16 October 2014 12:42 am
உறவுப் பெயர் சொல்லி, அழைத்துப் பேசி உறவாடுவது தமிழர்களின் பண்பாடு. இயற்பெயர் கூட சில சமயம் மறந்து விட்டிருக்கும். ஆனால் உறவுப் பெயரில் பேசி உறவு நீடித்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள். குழந்தைகள், அண்ணன் & தம்பி, அக்காள் & தங்கைகளாக வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு மாமனாக, மைத்துனனாக, அண்ணியாக, அத்தையாக, பெரியப்பாவாக, சித்தப்பாவாக பல உறவுகளில் வாழ்ந்து, ஒவ்வொருவரும் சமுதாயப் பிணைப்பில்" இறுமாந்து வாழ்ந்தவர்கள் நாம். இன்று ஆங்கில மோகத்தில் திளைப்பவர்கள் அத்தகைய வாழ்க்கையை கற்பனையில் உயர்வாக எண்ணி மயங்கிக் கிடப்பவர்கள், பெரியப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும், சின்னம்மாவிற்கும், அத்தைக்கும், மாமியாருக்கும் என்ன சொற்களில் உறவு பெயர் ஆங்கிலத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அப்படியானால் உறவுகளே இல்லாத "ஆங்கிலச் சமுதாயம்"தான் உயர்ந்த பண்பாடா? அதனை நோக்கித்தான் நாமும் சென்றாக வேண்டுமா?அந்நிய நாட்டில் சில உயர்ந்தவைகள் இருக்கலாம். நம்மிடம் இல்லாதவையும் கூட இருக்கலாம். அதற்காக நம்மிடம் இருப்பதில் உயர்ந்த தத்துவமாக இருப்பதையும், சேர்த்து அழிய விடுவது மாபெரும் குற்றமில்லையா? நம்மிடம் உள்ள உயர்ந்தவைகள் ஏன் நமக்கு உயர்ந்தவைகளாகப் படவில்லை?அண்ணன் தம்பியோடு பிறந்து, உறவுக்காரர்களோடு இணைந்து குடும்பமாக, தெருவாக, ஊராக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, யாரும் இல்லாத அனாதைகள் நாடு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். நாகரிக வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு சிரமமில்லாத, சிக்கலற்ற வாழ்க்கை என்று மயங்கிய படி, ஒரே ஒரு குழந்தையோடு, நிறுத்திக் கொள்ளும் பெற்றோர்கள் பெருகி வருகிறார்கள்.ஒரு குழந்தையாகப் பிறந்த குழந்தைகளுக்கு அப்பா, அம்மா இருக்கலாம். சில வீடுகளில் தாத்தா, பாட்டி இருக்கலாம். குழந்தைகள் வளர்ந்த பிறகு தாத்தாவும் பாட்டியும், தந்தையும் தாயும் மறைந்த பிறகு இவர்கள் அனாதைகள் தானே! உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லாதவர்கள்தானே! சமுதாயம், ஊர், நாடு என்கிற பாசம் எப்படி இருக்கும்?விடிய விடிய திரைப்படக் கொட்டகைக்கு முன்னாலும் பொது இடத்திலும் பேருந்து நிலையங்களிலும் அரட்டை அடித்துக் கொண்டு வீண் பொழுது போக்கியபடி காலத்தைக் கழித்துக் கொண்டு, பொது மக்கள் பார்வையில் "ரௌடி"யாகப் பார்க்கப் படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் பொறுப்பற்ற குடும்பத்தில் உறவற்ற அனாதையாக வளர்ந்தவர்களாத்தான் இருப்பார்கள்.இவர்களுக்கு "தன் பற்றே" இல்லாத நிலையில் ஊருக்காக, நாட்டுக்காக, மொழிக்காக, சமுதாயத்திற்காக, பொது பண்பாட்டிற்காக எத்தனை தூரம் தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களாக, வாழ்வியல் பற்று கொண்டவர்களாக இருக்க முடியும்?இப்படிப்பட்ட பண்பாட்டுச் சீரழிவு கொண்டவர்கள், நெறியான வாழ்வைத் தவற விட்டவர்களாக, மனித இரக்கம், கருணை அற்றவர்களாக, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, வஞ்சகம், பொய், சூது, கற்பழிப்பு என அனைத்து வித சமுதாயக் கேடுள்ளவர்களாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.ஆக ஒரே ஒரு குழந்தை போதும் என்று எண்ணுபவர்கள் தங்களின் பேரக் குழந்தைகளை அனாதையாக ஆக்குகிறார்கள் என்று பொருள். உறவே இல்லாத அனாதை. யாருமே இல்லாதே அனாதை! எந்த பற்றும் பாசமும் வைக்க வழியில்லாத அனாதை! வெறும் வயிற்றுப் பாட்டுக்கு மட்டும் வாழும் இலட்சியம் கொண்ட வாழ்க்கை வாழ்பவர்கள்.இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அத்தை இல்லை, மாமன் இல்லை; பெரியப்பா சித்தப்பா என யாருமே இல்லை; உறவு என்று சொல்லிக் கொள்ள உறவே இல்லை. எந்தக் குழந்தைகள் தாய்ப்பாசம் அறியாமல், முத்தம் கூட பெறாமல், அன்பு காட்ட யாருமே இல்லாமல் வளர்ந்து வருகிறார்களோ, அவர்கள்தான் இரக்கமே இல்லாத அரக்கர்களாக, போக்கிரிகளாக, கொலை கொள்ளைகளில் ஈடுபாடு கொண்டவர்களாக திரிகிறார்கள் என்பது உளவியல் உண்மையாகும்.!இவர்களுக்கு "தன்பற்றே" கிடையாது. குடும்பப் பற்றே கிடையாது. மனைவி, மக்கள் பாசம் கூட ஏனோ தானோவென்று அமையப் பெற்றிருக்கும். அப்படியானால் எதிர்காலச் சமுதாயம்? பற்றற்ற, உறவற்ற, நெறியற்ற சமுதாயம்தானா? அதனை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். எத்தனை பெரிய சமுதாயச் சீரழிவு? அதன் ஆபத்து புரியாமல் சீரழிவை நோக்கி சரிந்து, வீழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்தப் பற்றுமற்ற உலகத்தை சிறுகச் சிறுக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.ஆடு, மாடுகளுக்கு குழந்தை குட்டிகளைப் பற்றிய நினைவு இருப்பதில்லை. எங்கோ பிறந்து வயிற்றுப் பாட்டுக்கு யாருக்கோ உழைத்து, எங்கோ விற்கப்பட்டு, இடம் மாறி இடம் மாறி இறுதியாக மூச்சை விடுகிறது! கோழிகள் குஞ்சுகளைக் கொத்தி விரட்டி விடுவது போல! வளர்த்தாயிற்றா, எங்கோ சென்று எப்படியோ பிழைத்துக் கொள் என்று விரட்டி விடுவது போன்றதுதானே! இது கொலையில்லையா?இனி பெற்றவர் கடமை வயிற்றுக்குச் சம்பாதிக்கும் படிப்பைக் கொடுப்பது மட்டுமே! அத்துடன் கடமை முடிந்து விடப்போகிறது. அந்த மகனுக்கும் பெரிதாக கடமை ஒன்றும் இருக்கப் போவதில்லை. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை கூட இருக்கப் போவதில்லை. முதியோர்களைப் பாதுகாக்கும் வேலை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நிலை வந்துவிடும்.ஏ! மனித வர்க்கமே ! இதற்குப் பெயர்தான் நாகரிக வாழ்க்கையா? இதுதான் உயர்திணை வாழ்க்கையா? பகுத்தறிவு பெற்றதின் பலனா?உலகுக்கே வாழ்வியலை, சொந்த பந்தத்தை, அன்பு அரவணைப்பைக் கற்றுக் கொடுத்த தமிழன், உலக மக்களையே உறவினர்களாகக் கொண்டாடியத் தமிழன், இன்று அனாதை உலகம் நோக்கி மிக வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறானே! இப்போதாகிலும் நாம் மக்களுக்கு உண்மையைச் சொல்லி புரிய வைத்து திசை திருப்ப வேண்டாமா? ஒரு குழந்தையோடு நிறுத்துவது என்பது தமிழ் உறவுகளுக்குத் தற்கொலை இல்லையா?வாழ்வியல் சிந்தனையாளர்கள், பத்திரிகை கையில் வைத்திருக்கும் பொறுப்புள்ள அறிவாளிகள், இதற்கான செயல்பாடு நோக்கி எப்போது நடைபோடப் போகிறோம்? நம் பங்களிப்பு எவ்வளவு? எப்படி?"பழைய உலகத்தை மாற்றி, புதிய உலகத்தைப் படைக்க வரலாறு நம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. நாமும் சற்றே பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால் காலம் தாழ்த்தினால் வரலாற்றுக்குப் பெரிய இரண்டகம் செய்தவர்களாவோம்" – மார்க்சிம் கார்க்கி – மருத்துவர் காசிபிச்சை, அரியலூர்."