பிரபஞ்சத்தில் பஞ்சம் - தமிழ் இலெமுரியா

15 December 2014 6:45 pm

அச்சம் தவிர்க்க: பிரபஞ்சம் எனும் பல்லுலகில் காணப்படும் பஞ்சம் எனும் இல்லாமையை இல்லாமல் செய்வதற்கு மானுட மனத்தில் ஏற்படவேண்டிய மாற்றம் குறித்த சிந்தனைகள் சிறப்புதரும். எதிர்மறைக்கு இடமளிக்காமல் நல்வாழ்வுக்கு நம்பிக்கையளிப்பதே மனித முயற்சியாக அமைய வேண்டும். 2011 ஆம் ஆண்டு அறிவியல் ஆய்வின்படிக் கணக்கிடப்பட்டுள்ள எண்பத்தைந்து லட்சம் உலக உயிரின வகைகளில், எழு நூற்றுப் பத்துக்கோடி அளவிலுள்ள மனித இனத்தை மட்டும் தனிமைப் படுத்திப் பிரபஞ்சத்துடன் தொடர்பாக்க வேண்டிய நியாயம் நிரம்ப உள்ளது. பஞ்சம் என்ற அச்சத்தைக் காட்டிலும் சுயபரிசோதனையின் அடிப்படையிலான மன மாற்றமே மனித இனத்தைக் காக்கும். அனைத்துப் படைப்புகளும் பிரபஞ்ச விதிகளை மீறாது, இயற்கையின் சமனிலைக்கு உதவுகின்றன. விதி மீறி இழப்பு ஏற்படுத்துவதில் மனித இனமே முந்தி நிற்கிறது.கற்க: தான் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், மனித இனமானது அருகிலுள்ள ஆற்றுக்கோ, மலைப் பகுதிக்கோ, நிலத்துக்கோ சென்று, அவற்றின் தேவை பற்றிச் சொல்லிக் கொடுக்கச் சொல்ல வேண்டுமென்றார்" டெர்ரிக் ஜென்சன் என்பார். வறண்ட ஆறு, வெட்டுண்ட மரம், சிதைக்கப்பட்ட மலை, சுரண்டப்பட்ட வளம், இவை போன்றவை ஈரமுள்ள இதயத்தை உலுக்கும். சற்றொப்பப் பத்தாயிரம் வகைகளிலான, அறுநூறு முதல் எண்ணூறு மில்லியன் வரையிலான நூண்ணுயிரிகள் ஒரு தேக்கரண்டி மண்ணில் உள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.சுதர்மம்: மரத்தைக் கொத்திப் புண்படுத்த வேண்டுமெனும் விருப்பம் மரங்கொத்திப் பறவைக்குக் கிடையாது. ஆனால் மரத்தைக் கொத்தி ஏற்படுத்தும் பொந்துதான் அதன் வாழ்க்கைக்கு அடைக்கலம் கொடுக்கிறது. மரத்தின் வாழ்வுக்கு இதனால் பாதிப்புக் கிடையாது. மரங்கொத்திப் பறவையின் வாழ்க்கைத் தேவைக்கேற்றவாறு அதன் மூக்கு அமைந்துள்ளது. மானை வேட்டையாடி உயிர் வாழ்வது புலியின் சுதர்மம். குறைவான எண்ணிக்கையிலுள்ள புலியினத்துக்கு இரையாவதால், எண்ணிக்கையில் பெருகக் கூடிய மான் இனம் அழிந்து விடுவதில்லை. மாறாக புல்லைத் தின்று வாழும் மான் இனத்தைக் கட்டுக்குள் வைத்துப் பூமியின் பசுமை காத்திட உதவுகிறது. புலி வாழ்வுக்காகப் புல்லைத் தின்பதில்லை. புல்லைத் தின்னும் மானைக் கொன்று பசியாறுவது புலியின் சுதர்மம்.இயற்கைச் சமநிலை: உயிரியல் வாழ்க்கைச் சூழலின் பொறியாளர்கள் என்றழைக்கப்படும் யானைகள், வனங்களிலுள்ள மரக்கிளைகளை ஒடித்து தமது கால்களால் மிதித்துப் பூமியில் புதர்களை உருவாக்கிப் பசுமைப்படுத்துகின்றன. புல்வெளிகளை மேய்ந்து பசுமையைப் பாதிக்கும் உயிரினங்களைக் கொன்று ஓநாய்கள் சமநிலைப்படுத்துகின்றன. புற்களை மேய்ந்து வாழும் விலங்கினங்கள் பெருகிவிட்டால் புல்வெளிகள் இல்லாமல் போய்விடும். சுதர்ம இயல்பின்படி இரையாகும் எந்த இனமும் முற்றிலும் அழிந்து விடாமல் இயற்கை சமனிலைப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் எதுவும் பஞ்சத்தைப் பார்ப்பதற்காகப் படைக்கப்படுவதில்லை. கன்றுக்குத் தேவையான பால் ஈனும் தாய்ப் பசுவின் மடுவில் தயாராகவுள்ளது. பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தயாராகச் சுரப்பதுடன், குழந்தையின் வளர்ச்சிப் பருவத்துகேற்ற தேவைக்கும் செரிமான ஆற்றலுக்கும் தக்கவாறு, அளவிலும் சத்திலும் அதிகரித்துக் கொள்கிறது.நுகர்வு வெறி: பஞ்ச பூதங்களால் இயங்கும் பிரபஞ்சத்தில் பங்கீட்டிலும் பயன்பாட்டிலும் நிகழ்கின்ற மனிதத் தவறுகள்தாம் பஞ்சத்தை ஏற்படுத்துகின்றன. நதிக்கரையில் நாகரிகம் தோன்றி, நுகர்ச்சிக் கலாச்சாரத்தின் உச்சிக்குச் சென்று நிதானமிழக்கும் இனத்தை உருவாக்கியது. நதியும் இனமும் சேர்ந்தே பண்பிழந்தன. தேவை பெருகும் போது சேவைகளை மனமும் நேரமும் கிடைப்பதில்லை. இயற்கையின் படைப்புகளுக்கு எல்லைக் கோடுகள் போடும் மனித இனம், தனது வெறி கொண்ட நுகர்ச்சிக்கு வேலிபோட இயலாமல் தறிகெட்டுத் திரிகிறது. வைகையில் கைவைக்கக் கூச்சம். கரையோரம் சென்றிடக் கால்களுக்குத் தயக்கம். கரையோரமுள்ள மதுக்கடைகளிலிருந்து வரும் விருந்தாளிகளின் கால்கள் தள்ளாடும் களங்கம். ஆறு என்பதற்கான அடையாளம் மறைந்து போனது. இயற்கைச் சீரழிவுக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுகின்ற எதிர்ப்பலைகள் முழுமையாக மதிக்கப்படுவதில்லை. "ஒழுக்கம் கெட்டுப் போச்சு; பக்தி முத்திப் போச்சு" என்ற வாரியார் சாமிகளின் வார்த்தைகள் ஒழுக்கப் பஞ்சத்துக்கு எடுத்துக்காட்டாகும். மனிதாபிமானமற்ற அறிவியலை அறிவியல் அறிஞர் ஐன்சுடீன் ஏற்கவில்லை. ஒழுக்கமற்ற வளர்ச்சி மனித இனத்தின் சாபக்கேடு. "பரிசோதிக்கப்படாத வாழத் தகுதியற்றது" என்று எச்சரித்தார் சாக்ரடீசு.பிரபஞ்சத்தைப் பீடித்திருப்பவை: உலக வெப்பமயம், அளவுக்கு அதிகமான படிம எரிபொருள் சார்பு, பருவ மாற்றம், நகரமயம், உலகமயம், மக்கள் பெருக்கம், பனிப்பாறை உருகுதல், தாளாத இரைச்சல், காற்று மாசு, கட்டுப்பாடற்ற கண்க்ரீட் கட்டட வளர்ச்சி, மண் அரிப்பு, கடல் அரிப்பு, கணிக்கயியலாக் கொடுமை, வதைக்கும் குளிர், இயற்கை வளங்கள் சூறையாடப்படல், மலை போன்றே ப்ளாஸ்டிக் எனும் நெகிழிக் குவியல்கள், அணு மற்றும் தொழில் நுட்பக் கழிவுகள், மரபணுமாற்ற உணவு வகைகளும் மக்களும், சோம்பேறிகளாகும் அளவு தொழில் நுட்பச் சார்பு, இயற்கை மீறல், எந்த நேரமும் போர் மூளும் அபாயமும் அமைதியற்ற சூழலும், சூழல் சீர்கேடு, உயிரினங்கள் அழியும் வேகம், நன்னீர்த் தட்டுப்பாடு, வறண்ட நதிகள், மலடாகும் விளைநிலம், இல்லாமல் போகும் ஆற்றல் ஆதாரங்கள், இனமறியயியலா வகை காணா நோய்கள், தேவைகளுக்கு ஈடு கொடுக்க இயலாமை, ஏமாற்றம், பூமியின் சூழல் அச்சு மாறக் கூடுவனவும் அறிவியல் அறிவிப்பு என்பன போன்றவை இன்றைய பிரபஞ்ச இயக்கத்தைச் சிதைப்பவற்றில் சில.தீர்வு: பிரபஞ்சத்தில் தானே பெரியவனெனும் மமதையை நீக்கித் தானும் ஒருவனெனும் அடக்கவுணர்வே விரயத்தைக் குறைத்து இல்லமையைத் தவிர்க்கும். தாயுமானவர் ஏங்கிய, நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோநல்ல எண்ணம் பரவ வேண்டும். நான் என்கிற குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி, எப்பிறவிக்கும் எந்நாளும் பயனளித்து வாழ்வதே இப்பிறவியின் நோக்கமெனும் வள்ளலாரின் உயிரிரக்கப் பார்வை கொண்டால், இல்லாமை இல்லாத நிலை ஏற்படும். உணர்ச்சிகளை முன் எடுத்துச் செல்லும் நுண் கருவிகளாம் 4448 நாடி நரம்புகளின் செயற்பாட்டுச் சூட்சுமத்துக்குப் பலியாகாது, இச்சையின் பாற்படும் கொச்சைத்தனம் குறைந்தால் பஞ்சம் போகும். டோக்யுவில்லி என்கிற அறிஞரின் கூற்றுப்படி, குடியாட்சிச் சமுதாய ஆரோக்கியமென்பது, தனிப்பட்ட மக்களின் செயற்பாட்டுத் திறன்களைக் கொண்டே அளவிடப்படும். ஒட்டுமொத்த மனித மன நிறைவும் மலர் முகமும் எட்டுகின்றச் இலக்கெனக் கொள்வதே முன்னேற்றத்துக்கான அடையாளம். பிரபஞ்சப் பேராற்றல் பலியிடப்படுவதைத் தடுக்கும் வண்ணம், ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கும் மேற்பட்ட நல்லெண்ணங்களை விதைத்து நினைவூட்டும் நோக்கில் உலகெங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எதையும் முன்னோக்கிப் பார்க்கும் மனித இயல்பைச் சற்றே தளர்த்தி, எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதீர் எனும் அறிவுரையை நினைவில் நிறுத்தி, எந்த நிலையிலிருந்து பிரபஞ்சத்தில் இந்த நிலை பெற்றுள்ளோமென்பதை எண்ணிப் பார்த்து, அந்த நிலைக்கு மீண்டும் பின்னடைந்திடாது, பகுத்தறிவைப் பக்குவமாகப் பயன்படுத்திப் பிரபஞ்ச இயக்கத்துக்குப் பின்னடைவின்றி நன்றியுடன் நடந்திட வேண்டும். ஒரு பக்கம் குவிப்பு; ஒரு பக்கம் தவிப்பு எனும் முரண் மறையட்டும். மானுடம் காணாமல் போய் விடாமல் கவனமாக வாழ்வோம்!- நா.முத்தையா, மதுரை"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி