரலையால், கடல் கோள்களால் நிலம் விழுங்கப் பட்டுள்ளதை அறிய முடிகிறது. அதற்கும் முன் ஏற்பட்ட காற்று, புயல், மழை, வெள்ளம், பூகம்பம், கடல்கோள் இன்ன பிற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் கூட்டம் வெவ்வேறு திசை நோக்கி பிளந்து பிரிந்து சிதறியடிக்கப்பட்டனர். அவரவர் வாழ்ந்த துண்டிக்கப்பட்ட பகுதிக்கும் தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப மொழி மாற்றம், மொழி வளர்ச்சி, வாழ்க்கை முறை, உணவு வகைகள் என தனித்தனிக் கூறுகளாக மக்கள் இனம் பிரிக்கப்பட்டு விட்டது. இது ஒரு துன்பியல் சக்கரமாக இருந்தாலும் பழையன அழிந்து அழிந்துதான் புதியன பூக்க வேண்டும். அதுதான் உலக இயற்கை. இத்தனை இயற்கைப் பேரழிவுகளும் நிலத்தைப் பண்படுத்தத்தான் நடைபெற்று வந்திருக்கிறது என்பது அனுபவம் நமக்கு உணர்த்தும் செய்தி. ஒரே உருண்டையாக இருந்த உலகம் பல்வேறு பகுதியாகப் பிரிந்து பல கண்டங்களாக நாடுகளாகப் பெருகி விட்டது. ஒரே பகுதியில் உற்பத்தியான மனிதர்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு நாட்டவராகி விட்டார்கள். சிறுசான்று கூற வேண்டுமானால், ஒரே பகுதியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட வம்சா வழித்தன்மை (ஜீன்)தான் இன்றும் கண்டம் விட்டுக் கண்டம், சரணாலயம் நோக்கிப் பறந்து வரும் பறவைக் கூட்டங்களின் மிச்ச சொச்ச தன்மையாக இருக்கலாம். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் உயிர் இழப்பிலிருந்து தப்பிக்க, மனிதன் சில நுட்பங்களைக் கற்றுக் கொள்ள, கற்றுக் கொள்ள கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள கற்றுக்கொள்ள மனித இறப்புகள் குறைந்து மக்கள் தொகை பெருகி விட்டது. பிறந்த மண் தாய்நாடு -& குமரிக்கண்டம் &- மறந்து போயிற்று. சகோதரப் பாசமும், தாய்வழி இன உணர்வும் மறந்தே போயிற்று. தாய்மொழி திரிந்து போயிற்று. சூழலுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய மனிதன் மாறி மாறி மாற்றி மாற்றி முற்றிலும் மாறுபாடு அடைந்து தன் பிறப்பு -& பூர்வீகம் பற்றிய செய்தி எதுவும் அறியாதவனாக வளர்ந்து விட்டான். பண்பாடு, பழக்க வழக்கம், அந்தந்த மண்ணுக்கேற்ற மரபுடன் புதிய பரிமான வளர்ச்சியில் வளர்ந்து, மக்கள் கூறு போடப்பட்டு போனார்கள். ஆகவே தனித்தனி நாடு; தனித்தனி மொழி; தனித்தனி பண்பாடு; தனித்தனி பழக்கவழக்கம். எல்லாமே வேறுவேறாக சிதறிப் போய் விட்டனர். காலம் என்னதான் சிதைந்து அழித்தாலும் எந்த நாட்டினராக இருந்தாலும் ஒரே வித உடல் அமைப்பு என்கிற போது எல்லாரும் சகோதரர்களே என்கிற மனிதநேய உண்மையை மறந்து விடக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று அன்று பாடியவனும் தமிழன் மட்டுமே என்பது பெருமைப்படக் கூடிய செய்தி. ஆம்! தமிழர்களுக்கு பகை கிடையாது, மக்கள் அனைவரும் உடன் பிறப்புகள், உலக மக்களை ஒருதாய் பிள்ளையாகக் கருதி சகோதர வாஞ்சையோடு தொண்டு செய்யும் தூய அன்புள்ளம் கொண்டவர்கள். இதுதானே மனித நேயம்! மனிதம். மனிதர்களுக்கு அடிப்படைத் தேவையான பண்புநலன்; இதை விட வேறு என்ன இருக்க முடியும்? இந்த பண்பு நலன், இந்தியா முழுதும் உலகம் முழுதும் இருந்தால் நமக்கு எப்படி எதிரிகள் ஏற்படுவார்கள்? எதிரிகள் இல்லாத போது நமக்கு எதற்கு முப்படை? அணுகுண்டு? அழித்தொழிப்பு ஆயுதங்கள்? இந்தியாவின் மிகப் பெரிய செலவு இராணுவச் செலவுதானே! பாதுகாப்புச் செலவு என்பதாக என்னதான் கூறிக் கொண்டாலும் பாதுகாப்புக் கவசத்திற்காகத் தானே செலவிடப்படுகிறது? பாசமுள்ள இடத்தில் பாதுகாப்புக் கவசம் எதற்கு? உலகம் முழுதும் இராணுவப் பாதுகாப்பிற்காகத்தானே பெருந்தொகை செலவிடப்படுகிறது! எல்லோருமே எதிரிகள்தாமா? உறவுநாடு என்ற ஒன்றே கிடையாது? உடன் பிறந்தவர்களாக, இரத்த உறவுப் பாசமுடன் பார்க்கவே மாட்டோமா? ஆக, ஏதோ இன்னதென்று தெரியாத சிக்கல் வளைக்குள் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகவே புரிகிறது. மக்களை நேசிக்கச் சொல்லி இந்து மதமும் இசுலாமியமும் சொல்கிறது; கிறித்துவ மதமும் சொல்கிறது; புத்தமதமும் சொல்கிறது; சீக்கிய மதமும் சொல்கிறது. பொதுவாக எல்லா மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அன்புதான் இன்பம்; அன்புதான் இன்ப ஊற்று; அன்புதான் உலக மகாசோதி என்று யார் யார் நேசிக்கச் சொல்கிறார்களோ அவர்கள்தான் வரலாறு நெடுகிலும் கூட்டம் கூட்டமாக அழித்தொழிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். சமணர்கள் 8000 பேர் கழுவேற்றி அழிக்கப்படவில்லையா? இன்றைய நிலையிலும் இலங்கையில் புத்த மதக்காரர்கள் தமிழர்களை அழித்தொழிப்பதிலேயே விடாப்பிடியாக இல்லையா? தமிழர்களின் தியாகமும் மரணமும் அவர்கள் உள்ளத்தில் மனிதப் பாசத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? இரக்கத்தை ஒரு அனுதாபத்தையாகிலும் ஏற்படுத்தி இருக்கிறதா? குஜராத் கலவரத்தில் ஒரிசாவில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட கலவரத்தில் எத்தனை கிறித்துவ உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. வடநாட்டில் எத்தனை புத்த விகாரங்கள் அழிக்கப்பட்டன! தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புத்த சிலைகள் தோண்டி எடுக்கப் படுகின்றனவேயன்றி, புத்த மதம் இருந்ததற்கான சான்று ஏதாகிலும் கிடைக்க முடிகிறதா? டெல்லி மாநகரில் தேடித் தேடிப் பிடித்து ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கிய உயிர்கள் வெட்டி மாய்க்கப்பட வில்லையா? எல்லா கொடுமைகளும் மதத்தின் பெயரால் அந்தந்த மதத்தினை கடவுளர்களின் பெயரால்தானே நியாயப் படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது நாம் அடைந்து வரும் படிப்பினை மதமும் சரி அதன் கடவுளர்களும் சரி நியாயவாதிகளாக நடந்து கொள்ளவே இல்லை. அதன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள கண்டும் காணாமல் வாய்மூடி மௌனியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. கடவுளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் குணாதிசயம் போல, கடவுள்கள் சக்தியோடு இருந்து விட்டால் அதைவிட இராணுவப் பாதுகாப்புக் கவசம் தேவையே இல்லையே! அப்படியானால் கடவுள் இருப்பதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்துத் தீர வேண்டிய நிலை இன்றைய நிலை. எந்த மனிதனும் பிறந்து விட்டான் என்பதற்காக அந்தந்த மதத்தைச் சார்ந்து அந்தந்த மதக்கடவுளைச் சார்ந்து வாழ்ந்து வருகிறானேயன்றி, யாரும் அறிவு பெற்ற பிறகு, அந்த மதம் சிறந்ததா இந்த மதம் சிறந்ததா என்று ஆராய்ந்து மதத்தைத் தழுவுவதே இல்லை. மதத்தையும் அதன் கதாநாயகன் கடவுளையும் யாரும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதே இல்லை. எந்த நாட்டில் எந்த மதத்தில் பிறந்துள்ளானோ அதுதான் அவனைப் பொறுத்த மட்டில், உண்மை பேசும் உயர்ந்த மதம்! இல்லையா? நடந்து வரும் ஒன்றிரண்டு மத மாற்றங்கள், வயிற்றுப் பிழைப்புக்காக அல்லது போலித்தன பலாபலன்களை நம்ப வைத்ததால் ஏற்பட்ட மாற்றங்களேயன்றி, வேறு மனமறிந்த மாற்றம் என்று சொல்வதற்கில்லை. கோடிக்கணக்கான கூட்டத்தின் இடையில் ஒன்றிரண்டு மத மாற்றம் என்பது மிகப்பெரிய சலனத்தையோ இழப்பையோ செய்து விடப் போவதில்லை. அப்படியானால் சகோதர்களாகிய நாம், ஒருதாய் மக்களாகிய நாம் எல்லைகளால் மதங்களால் மொழிகளால் நிறத்தால் பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்து பகைமை பாராட்டி எதிரிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே! ஒரு தெரு நாய் அடுத்த தெரு நாய்களை எதிரியாகவே பார்த்துப் பழக்கப்பட்டு விட்டது போல மனிதனும் அடுத்த நாட்டுக்காரர்களை எதிரியாகவே பார்த்துப் பழகி விட்டான் என்பது சரிதானே! மக்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, அரசாங்கம்தான் எதிரியைச் சுட்டிக்காட்டி விரோதத்தை வளர்த்து வருகிறது. ஆக நாம் பெறும் அனுபவம் நாட்டிற்கு இராணுவமும் அதற்கு கோடிக்கணக்கில் செலவிடுவதும் தேவைதான் என்று நம்புவதற்கும் மதத்தால் மக்களை அன்புடையவர்களாக ஆக்கி விட முடியும் என்று ஏற்றுக் கொள்வதற்கும் இடமே இல்லை; நடக்க முடியாதவை. அப்படியானால் நாட்டிற்கு ராணுவமும் மதமும் தேவையில்லாதது என்றாகிறது. இராணுவம் ஒழிந்த நாடும் மதம் ஒழிந்த மக்களும் சாத்தியப்படுமானால் மட்டுமே ஒட்டுமொத்த உலக மக்கள் சமுதாயம், நிரந்தர மகிழ்ச்சியில் திளைக்க முடியும். நடைமுறையில் உள்ள நாட்டின் ஆட்சி முறையை (இராணுவம் அமைத்தலை) மக்கள் வாழ்வியல் முறையை (மதம் சார்ந்து வாழ்தலை) மறுபரிசீலனை செய்துத் தீர வேண்டிய கட்டாயத்திற்குள் வந்திருக்கிறோம். எத்தனையோ உயிர்களோடு மனிதனும் ஒரு உயிராக வாழ்பவன், தானே கற்பித்துக் கொண்ட மதத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் வாழ வேண்டுமா? விரும்பினால் இருந்து கொள்ளவும் இல்லையேல் மதம் மறுத்து வாழவும் சுதந்திரம் வேண்டாமா? – மருத்துவர் காசிப்பிச்சை, அரியலூர்"