ஓசையில்லா ஒளிவிளக்கு – நேர்முகம்: சொல்கேளான் ஏ.வி,கிரி. - தமிழ் இலெமுரியா

17 February 2015 1:34 pm

மெழுகு   கரைவது   துன்பம் என்றால், ஒளி   இல்லை.  கல்வி  துன்பம்  என்றால், வாழ்வில் உயர்வு இல்லை.  நாம் துன்பம் என்று நினைக்கும் அனைத்துமே நம்முடைய  வளர்ச்சிக்காகத்தான். இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல இன்பமும் துன்பமும்  மாறி மாறி வருவதே  வாழ்க்கை. இருட்டைப் பழிப்பதைவிட ஒரு மெழுகுவத்தியின் வழி ஒளியேற்றுவது மேல் என்னும் கருத்தொற்றுமையோடு செய்துவரும் தொழில்,  மெழுகுவத்தித்  தொழிலானாலும்   சமுதாய  விடியலுக்காகப்  பாடுபட்டுவரும்      இவரின்    தொண்டு  சிறப்புடையது.     சிறப்பான கவிஞராக ஒருவர் திகழலாம். ஆனால் சிறந்த மனிதராக விளங்குவது இந்தக் காலத்தில் அரிது. சொல்கேளான் ஏ.வி.கிரி, மிகச்சிறந்த பண்பாளர். எழுத்தையும் பேச்சையும் செயலையும் ஒன்றாகக் கொண்டு வாழும் மனிதநேயம் கொண்ட கவிஞர். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர். எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்து நடந்து வந்தவர்; சென்னை- தாம்பரம்  கடப்பேரிப் பகுதியில் வாழ்பவர். திரைத்துறையில் இவரை வெகுவாகக் கவர்ந்த திரைத்தாரகை நாட்டியப் பேரொளி பத்மினி. சொல்கேளான், சோர்வடையான் என்னும் பெயர்களில் அன்றாட நடப்புகளை அலசி ஆராய்ந்து எழுத்தாடல் நடத்தி முகநூலில் வலம் வருபவர். பிறரைச் சிரிக்க வைத்துத் தானும் சிரித்து மகிழும் நகைச்சுவை விரும்பி. இவரது சிரித்த முகம் சிந்தையைக் கவரும்; செயல்வடிவம் மலைக்க வைக்கும். இதுவரை நான்கு நூல்கள் எழுதியுள்ள  சொல்கேளான்,  பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகிச்  செல்லாத, தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர்.  வெளிப்படையான வாழ்வுக்கும் இனிமையான வார்த்தைக்கும் உரிமையானவர். ஓசையில்லா ஒளிவிளக்காக விளங்கும் இமையாத கண்களால் இருளகல நோக்கும் சொல்கேளான், நேர்முகத்தில் என்ன சொல்லியிருக்கிறார். பார்ப்போமா இங்கேதங்களைப்பற்றிய ஓர் அறிமுகத்துடன் நேர்முகத்தைத் தொடங்கலாமே!     பெற்றோர் வைத்த பெயர் விருத்தகிரி. என் தந்தையார் விருத்தாசலத்தில் மரக்கடை வைத்திருந்த காலத்தில் நான் பிறந்ததனால், அங்கு அமைந்திருந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் நினைவாக அப்பெயர் வைத்தார். பள்ளியில் வைத்த பெயர் ஏ.வி.கிரி. அந்தப்பெயரே இன்றும்  நிலைத்துவிட்டது.உங்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தது உழைப்பா? வழிபாடுகளா?      படிக்கும் காலத்தில் இருந்து என் மனத்தில் ஆழப்பதிந்த ஒரு திருக்குறள் தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்னும் குறள்தான். உழைப்புதான் மனிதர்களுக்கு உயர்வைத் தரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. வழிபாடுகள் என்பது ஒரு போதை மாதிரி. அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் தற்காலிக நிவாரணம் என்னும் துயர்தணிப்பு. ஓர் எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற, பல ஆண்டுகள் பயிற்சி தேவைப்படுகிறது. வழிபாடுகள் வெற்றியைத் தருமென்றால், நோகாமல் சுலபமாக வெற்றி பெற்று விடலாமே? செயல்பாடுகள்தான் உழைப்புதான் வெற்றியைத் தரும் என்பதை இன்றைய வெற்றியாளர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். இன்றைய உலகப் பணக்காரர் கணினி புகழ் பில்கேட்ஸ் சொல்வார், நீ ஏழையாகப் பிறந்தால் அது உன் தவறல்ல..ஆனால், நீ ஏழையாக இறந்தால் அது உன் தவறு . இக்கருத்து முற்றிலும் உண்மை.உங்களுக்கான மறைபொருள் அதாவது புனைபெயர் எப்படி வந்தது?        என் தந்தையார் பெரிய பக்திமான். பெரிய மர வியாபாரியாக மதுராந்தகத்தில் வியாபாரம் செய்து செல்வந்தராக இருந்தவர். காலத்தின் மாற்றத்தால் எல்லாவற்றையும் இழந்து துறவியாகி திருவண்ணாமலை சென்று இருந்தவர். சிறுவயதில் இருந்தே அவருக்கும் எனக்கும் பக்தி விவகாரத்தில் முரணான கருத்துகள்தான். அப்பா சொல்வதை மகன் கேட்பதில்லை. என் உடன் பிறந்தவர்கள் அப்படி இல்லை.நான் ஒருவன் மட்டும்தான் அப்பா சொல்லைக் கேளாதவன். அதனால் என் அப்பா எனக்கு வைத்த பட்டப்பெயர் தான்   "சொல்கேளான்". இப்பெயர் எனக்குப் பிடித்துப் போனதால் அதையே என் புனைபெயராக வைத்துக் கொண்டேன். இந்தப் பெயர் இலக்கிய உலகில் எல்லாரையும் என்னை வித்தியாசமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் பெயரை நான் விரும்பியதற்கு இன்னொரு காரணமும் உண்டு.தந்தை பெரியார் நூல்களைப் படித்த காலத்தில் அவர் சொன்னது, அவர் சொன்னார் இவர் சொன்னார் நான் சொன்னேன் என்று எதையும் கேட்காதீர்கள். உங்கள் அறிவுக்குப் பட்டது எதுவோ அதைச் சிந்தியுங்கள்..அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனாலேயே இந்த "சொல்கேளான்" என்னும் பெயரில் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. உங்கள் வாழ்விணையர் பற்றி…..      என் மனைவி பெயர் கனகலட்சுமி. திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர் சத்திரத்தில் பிறந்து வளர்ந்தவர். என்னுடைய வளர்ச்சிக்கு முழுமுதற் காரணமானவர். இன்றைக்கும் எங்கள் நிறுவனத்தைத் திறம்பட நிருவகிப்பவர். ஒரு குடும்பம் சிறப்புற வேண்டுமானால், அக்குடும்பத்தில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும். அவர்களும் ஆர்வமாக கணவனுக்கு உதவி புரிய வேண்டும். அது நம் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். அப்படிப்பட்ட குடும்பம்தான் பலகலைக்கழகமாக விளங்கும்.தாங்கள் ஒரு கவிஞராக உருவெடுத்தது எப்படி?        மதுராந்தகத்தில் என் தந்தையாரின் மரக்கடைக்கு, இலக்கிய வீதி இனியவன் மரம் வாங்க வருவார்.அப்போது அவருடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அவர், கதை கட்டுரைகள் எழுதுவார். அவரின் நட்பால் அதிகமான புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. அதன் விளைவால் எழுத ஆர்வம் வந்தது. முதலில்  கதைகள் எழுதினேன்.  பின்னர் கவிதைகள் எழுதுவது சுலபமாக இருந்தது. சொல்ல வருவதைச் சுருக்கமாக மூன்று வரிகளில் சொல்லும் ஹைகூ கவிதைகள் புகழ் பெற்று இருந்தது. விளையாட்டாக நண்பர்களுடன் எழுதி அவர்கள் பாராட்டியபின் கவிஞனாக மாறினேன். அதிகமான நூல்கள் படித்ததும் ஒரு காரணம். உங்களுக்குப் பிடித்த உங்கள் கதைகளில் ஒன்றைச் சொல்லுங்களே..      "தெளிவு" என்னும் ஒரு சொந்த   அனுபவத்தை  சிறுகதையாக எழுதியிருக்கிறேன்.  அது ஓர் உண்மைச்  சம்பவம்    என்றே கொள்ளலாம்.  அது எனக்குப் பிடித்தமான சிறுகதை.  நான் மெழுகுவர்த்தி வியாபாரம் தொடங்கி தெருத் தெருவாகக் கடைகடையாக ஏறி இறங்கி வியாபாரம் செய்த காலவோட்டம்.   செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கால மாற்றத்தால் எல்லாம் இழந்து மிகவும் வறுமையைச் சந்தித்த காலம் அது. ஒரு விற்பனையாளனாக அலைந்த அந்த நேரத்தில் சோர்வடைந்து வாழ்க்கையை வெறுத்தது தனிக்கதை. அந்த நேரம் சோப் விற்பனை செய்யும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் படிக்க வசதி வாய்ப்பு இல்லாமல், குடும்பச் சூழ்நிலை காரணமாக சோப் விற்பனையாளராக வந்ததாகச் சொன்னார். "பெண்ணாக இருந்து அழகாகவும் இருந்துவிட்டால், இப்படி விற்பனையாளராக வரக் கூடாது சார். உங்களை மாதிரி ஆணாக இருந்தால் பரவாயில்லை" அந்தப் பெண் பேசும்போது சொன்னார். அப்போதுதான் எனக்கு யாரோ என் கன்னத்தில் அறைவது போன்று இருந்தது. அன்றிலிருந்து எனக்கு சோர்வு சலிப்பு வெறுப்பு போன இடம் தெரியவில்லை என்று முடித்திருந்தேன்.எண்ணெய் வேண்டாத விளக்கு, எடுப்பார் கைவிளக்கு, கண்ணீர் விட்டுக் கலங்கிடும் விளக்கு, தன்னைத் தானே விழுங்கிடும் விளக்கு, ஏற்றிவைத்த இடத்திலேயே நின்று எரியும் விளக்கு…இத்தனைச் சிறப்புகள் உள்ளடங்கிய மெழுகுதிரித் தொழிலைப் பற்றி சற்றே விளக்குவீர்களா?      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அத்தனை சிறப்புகள் உள்ளவைதான் மெழுகுவத்தி. கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டுபிடித்த பிறகு ஒரு காலகட்டத்தில் விலங்கின் கொழுப்பைப் பயன்படுத்தி அதனைத் திரவமாக்கி அதில் திரிபோட்டு நீண்டநேரம் எரிய வைத்தார்கள். அன்றைய அறிவியல் வளர்ச்சிதான் இப்போது பூமியில் இருந்து எடுக்கப்பெறும் கச்சாப் பொருளான குரூட் எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற  பொருள்களை எடுத்துவிட்டு அதன் கழிவுகளைச் சுத்தரித்து பாரபின் மெழுகாக மாற்றுகிறார்கள். இந்தப் பாரபின் மெழுகு பல பிரிவுகளைக் கொண்டவை. சாதாரணமாக மெழுகுவத்தி என்றுதான் சொல்வோம். ஆனால் இந்த மெழுகு பல தொழில்களுக்குப் பயன்படுகிறது.  சிறப்பு வாய்ந்த இந்த மெழுகால் மெழுகுவத்தியைத் தயாரிக்கும்போது, பல வழிகளில் மக்களுக்குப் பயன்படுகிறது. முக்கியமாக மின்தடைக் காலங்களில் வீடுகளில் ஒளி கொடுக்க..தேவாலயங்களில் வெளிச்சமிட, விழாக்காலங்களில் வீடுகளில் தீப ஒளிகளாக விளக்கேற்ற, மங்கல நிகழ்வுகளைத் தொடங்கி வைக்க குத்துவிளக்கேற்ற, இறுதி வணக்கம் செலுத்தவும் நினைவேந்தல் செய்யவும் இப்படியான எல்லாக் காலங்களிலும் மெழுகுவத்திக்குப் பயன்பாடுகள் உள்ளன. நாகரிகம் வளர்ந்த இந்தக் காலங்களில் நட்சத்திர உணவு விடுதிகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, ஒவ்வொரு மேசைக்கும் ஒரு மெழுகுவத்தி ஏற்றி வைத்து "கேண்டில் லைட் டின்னர்" என்று பெயரிட்டு உணவு அருந்துகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நட்சத்திர விடுதிக் கழிவறைகளில் நறுமணம் கமழ்வதற்காக சில வேதியியல் பொருள்களைச் சூடாக்க கீழே மெழுகுவத்தியை ஏற்றி வைத்து நறுமணம் பரவச்செய்கிறார்கள்.எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் எந்தவகையிலும் பயன்படுத்தட்டும். எங்களின் குறிக்கோள் உறுதியானது தெளிவானது. அதை எழுதியே வைத்திருக்கிறோம்…       எங்கள் மெழுகுவத்தி       மாளிகை மாடத்தை         அலங்கரிக்கும்       மகர விளக்கு அல்ல!       ஏழையின் குடிலில்       இருளைக் கிழிக்கும்       கலங்கரை விளக்கு! நாங்கள் கடந்த நாற்பத்திரண்டு (42) ஆண்டுகளாகச் சென்னை மாநகரில் இந்த மெழுகுவத்தித் தொழிலில் முன்னணியில் இருப்பதற்கு எங்களின் இலட்சியப் பற்றும் ஒரு காரணமாக இருக்கலாம். காமராசருக்குப் பிறகு கல்வி, பெரியாரால் எழுத்துச் சீர்திருத்தம், நாற்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சாளரங்கள் கிடைத்துவிட்டன. நம் தமிழ்மொழி புத்துயிர் பெற்றுள்ளதா?       இந்தநாட்டில் மக்களுக்கு அறிவு வளர வேண்டும் என்று பாடுபட்ட போராடிய ஒரே தலைவர் தந்தை பெரியார் தான். அறிவு வளர முக்கியமானது மொழி. அவரவர் தாய்மொழியைக் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். அது காலத்தின் கட்டாயம். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னார் என்று சிலர் குற்றம் சாற்றினார்கள். பெரியார் தம் கருத்தில் உறுதியாக இருந்தார். காரணம் அதுதான் உண்மை. பண்டையத் தமிழ்மொழி எழுத்துகள் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ் எண்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? ஆங்கில மொழிபோல குறைவான எழுத்துகளைக் கொண்டதாக மொழி இருந்தால், எத்தனை எளிதாக இருக்கும்? அதற்குத் தேவை சீர்திருத்தம் தானே..சட்டங்கள்தானே? காலத்திற்கு ஏற்ப மனிதன் மாறும்போது மொழியையும் சீர்திருத்தம் செய்வதில் என்ன தவறு? பெரியார் மட்டும்தானே சிந்தித்தார். ஓர் எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால் இன்று அமெரிக்காவில் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். இதுதானே அறிவார்ந்த செயல். தந்தை பெரியாரின் சிந்தனைகளைத்தான் பெருந்தலைவர் காமராசர் பின்பற்றி, தம் ஆட்சியில் கல்வியை வளர்த்து தமிழ்நாட்டில் பாமர மக்களையும் எளியவர்களையும் படிக்க வைத்து பயனடையச் செய்தார். இது வரலாறு. தமிழ் புத்துயிர் பெற்றுள்ளது என்பதைவிட புத்துயர்வு அடைந்துள்ளது கணினி தொழில்நுட்ப வழி. எதையும் மீட்டெடுக்க தமிழால் முடியும். ஆனால் தமிழர்களால்தான் முடிவதில்லை. திங்கள், செவ்வாய்க் கிழமைகளைக் கூட மண்டே, டியூஸ்டே என்றுதானே உச்சரிக்கிறார்கள். கலப்பட மொழிக்காரர்களாக மாறி வருவதுதான் கவலை அளிக்கிறது.இன்றைய இளைஞர்கள் பற்றி உங்கள் கணிப்பு என்ன?       பல தடைகளையும் தாண்டி இன்றைய இளைஞர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது. அறிவியல் கல்வி வளர்கிறது. உலகம் விரல் நுனிக்கு வந்துவிட்டது. எதையும் ஏன் எப்படி எதனால் என்று கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் இளைஞர்கள் உருவாகி விட்டார்கள். அதனாலே அவர்களால் பல அருஞ்செயல்களைச் செய்ய முடிகிறது. இளைஞர்களால் பண்பாடு சீரழிகிறது என்கிற குற்றச்சாற்று ஒருபுறம் எழாமல் இல்லை. அதுவும் சற்று உண்மைதான். அதையும் மீறி இளைஞர்களின் எழுச்சி பாராட்டக் கூடியதாகத்தான்  இருக்கிறது. சிலையைச் செதுக்கும் போது சிறிது சேதமடைவதைப் போலத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். மும்பை மாநகரைக் கண்டு வந்தது உண்டா?     1976 இல் எனக்குத்  திருமணம். அதற்கு  முன்பாக பம்பாய் வந்து இரண்டு மாதங்கள் காட்கோபர் பகுதியில் தங்கி இருந்தேன். எனக்கு சிறுவயதில் சரளமாகப் பேசமுடியாமல் திக்கும் குறைபாடு இருந்தது. அப்போது காட்கோபரில், டாக்டர் ராமி கிளினிக் என்னும் பேச்சுப் பயிற்சி மையம் இருந்தது. எப்படி திக்காமல் பேசுவது என்று பயிற்சி கொடுத்தார்கள். இரண்டு மாதங்கள் மஜித் பந்தரில், அறிமுகமான ஒருவரின் வணிகக் கடையில் தங்கியிருந்து அன்றாடம் பயிற்சி மையத்துக்குப் போய் வந்தேன். அப்போதே மின் தொடர் வண்டிப்பயணம் நெருக்கடியாக இருந்தது. கூட்டம் நிரம்பி வழியும்.ஏழை எளியவர்கள் வாழும் குடிசைப் பகுதி மிகவும் பரிதாபமாக இருப்பதைப் பார்த்துவிட்டு,      "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி     அதன் அருகினிலே ஓலைக் குடிசை கட்டி     பொன்னான உலகென்றுப் பெயருமிட்டால்     இந்தப் பூமி சிரிக்கும் அந்தச் சாமி சிரிக்கும்"என்னும் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்தான்  நினைவுக்கு வந்தது. தமிழ்நாட்டில் மார்வாரிகள் செல்வச் செழிப்போடு வாழ்கின்றபோது, நம்மவர் தாழ்நிலையில் இருக்கிறார்களே என்று எனக்குள் ஆதங்கப்பட்டது உண்டு. சில நடப்புகள் அங்கு விநோதமாய் இருப்பதைக் காணலாம். இரண்டு பூரி மட்டும் சாப்பிட்டு பசியாறிக் கொள்ளலாம். பால் பெரிய குவளையில் கெட்டியாகத் தருவார்கள். நல்ல பண்பான மக்கள். இன்றைக்கும் விநாயகர் விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் சாதியினாலும் மதங்களினாலும் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.  ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசப்பட்டாலும் அலுவலக மொழியாக மராத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேகமான நாகரிகச் சூழலை எதிரொலிக்கும் செல்வாக்குடன் கூடிய சந்தைகள், வணிக நிறுவனங்கள், பலவேறு சமுகங்கள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையின் மையமாக விளங்குகிறது. பரபரப்பான இந்த நகரத்தில் இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வியப்பாக இருக்கிறது. பலவேறு இனப்பின்னணியில் ஒரே கலவையாக  கதம்பமாலையாக  உள்ள சிறப்பான நகரம். நீங்கள் இருவேறு பொருள்படக் கேட்ட ‘கண்டு வந்தது..கண்டு உவந்தது‘.. இவ்வளவு தான். நன்றி. நல்வணக்கம். – நேருரையாளர்: மு.தருமராசன்.                     •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி