15 December 2015 4:35 pm
அதிக பாதுகாப்புடன் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் மீதே தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்குமான பொறுப்புகள் குவிகின்றன." – டாக்டர் டான்கின்டான் "நான் பெற்ற செல்வம், நலமான செல்வம், தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்" என்று தாலாட்டுப் பாடி வளர்த்த குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் கூறும் ஒரு சொல்லை இந்த நாட்டில் எல்லோரும் கேட்டிருக்க வாய்ப்புண்டு. "நான் பட்ட இன்னல்கள் என் குழந்தைக்கு வரக்கூடாது என்று". நம் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் செய்யும் மிகப்பெரிய அடிப்படைத் தவறு என்னவெனில், குழந்தை தானாகவே வளர (மனதாலும் & உடலாலும்) முயற்சிக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் தடுத்து, அதற்கு இயலாமையை ஊட்டிவிடுவதே ஆகும். நடப்பவனை தூக்குவதும் பசித்த உடனே உணவைக் கொடுப்பதும் வியர்த்தவுடன் காற்றாடி அல்லது குளிரூட்டியை போட்டுவிடுவதும் இப்படி பொத்திப் பொத்தி வளர்த்த குழந்தை துன்பம் என்னவென்று தெரியாமலே வளர்த்த பின், தான் ஒரு சிறிய / பெரிய கடினமான சூழ்நிலை வரும் பொழுது வாழைத் தண்டாக சாய்ந்து விடுகிறான். ஆம், குழந்தையினுடைய இயல்பான நிலை என்பது தனக்குத்தானே உண்ணுவதும் ஓடுவதும் விழுவதும் எழுந்திருப்பதும் ஆடுவதும் பாடுவதும் மட்டுமின்றி, கொஞ்ச நேரம் பசிதாங்குவதும் வியர் வையில் தூங்குவதும் மிகவும் தேவையான ஒன்று. அழுதவுடன் தூக்கப்பட்ட குழந்தைக்கு, தான் அழுதால் கேட்டதும் கேட்காததும் கிடைத்துவிடும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை உருவாகி விடுகிறது. பின் எதற்கெடுத்தாலும் ஒரு அழுகை, உடனே விரும்பியது கிடைக்கும். அமைதி…. மீண்டும் அழுகை… கிடைக்கும்… என்கிற மனோபாவத்தில் வளர்க்கப்படுவது குழந்தையை வளர்க்காமல் ஒழிக்கும் என்பதற்கு மிகச் சரியானதொரு குட்டிக்கதையை படியுங்களேன். ஒரு நண்பர் தனக்கு குழந்தையில்லை என்று உணர்ந்து யாரோ சொன்ன ஆலோசனைப்படி இரண்டு புலிக் குட்டிகள் எடுத்து வளர்க்க, அதை ஒரு குழந்தை போல் கவனித்தாராம். பால்புட்டியும் புலால் உணவும் கொடுத்து ஒரு வீட்டு நாய் போல ஆக்கி விட்டிருந்தார். ஆம்! அது முறைப்பதோ அல்லது வாயைப் பிளப்பதோ அரிது. எல்லாரும் அதனுடன் நாய்க்குட்டி போல விளையாட அந்த ஊரில் இது ஒரு சாதாரண நிகழ்வாயிற்று. வளர, வளர சிறிய சிறிய இடையூறுகள் வரலாயின. அதன் நகங்கள் விரைவாக வளர்ந்துவிட சில சமயம் வெட்டி விடாததால் அவை அன்பினால் விளையாடும் பொழுது, உடம்பில் கீறல்கள் விழ ரத்தம் கசிய, (எனினும் அது வளர்த்தவரை தாக்க வில்லை) வளர்த்தவர்கள் மனதில் ஒரு சிந்தனை உருவாகலாயிற்று. "நாம் ஏன் இதை காட்டில் கொண்டு விட்டு வரலாகாது? காட்டு விலங்கு மிகப் பெரியதானால் வளர்ப்பது சிரமமென்றெண்ணிய அவர்களது எண்ணம்" ஒரு நாள் உண்மையாக மாறலாயிற்று. புலி வளர்த்த உரிமையாளர், நாளொன்று குறித்தார். இரண்டு புலிகளையும் அருகாமையிலிருந்த காட்டில் விட்டுவர தீர்மானித்தார். புலிகள் இரண்டையும் "வா" என்று சொல்லி அவர் முன்னே செல்ல அவைகள் பின் தொடர்ந்தன. காட்டின் நுழைவாயிலை அடைந்து அவைகளை காட்டுக்குள் "போ" என்று சொல்ல அவை போக மறுத்தன. இவர் கையிலிருந்த சிறிய குச்சியால் மெல்ல தட்டி போ, காட்டுக்குள் போ, அதுதான் உன் இடம், நீ வளர வாழ வேண்டிய இடம்… போ உள்ளே என்று கர்ஜித்தார். அவை செல்ல மறுக்கவே கட்டாயமாக காட்டின் உள்ளே அழைத்து சென்று, அவைகளுக்குத் தெரியாமல் ஒளிந்து, பின் வீடு வந்து சேர்ந்தவருக்கு மனம் எப்படியோ இருந்தது. "ஐயோ இது சாப்பிடும் நேரம், நான் வருடி விடும் நேரம், இது தூங்கும் நேரம்" என்று அழுதவண்ணம் இரவெல்லாம் விழித்திருந்தவர், காலையில் எழுந்தவுடன் செய்த முதல் வேலை காட்டுக்குச் சென்றதுதான். பதைபதைக்க, காட்டுக்குள் சென்று தனது இரண்டு குழந்தைகளின் பெயரைச் சொல்லி, ஜாய், நீல் ("யிஷீஹ், ழிமீமீறீ") என்று கூப்பிட்டுப் பார்த்தார், ஒரு சலனமுமில்லை. கொஞ்சம் உள்ளே சென்றார். இப்போது மீண்டும் பெயர் சொல்லி கத்தலானார்… ‘‘ஏன் என்னை மறந்து விட்டாயா, உன்னை வளர்த்தவன் தான் வந்துள்ளேன். கண்ணா, ஒரு முறை என்னைப் பார்த்து விட்டு போய்விடு, … ஓ, ஜாய், நீல் வாங்கடா… தயவு செய்து ராத்திரியெல்லாம் தூக்கமில்லை கண்ணா வாடா சீக்கிரம்" என்று புலம்ப ஆரம்பித்த சில நிமிடங்களில்… காட்டு நாய் ஒன்று வாயெல்லாம் குருதியுடன் கொஞ்சம் மாமிசத்தை கவ்விக் கொண்டு அவர் முன்னே ஓடலாயிற்று. ஏதோ நிகழ்ந்துள்ளது என்று தன் மனம் சொல்ல காட்டிற்கு உள்ளே, மீண்டும் ஓடலானார். ஓடிய சில தூரங்களில் அவர் கண்ட காட்சி அவரை மரண பயத்திற்கு கொண்டு சென்றது. அவர் உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது. வாய் வறண்டு போனது. கைகள் நடுங்களாயிற்று. ஆம்! அந்த இரண்டு புலிகளையும் அந்த காட்டு நாய் வேட்டையாடிக் கொன்று விட்டிருந்தது. எது, எங்கே, எப்படி வளரவேண்டுமோ, அது, அங்கே, அப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பது இயற்கையின் விதி. வேட்டையாட வேண்டிய வேளையில் விளையாடிக் கொண்டிருந்த புலி வேட்டையை மறந்து விட, ஒரு காட்டு நாய் வேட்டையாடிய விந்தையை, குழந்தை வளர்ப்பதுடன் ஒப்பிட வேண்டும். ‘வலி தாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும். வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்’ அவமானம், தோல்வி, பசி, பட்டினி, காற்று, மழை, பனி, வெயில் என்று பல முனைப் போராட்டம் கண்ட மனிதனே வாழ்க்கையின் இலட்சியங்களை நனவாக்குகிறான். வீட்டில் வளர்த்த செடி, நீர் ஊற்ற வில்லை எனில், நீரைத் தேடும் முயற்சியின்றி செத்துப் போகின்றது. குழந்தையை காட்டு மரமாக, தன் நீரைத் தானே தேடி, தன்னை எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரிந்ததாக, வளர்த்து விடுங்கள் சரியா? – டாக்டர் ப.இரா.சுபாசு சந்திரன், ஐதராபாத்"